மணவை முஸ்தபா

Vinkmag ad

மணவை முஸ்தபா
_______
சர்வதேச நிறுவனமான யுனெஸ்கோ, உலக நாடுகளின் பல்வேறு மொழிகளில் “கூரியர்” என்ற பெயரில் பத்திரிகைகளை நடத்தி வந்தது. அந்த வகையில் தமிழ் மொழியிலும் “கூரியர்” பத்திரிக்கை வெளியாகி வந்தது. சேத்துப்பட்டில் உள்ள “உஸ் சென்டர்” என்று அழைக்கப்படும் “உலகப் பல்கலைக் கழகச் சேவை மையம்” என்ற கட்டிடத்தில் இந்த கூரியர் பத்திரிகையின் அலுவலகம் இருந்து வந்தது.
“கூரியர்” பத்திரிகையின் ஆசிரியராகவும் அலுவலகப் பொறுப்பாளராகவும் தொண்டாற்றி வந்தவர்தான் மணவை முஸ்தபா.
இந்த பத்திரிக்கையைப் பயன்படுத்தி அவர் ஆற்றியத் தமிழ்த் தொண்டு மகத்தானது. “தமிழ் மொழியானது நவீன அறிவியலுக்குப் பொருந்தி வருமா?” என்ற கேள்விக்குறி எழுந்தபோது, அந்த சவாலைச் சந்தித்துச் சாதித்துக் காட்டிய முதல் மனிதர் மணவை முஸ்தபா தான். அவர்தான் அறிவியல் கலைச் சொற்களுக்கான வார்த்தைகளைத் தொடர்ச்சியாக “கூரியர்” இதழிலும் தனிப்பட்ட அறிக்கைகளிலும், நூல்களிலும் வெளியிட்டு முதன்முதலாக அறிவியல் தமிழ் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். அவருக்குப் பின்னர் தான் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்து மறைந்துப் பின் மறைந்த முனைவர் வா.சே.குழந்தைசாமி இந்த தொண்டைத் தொடர்ந்தார்.
“கூரியர்” இதழின் மீது ஆதிக்கம் செலுத்தச் சிலர் முனைந்தனர். ஆனால் மணவை முஸ்தபா முளையிலே கிள்ளி எறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கூட்டத்தார் மணவை மீதான அவதூறுகளைக் கிளப்பிவிட தொடங்கினர். “கூரியர்” சர்வதேசத் தலைமையகத்திற்கு அவர்கள் புகார்களையும் தட்டி விட்டனர். “இதன்மூலமாக மணவை முஸ்தபாவின் பதவி பறிபோய்விடும். அதைக் கைப்பற்றலாம்” என்ற முயற்சியில் இறங்க அந்த கூட்டத்தார் திட்டமிட்டிருந்தனர்.
அத்தகையோரின் புகார்களை அடிப்படையாக வைத்து ஒரு விசாரணைக் குழுவை யுனெஸ்கோ அலுவலகம் நியமனம் செய்தது. தமிழக உயர்த் தகுதி மிக்கபா பிரமுகர்களைக் கொண்டதாக விசாரணைக் குழு இருந்தது. “இந்த குழுவின் அறிக்கையை வைத்தே மணவை முஸ்தபாவின் மீது நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது முடிவாகும்” என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த சமயத்தில்தான் தமிழ்நாடு தமிழாசிரியர் பேரவையின் பொதுச் செயலாளராக இருந்த புலவர் புகழேந்தி களமிறங்கினார். அவரின் நோக்கங்கள் இரண்டு. அறிவியல் தமிழுக்குத் தொண்டாற்றும் ஒரே பத்திரிக்கையாக அப்பொழுது இருந்த “கூரியர்” இதழைத் காப்பாற்றியாக வேண்டும்.அறிவியல் தமிழையும் வளர்த்தெடுக்க “கூரியர்” ,இதழைப் பயன்படுத்தித் தொண்டாற்றி வரும் மணவை முஸ்தபா, நேர்மையானவர் என்பதை நிரூபித்து, அவரின் பதவியைக் காப்பாற்றியாக வேண்டும்.
இந்த எண்ணத்தின் படி புலவர் புகழேந்தி அந்த விசாரணைக் குழுவில் இருந்த ஒவ்வொரு பிரமுகரையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார். அவர்களிடம் புகழேந்தி வைத்த வாதங்கள் இரண்டு.
” மணவை முஸ்தபா குறைந்த ஊதியத்தைபா பெற்றுக்கொண்டுத் தமிழுக்கு மாபெரும் மகுடத்தைச் சூட்டும் மகத்தான அறிவியல் சேவையில் ஈடுபட்டு வந்தவர். இந்த விசாரணைக் குழுவானது,” மணவை முஸ்தாபா தவறு இழைத்தார்” என்ற அறிக்கையை சர்வதேச தலைமையகத்திற்கு அனுப்பி வைத்தால் என்னவாகும்? அவர்கள் மணவை முஸ்தபாவை நீக்குவது மட்டுமல்ல. ” கூரியர்” பத்திரிகையையே நிறுத்திவிடுவார்கள். அறிவியல் தமிழுக்கே என்று வந்த இதழைக் காப்பாற்ற வேண்டுமென்றால் மணவையையும் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதே புகழேந்தியின் எண்ணம்.
புலவர் புகழேந்தியின் தன்னலமற்றத் தொண்டுணர்வுக்கு மதிப்பளிக்க பட்டது. “மணவை முஸ்தபாவின் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை., போலியானவை” என்று அறிக்கை சர்வதேசத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூலமாக மணவை முஸ்தபாவின் பதவி தக்க வைக்கப்பட்டது மட்டுமல்ல. “கூரியர்” கூடதா தப்பிப் பிழைத்தது.
புலவர் புகழேத்தியுடன் தினசரித் தொடர்பில் நான் இருந்து வந்ததால்தான் இவை எனக்கு உள்ளங்கை நெல்லிக் கனி.
மணவை முஸ்தபாவின் பிறந்த நாளான இன்று இந்த வரலாற்றை நேர்மையோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.
“தினமலர்” ஆசிரியராக இருந்த முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் “தமிழ் எழுத்துச் சீர்திருத்த இயக்கம்” துவக்கப்பட்டுச் சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலகட்டத்தில், அந்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக உடனிருந்து உழைத்தவர் மணவை முஸ்தபா. “அறிவியல் தமிழை வளர்த்தெடுப்பதற்குத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அவசியம்” என்பதே அவரின் கோட்பாடு. இந்த இயக்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கெடுத்து அரிய ஆலோசனைகளையும் உழைப்பையும் வழங்கிக் கொண்டே இருந்தார். அந்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக “தினமணி” ஆசிரியர் ஏ. என். சிவராமனும் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த வரலாற்று உண்மைகளைத் துல்லியமாகச் சொல்வதற்குத் தரவுகள் எப்படிக் கிடைத்தன என்பது முக்கியம். அந்த காலகட்டத்தில் “தினமலர்” செய்தியாளராக மட்டுமன்றி,, அப்போதைய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் அனைத்துத் தமிழ் இயக்கத் தொண்டுகளிளும் நான் இரண்டறக் கலந்து செயல்பட்டு வந்தேன். இயக்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தியின் வழிகாட்டுதலின்படி, அவரின் நிதியைக் கொண்டு நான்தான் அனைத்துப் பணிகளையும் ஏற்பாடு செய்து நடத்தி வந்தேன். அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த அரங்க நாயகத்தையும் ராஜா சர். முத்தையா செட்டியாரையும் வைத்து ஏ என் சிவராமன் தலைமையில் நாங்கள் அனைவரும் மாநாடு நடத்தியதும் அதில் மணவை முஸ்தபா மிகப்பெரியப் பங்களிப்பை வழங்கியதும் இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சமாகும். எழும்பூரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கிளையான தமிழ், வடமொழி மற்றும் பிற இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பேராசிரியர் முனைவர் ஆறு .அழகப்பன் செயல்பட்டு வந்தார். அந்த அலுவலக கட்டடத்தில் தான் இந்த மாநாடு நடந்து முடிந்தது.
மணவை நடக்க இயலாமல் சிரமப்பட்டு இருந்த காலகட்டத்தில் உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு நடந்தது. அதில் அவர் சக்கர நாற்காலியில் வந்து கலந்து கொண்டு தமிழ் சார்ந்த அற்புதமான ஆய்வுக் கருத்துகளைச் சமர்ப்பித்து கோவை நகரப் முகாமில் இருந்து வந்ததை இப்பொழுது நான் நினைவுகூர்ந்து பார்க்கிறேன். அந்த காலகட்டத்தில் அந்த நானும் ஆய்வரங்கில் பங்கேற்று இருந்ததால் இந்த தகவலை என்னால் குறிப்பிட்டுக் கூற முடிகிறது. அந்த மாநாட்டையொட்டிச் சிறப்பு மலரை வெளியிட்டு, அளப்பரியத் தொண்டை “தினமலர்” புரிந்தது.இவற்றின் பல ஆவண குறிப்புகளைக் கோப்புகளில் பராமரித்து வருகிறேன்.
மணவையின் மகன் டாக்டர். செம்மல், தன் தந்தை ஏற்படுத்திய தமிழ் அறக் கட்டளை மூலமாகத் தொண்டைத் தொடர்கிறார்.
ஆர்.நூருல்லா-ஊடகன் ஜுன் 15

News

Read Previous

அறிவியல் தமிழுக்கு வித்திட்ட மணவை முஸ்தபா

Read Next

வகாரிசம் – மூளைக்கு வேலை விளையாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *