மறக்கத் தெரிந்த மனமே உனக்கு….

Vinkmag ad
மறக்கத் தெரிந்த மனமே உனக்கு….
எஸ் வி வேணுகோபாலன் 
நினைவாற்றல் ஒரு வரம் என்று சொல்லப்படுகிறது. அப்படியெல்லாம் இல்லை, கவனம் செலுத்தி எடுத்து உள்ளே வைத்துக் கொள்ளும் எந்தச் செய்தி, படம், காணொளி, பேச்சு, வாசனை எதையும் மூளை திரும்ப எடுத்துக் கொடுக்கவே செய்கிறது என்று அறிவியல் பார்வை சொல்கிறது.  வீட்டில் எங்கோ மூலையில் தூக்கி எறிந்துவிடும் பொருளைப் பின்னர் தேடுகிறோம். நினைவோடு வைத்த பொருளை, அதே இடத்தில் இருந்து சிக்கலின்றி எடுக்க முடிகிறது. அதே போல் தான், உரிய கவனத்தோடு வாங்கிக் கொள்ளும் விஷயங்கள் பத்திரமாக வைத்த எடுத்தில் இருக்க, தேவைப்படும்போது நம் நினைவிலிருந்து கொட்டும்..
‘வரப்படுத்திக் கொள்’ என்று அந்நாளைய ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்வது உண்டு. மனனம் செய்தல் கற்றுக் கொள்ள வேண்டிய அருமையான விஷயம். மனப்பாடக் கல்வி முறை குறித்து நாம் விமர்சனம் வைக்கிறோம். ஆனால், இரண்டுக்கும் வேறுபாடு கூர்மையானது. மாணவர் இயக்க நிகழ்வு ஒன்றில் பேசுகையில், மார்க்சிஸ்ட் தத்துவ ஆசான் தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாடு அவர்கள், இளமையில் தாம் மனனம் செய்யப் பழகியது தான் பின்னர் வரலாற்று நிகழ்வுகளை, தேதிகளை, மனிதர்களை, விஷயங்களை எப்போதும் அப்படியே எளிதில் நினைவு படுத்திக் கொள்ள உதவியது என்று சொல்லி, மனனக் கலை பழகுமாறு ஊக்குவித்தார். ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் தாம் இளவயதில் பைபிள் மனப்பாடமாகச் சொல்லிப் பழகியதால், பிந்தைய வாழ்க்கையில் செம்மையான நினைவாற்றல் வாய்த்ததையும், அவரது பேச்சு மற்றும் எழுத்துகளில் விவிலிய சொற்கள் விரவி இருப்பதையும் ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார்.
வேத மந்திர உச்சாடனம் நல்ல நினைவாற்றல் வளர்க்கும், ஆனால், அது ஒன்று சம்ஸ்கிருத விளைவு அல்ல, கிரிகோரியன் ரைம்ஸ் எனும் கிறித்துவ சங்கீதம் பயில்வோர்க்கும் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும் என்கின்றனர், இவை மட்டுமல்ல, கவனத்தோடு பயிற்சி எடுத்து நினைவாற்றல் வளர்த்துக் கொள்ள உதவும் எதையும் திரும்பத் திரும்பச் சொல்லிப் பழகலாம் என்று தி இந்து நாளிதழில் தமது வாராந்திர அறிவியல் பத்தியில் (ஜனவரி 13, 2018) திரு பாலசுப்பிரமணியன் எழுதி இருந்தார்.  (https://www.thehindu.com/sci-tech/science/the-sanskrit-effect-and-how-rigorous-memorising-helps-the-memory/article22436878.ece)
நினைவாற்றல் பற்றி எப்போது சிந்தித்தாலும், பார்த்து வியந்த ஓர் அபார மனிதரை நோக்கி நினைவுகள் பின்னோக்கிச் செல்லத் தொடங்கி விடும்.
கோவில்பட்டி ராமையா அவர்களைப் பற்றி மூத்த வாசகர்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பதின் கவனகர் என்று கொண்டாடப்பட்டவர். தசாவதானி என்று வடமொழிச் சொல்லில் குறிப்பிடுவர். அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்றெல்லாம் விற்பன்னர்கள் சிலர் இருந்திருக்கின்றனர். ஒரே நேரத்தில் எட்டு, பத்து, நூறு வெவ்வேறு விஷயங்களில் கவனத்தைப் பதித்து அப்படியே அனைத்தையும் ஒன்று கூட நழுவி விடாமல், பிறழாமல் திரும்ப மனத்திலிருந்து எடுத்து வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இவர்கள்.
எழுபதுகளின் நடுப்பகுதியில், கல்லூரிப் படிப்பு காலத்தில், அவரை முதன்முறை பார்த்தது மறக்க முடியாதது.  சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரிக்கு அவரை வரவழைத்து இரண்டு மணி நேரம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை அருமையான ஆசிரியர்கள் சிலர் ஒருங்கிணைத்தனர். நாகநந்தி என்ற புனைபெயரில் துரியோதனன் நாடகத்தை ஆர் எஸ் மனோகர் அவர்களது நாடகக் குழுவிற்கு எழுதித் தந்த திரு வேணுகோபாலன் அய்யா அதில் அமர்க்களமான பங்களிப்பு செய்தவர்.
பதின் கவனகர் ராமையா அவர்கள் குறிப்பாக, திருக்குறள் பாக்களில் அசாத்திய நினைவாற்றல் பெற்று இருந்ததால், திருக்குறள் ராமையா என்றும் அழைக்கப்பட்டவர். அன்றைய நிகழ்ச்சி முழுவதும் திருக்குறள் தான். எண்ணும் எழுத்தும் தான். திருக்குறளில் எந்த எண்ணைச் சொன்னாலும் உடனே அந்தக் குறட்பா சொல்லி விடுவார்  ராமையா.
குறளை மாணவர் சொன்னால், அது எந்தப் பாலில், எந்த அதிகாரத்தில், எத்தனையாவது குறள் என்று சட்டென்று சொல்லி விடுவார். குறளில் எப்படி எந்த விதம் கேட்டாலும் பதில் வந்துவிடும். குறளில் அதிகம் பயின்று வரும் சொற்கள்,  கடைசி சொல் முடியும் எழுத்துகளில் எது அதிக முறை வருகிறது என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.  ‘இவ்விரண்டும், இம்மூன்றும், இந்நான்கும்’ என்றெல்லாம் வரும் குறள்கள் எவை என்று கேட்பார்கள். ஒரே சொல் அதிகம் பயின்று வரும் குறள்கள் எவை என்று கேட்பார்கள்..
இதனூடே ஒரு தொடர் இடைவெளியில் ஒருவர் ராமையாவின் முதுகில் பூவால் தொடுவார், இன்னொருவர் மணியோசை எழுப்புவார், மற்றொருவர் ஒற்றை இலக்கத்தில் ஏதோ ஒரு எண்ணை உரக்கச் சொல்லி வருவார், அதை, அடுத்தடுத்த இலக்கமாக ஒருவர் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருப்பார். இன்னும் ஒருவர் ஐந்து இலக்க எண்கள் நான்கு வரிசையில் எழுதுமாறு சொல்லி அதன் கூட்டல் தொகை இப்படி வர வேண்டும் என அதை முதலில் எழுதி அவரிடம் சொல்ல, ஒவ்வோர் எண்ணாகத் தொடர்ச்சியான இடைவெளியில் சொல்லி வருவார் ராமையா.
ஓர் ஈற்றடி கொடுத்து அதில் முடியுமாறு ஒரு வெண்பா எழுத அவரைக் கேட்பார்கள், ஒவ்வொரு சொல்லாகத் தொடர்ச்சியான இடைவெளியில் சொல்லி வருவார் ராமையா.  ஜெயின் கல்லூரி நிகழ்ச்சியில், வள்ளுவர் வாய்மொழி வீண் என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டிருந்தது, எழுதிப் போட்டவர் உதவி பேராசிரியர் வேணுகோபாலன் அவர்கள். அய்யா ராமையா சிரித்துக் கொண்டே, அவர் வாய்மொழியே வீண் என்றால், அப்புறம் வேறு யார் மொழியை என்ன சொல்வது என்று கேட்டபடி, சரி, இதற்கு வெண்பா வேண்டும், அது தானே, சொல்கிறேன் என்று ஒவ்வொரு சொல்லாகத் தொடர் இடைவெளியில் சொல்லிவரத் தொடங்கினார்.
நிகழ்வில் கேள்வி பதில்கள், விளக்கங்கள் எல்லாம் முடிந்தபிறகு, தமது முதுகில் எத்தனை முறை பூவால் தொட்டனர் என்பதைத் துல்லியமாகச் சொன்னார் (அதில் ஒரு முறை சந்தேகத்தோடு வேகமாக இரண்டு முறை அடுத்தடுத்து தொட்டுவிட்டார் அந்த ஆசிரியர் என்றும் சொல்லி வியக்க வைத்தார்). அதே போல், இத்தனை முறை மணி ஒலித்தது என்றார். கரும்பலகையில் கிட்டத்தட்ட 35 இலக்கங்களுக்கு மேல் சென்று நின்ற அந்த எண்களை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் சொல்லி அசர வைத்தார். கூட்டல் தொகை சரியாக வருமாறு அத்தனை எண்களையும் அசாத்தியமாக அமைத்துக் கொடுத்திருந்தார்.
வெண்பா, இலக்கண சுத்தமாக செப்பலோசை அமைய அழகாக வரப்பெற்றிருந்தது. வள்ளுவர் குறள்பாக்களைச் சும்மா மனப்பாடம் செய்து ஒப்புவித்து விட்டு அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் போனால் வள்ளுவர் வாய்மொழி வீண் என்று பொருள்படும்படி முடித்திருந்தார் வெண்பாவை….. எழுந்து நின்று உரத்த கரவொலி எழுப்பிக் கொண்டாடினர் மாணவர்கள்.
இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா, அன்று அவரிடம் இந்தக் குறள் கேட்கப்பட்டதா, நினைவில்லை, ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்ற குறள் வழி தான் அவரது பார்வை. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று மட்டுமே வாழ்ந்த வாழ்க்கை.  ஆம்,  ராமையா அவர்கள் கண் பார்வை அற்றவர். என்ன அற்புதமான எளிய மனிதர்.
ண்பர் ஒருவரிடம் நினைவாற்றல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். தனக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு என்று அடித்துச் சொன்னார் நண்பர். ‘என்ன, அப்பப்ப மறந்து விடும் அவ்வளவு தான்’ என்றார்.

News

Read Previous

சோளத்தட்டை நாயகர்கள்

Read Next

பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *