புலயருக்கு எப்போது விடுதலை?

Vinkmag ad

புலயருக்கு எப்போது விடுதலை?

பொருளாதாரத்தின் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம் பற்றிய விவாதங்களில், விளிம்புநிலை சமூகமான புலயர்களின் புலம்பல் நம் காதுகளை எட்டாதிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு சமூகத்தைவாயில்லா பூச்சிஎன துணிந்து சொல்லலாம் என்றால் அவர்கள் பழங்குடி மக்கள் மட்டுமே. நம்மைப்போல் மாடி வீடு கட்டி காரில் போக வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதவர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று மலையைக் கொடையாக நினைத்து வாழ்பவர்கள். இந்த மக்கள்தான் இப்போது  போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறார்கள்.

 

பழங்குடியினராக இருந்த புலயர் சமூகத்தை 1976-ல் பட்டியல் இனத்தவர் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். இதனால் இவர்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.  “எங்களை மீண்டும் பழங்குடியினராக  மாற்றுங்கள்”  என 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுப்பப்படும் இவர்களது குரலை அரசுகள் கண்டுகொள்வதே இல்லை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த பல சாதிகளை கோரிக்கை வைக்காமலே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதியினர் என அறிவித்த அரசு இவர்களின் கோரிக்கையை செவி மடுக்காததற்கு “எண்ணிக்கையும்” ஓர் காரணம்.

தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்ட மலைகளில் புலயர் என்ற மலைவாழ் மக்கள் தோராயமாக 30 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள்.

இந்தச் சமூகத்தில் கொஞ்சம் விவரமானவரான காந்தி, ரயில்வேயில் வேலை பார்த்தவர். அவர், தங்களை எஸ்சியாக மாற்றியதை எதிர்த்து, அப்போதே திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். உரிமையியல் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் “புலயர்களை எஸ்சியாக அறிவித்தது தவறு” என்று தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில், “ஒரு சமூகத்தை எஸ்சியாகவோ எஸ்டியாகவோ, பிசியாகவோ அறிவிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது”  என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.

 

அதற்கு மேல் பிரச்சினையைக் கொண்டுசெல்ல பணமோ, சட்ட உதவியோ இல்லாததால் விதியே என்று நொந்து கொண்டது இந்தச் சமூகம். “2006ம் ஆண்டு வனச்சட்டத்தின் படி மூன்று தலைமுறையாக வனத்தினுள் வாழும் மக்களுக்கு பத்து ஏக்கர் நிலமும், வீடு கட்ட பத்து சென்ட் நிலமும், வன விளைபொருள்கள் சேகரிக்கும் உரிமைகள் உண்டு. எங்களுக்கு இதெல்லாம் கிடைக்காததால், நாங்கள் தலைமுறை தலைமுறையாக காட்டுக்குள்ளே வாழ்கிறோம்என்கிறார் காந்தியின் மகன் சேகர்.

இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க மானுடவியல் ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு ”சங்க இலக்கியங்களில் உள்ள சொற்களை இம்மக்கள் புழக்கச் சொற்களாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் பழக்க வழக்கங்கள் பொருளாதார நிலையைப்பார்க்கும் போது பழங்குடியினராக அங்கீகரிக்கலாம்” என தனது அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அது இன்னும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பிலேயே கிடக்கிறது.

 

பாரதிஇனி பறையருக்கும் புலையருக்கும் விடுதலைஎனப் பாடி அரைநூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. இவர்களுக்கு எப்போது விடுதலை?

இரா.முத்துநாகு,

ஆய்வாளர், ‘சுளுந்தீநாவலாசிரியர்.

தொடர்புக்கு: rmnagu@gmail.com

(இந்து தமிழ் திசையில் பிப்வரி 4 அன்று வெளியான கட்டுரையிலிருந்து)

News

Read Previous

பதினாறு வகையான அர்த்தங்கள்

Read Next

உம்மத்தின் மகிழ்ச்சியும், திருஷ்டியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *