மனஅகராதி

Vinkmag ad

Dr.Fajila Azad 

(International Life Coach – Mentor – Facilitator)

fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad

 

  1. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

மனஅகராதி

நம்மை அதிகம் அறியாதவர்களை விட நமக்கு மிக வேண்டியவர்களின் செயல்கள் தானே நம்மை அதிகம் உணர்ச்சி வசப்பட செய்கிறது. அதிலும் நன்றாக பழகக் கூடியவர்கள் கொஞ்சம் பாராமுகமாக இருந்தால் கூட வருத்தம், அவமானம் என மனம் வேதனையில் தவிக்கிறதே இது பலரின் புலம்பல். 

உண்மையில் கோபம், வருத்தம், கவலை, பயம், அவமானம், குற்ற உணர்ச்சி என எந்த உணர்ச்சியும் வெளியிலிருந்து உங்களுக்கு வருவதில்லை. உண்மையில் இந்த உணர்ச்சிகள் எல்லாமே ஒன்றை தொட்டு உங்களுக்குள் ஓடும் எண்ண ஓட்டங்கள், சிந்தனைகள், மனத்திரையில் எழும் காட்சி அமைப்புகள், மனதுள் சுழன்று எழும் வார்த்தை பிரவாகங்கள், என உங்கள் கருத்துக்களுக்கு உங்கள் உடல் தரும் ஒரு “ஃபீட்பேக்”.

உங்களை சுற்றி எத்தனை விஷயம் நடந்தாலும் அது எந்த மாதிரியான உணர்ச்சியை உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டுமென்பதற்கு உங்களுடைய மனது உங்களிடம் இருக்கும் அதற்கான அர்த்தம் பிரிக்கும் பிரத்யேக அகராதியை வைத்தே உங்கள் ஹார்மோன்களை சுரக்க செய்து உங்களுக்குள் பல உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

அதாவது நீங்கள் எது ஒன்றையும் உங்கள் மனதில் எதிர்மறையாக எடுக்கும் போது உங்கள் மூளைக்கு அந்த எதிர்மறை சிந்தனை செய்தி போக உடனே மூளையின் பகுதியில் இருக்கும் (hypothalamus)ஹைப்போதலமஸ் எனும் கெமிக்கல் ஃபேக்ட்ரி எதிர்மறை உணர்ச்சிகளை ஏற்படுத்தும் ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. அந்த சுரப்பிகளும் உங்களுக்குள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

உதாராணமாக, நீங்கள் எதிர்பார்க்கும் ரெஸ்பான்ஸ் ஒருத்தரிடமிருந்து உங்களுக்கு கிடைக்காத போது நீங்கள் அதை அவமானமாகக் கருதினால் அதற்கான கெமிக்கல் ஹார்மோன்கள் உங்களிடம் சுரந்து அது உங்கள் இரத்த ஓட்டத்தில், உங்கள் உடம்பின் ஒவ்வொரு செல்களிலும் கலந்து உங்கள் உடம்பை வருத்தும் வகையில் உங்களை மனஅழுத்தத்திற்கு ஆளாக்கி விடும். உங்களின் எண்ணத்தின் திடத்தைப் பொறுத்து சுரப்பியின் அளவு இருக்க அதன் அளவைப் பொறுத்து உங்கள் உணர்ச்சியில் அழுத்தம் இருக்க அதைப் பொறுத்து உங்கள் மனதின், உடலின் ஆரோக்யம் பாதிக்கிறது.

இதுவே நீங்கள் எந்த சூழலிலும் எதையும் பெர்சனலாக எடுத்துக் கொள்ளாமல், உங்கள் மகிழ்ச்சியை இழக்காமல் இருந்தால் எதிர்மறை உணர்ச்சிக்கான சுரப்பிகள் உங்களிடம் சுரக்காமல் உங்கள் உடலும் மனதும் ஆரோக்யமாக இருக்கும். 

நீங்கள் கற்றதிலும் வாழ்க்கை பயணத்தில் பெற்றதிலும் ஒவ்வொன்றிற்கும் உங்களுக்கு பிடிபடும் வகையில் ஒரு அர்த்தத்தை கற்பித்துக் கொள்கிறது மனம். அது தான் உண்மையென அந்தந்த சூழல்களில் நம்பி அது ஏற்படுத்தும் உணர்ச்சிகளால் உற்சாகமாகவோ, உறுத்தலாகவோ, உதாசீனமாகவோ உணர்கிறீர்கள். உங்கள் மனஅகராதியே உங்கள் உணர்ச்சிகளையும் உங்கள் வாழ்க்கை தரத்தையும் மகிழ்ச்சியையும் நிர்ணயிக்கிறது, உதாரணமாக பிரச்னை என்று நீங்கள் கருதக் கூடிய ஒன்றை உங்களுக்கான சவால் என்று உங்கள் மனஅகராதியில் மாற்றிக் குறித்துப் பாருங்கள். இப்போது இந்த உணர்ச்சிக் கணக்கை முன்னிருந்து பின்னாக போட்டுப் பாருங்கள். உங்களுக்குள் என்ன உணர்ச்சி எழுகிறது, அது என்ன விளைவைத் தருகிறது என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். 

பொதுவாக, உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும் போது பிடித்தமானவர்களோடு பேசும்போது, உங்களுக்குள் மகிழ்ச்சிக்கான சுரப்பிகள் சுரக்க நீங்களும் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள். அந்த நேரம் ஒருவரை எப்படி எடுத்துக் கொண்டீர்களோ அது உங்கள் மனஅகராதியில் பதிந்து விடுவதால் பின் அவர்கள் சந்தர்ப்ப சூழலால் அல்லது காலப் போக்கில், அல்லது பழகிப் போன ஒன்றை கடந்து போகும் அவசரத்தில், வேறு விதமான உணர்ச்சிகளை உங்களிடம் வெளிப்படுத்தும் போது அவர்களைப் பற்றி உங்களுக்குள் பதிந்து வைத்திருக்கும் அகராதிக்கு அது மாற்றமாக தெரிவதால், உங்களுக்குள் எதிர்மறை உணர்ச்சிகள் ஏற்படுகிறது. எப்போதும் கோபமாக பேசக் கூடியவரின் உணர்ச்சிகளைக் கூட அதிக உணர்ச்சி வசப்படாமல் கடந்து வரும் மனம் நம்மிடம் ஏற்கனவே நன்றாக பேசிய ஒருவரின் சிறு உதாசீனங்களைக் கூட தாங்க முடியாமல் துவண்டு போகிறது

இப்படி மனதில் ஒன்றை பற்றி நீங்கள் பதிவு செய்து வைத்தவற்றிற்கும் இப்போது நடப்பவற்றிற்கும் முரண்பாடாக இருக்கும் போது உங்களால் எளிதில் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாமல் அந்த சுமூகமாக இல்லாத ஒன்றையே மனம் சுற்றி சுற்றி வர. ஒன்று அதைக் கடந்து வரமுடியாமல் அந்த சுழலில் மனம் சிக்கித் தவிக்கிறது அல்லது அதை சுமூகமாக்க நினைத்து அதற்கான வழியைத் தேடி, நடந்த நிகழ்வுகளையே சுற்றி வரும் மனம், தன் எண்ண சுழலில் சிக்கிக் கொள்கிறது. 

இது அறிவியல் பூர்வமாக இல்லாவிட்டாலும் பலருக்கும் அனுபவபூர்வமாக தெரிந்திருந்தாலும் நாம் ஒருவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமக்கு நாமே பறைசாற்றிக் கொள்ளும் விதமாக பல நேரங்களில் விரும்பியே இந்த அழுத்தங்களை உங்கள் மனம் வரவேற்றுக் கொள்கிறது. உன்னால் நான் எவ்வளவு சிரமப் படுகிறேன் தெரியுமா என வேண்டியவர்களிடம் அவர்களுக்கு உங்கள் மனம் கொடுக்கும் முக்கியத்துவத்தை சொல்ல நினைக்கிறது. அவர்களிடம் நீ எப்படி என்னை உதாசீனப் படுத்தலாம் என உரிமையோடு போராடத் துடிக்கிறது.

உண்மையில் அவர்களுடைய செய்கைகள் உங்களை வருந்த வைக்கவில்லை. அதற்கு உங்கள் மனம் கொடுக்கும் அர்த்தமே இப்படி இருக்குமோ அல்லது அப்படி இருக்குமோ, என்ற அலசலும் சுமூகமாக வைத்துக் கொள்ள நினைக்கும் உறவுகள் விட்டுப் போய் விடுமோ என்ற பாதுகாப்பின்மையுமே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

அந்த பதற்றமே பல உறவுகளை உடைக்கிறது. உங்கள் இயல்பை விட்டும் உங்களை தாண்டி வரச் செய்வதோடு அவர்கள் இயல்பை மீறச் செய்யும் இறுக்கத்தை அவர்களுக்குள் தூண்டி விடுகிறது. சற்றே மூடப்பட்ட ஒரு பாத்திரத்தை திறக்க முயலும் போது கொஞ்சம் இலாவகமாக கையாளாவிட்டால் அது இன்னும் இறுக்கிக் கொள்வது போல் உறவுகளை சரியான புரிதல் இல்லாமல் பதற்றத்திலும் இயலாமையிலும் இன்னும் இறுகிப் போகச் செய்கிறது.

நாம் எடுக்கும் நல்ல முடிவுகளே நம் வாழ்க்கையின் நல்ல தொடக்கமாக இருக்கும். உங்களை சரியாக புரிந்து கொள்ளாத ஒருவரோ அல்லது உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றோ, உங்களை வருத்துகிறது என்று சுற்றும் முற்றும் உற்று பார்த்து தேங்கிப் போகாமல், பிரச்னைக்கான தீர்வை எங்கோ தேடி ஏங்கிப் போகாமல், உங்களுக்குள் உற்று பார்த்து எதையும் பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவை உங்களுக்குள் எடுத்துப் பாருங்கள்.

இனி உங்களை சுற்றி என்ன நடந்தாலும் இப்போது நீங்கள் முடிவு செய்த வகையிலேயே பார்ப்பீர்கள். பிறர் எந்த அர்த்தத்தில் எது செய்தாலும் நீங்கள் எந்த அர்த்தத்தில் அதை எடுக்கிறீர்களோ அதற்கான உணர்ச்சிகள் தான் உங்களுக்குள் சுரக்கும். 

உண்மையில் நம்மை பற்றி நல்ல எண்ணம் நமக்கு இருந்தால் நம்மை போய் இப்படி இகழ்வாக நடத்துகிறார்களே என்று நினைத்து வருந்த மாட்டோம். நம்மை எப்படி இகழ்வாக நடத்துவார்கள் என்று மற்றவர்களையும் குற்றம் பிடிக்காமல் நீங்களும் குறைத்து மதிப்பிடாமல், எந்த எதிர்மறை உணர்ச்சிக்கும் ஆளாகாமல் இருப்பீர்கள். அது உங்களை சுற்றி இருப்பவர்களையும் நல்ல முறையில் பார்க்க செய்யும்.

நீங்கள் மகிழ்ச்சியாக அன்பாக இருக்க நினைத்தால் உங்களுக்குள் பாசிடிவான எனர்ஜி நிறையும். நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்யமாகவும் உணர்வீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, காற்றில் இழுத்து செல்லப் படும் சிறு இறகாக நீங்கள் எதெதிலோ இழுத்து செல்லப் படாமல் உங்கள் உண்மையான இயல்போடு இருப்பீர்கள். 

உங்களை நீங்கள் கேர் பண்ண நினைத்தாலே நீங்கள் உறுத்தல் இல்லாத மகிழ்ச்சியான மனநிலையோடு எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைத்தாலே, அந்த மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பிறரையும் அன்போடும் அனுசரனையோடும் புரிதலோடும் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள். இந்த உலகத்திற்கான நம்மை தயார் செய்யும் போது நமக்கான இந்த உலகம் தயாராகி நிற்கும். 

உங்களுக்குள் மகிழ்ச்சி சுரக்கும். அது உங்களை மட்டுமல்ல உங்கள் சுற்றத்தையும் நிறைக்கும்.

 

News

Read Previous

பரிணாமக் கோட்பாடு தவறா?

Read Next

கீழடியால் நாம் பெறுவது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *