மனச்சோர்வை விரட்ட என்ன வழி?!

Vinkmag ad

மனச்சோர்வை விரட்ட என்ன வழி?!

‘அப்படி நடக்குமென்று எதிர்பார்த்தேன், கடைசியில் இப்படியாகி விட்டதே’, ‘அவனிடம் நிறைய எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றி விட்டான்’ இப்படியான புலம்பல்கள் தினசரி வாழ்வில் காதில் வந்து விழுகின்றன. இப்படி, எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்களிடம் நீங்காமல் குடி கொள்ளும் அரக்கன் தான் மனச்சோர்வு. இதற்கு தீர்வு தான் என்ன?!

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும். மனதுக்குள் தோற்று விட்டது போல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு என்ற எதிரியை உள்ளே அனுமதித்து விட்டீர்கள் என்று அர்த்தம்!

மனச்சோர்வு எதனால் வருகிறது… அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது? ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகி விடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார். நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை. சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள்.

நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும் போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது? உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்? அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்து விடும்

வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்து விடலாம். மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்து விடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது!

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஒருநாள், ஜெனரல் ஐஸனோவர் சொர்க்கத்துக்குப் போனார். “வாரக் கடைசியில் நரகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்கு அனுமதி வேண்டும்” என்று கடவுளிடம் அவர் கோரினார்.

“நரகத்தில் இருப்பவர்கள் சொர்க்கத்தைப் பார்க்க விரும்பினால் அர்த்தம் இருக்கிறது. உனக்கு நரகத்தைப் பார்க்கும் ஆசை எதற்கு?” என்று கேட்டார் கடவுள்

. “அங்கே ஹிட்லர் என்ன வேதனைகளை அனுபவிக்கிறார் என்று பார்க்க வேண்டும்” என்றார் ஐஸனோவர்.

கடவுள் நரகத்துக்கான பாஸ் கொடுத்தார். நரகத்தில் ஹிட்லர் சித்ரவதை செய்யப்படும் முகாமுக்கு ஐஸனோவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அசிங்கங்களால் நிரப்பப்பட்ட இரண்டு ஆள் உயரத் தொட்டி ஒன்றில், ஹிட்லர் அமிழ்த்தப்பட்டிருந்தார். தொட்டிக்கு வெளியே தெரிந்த அவருடைய முகத்தில், பிரகாசமான புன்னகையைப் பார்த்து ஐஸனோவர் ஆச்சர்யம் அடைந்தார்.

“சகிக்க முடியாத நாற்றத்தில், அருவருப்பான அசிங்கத்தில் அழுத்திய போதும், எதைப் பற்றி நினைத்து இப்படி வெட்கமில்லாமல் சிரிக்கிறாய்?” என்று ஹிட்லரிடம் கேட்டார்.

“எனக்கு கீழே சிக்கிக் கொண்டு இருப்பது யார் தெரியுமா? முசோலினி! அவன் தோள்களில் தான் நான் நிற்கிறேன். அவன் நிலைமையை நினைத்துப் பார்?” என்று ஹிட்லர் பொங்கிப் பொங்கிச் சிரித்தார்.

துக்கம் என்பதும், வருத்தம் என்பதும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வருத்தம் கூடும் அல்லது குறையும் என்றால், அவை வெளியிலிருந்தா வருகின்றன? இல்லை. உங்கள் மனதுக்கு உள்ளேயே தான் உற்பத்தியாகின்றன. உங்கள் மனத்தைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதோ, சோர்வாக வைத்துக் கொள்வதோ உங்கள் கையில் தான் இருக்கிறது

நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும், மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை. அதைக் காலடியில் போட்டு நசுக்கி விட்டு மேலே தொடரவில்லை என்றால், நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் அச்சம் வரும். நம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு எழும். மனச்சோர்வு வரும் போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்தி விட்டு, அதற்குக் காரணம் நீங்கள் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்

உலகத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள்.

News

Read Previous

இறைவனிடம் இறைஞ்சி நிற்போம் !

Read Next

வரலாற்றில் இன்று 04.01.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *