பொங்கல் – ஏம்பல் தஜம்முல் முஹம்மது

Vinkmag ad

திருநாள்,முதலிய கொண்டாட்டங்கள் பல புராதான காலத்திலிருந்து சில நாட்களேனும் மகிழ்ந்திருப்போமே என்று மனிதன் ஏற்படுத்திகொண்டவை;அவற்றுள் சில சிந்திக்க வைப்பவை;சில சமய நம்பிக்கை சார்ந்தவை;.

சிந்திக்க வைக்கும் திரு நாட்களில் ஒன்றுதான் பொங்கல். பொங்கல் எனும் தூய தமிழ்ச் சொல்லே அது  பழந்தமிழர் பண்பாட்டுத் திருவிழா என்பதை  நமக்கு உணர்த்தும்.இயல்பாக இருக்கும் ஒன்று அதன் தன்மையிலும் பயனிலும் மிகுந்து,மேம்படுவதைப் பொங்கல் எனலாம்.அன்பு பொங்குவது,இன்பம் பொங்குவது,பால் பொங்குவது என்னும் பேச்சுவழக்கு இதை நமக்கு உணர்த்தும்…
 நம்முடைய நாட்டில் ஏற்கப்படும் திருவிழாக்கள்,எதிர்க்கப்படும் திருவிழாக்கள் என\ச் சில வகைகளுண்டு.பொங்கல் மட்டும்தான் நாத்திகம் பேசுபவர்கள் உட்பட ஏதேனும் ஒருசில வகையிலாவது எல்லாராலும் கொண்டாடப் படும் ஒப்பற்ற திருநாளாக இருந்து வருகிறது.
 சர்க்கரைப் பொங்கல்,கரும்பு என்றெல்லாம் சொல்லப்படும் போதே மக்களின் நாவும்,மனமும் பொங்கலைக் கொண்டாடத் தொடங்கி விடுமே!
பொங்கல் தமிழர்களின் திருநாள் என்றாலும் பொங்கல் திருநாள் உருவானதற்கான கருத்தை உள்வாங்கி வெளிப்படுத்தும் கொண்டாட்டங்கள் உலகெங்கும் வேறுபட்ட பெயர்களில் விளங்கி வருகின்றன.அமெரிக்காவில் ஹார்வெஸ்ட் டே எனும் திருநாள் அறுவடைக் காலத்தை அனுசரித்து-தைப் பொங்கல் போல-வெகு காலம் கொண்டாடப்பட்டுவந்தது.வட இந்தியாவில் மகர சங்கராந்தி;இவ்வாறு சீனா உட்பட பற்பலநாடுகளிலும் பொங்கலை ஒத்த திருநாட்கள் உண்டு.
என்றாலும் பொங்கலின் தனிச் சிறப்பு, தமிழ் போல மேலோங்கி இருக்கவே செய்கிறது.சங்க இலக்கியங்களிலே பொங்கல் என்ற சொல் பயின்றுவருவதாகத் தெரியவில்லை என்றாலும் தைத் திங்கள் முதல் நாள் மிகவும் குறிப்பிட்டும் சிறப்பித்தும் கூறப் படுவது  நம் கவனத்தைக் கவர்கிறது.பொங்கல் பற்றிய இலக்கியக் குறிப்புகளும் வரலாற்றுக் குறிப்புகளும் அங்கிருந்தே தொடங்குகின்றன.
சொன்னால் வியப்பாக இருக்கும்…முஸ்லிம்கள் பிற்காலத்திலே இறைவனின் கட்டளைக்கு ஏற்ப முப்பது நோன்பு வைத்துப் பெரு நாள் கொண்டாடுவது போல–சங்க காலத் தமிழகத்தில் மார்கழி மாதம் முப்பது நாளும் மகளிர் நோன்பிருந்து தை முதல் நாள் அதை நிறைவு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது நடைமுறையில் இருந்துள்ளதை கலித்தொகை,ஐங்குறுநூறு,புறநானூறு,குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன.
தைத்திங்கள் முதல் நாளில் குளிர்ந்த நீருள்ள குளத்தில் குளிப்பதும் பின்னர் திருநாள் மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் சிறப்பாகஇலக்கியங்களிலே குறிக்கப் படுகின்றன.
முஸ்லிம்கள் நோன்புப் பெருநாள் அன்று குளிப்பது கடமை என்று ஆக்கப் பட்டுள்ளதை நான் இந்த நேரத்தில் எண்ணி இன்புறுகிறேன்.
நல்ல மழை பெய்து நாடு செழிக்க வேண்டும் என்பது மக்களின் பொங்கல் நாள் சிறப்புப் பிரார்த்தனையாகும்.ஒரு விதை, பல தானிய மணிகளாகப் பல்கிப் பெருகக் காரணமான பூமி,உலகில் தாவரங்கள்-பயிர்கள் முதலியன செழித்து வளரக் காரணமாகும் சூரியன்,உழவுக்கும் தொழிலுக்கும் வாழ்வுக்கும் உதவியாக இருக்கும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு மனிதன் தன்னுடைய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாள்.படைப்பினங்களின் மூலம் கிடைக்கும் நன்மைகளுக்கு நன்றி புலப்படுத்துவது ஒருவகையில் படைத்தவனுக்கே நன்றி தெரிவிப்பதுதான்.இது ஜாதி மத பேதமற்ற சங்க காலத்திலேயே நம் தமிழர்கள் உள்ளத்தில் தோன்றிய ஆன்மீக உதயத்தைக் காட்டுவதாகவே நான் எண்ணுகிறேன்.
பொங்கல் வடிவமைக்கப் பட்டுள்ள விதம் தமிழனின் பல பரிணாமங்களைப் புலப்படுத்துகின்றன.
1.பொங்கலுக்குக் கட்டியம் கூறுவது,போகிப் பண்டிகை.இது, “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்பதை நடைமுறைப் படுத்தும் பண்டிகையாகும்.தை பிறந்தால் வரும் வளம்,புதியனவற்றால் ஏற்படும் நலம் முதலான பல அறிவார்ந்த கருத்தை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகவே இது உருவானது.
2.பின்னர் தைப் பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கல்.மாடுகளை வெறும் மிருகமாக மட்டும் பார்க்கவில்லை;அதற்கும் மேம்பட்ட ஒரு ஜீவனாகவே பார்க்கிறோம் என்பதற்கும்,சூரிய ஒளியின் ஒப்பற்ற பயனை எண்ணிப் பார்ப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இது அமைந்துள்ளது.
இந்த இடத்தில் ஓர் அரிய செய்தியைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
முதற்சங்கம் இருந்து மறைந்த லெமூரியக் கண்டத்துத் தமிழர்கள்-கடல் கொண்ட குமரிக் கண்டத்துத் தமிழர்கள்-பகலில் சூரிய ஒளியைச் சேமித்து இரவில் அதை வெளிப்படுத்தும் முறையை அறிந்திருந்தனர் என்று பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை அவர்கள் தம்முடைய லெமூரியக் கண்டம் பற்றிய நூலில் குறிப்பிட்டுள்ளார்
.”ஞாயிறு(சூரியன்) போற்றுதும்!ஞாயிறு போற்றுதும்!!”என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் எழுதி இருப்பதையும் எண்ணிப் பார்க்கிறேன்.
3.காணும் பொங்கல்-உற்றாரை,உறவினர்களை,உயர்ந்த பெரியார்களை,பெற்றாரை,மற்றவர்களை,காணத்தகுந்தவையாய் இருந்தும் காலம் பலவாய் காணாது இருந்தவற்றை எல்லாம் கண்டு மகிழ்வதே காணும் பொங்கல்.
இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கிறபோது தமிழ் மக்களின் பொங்கல் திருநாள்,பல உயர்ந்த கண்ணோட்டங்களை உடையவையாக இருக்கக் காண்கிறோம்.
பொங்கல் சமயத்தில் வீடுகளில் ஆவாரம் பூவும் வேப்பம் பூவும் பொங்கல் பூ எனப்படும் பூவும் தோரணமாகக் கட்டப்படுவதை நம்மில் பலரும் அறிவோம்.இவற்றைத் தேர்ந்தெடுத்துக் கட்டுவதற்குக் காரணம் இந்தப் பூக்களால் ஏற்படும் மருத்துவப் பெரும் பயன்களைத் தவிர வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்புகள் இல்லை என்பதிலிருந்து தமிழனின் அறிவியல் கண்ணோட்டத்தையும் அறிய முடிகிறது.
உண்டி முதற்றே உலகு,சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்,பகிர்ந்துண்ணல், என்னும் தமிழ் வழக்குகள் பொங்கல் திருநாளின் சிறப்பின் சுருக்கமான விளக்கமே ஆகும்.
வாழ்வதற்கு உடல் வலிமையும் வீரமும் தேவை என்று உணரப்பட்ட காலம் பழந்தமிழரின் சங்க காலம்.புறநானூறு என்னும் நூல் தொகுதி வீரம் பேசும் நூல் ஆகும்.காளையை அடக்குவது மட்டுமின்றி “களிறு எறிந்து பெயர்தல்”-யானையை வீழ்த்துவது- கூட தேவைப் பட்ட காலம் அது;ஜல்லிக் கட்டு இவற்றொடு தொடர்புடைய வீர விளையாட்டே.தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் பொங்கல் இப்படிப் பல அரிய செய்திகளைத் தன்னுள் பொதிந்து வைத்திருப்பதைக் காணலாம்.
காலமும் நிகழ்வுகளும் மாறினாலும் இன்றும் அதன் – தமிழர் திருநாளின் – சாரம் மனித சமுகத்திற்கு அணிசேர்ப்பது என்பதை அறியலாம்.
ஆக,பொங்கல் அனைவரும் ஏற்று மகிழத்தக்க இனிய நிகழ்வு என்பதைப் பார்க்கிறோம்.
பொங்கல் நாளில் அடுப்பில் வைத்த புதுப் பானையில்  இட்ட பால் பொங்குவது போல நம் அனைவரின் வாழ்விலும்.வளமும் நலமும் பொங்கட்டும் என அனைவரையும் வாழ்த்துகிறேன்.

News

Read Previous

எல்லாம் பழகிபோச்சு !

Read Next

திருக்குறள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *