மாநகரக் கட்டமைப்பும் மக்கள் உடல்நிலையும்

Vinkmag ad

அறிவியல் கதிர்

மாநகரக் கட்டமைப்பும் மக்கள் உடல்நிலையும்
பேராசிரியர் கே. ராஜு

வட அயர்லாந்து க்வீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உடல்நல நிபுணர்கள் தலைமையில் ஒரு சர்வதேச ஆய்வுக் குழு இந்திய மாநகரங்களின் கட்டடங்கள், சாலை அமைப்புகள் ஆகியவை (City Design) மக்கள் உடல்நலன் மீது ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் பற்றி முதன்முதலாக ஆய்வு செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. உடற்பயிற்சி செய்வதற்கு நகரக் கட்டமைப்பினால் ஏற்படும் சாதக பாதகங்களைப் பற்றி பரிசீலனை செய்ய ஆய்வுக்குழு முடிவு செய்தது. இந்திய மாநகரங்களின் வேகமான, திட்டமிடப்படாத வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கும் மக்கள் உடல் நலனுக்கும் கேடு விளைவித்து வருகிறது. பொதுப்போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் போதுமானவையாக இல்லாததால், மக்கள் தனிப்பட்ட வாகனங்களைச் சார்ந்திருக்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடைபாதைகளுக்கும் ஓய்வு எடுப்பதற்குமான வெளி குறைந்து வருகிறது என்கிறார் ஆய்வுக்குழுவைச் சேர்ந்த டாக்டர் தீப்தி அட்லாக்கா.  மேலும் கூறுகையில், 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா விரைவிலேயே மக்கள்தொகையில் உலகின் முதல் நாடாக மாற வாய்ப்பு கூடி வருகிறது. உடற்பருமன், நீரிழிவு, இதயக் கோளாறுகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. போதிய உடலுழைப்பு இன்மைதான் இந்த நோய்கள் அதிகரிக்கக் காரணம்.  உடலுழைப்பிற்கான தேவையையும் வசதிகளையும் மாநகரங்களின் கட்டமைப்பு சுருக்கிவிடுகிறது எனத் தங்களது ஆய்வு முடிவுகளை அவர் விளக்குகிறார்.  அண்மையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் பசுமையான நிலங்களின் அருகே வசிக்கும் மூத்த குடிமக்களிடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு அவர்களுடைய வாழ்நாள் அதிகரிப்பதை உறுதி செய்திருக்கிறது. சென்னையிலுள்ள 370 நகரவாசிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தங்கள் பகுதியில் உள்ள கட்டடங்கள், சாலைகள் உடற்பயிற்சிக்கு எந்த வகையில் உதவுகின்றன அல்லது தடையாக இருக்கின்றன என்ற கேள்வி அவர்களிடம் கேட்கப்பட்டது. நகரத்தின் கட்டமைப்பு வசதி, அழகியல் ரசனை, பொதுப்போக்குவரத்து இணைப்பு ஆகியவற்றின் போதாமையால் அவர்களது உடல்ரீதியான இயக்கம் பாதிக்கப்பட்டிருப்பதாக பதில் கூறினர். போக்குவரத்து வசதிகள், போக்குவரத்தின் அளவு, குற்றங்கள், கட்டடங்கள், சாலைகள் மற்றும் நடைபாதைகளின் மோசமான பராமரிப்பு, வேகமான நகரமயமாக்கல், மரங்கள், பூங்காக்கள் மற்றும் பசுமை வெளிகள் குறைந்து போனது ஆகிய பல்வேறு அம்சங்கள் திறந்தவெளி நடைப்பயிற்சிக்குத் தடையாக இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.  தமிழக அரசு, மாநகராட்சி நிர்வாகங்கள், அரசு சாரா அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனை இது.

News

Read Previous

தமிழ் இலெமுரியா

Read Next

1000 கவிஞர்கள் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *