போலியோ இல்லாத இந்தியா

Vinkmag ad

அறிவியல் கதிர்
போலியோ இல்லாத இந்தியா
பேராசிரியர் கே. ராஜு
போலியோ ஒரு மோசமான நோய் என்பது நமக்குத் தெரியும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரை அது வாழ்நாள் முழுதும் முடக்கிப் போட்டுவிடுகிறது. PV1, PV2, PV3 என்ற மூன்று போலியோவைரஸ் தொற்றுநோய்க் கிருமிகளால் நோய் பரப்பப்படுகிறது. மனிதக் குடலுக்குள் அது பல்கிப் பெருகுகிறது.  நேரடியாகவோ ரத்தத்தின் வழியாகவோ மனிதர்களுடைய நரம்பு மண்டலத்தைச் சென்றடைந்துவிட்டால் உடலின் பல்வேறு உறுப்புக்களை அது செயலிழக்க வைத்துவிடும். மூச்சுக் குழல் தசைகளைக் கூட சில சமயங்களில் அது பாதித்துவிடும். காய்ச்சல், களைப்பு, தலைவலி, வாந்தி, கழுத்துப் பிடிப்பு, பல்வேறு உறுப்புகளில் உடல்வலி ஆகியவையே ஆரம்ப அறிகுறிகள். சராசரியாக, இந்த நோய் பாதித்த 10 பேர்களில் ஒருவரை அது பலி வாங்கிவிடுகிறது. வெப்பமிகு பிரதேசங்களில் இந்த நோய்  வேகமாகப் பரவுகிறது. பொதுவாக 4-லிலிருந்து 5 வயது வரை உள்ள குழந்தைகளை அது தாக்குகிறது. சுற்றுப்புற சுகாதாரம்  இல்லாத சூழ்நிலைகளில் போலியோவைரஸ் மலத்திலிருந்து ஈக்கள் மூலமாக உணவுப் பொருட்களைச் சென்றடைகிறது. சில நேரங்களில் இந்த கிருமிகள் குடிநீரையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். வைரஸ் தாக்கிய பிறகு நோய் அறிகுறிகள் தோன்ற சராசரியாக 7-லிலிருந்து 12 நாட்கள் வரை பிடிக்கும். கர்ப்பமுற்ற பெண்களை இந்த நோய் எளிதில் தாக்கும் என்பதால் அந்த நேரங்களில் அவர்கள் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். போலியோவைரஸ் மனித உடலிலிருந்து மட்டுமே பரவக்கூடியது என்பதால் இந்த நோயை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமே. நோய்க்குத் தரப்படும் ஆரம்பகட்ட சிகிச்சையின்போது போலியோவை எதிர்த்துப் போராடும் எதிர்ப்பொருட்களை (antibodies) உடலில் கணிசமான அளவில் உருவாக்கும் வேலையை போலியோ தடுப்பு மருந்து செய்கிறது. ஊசி மூலம் செலுத்தக் கூடிய தடுப்பூசி இருந்தாலும் வாய் வழியாகச் செலுத்தப்படும் மருந்தே அதிகப் பயன்பாட்டில் இருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் முதல் தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும். அதற்குப் பின், 45 நாட்களில், 75 நாட்களில் மற்றும் 105 நாட்களிலும், அடுத்த இரு மருந்துகள் ஒண்ணரை வயதிலும் நான்கரை வயதிலும் கொடுக்கப்பட வேண்டும்.
போலியோ இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை 1988ஆம் ஆண்டில் ஐ.நா. தொடங்கியது. ஒரு நாட்டில் போலியோ நோய் யாரையுமே மூன்றாண்டுகளுக்குத் தாக்கவில்லையெனில், அந்த நாட்டினை போலியோவிலிருந்து விடுதலை பெற்ற நாடாக ஐ.நா. அறிவிக்கும். 1988க்குப் பிறகு, வளரும் நாடுகளில் போலியோ பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக் கூடிய ஐந்து லட்சம் பேர்களை தடுப்பூசி காப்பாற்றியிருக்கிறது. போலியோ ஒழிப்புப் பிரச்சாரம் இந்தியாவில் 1995ஆம் ஆண்டில்தான் தொடங்கியது. அந்த சமயத்தில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7000 குழந்தைகள் போலியோவினால் பாதிப்படைந்து வந்தனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில்  போலியோவினால் ஒரு குழந்தை கூட  பாதிக்கப்படவில்லை என இந்த ஆண்டில் (2015) பெருமையோடு நாம் அறிவிக்க முடியும். இந்தப் பணியில் 1.5 லட்சம் மேற்பார்வையிடுவோர் கண்காணிப்பில் 24 லட்சம் தடுப்பூசி போடுவோர்  வீடுவீடாகச் சென்று, 17.2 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்து கொடுத்த பிறகே இந்த சாதனையை நாம் எட்ட முடிந்தது. போலியோவுக்கெதிரான போரில் நாம் வெற்றியடைந்துவிட்டாலும், அந்தக் கொடிய நோய் நம் நாட்டை மீண்டும் தாக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்துவர வேண்டியது முக்கியம்.
(நன்றி : அக்டோபர் 2015 ட்ரீம் 2047 இதழில் டாக்டர் ஹேமலதா பண்ட் எழுதிய கட்டுரை)

News

Read Previous

துபாயில் வீடு வாடகைக்கு ………….

Read Next

பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *