மீண்டும் அடிமையாய் மாறலாம்!

Vinkmag ad

மீண்டும் அடிமையாய் மாறலாம்!

புது வீடு…மின்னும் விளக்குகள்…சுவர்களின் வித்தியாசமான வண்ணங்கள்..பில்டிங் பிளன் இவரு..! இண்டீரியர் டிசைன் அவரு…! என அங்குலம் அங்குலமாய் வீட்டின் சிறப்பை சிலாகித்தான் நண்பன். வீட்டைப் பற்றிய அத்தனை தகவல்களையும் கேட்கும் பொதெல்லாம் எனக்கு வியப்பே விடையாகிப் போனது. பெட்ரூம், கிட்ஸ்ரூம், ஸ்டடி ரூம் என தொடர்ந்த ‘வீட்டு உலா’ கடைசியாக ஸ்டோர் ரூமில்…அந்த நொடி என்னைத் தூக்கி வாரிப் போட்ட துக்க நொடிகள்…காரணம், பார்த்துப் பார்த்து வாங்கிய விலையுயர்ந்த பொருட்களில் சிலவற்றை பார்க்கவே மாட்டேன் என்பது போல் அவன் செய்த ஸ்டோர்ரூம் சிறைச்சேதம்.!

கண்களைச் சுருக்கி அந்த பொருட்களை நான் பார்த்த பார்வையின் அருஞ்சொற்பொருள் அறிந்தவனாய் “பைசா இருக்கும்போதே வாங்கி போட்டுடணும்பா!” என தன்னிலை விளக்கத்தைத் தேடித்தந்தான்.இன்றைய தலைமுறை தடம்மாறும் இடங்கள் சற்றே அதிகம் என்பது அநேகரின் கருத்து.இந்த வருத்த கருத்துக்கு வலுசேர்க்கும் முக்கியமான ஒன்று வகைதொகை இல்லாமல் வாங்கிப்போடும் ‘கன்சுமேரிசம்’ என்பது மறுப்பதற்கில்லை.

பொருளாதாரம் என்பது வாழ்க்கைப் பாதையில் வாகனமாக இருக்க வேண்டுமேயன்றி தேவையில்லாததை தூக்கி சுமக்கும் சுமைதாங்கியாகிவிடக் கூடாது. பூக்கடையில் பொருளாதாரம் பூக்களை வாங்கி நிரப்புவதற்கு உதவ வேண்டுமே தவிர சவங்களை வாங்கி வைத்து பிணக்கிடங்காக்கி விடக் கூடாது. நாம் அளவுக்கதிகமாக சம்பாதிக்கின்றோம் என்பதாலேயே தேவைக்கு அந்நியபடும் அத்தனையையும் வாங்கிக் குவிக்கும் ஏகபோக உரிமையை நாம் பெற்றுவிடுகிறோம் எனும் மனோநிலை நம்மையறியாமலே நாம் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதன் ஆரம்பப்புள்ளி!

“வாங்கித்தான் வையேன்” என்று காது வருடி ஆறுதல் சொல்லும் விளம்பரங்களும், “என்றைக்கும் துணை நிற்போம்” என தூண்டி நம்மைத் திணற வைக்கும் EMI கலாச்சாரமும் இந்தத் தலைமுறையை வழிநடத்துவது நல்ல சாலைகள் அமைத்து நரகத்திற்கு வழியனுப்புவது போன்ற ஒவ்வாத உணர்வே..

விளம்பரங்களில் வரும் பொருட்களெல்லாம் என் வீடு வந்திறங்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உற்பத்தி செய்யும் பொருளுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களாகத்தான் சகமனிதர்களை   விளம்பர யுத்திகளால் இன்றைய ‘முதலாளிதத்துவம்’  தேடிக்கொண்டிருக்கிறது. அடிப்படை மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து தொழிலானது எடுபட வேண்டும். ஆனால் உணர்வு, உயிர் பறிக்கப்பட்டு உருப்பெறுகின்றது இவர்கள் வியாபாரம்.!

அதற்கு சமீபத்திய செய்தி ஒன்று நம் சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக சாட்சி சொல்கிறது. “இந்தியாவில் விற்பனையாகும் முக்கியமான கார்களில் ஐந்து கார் நிறுவனங்களைக் குறிப்பிட்டு இவர்கள் உற்பத்தி செய்யும் கார்கள் தரமில்லாத உட்பொருட்களால் ஆனது. இவை விபத்துக்குள்ளாகும் போது உயிர்ச்சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது” என்று அறிக்கை விட்டது ஒரு ஆய்வு நிறுவனம். உடனே அந்த கார் நிறுவனங்கள் குறிப்பிட்ட கார்களை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது. உலகமெங்கும் கிளைகள் பரப்பி கார்கள் விற்கும் இவர்களுக்குத் தெரியாதா பாதுகாப்புக்கான அளவுகோல் என்ன என்று?

விளம்பரங்களின் வெளிச்சத்திற்கு விழிகளையே விலையாக்கும் இந்த நுகர்பொருள் கலாச்சாரத்தால் தரத்தைப் பற்றி யோசிக்காமல் பயன்பாடு என்ற பண்பாட்டை மறந்து சேமிப்பு என்கிற பழக்கத்தையே ஒட்டுமொத்தமாக செலவழித்து நிற்கிறது இந்தத் தலைமுறை.!

சிறுவயதில் அப்பாவிடம் ஏதோ ஒரு பொருளைக் கேட்டு அம்மாவை தூதனுப்பும் போதெல்லாம் அப்பா என்னை அழைத்து “மாசக் கடைசிடா தம்பி..கொஞ்சம் பொறு வங்கிறலாம்” னு என் தலையை வருடி அனுப்பும் போது மாசக் கடைசியின் அர்த்தமே புரியாமல் தலையாட்டிக் கொண்டு காத்திருந்த காத்திருப்பு, அந்தப் பொருள் மீதான பற்றுதலை, ஏக்கத்தை, பயன்பாட்டை எனக்குள் ஓவியம் வரைந்தது. ஆனால் இன்றைய வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தில் காத்திருத்தல் என்ற பண்பையே  கடந்து, அது நமக்குள் உருவாக்கும் பக்குவத்தையும் இழந்திருக்கின்றோம்,

அந்தப் பக்குவத்தை இழந்ததனால்தான் சம்பாத்தியம் என்பது சேமிப்பாகவும், அத்தியாவசியத் தேவைகளுக்கான ஆதாரமாகவும் இருந்த காலங்கள் காலாவதியாகி, தேவைக்காக வாங்கும் நிலை போய் வாங்கி வைத்து விட்டு பிறகு தேவை ஏற்படுத்திக் கொள்ளும் மனோநிலை நமக்குள் வந்துவிட்டது.

தேரடி வீதியைக் கடந்து சென்ற யானையை விரட்டிச்சென்று காசு கொடுத்து வாங்கிய ஆசியினை பெருமையாகப் பேசிய சிறுவனும்,  குழந்தையைக் கண்டவுடன் தன்னையறியாமல் அதன் கன்னத்தைக் கிள்ளி, கைகளில் சாக்லேட் திணித்து, தன் கண்ணத்தைப் பலூனாக்கி கைகளால் உடைத்து குழந்தையை சிரிக்க வைத்த கணபதி அண்ணனும், “அது என்னமோ தெரியல சார்,,மாசம் ஒரு தடவையாவது இங்க வரலனா ஒரு எதையோ இழந்த மாதிரி ஒரு ஃபீலிங்” என்று முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளிக்கும் ஹரிஷும்   நமக்கான வாழ்க்கை வகுப்பில் பணத்திற்கான சரியான பொருளை கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நம் நாட்டின் 120 கோடிக்கும் மேலான மனித வளங்களை, எதிர்த்து கேள்வி கேட்காத, எதையும் எளிதில் விற்பனை செய்ய அனுமதிக்கும் , நுகர்வோரின் உரிமைகள் குறித்து போதிய விழிப்புணர்வில்லாத, பயன்பாடு பற்றிய அறிவில்லாத ஆனால் விளம்பரங்களில் வருவதெல்லாம் வீடுகளில் இருக்க வேண்டும் என்று எதிர்

பார்க்கின்ற மக்கள் நிறைந்த் சந்தைகளாகவே பார்க்கிறது பன்னாட்டுக் கூட்டம். ஒரு காலத்தில் இந்த நுகர்பொருள் கலாச்சாரமே வெள்ளையர்களுக்கு நாம் அடிமையாகக் காரணமாக இருந்தது. அதே போல் இன்று சிற்சில பரிணாம மாற்றங்களுடன் நம் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிக்கொடுத்து, நாம் மீண்டும் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.!

 

மு. காஜா மைதீன்

9976412260

Kajamaideen M.
9976412260
mu.kajamaideen@gmail.com

News

Read Previous

சிறுகதை பயிற்சி பட்டறை

Read Next

எலுமிச்சை சாறு

Leave a Reply

Your email address will not be published.