மருத்துவ உலகில் பரப்பப்படும் கட்டுக்கதைகள்

Vinkmag ad
மருத்துவ உலகில் பரப்பப்படும் கட்டுக்கதைகள் 
பேராசிரியர் கே. ராஜு
உடல்நலன் பற்றி அநேகமாக ஒவ்வொருக்கும் ஒரு கொள்கை, அணுகுமுறை இருக்கும். பொதுவாக மக்களிடம் உள்ள சில உடல்நலன் பற்றிய பார்வைகள் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தாலும் அவர்கள் அதை ஏற்கமாட்டார்கள். தங்களது நம்பிக்கைகளில் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். தங்களது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சில மருத்துவ சிகிச்சைகள் பலன் அளித்துள்ளன என்றோ பலன் அளிக்கவில்லை என்றோ அறிந்துகொண்டதாக வாதிடுவார்கள். நம்பிக்கைகளும் செயல்பாடுகளும் சமூகத்தினால் கட்டமைக்கப்படுகின்றன.
உதாரணமாக, கிழக்கிந்தியாவின் பல பகுதிகளில் ஒருவருக்கு உடல்நலன் குன்றும்போது அவர்கள் உண்ணும் பிரதான தானியத்தை மாற்றுவது பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரிசியிலிருந்து கோதுமைக்கு மாறுவார்கள். வட இந்தியாவின் பல பகுதிகளில் இதற்கு நேர்மாறான நம்பிக்கை இருப்பதை (அதாவது கோதுமையிலிருந்து அரிசிக்கு மாறுவது) எப்படி புரிந்து கொள்வது? இரு பிராந்தியங்களிலும் உணவு தானியத்தை மாற்றியதால் ஜீரணம் சுலபமாயிற்று என தங்கள் அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டதாக ஆவேசமாக வாதிடுவார்கள். உண்மை என்னவெனில், பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளை பசியின்மை வெளிப்படுத்திவிடும். உட்கொள்ளும் உணவை மாற்றும்போது பசியை அது தூண்டக்கூடும். ஆக, கிழக்கிந்தியாவில் அரிசியிலிருந்து கோதுமைக்கு மாறுவது என்ன விளைவை ஏற்படுத்துகிறதோ அதே விளைவை வட இந்தியாவில் கோதுமையிலிருந்து அரிசிக்கு மாறுவது ஏற்படுத்துகிறது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக கேரளாவில், சூடான நீரைப் பருகுவது நல்லது என கருதப்படுகிறது. உணவு ஜீரணமாவதற்கு  சுடுநீர் உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெப்பமான,  ஈரப்பதம் நிலவும் பருவநிலைகளில் இரைப்பைத் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். நீரின் வழி ஏற்படும் தொற்றுகள் அகற்றப்பட வெந்நீர் உதவும். இந்தக் காரணத்தினால் சுடுநீர் உதவலாமே தவிர, ஜீரணத்திற்கு அது உதவும் என்பது வெறும் நம்பிக்கைதான்.
இன்று மருத்துவத் தொழில் உலகமும் உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கும் தொழிலகமும் பல மருத்துவக் கதைகளை உருவாக்குவது சாதாரணமாகியிருக்கிறது. அப்படிப்பட்ட சில கதைகளைப் பார்ப்போம்.
இதய ஸ்டெண்டுகள் யாருக்குத் தேவை?
இதய நோய் உள்ளவர்கள், மிதமான உடற்பயிற்சி செய்ததுமே நெஞ்சுவலி பாதிப்பு அடைபவர்கள் எல்லோருக்குமே ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டெண்ட் எனப்படும் ஒரு கருவியைப் பொருத்திவிட வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாகியிருக்கிறது. இதயத்தின் ரத்தம் அடைபட்ட தமனியில் அடைப்பை எடுத்துவிடும் வேலையை ஆஞ்சியோபிளாஸ்டி செய்கிறது. பின்னர் தமனியில் சொருகப்படும் ஒரு உறுதியான மெல்லிய குழாய்தான் ஸ்டெண்ட். தமனியில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க ஸ்டெண்ட் உதவுவதாக நம்பப்படுகிறது. குறைத்து மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படியே கூட, உலகம் முழுதும் உள்ள 5 லட்சத்திற்கும் மேலான இதய நோயாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஸ்டெண்டுகள் பொருத்தப் படுகின்றன.
இங்கிலாந்தின் ஆய்வாளர்கள் அண்மையில் செய்த பிரபலமானதொரு ஆய்வில் நம்மைத் திடுக்கிட வைக்கும் ஒரு முடிவு வெளியிடப்பட்டது. லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இதயரத்தத் தமனியில் அடைப்பு ஏற்பட்டு உடல் செயல்பாட்டினைக் குறைத்துக் கொள்ளும் அளவு நெஞ்சுவலி ஏற்பட்ட 200 நோயாளிகள் மீது ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மாத்திரை மருந்துகள் கொடுத்தபிறகு, அவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். முதல் குழுவில் உள்ளவர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. இரண்டாவது குழுவில் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை செய்யப்படவில்லை.  நோயாளிகளுக்கு அவர்கள் எந்தக் குழுவில் சேர்க்கப்பட்டார்கள் என்பது சொல்லப்படவில்லை. ஆய்வாளர்கள் ஆறு வாரம் கழித்து நோயாளிகளைப் பரிசோதித்தபோது இரண்டு குழுவினருமே தங்களது நெஞ்சுவலி குறைந்திருப்பதாகக் கூறினர். ஓடுபொறி சோதனைகளில் (treadmill tests) அவர்கள் எல்லோருமே நன்கு தேறினர். சிகிச்சைக்கு பலன் என்ன என்பதில் எந்த வித்தியாசத்தையும் இரு குழுவினரிடமும் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது, ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டெண்ட் வைப்பது எல்லாம் பிளேசிபோ மனவைத்தியத்தைவிட ஒன்றும் சிறந்ததாக இருக்கவில்லை! பிளேசிபோ மனவைத்தியம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.
  (உதவிய கட்டுரை : ஜூன் 25-ஜூலை 01  பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் அமித் சென்குப்தா எழுதியது)

News

Read Previous

புல்வெளியில் ஒரு புது வசந்தம்

Read Next

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *