மாவீரர் குஞ்சாலி மரைக்காயர்

Vinkmag ad

சுதந்திர டைரியில் ஒரு பக்கம்

(மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் பற்றிய நினைவுச் சொல்லோவியம்)

‘தமிம்மாமணி’ கவிஞர். மு. ஹிதாயத்துல்லா

இளையான்குடி

 

வரலாறு, எல்லோரையும் நினைவு கொள்ளுவதில்லை. தன் நேசிப்புக்குரிய சிலரையே தன் ஞாபக டைரியில் குறித்துக் கொண்டு பூரிக்கிறது.

அந்த வகையில் வரலாற்றின் பக்கங்களுக்கு வாசம் சேர்த்தவர் ஒருவர். அவர் தக்வாவில் ஒரு தங்கம். தைரியத்தில் ஒரு சிங்கம். அவருக்கு நீண்ட காலமாகவே ஒரு தாகமிருந்தது. நமது நாட்டை மொய்த்திருந்த அன்னிய வெள்ளையிருட்டை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்துவதே அவருடைய தணியாத தாகம்.

தேச விடுதலையை இசைத்த கேரள பொன்னர்னி கிராமத்துப் புல்லாங்குழல் அவர். முதல் இந்தியச் சுதந்திரப் பேரொளியென்ற முத்தான முகவரியாளர். இந்தியா, அயல் நாட்டினரால் அடிமைப்படுத்தப்பட்டு இருளில் திக்குமுக்காடியபோது, நமது நாட்டிற்குச் சுதந்திர வெளிச்சம் கட்டாயம் வேண்டுமென்று துடித்தெழுந்தவர், தோள் தட்டியவர் !

இந்தியச் செல்வங்கள், இந்திய கடல் வழியாகவே அன்னியரால் கொள்ளை கொண்டு போனபோது திருவாங்கூர், கொச்சி, கள்ளிக்கோட்டை ராஜாக்களெல்லாம் பெயரளவில் தான் ராஜாக்களாக இருந்தார்களே தவிர அநீதியைக் கண்டு ஆர்த்தெழும் துணிவில்லை. அலைகளின் சீற்றம் தானே கடலுக்கு முகவரி. வெறும் தலையாட்டி பொம்மைகளாக இருந்தார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். குட்டினான் வெள்ளையன். குனிந்தார். நிமிரவில்லை.

இது தான் அன்றைய ராஜாக்களின் நிலை. மக்களின் நிலையும் அது தான். மன்னர் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே என்பார்களே ..! அந்த நிலைமைதான் அப்போதிருந்தது.

இந்த வேளையில் தெற்கேயொரு சூரியன் எழுந்தது. அது சும்மா எழவில்லை. சுளீரென எழுந்தது. சீற்றமாய் சிவந்து எழுந்தது. அந்த சீற்றத்தில் நூறு மிருகங்களின் உறுமல்கள் தென்பட்டது. அந்தச் சூரியனின் வரவால். அன்னியரின் சூழ்ச்சிகள் எல்லாம் நொறுங்கிப் போயின. வாணிபத்திற்காக இங்கே சந்தை பிடிக்க வந்தவர்கள் சற்று திகைத்துத் தான் போனார்கள். இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் அதிசயித்தார்கள். நமக்கென ஒரு அரிமா எழுந்திருக்கிறதென உள்ளம் பூரித்தார்கள். இந்தியரின் கனவுகளைக் கூட கைதாக்கி வைத்திருந்த அன்னியருக்கு, அந்தச் சூரியனின் சூடுபட்டு ஒரு வித ஜன்னியே ஏற்பட்டது.

அவர்களுடைய வியப்பு யாதெனில், எல்லோரும் ஊமைகளான போது ஒருவன் மட்டும் சுதந்திரம் வேண்டி உரத்துக் கூவி எழுந்திருக்கிறானே என்பது தான். அவர்களுடைய விழிகள் இவருடைய விலாசம் தேடியது. அவருடைய ஆயுதம் சாதாரண வாள், கட்டாரி தான். இதற்கு ஈடு கொடுக்க முடியாமல் வெள்ளையரின் பீரங்கிகள் சற்று வெலவெலத்துத்தான் போயின. கதவு திறந்தால் காற்று வரும். ஆனால் அந்தச் சூரியப்படையெடுப்பு எப்போது நிகழும். எப்படித் தாக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை ! எதிரிகள் இரவு தானேயென்று கண் மூடிக்கிடப்பார்கள். அல்லது குடிபோதையில் மயங்கிக் கிடப்பார்கள். அந்த வேளையில் திடீர் தாக்குதல் உக்கிரமாகவே நடைபெறும். அன்னியக் கப்பல்கள் சிதறுண்டு போகும். உறங்கிப் போன கடல் கூட அந்த யுத்தம் கண்டு விழித்துக் கொள்ளும். தன் பங்குக்கு கடல் சினந்து ஆர்ப்பரிப்பைக் காட்டும்.

இப்படி எதிரிகளுக்கும் ‘அதிரடி’ கொடுத்து நடுங்கச் செய்தார் ஒருவர். இப்போது அவர் யாரெனத் தெரிகிறதா…? அந்த வீரியச் சூரியன், வேறு யாருமல்ல. நம் புருவங்கள் உயர்த்திப் பார்க்கும் புன்னகையாளர் அவர் தான் குஞ்சாலி மரைக்காயர். இப்போது நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க, எழுந்த தடைகளை அப்போதிருந்தே அடித்து நொறுக்க முதலில் எழுந்தவர். நாமிருக்கும் நாடு, நம் நாடென்று நம் பாரதிக்கு முன் யோசிக்க வைத்தவர் அதற்காகவே வாழ்ந்து போராடி, தியாகியானவர். இந்திய வரலாறு அவரை மறந்தாலும், நாம் ஒரு போதும் அவரை மறப்பதற்கில்லை. அவர் தியாகத்தை மறைப்பதற்கு இல்லை.

குஞ்சாலி மரைக்காயர் மூவரென அறிகிறோம். அந்த மூவருமே வீரத்தின் விவேகத்தின் முகவரியாளர்களாக வாழ்ந்திருக்கின்றனர். மிகக் குறைந்தளவு படைகளை வைத்துக் கொண்டு பெரும்பான்மையான வெள்ளையரின் படைகளை நடுங்கச் செய்தவர்கள். இது இஸ்லாமியருக்கே உரிய அறிந்த போர் முறை. பத்ருப் போரில் முன்னூற்றிப் பதின்மரால், அபுஜகிலின் படையை வென்று அவனுடைய ஆணவத்திற்கு ‘மரண அணி’ அடிக்கப்பட்டது. இதே போர் முறை உத்திதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொல்லாத போக்கிரி போர்ச்சுக்கீசியப் படைகளை இப்போர் தந்திர முறையிலே தாக்கி குஞ்சாலி மரைக்காயர் படை, எதிரிகளைப் புலம்ப வைத்தனர். கலங்க வைத்தனர்.

இவர்களோடு இன்னொரு வீரரையும், நினைவு கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்தான் குட்டி அலி, இந்தக் குட்டி அலி முதலாவது குஞ்சாலி மரைக்காயருக்கு வீரத் தளபதியாக இருந்தவர். கடலில் சென்று எதிரிகளைத் தாக்கும் நுணுக்கங்களை அறிந்தவர். வல்லவர், நல்லவர். போர்ச்சுக்கீசியரின் கப்பல்களை இரவென்றும் பாராது கடலில் சென்று தாக்கி அழித்தவர்.

இந்த வரிசையில் இன்னொருவரையும் நாம் அறிந்து கொள்ளவிருக்கிறோம். அவர்தான் டான்பெட்ரோ. பெயர் வித்தியாசமாக இருக்கிறதல்லவா? ஆம் குஞ்சாலி மரைக்காயரின் தங்கை மகனாவார். இவர், தம் இளம் வயதிலேயே கிறிஸ்த்துவத்தை தழுவ நேரிட்டது என்றாலும் போர்ச்சுக்கீசியருக்கு எதிராக கிளம்பிய இளம் புயலென்று இவரைச் சொல்லலாம். குஞ்சாலி மரைக்காயர், குட்டி அலி, டான்பெட்ரோ ஆகிய இவர்கள் மறக்க முடியாத மனிதர்கள். இந்திய விடுதலைக்காகவே போராடி மரணித்த மாணிக்கங்கள். அப்போதெல்லாம் சுதந்திரம் பிறப்புரிமையாக மதிக்கப்பட்டது. ஆனால் இப்போது…? சுதந்திரம் மலிவாகிபோனதோயென்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த நாடு விடுதலை பெற, யுத்தம் கண்டவர்கள் ரத்தம் சிந்தியவர்கள் அனைவரும் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும். ஒரு இந்துவின் ரத்தம் மட்டுமா… சிவப்பு? மற்றவர்களின் தியாகம்…? இந்தப் பாடுபட்ட சிகரங்கள் நினைக்கப்படுகிற போது மெளனமாய் புதைந்திருக்கும் வேர்களும் நினைக்கப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும். இது தான் நாம் அவர்களுக்கு காட்டும் மரியாதை. நன்றியுணர்வுயென்றும் சொல்லுவேன். சுதந்திரம் வேண்டிய போது “நாமெல்லாம் இனம், மொழி, மதம் கடந்து (             ) ஆனால் நாம் சுதந்திரம் அடைந்த பிறகு, என்ன சொல்வது? வேறாகிப் போனோம். என்று ஒரு கவிஞன் நொந்து சொல்லியிருக்கிறான். இனியும் இந்தப்பேதம் வேண்டாம். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை உயிர் கொடுத்த உத்தம தியாகிகள் எல்லோரையும் சமமாக நினைப்போம் ! நேசிப்போம்.

வாழ்க பாரதம் !                      வாழ்க மணித்திரு நாடு !

ஜெய்ஹிந்த் !

News

Read Previous

அருள்சுனை குளித்தபின் வெறுமனே அமர்வதா ?

Read Next

பல்துறை அறிஞர் விபுலானந்த அடிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *