மருந்துகளின் விலையைக் குறைக்க மேடைகளில் முழங்கினால் போதாது

Vinkmag ad

அறிவியல் கதிர்

மருந்துகளின் விலையைக் குறைக்க
மேடைகளில் முழங்கினால் போதாது

பேராசிரியர் கே. ராஜு

மருத்துவர்கள் மருந்துச் சீட்டு எழுதும்போது பொதுவான அடிப்படை மருந்துகளைப் (generic medicines) பரிந்துரைப்பதைக் கட்டாயமாக்குவதன் மூலம் மருந்துகளின் விலையைக் குறைக்க இருப்பதாக அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முழங்கியிருக்கிறார். அடிப்படை மருந்துகளின் பெயர்களை தெளிவாக பெரிய எழுத்துக்களில் டாக்டர்கள் எழுத வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் வழியாக 2016 செப்டம்பர் 28 அன்று மத்திய அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகு கடந்த ஆறு மாதங்களில் டாக்டர்கள் இந்த அரசு ஆணையைப் பின்பற்றுகிறார்களா என ஒரு முறை கூட கண்காணிப்பு ஏற்பாடு எதையும் அரசு செய்யவில்லை. பெரும்பாலான டாக்டர்கள் மேற்கூறிய அரசாணையைப் பின்பற்றவில்லை என்பதே நம் கள அனுபவம்.
உடல்நலனின்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளின் ஆகப் பெரிய செலவே மருந்துகளுக்காகும் செலவுதான். அரசு மருத்துவமனைகளில் உள்ள மோசமான நிலைமைகள் அவர்களைத் தனியார் மருத்துவமனைகள் பக்கம் தள்ளிவிடுவதுதான் இதற்குக் காரணம். தற்போது மருத்துவமனைப் பராமரிப்பில் 20 சதமும் வெளிநோயாளிகள் பராமரிப்பில் 40 சதமும் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகள் கவனிப்பில் நடக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது கூட பெரும்பாலான மருந்துகள் அங்கே கிடைக்காத காரணத்தால் நோயாளிகள் வெளியே உள்ள தனியார் மருந்துக்கடைகளில் அவற்றை வாங்கித் தர வேண்டிய நிலையே உள்ளது. விளைவாக, நோயாளிகள் சிகிச்சைக்குச் செலவழிக்கும் தொகையில் 50-லிருந்து 70 சதம் வரை மருந்துகள் வாங்குவதற்கே செலவிட வேண்டியுள்ளது. கட்டுப்படியாகாத உடல்நலப் பராமரிப்புச் செலவுகளின் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் 5-லிருந்து 7 கோடி இந்தியர்கள் வரை வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படுகின்றனர் என மக்கள் உடல்நலன் குறித்த பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிகபட்ச லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் மருந்துகள் தயாரிப்புக் கம்பெனிகள் மருந்துகளின் விலையை உச்சத்தில் வைத்துக் கொள்ளையடித்து வருகின்றன. ஒரு மருந்தைத் தயாரிக்கும் செலவைப் போல 10-லிருந்து 20 மடங்கு வரை (சில சமயங்களில் அதற்கும் மேலாகவே) விலை வைத்து விற்கப்படுகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. நோயாளிகள் எந்தக் குறியீட்டுப் பெயர் (brand name) உள்ள மருந்தை வாங்கவேண்டும் என்பதை டாக்டர்களும் மருந்துக் கடைக்காரர்களும் முடிவு செய்கின்றனர். மருந்துக் கம்பெனிகள் தங்களுடைய சந்தையையும் லாபத்தையும் தக்க வைத்துக் கொள்ள டாக்டர்களையும் மருந்துக் கடைகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்கு அவர்கள் வசம் பல தந்திரங்கள் உள்ளன. பரிசுகள் தருவது, இன்பச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்வது, டாக்டர்கள் மாநாடுகளை நடத்த ஸ்பான்சர் செய்வது எனப் பல்வேறு விதங்களில் அவை டாக்டர்களைத் தங்கள் வலைக்குள் பிடித்து வைத்துக் கொள்கின்றன.  மருந்துக் கடைகளை மடக்க இருக்கவே இருக்கிறது டிஸ்கவுண்ட் என்ற அஸ்திரம். உதாரணமாக, எம்ஆர்பி (maximum retail price) 100 ரூபாய் எனக் குறிக்கப்பட்டுள்ள ஒரு மருந்துப் பாக்கெட்டிற்கு 50 ரூபாய் தள்ளுபடி தருவது. அந்தப் பாக்கெட்டை 100 ரூபாய்க்கு விற்றுவிட்டு கடைக்காரர் 50 ரூபாயைக் கல்லாவில் போட்டுக் கொள்ளலாம். எந்தக் கடைக்காரராவது இப்படி வலுவில் வரும் வருமானத்தை விட்டுக் கொடுப்பாரா?
விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மருந்துக்கும் உலக அளவில் அதிகாரம் படைத்த அமைப்பு முடிவு செய்யும் ஒரு ஐஎன்என் (International Non-proprietary Name) பெயர் உண்டு. அந்த மருந்தின் பொதுவான அடிப்படைப் பெயரும் அதுதான். பெரும்பாலான கம்பெனிகள் இந்தப் பொதுப் பெயரை சிறிதாக எழுதிவிட்டு தங்கள் பிராண்ட் பெயரை பெரிதாக எழுதிக் கொள்ளும் வழக்கமும் இருக்கிறது. உதாரணமாக, காய்ச்சலுக்கும் வலிக்கும் உள்ள பொதுவான மருந்து பாரசிடமால். அந்த மருந்தை கம்பெனிகள் க்ரோசின், கால்போல், பராசிப் என தங்களது பிராண்ட் பெயர்களில் விற்பார்கள். ஜெனரிக் மருந்துகளைத்தான் டாக்டர்கள் எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்துவிட்டால் மருந்துக் கம்பெனிகள் தங்களது பிராண்ட் மருந்துகளை விற்றுக் கொள்ளையடிக்க முடியாமல் போய்விடும். எனவே, இந்த சட்டம் அமுலாகாமல் தடுக்க தங்களால் இயன்ற அனைத்துக் கைவரிசைகளையும் மருந்துக் கம்பெனிகள் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜெனரிக் பெயர்களையே ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. மருத்துவ மாணவர்களுக்கு மருந்துகளைப் பற்றிக் கற்பிக்கும்போது ஜெனரிக் பெயர்களைக் கொண்டே கற்பிக்கப்படுகிறது. ஒரே மருந்தைப் பல்வேறு பிராண்ட் பெயர்களால் குறிப்பிட நேரும்போது அனுபவம் உள்ள டாக்டர்களே கூட குழம்பிவிடுவது உண்டு. எனவே, மருந்துச் சீட்டில் ஜெனரிக் பெயர்களை எழுதுவதுதான் அறிவியல்ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் சரியான நடைமுறையாக இருக்க முடியும்.
மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்கவேண்டுமென அரசு உண்மையிலேயே விரும்பினால் எல்லா அத்தியாவசிய மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் இதைச் செய்வதற்கு மக்களது உடல்நலப்பராமரிப்பிற்கு அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருந்துக் கமபெனிகள் அடிக்கும் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பும் அரசியல் உறுதியும் வேண்டும். மக்கள் உடல்நலனைவிட கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனையே பெரிதாகக் கருதும் ஒரு பிரதமரிடமிருந்தும் அரசிடமிருந்தும் இதையெல்லாம் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
         (உதவிய கட்டுரை : ஏப்ரல் 17-23 பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் அமித் சென்குப்தா எழுதிய கட்டுரை)

News

Read Previous

மே 4, அபுதாபியில் ரத்ததான முகாம்

Read Next

உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள் –ஜூஸ்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *