முனைப்பூட்டும் மூன்றாம் மாநில மாநாடு

Vinkmag ad
எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் கடந்த செப்டம்பர்30,அக்டோபர்1&2 ஆகிய நாட்களில் குற்றாலம்-தென்காசியில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் 3-ஆம் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவுற்றது.
 
     கடந்த காலங்களில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்ற ஒவ்வொரு மாநாடும் வெவ்வேறு வகையில் எடுத்துக்கொண்ட கருப் பொருளுக்கு ஏற்ப வெற்றிகரமாக நடைபெற்று,வரலாறு படைத்தவைதாம். எனினும் அவற்றிற்கிடையிலான தொடர்பு மணிகளைக் கோக்கும் நூல் போன்றதாகும்.இந்த மாநாட்டின் கருப்பொருள் கடந்த காலப் பணிகளுக்கு அணி சேர்ப்பதாகவும் நிகழ்கால நீரோட்டத்தில் நம் சமுதாயம் கலந்து செயலாற்ற வேண்டிய கட்டாயத்தைப் புலப்படுத்துவதாகவும் அமைந்தது இதன் புதுச் சிறப்பாகும்.
 
       பயிலரங்கின் வரவேற்புக் குழுத்தலைவர் அல்ஹாஜ் ஃபத்ஹுர் ரப்பானி,மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.துராப்ஷா முதலிய சமுதாயப் பெருமக்கள் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்ட பல்வேறு அணியினரின் அரும்பணி,ஒத்துழைப்பு முதலியன மாநாட்டின் வெற்றிக்கு மகத்தான உதவியாக அமைந்திருந்தது. இந்த முன்மாதிரி எதிர்காலத்தில் சமுதாயப் பெருமக்களால்
பெருமளவில் பின்பற்றப்படும்போது,இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஒரு வலிமை மிக்க இயக்கமாக வடிவெடுக்கும் வாய்ப்பு ஒளிமயமானதாகத் தெரியும்-இந்தியாவில் மட்டுமல்ல,வெளி நாடுகளிலும்!
 
        படைப்பிலக்கியப் பயிலரங்குகளின் அமர்வுகள்,அறிஞர் கரீம் கனி,மவ்லவீ அபுல்ஹசன் ஷாதலி,மு. நா.முஹம்மது சாஹிப்,முன்னாள் மந்திரி அப்துல் மஜீத்,ரவணசமுத்திரம் பீர்முகம்மது, ஏ.கே.ரிஃபாயி, ஞானமாமேதை பீர்முஹம்மது அப்பா மற்றும் சிராஜ் அப்துல் ஹை ஆகிய
பெருமக்களின் பெயர்களால் அமைக்கப் பட்டிருந்தமை நம் சமுதாயத்தின்
மாண்பை உயர்த்திய மாமனிதர்களை நாம் மறக்கவில்லை என்பதை எடுத்துரைத்தது.
 
       தோழர் தமிழ்ச் செல்வன்,எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,எழுத்தாளர்
பிரபஞ்சன்,பாரதி கிருஷ்ண குமார் ஆகியோரின் பங்களிப்புகள் பயனும் புதுமையும் உள்ளவையாக-எழுச்சியூட்டுவனவாக இருந்தன.இவர்கள்
(ஒருவரின் ஓரிரு கருத்துக்களைத் தவிர) அனைவருமே இஸ்லாமிய எல்லைகளை மீறிவிடக் கூடாது என்ற கவனத்துடனும் சிறுபான்மைச் சமுகம் பற்றிய கரிசனத்துடனும் உண்மையான முறையில் பேசியது அனைவரின் உள்ளத்தையும் தொட்டது.சிற்சில நேரங்களில் அவையோரின் மனங்கள் உருகிக் கண்கள் கலுழ்ந்தன என்பது உண்மை.
 
       உலகளாவிய வலைத்தளங்களை-இணையத்தை-சமுதாய எழுத்தாளர்கள்
எவ்வாறெல்லாம் பயன்படுத்திகொள்ள முடியும் என்பதைச் சகோதரர் எஸ்.ராமகிருஷ்ணன்,தம்முடைய உரையிலும் பின்னர் தனியானதோர் அமர்விலும் விளக்கமாக எடுத்துரைத்தார்.இது,இன்றைய அறிவியல் உலகத்தோடு ஒட்ட ஒழுகி நம் அறவியல் பணிகளை எவ்வாறெல்லாம் மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதற்குக் காட்டப்பட்ட நல்ல வழியாகவே அமைந்தது. 
 
       படைப்பாளர்களில் பலருக்கும் தங்கள் அனுபவங்களைப் போதிய அளவு
பகிர்ந்து கொள்ள முடியாத நேர நெருக்கடி ஏற்பட்டது;இது போன்ற நேரங்களில்,படைப்பாளர்கள் தங்களுடைய படைப்புகள் அனைத்தைப் பற்றியும் பேச ஆவலுறாமல் தங்களுடைய படைப்புகளில் சிறந்த  ஒன்றைப் பற்றி மட்டும் பேசினால் அது முத்தரப்பார்க்கும் மன நிறைவளிக்கக் கூடியதாக இருக்கும்.மற்ற படைப்புகளை/அனுபவங்களைப் பற்றி அடுத்தடுத்து வரக்கூடிய வாய்ப்புகளில் பகிர்ந்துகொள்ளலாம் என்பதற்கான ஒரு சிறந்த தொடக்கம்தானே இது! 
 
        ஓர் இளம் படைப்பாளி,’புலம்பெயர் முஸ்லிம்கள் சார்ந்த படைப்புகள்’ படம்பிடித்துக் காட்டும் சில பல அவலங்களைக் கூறினார்;
அவை எச்சரிக்கையாக கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தக்கவை என்றாலும் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான தாக்கங்களையும் தக்க முறையில் கூறவேண்டும் என்று இலக்கியக் கழகச் சிறப்பு நெறியாளர் கேப்டன் அமீர் அலீஆற்றுப்படுத்தினார்.
 ’முஸ்லிம் படைப்பிலக்கியங்களும் விளிம்பு நிலைப் பதிவுகளும்’ என்ற தலைப்பிலான உரை,இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஓர் எழுச்சிப் பாதையைக் காட்டுவதாக அமைந்தது.’இலங்கை முஸ்லிம் படைப்பிலக்கியம்’ பற்றிய உரை உருக்கமானதாகவும் ஓர் எல்லைக்குமேல்  ஆழமாகச் செல்லமுடியாத காரணத்தால் இறுக்கமாகவும் இருந்தது.
 
           எல்லா அமர்வுகளிலும் பங்கேற்ற படைப்பாளர்கள் முடிந்தவரை தத்தமது தலைப்புக்குரிய செய்திகளையும் சிந்தனைகளையும் வகுத்தும் தொகுத்தும் கொடுக்கவேண்டும்  என்ற வாய்மையோடு கூடிய முயற்சிகளைப் பொறுப்பான முறையில் செய்திருந்தனர்.இது சமுதாய ஆர்வலர்களுக்கு மிக்க நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.அது மட்டுமல்ல;இது இலக்கியவாதிகள்,இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமுதாய ஆர்வலர்கள் முதலியோரின் இனிய சங்கமமாகவும் தலைமுறை இடைவெளி என்ற ஒன்று இல்லாமல் தகர்ப்பதாகவும் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளை அடையாளம் காண்பதாகவும் அமைந்தது மிகச் சிறந்த செய்தியாகும்.இளைய தலைமுறைப் படைப்பாளிகளைப் பேசவிட்டு அந்த உரைகளைக் கவிக்கோ உள்ளிட்ட மூத்த படைப்பாளிகள் பலரும் பார்வையாளர்களோடு அமர்ந்து பொறுமையாக மூன்று நாட்களும் கேட்டுக்கொண்டிருந்த பாங்கே பாங்கு!!
    
      மஃரிபுத் தொழுகைகளுக்குப் பிறகு நடைபெற்ற மாலை நேரப் புல்வெளி அமர்வுகள்,இளைய தலைமுறை,முதிய தலைமுறை என்ற வேறுபாடு இன்றி எல்லாருக்கும் இன்பம் பயப்பனவாகவும்,எழுச்சியையும் மன உருக்கத்தையும் ஏற்படுத்துவனவாகவும் இருந்தன,அங்கு ஆற்றப்பட்ட அரிய உரைகளின் காரணமாக!(அவை விரைவில் குறுந்தகடுகளாக வெளிவர உள்ளன.)
 
           கவிக்கோவின் ‘என் கவிதை உலகம்’என்ற தலைப்பிலான உரை,அவருக்கு நெருக்கமான இலக்கியவாதிகள் கூட அறியாதவற்றைக் காட்டும் ஒளி வீச்சாக இருந்தது.கவிமாமணி தி.மு.அப்துல் காதர் ‘படைப்பிலக்கிய அழகியலை ’ச் சொல்லோவியமாகத் தீட்டிக்காட்டிப் பரவசப்படுத்தினார். நீண்ட காலமாக முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்துவரும் பாரதி கிருஷ்ண குமாரைப் பலரும் பயிலரங்கின் நிறைவு விழாவில்தான் முதல் முதலாகப் பார்த்தனர்.அவருடைய உரை பார்வையாளர்களின் உள்ளங்களை உலுக்கியெடுத்த உரையாக அமைந்தது.
 
      மூன்றாம் நாள் மாநாடு கருத்தரங்கம்,கவியரங்கம்,விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி,பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி என மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.விருதுகளும் பொற்கிழிகளும் ஏராளமானவர்களுக்கு வழங்கப்பட்டது போலத் தோன்றினாலும் ஒவ்வொன்றிற்கும் உரியவர்களையே பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருந்தது இலக்கியக் கழகத்தின் கவனமான பார்வையையே காட்டியது.இவற்றுள் சமய நல்லிணக்க இலக்கியப் பணிகளுக்காக தமிழ்த்திரு சிலம்பொலி செல்லப்பனார்,எழுத்தாளர் செ.திவான் ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருதுகளும் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக்,சேயோன் இப்ராஹிம்,மாணவி ஜாஸ்மின்,முனைவர் கம்பம் ஷாகுல் ஹமீத்,மவ்லவி முஹம்மது கான் பாகவி,குமரி அபுபக்கர்,எழுத்தாளர் ராமகிருஷ்ணன் முதலியோருக்கான பொற்கிழிகளும் அவையோரின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
 
     விழா நிறைவுப்பேருரையை வழங்கிய வைகோ ஒருகாலத்தில் இருந்த திராவிட இயக்க உன்னதத்தை நினைவுபடுத்தினார்;ஒரு குறிப்பும் இல்லாமல் அவர் ஆற்றிய  நீண்ட இலக்கிய உரையில் அவர் பாரசீக இலக்கியக் குறிப்புகளைக்கூட வழங்கினார்.முஸ்லிம் சமுகத்தோடும் இஸ்லாம் மார்க்கத்தோடும் தமக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்தி அவையோரைத் தம்பால் ஈர்த்துக்கொண்டார்.
 
       இலக்கியக் கழக நிர்வாகிகள் அனைவரும் மா நாட்டு நிகழ்ச்சிகளில் பெருங்கவனம் செலுத்தி எல்லாருடைய பாராட்டுக்களையும் பெற்றனர்.எல்லா நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்திக்கொண்டிருந்த  பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துஸ் ஸமது அந்தப் பணிச் சுமைக்கிடையிலும் காட்டிய கவனமும் கனிவும் பொறுமையும் பொறுப்புணர்வும் இளைஞர்களை அரவணைத்து  ஊக்கப்படுத்தியதும்  பெரியவர்களை மரியாதையாகப் பார்த்துக் கொண்டதும் ஓர் அசாத்திய உழைப்பாளியை அடையாளப்படுத்தியது.
 
       இறையருளால் எதிர்காலத்தில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் பல புதிய பரிமாணங்களைப் பெறுவதற்குரிய முனைப்பை இந்த மூன்றாவது மா நில மா நாடு ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்துத் தமிழுலகம் மகிழுமாக!
                                                                              ——ஏம்பல் தஜம்முல் முகம்மது.
*************************************************************************************************************
(பின் குறிப்பு:இது மா நாட்டைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையாகும்.வளைகுடா நாடுகளில் வாழும் சகோதரர்களின் தகவலுக்காக சுருக்கமாக எழுதப்பட்டது.எனவே பல நிகழ்ச்சிகளும் பல பிரமுகர்களின் பெயர்களும் விடுபட்டிருக்கலாம்.சம்பந்தப்பட்டவர்கள் பொறுத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.)
                                                             
               
 

News

Read Previous

சுயகுறிப்பேடு (DIARY)

Read Next

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *