மகிழ்ச்சி

Vinkmag ad

மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறோமா?

நம் பிள்ளைகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா?

“எனக்கென்ன குறைச்சல், சென்னைக்கு மிக அருகில் ஒரு வீடு வாங்கிட்டேன். கார் வெச்சிருக்கேன். கிரெடிட் கார்டு இருக்கு. பிள்ளைகள் உயர் தரப் பள்ளியில் படிக்கிறார்கள். வாரம் முழுக்க உழைச்சிட்டு, களைப்பு தீர்றதுக்கு வாரக் கடைசியில் ஜாலியா இருக்கேன். வாழ்க்கை ஹேப்பியா போகுது. வேறென்ன வேணும் ?”*~

ஆனால், மகிழ்ச்சி என்பது இது தானா?

பெர்ஷியக் கவிஞர் ஜலாலுதீன் ரூமி சொல்கிறார், “உங்கள் இதயத்திலிருந்து விஷயங்களைச் செய்யும் போது, உங்களுக்குள் ஒரு நதி நகர்வதை உணர்வீர்கள். அதன் பெயர் மகிழ்ச்சி” என விளக்குகிறார்.

இளமை ஒளிர்கிற வரை எல்லாம் சூப்பராகத் தெரியும்.

குழந்தை குட்டிகளைக் கரையேற்றி, குடும்பச் சுமைகளை ஒவ்வொன்றாகத் தளர்த்தி ‘அப்பாடா’ என்று உட்காரும் போது, முடிந்து விட்ட வாழ்க்கை ஒரு சூன்யத்தில் நம்மை நிறுத்தி இருக்கும்.

நரை கூடிக் கிழப் பருவம் எய்தும் போது ‘என்னத்த வாழ்ந்துட்டோம்’ என்ற எண்ணம் வராதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

‘நமக்காகவும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமோ’ என மனம் அடித்துக் கொள்ளும். ஏனென்றால், இங்கு யாருமே தன்னுடைய வாழ்வை வாழ்வதே இல்லை._

உலகச் சமூகங்கள் பலவும் தனி மனித சுதந்திரம், தனி மனித உரிமை, தனி மனித மகிழ்ச்சி குறித்த ஆழ்ந்த புரிதலோடு வாழ்கின்றன. ஆனால், அது சுய நலமான வாழ்க்கை முறை என நாம் குறை கூறுகிறோம்.

*இந்தியப் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதற்காகத் தம்மையே அழித்துக் கொள்கின்றனர்.

அது மட்டுமே பொது நலன் எனும் மாயக் கற்பனையிலும் உழல்கின்றனர். ‘காலம் முழுக்க உனக்காகக் கஷ்டப் பட்டேன்’ என்பது தான் ஒவ்வொரு பெற்றோரின் இறுதிக் காலப் புலம்பலாக இருக்கிறது.*

உடல், பொருள், ஆவி அனைத்தையும் உருக்கி ஏன் கரைகிறீர்கள் எனில், அவர்களிடம் இருக்கும் ஒரே பதில், ‘பிள்ளைகளை நல்லா வளர்க்கணும்ல’ என்பதே!

ஒரு தம்பதியரை எனக்குத் தெரியும். திருமணமான 40 ஆண்டுகளில் அவர்கள் எங்கேயும் வெளியே சென்றதில்லை.

நடுத்தர வர்க்கத்தினர். மாதச் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துகிறவர்கள்.

அந்த மனிதர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் அத்தனை ஆண்டு காலமும் குருவி சேர்ப்பது போல பணத்தைச் சேர்த்து, தன் இரண்டு பிள்ளைகளுக்காகவும் இரண்டு வீடுகளைக் கட்டினார். கடன்களை வாங்கி வாழ் நாள் முழுவதும் அடைத்தார். அவரது கஷ்டம் பிள்ளைகளுக்குத் தெரியாது.

தாம் வசதியானவர்கள் என்ற மன நிலையோடு தான் அவர்கள் வளர்ந்தனர். அவர்கள் கேட்ட எல்லாமும் ஒரே கோரிக்கையில் நிறைவேற்றப் பட்டன. படிக்க வைத்து, மணமுடித்து, வரதட்சணை வாங்கி – கொடுத்து, வீடுகளை ஒப்படைத்து, வங்கிச் சேமிப்பைத் துடைத்தழித்து வெறும் மனிதர்களாக நிற்கின்றனர்.

மகனுக்குக் கட்டிக் கொடுத்த வீட்டில் இவர்களும் தங்கி இருக்கின்றனர்._

தன் சந்தோஷங்களை முற்றிலுமாகத் துடைத்தழித்து கொள்வது தான் வாழ்க்கையா?

நிறைய சம்பாதித்து, நிறைய செலவழித்து, நிறைய கடன் பட்டு, நிறைய துயருறுதல் வாழ்க்கையாக இருக்கும் போது அதற்கிடையே அன்பு, மகிழ்ச்சி எங்கே மலரும்?

உலகப் புகழ் பெற்ற நடிகரான ஜாக்கி சான், தன் மரணத்திற்குப் பின் தன்னுடைய பெருமதிப்புள்ள சொத்துகளை அறப்பணிகளுக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்தார்.

உங்கள் மகனுக்கு ஏன் கொடுக்கவில்லை என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?

*_~‘என் மகன் திறமையானவராக இருந்தால் அவருக்குத் தேவையான பணத்தை அவரே சம்பாதிப்பார். திறமையற்றவர் எனில், நான் சம்பாதித்ததையும் அழிக்கவே செய்வார்.’’

எத்தகைய மேன்மையான புரிதல் !~_*
கோடீஸ்வரரான ஜாக்கி சானின் மகன், சொத்துகள் தரப் படாததால் தன் உழைப்பில் முன்னேறும் அரிய வாய்ப்பைப் பெற்றார்.

அவர் சாதாரண வேலை பார்த்துக் கொண்டு சாமானியராக வாழக் கூடாதா என்ன? டாக்டர் பிள்ளை டாக்டராகவும், வங்கி ஊழியரின் வாரிசு வங்கி ஊழியராகவும், அரசியல்வாதியின் குழந்தை அரசியல்வாதியாகவும், நடிகர் மகன் நடிகராகவும் தான் ஆக வேண்டுமா?

*நாம் நம் குழந்தைகளுக்கு எளிமையாக வாழ்வதன் அவசியத்தைக் கற்பிக்கவே இல்லை.

எளிமை எனும் நல்வாழ்க்கைக்கான தத்துவத்தை, பிழைக்கத் தெரியாதவர்களுக்கான வழி என ஒதுக்குகிறோம்._

எளிமையை ஏழ்மையோடு சேர்த்துக் குழப்பிக் கொள்கிறோம்.

சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்குமான வேறுபாட்டை மறந்தோம்.

கேட்ட போதெல்லாம் டிரஸ் வாங்கித் தராத பெற்றோரை, குழந்தைகள் கருமியாகப் பார்க்கின்றனர் எனில் அது யார் தவறு?

நம் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்ப்போம். வீடா, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸா என்ற சந்தேகமே வந்து விடும்.

‘சொந்த வீடு இல்லேன்னா வாழ முடியாது’, ‘சோஃபா இல்லேன்னா உட்கார முடியாது’, ‘டிவி இல்லேன்னா பொழுது போகாது’, ‘கார் இல்லேன்னா பக்கத்துத் தெருவுக்குக் கூடப் போக முடியாது’, ‘தினமும் ஒரு டிரஸ் போடலேன்னா மரியாதை கிடைக்காது’, ‘காஸ்மெட்டிக்ஸ் இல்லேன்னா அழகு வராது’, ‘காஸ்ட்லி சிகிச்சை இல்லேன்னா ஆரோக்கியம் வராது’, ‘செல்போன் இல்லேன்னா வாழவே முடியாது’ என இப்படியான முடியாதுகள் நம் மூச்சைப் பிடித்து இறுக்குகின்றன.

உண்மை என்னவென்றால், நாம் இன்று வாங்கிக் குவிக்கும் பொருள்களில் 90 சதவிகிதப் பொருள்கள் இல்லாமலேயே நம்மால் சந்தோஷமாக வாழ முடியும்.

நம் முன்னோர்கள் கற்பித்த எளிமையையும் சிக்கனத்தையும் நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும் !

வாழ்வில் எளிமையையும் எளிய விஷயங்களையும் கற்கும் போது தான் உண்மையான மகிழ்ச்சி உருவாகிறது.

குழந்தைகள் அத்தகைய மகிழ்ச்சிக்குத் தான் ஏங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளுடன் எப்படி வாழ்கின்றனர் என்பது தான் முக்கியமே தவிர, எவ்வளவு சம்பாதித்தனர் என்பது ஒரு பொருட்டே அன்று.

*நான் வாழ ஒரு வீடு வேண்டும் என நினைத்தால் அது தேவை. வீடுகள் வேண்டுமென நினைத்தால் அது ஆசை.

அந்த வீடும் வாழ் நாள் கடனில் தான் கிடைக்கும் என்றால், அது தேவையில்லை என்றே அர்த்தம்.

* ஆயுள் முடிகிற வரை கட்டுகிற கடனை, குழந்தையின் அறிவு, ஆரோக்கியம், நற்பண்புகள், அனுபவங்களுக்குச் செலவிடுங்கள். *

கடனில் வீட்டை வாங்கி விட்டு எங்கேயும் வெளியில் போக முடியாமல் குழந்தைகளைச் சொந்த வீட்டுச் சிறையில் அடைக்காதீர்கள்.*

குழந்தைகளுக்கு சரியாக வாழக் கற்றுக் கொடுத்து, தன் காலில் நிற்க வழி விட்டு, மறுபடியும் கிடைக்கவே கிடைக்காத இந்த வாழ்வை நாமும் வாழ்வோம்.

News

Read Previous

செம்மொழி என்னும் போதினிலே …!

Read Next

வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *