பிறர் தன் காலில் விழுவதை விரும்பாத தேவநேயப் பாவாணர்!

Vinkmag ad

பிறர் தன் காலில் விழுவதை விரும்பாத தேவநேயப் பாவாணர்!

பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு
ர.ரகுபதி
மொழி ஞாயிறு தேவநேயப் பாவானர்
தமிழறிஞர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மிதிவண்டியில் வந்த ஒருவன் கவனிக்காமல் அவர்மீது மோதிவிட்டான். ”அய்யா மன்னித்துக்கொள்ளுங்கள்… தெரியாமல் மோதிவிட்டேன்” என்றான். இதைக்கேட்ட அந்தத் தமிழறிஞருக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. உடனே அவர், ”மன்னிப்பு என்பது உருதுச் சொல். பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதே சரியான தமிழ்ச் சொல்” என்றார். இப்படிச் சாதாரண பேச்சில்கூடத் தமிழ் மொழியை உச்சரித்தவர் வேறு யாருமல்ல… அவர், தனித்தமிழ் இயக்கத்துக்கு வேராக நின்று தமிழை வளர்த்த தேவநேயப் பாவாணர்தான். அவருடைய பிறந்த தினம் இன்று.

‘மாந்தன் பிறந்தது மறைந்த குமரிக்கண்டம், அவன் பேசிய மொழி தமிழே, தமிழே உலக முதன்மொழி, தமிழே திராவிடத்துக்குத் தாய், தமிழே ஆரியத்துக்கு மூலம்’ என்று சூளுரைத்த பாவாணர், 1902-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் நாள் ஞானமுத்து – பரிபூரணம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர். அதில் பெண்கள் 6 பேர்; ஆண்கள் 4 பேர். இவர், கடைசியாகப் பிறந்தவர். இவரின் இயற்பெயர் தேவநேசன் ஆகும்.

சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த தேவநேயப் பாவாணர், தனது சகோதரி ஊரான ஆம்பூரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் நெல்லை பாளையங்கோட்டை திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டுத் தமிழாசிரியராகச் சீயோன்மலையிலும், ஆம்பூரிலும் பணியாற்றினார். உதவித் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

1924-இல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் பாவாணர் மட்டுமே வெற்றிபெற்றிருந்தார். ‘நேசன்’ என்பதும் ‘கவி’ என்பதும் வடமொழிச் சொற்கள் என்பதை அறிந்துகொண்ட பாவாணர், பின் தம் பெயரைத் ‘தேவநேயப் பாவாணர்’ என மாற்றி அமைத்துக்கொண்டார்.

எஸ்தர் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘மணவாளதாசன்’ எனப் பெயர் சூட்டினார். எதிர்பாராதவிதமாக அவரது மனைவி எஸ்தர் இறக்க, தனது அக்காவின் மூத்தமகள் நேசமணியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 ஆண், 1 பெண் குழந்தை பிறந்தன. அவர்களுக்கு நாச்சினார்க்கினிய நம்பி, சிலுவை வென்ற செல்வராயன், அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான், மணிமன்ற வாணன், மடந்தலிர்த்த மங்கையர்க்கரசி எனத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்.

சேலத்தில் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அப்போதைய முதல்வரான ராமசாமி, இவரின் தமிழ்ப் புலமையை நன்கறிந்து வைத்திருந்தார். பாவாணர், ஆராய்ச்சி நூல்களை எழுத அவர் பெரிதும் ஊக்குவித்தார். 1950-ல், ‘உயர்தர கட்டுரை இலக்கணம்’ என்ற நூலை வெளியிட்டார். பின்னர், ‘ஒப்பியன் மொழிநூல்’ என்னும் ஆய்வு நூலை முனைவர் பட்டத்துக்காகப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். ஆனால், அது அங்குள்ளோரால் நிராகரிக்கப்பட்டது. இதனால் தானே அந்த நூலை வெளியிட்டார்.

சேலத்தில் பணியாற்றியபோது, பாவாணர் தம்மிடம் தமிழ் கற்க விரும்பி வந்தோர்க்கு தொல்காப்பியத்தைக் கற்றுக்கொடுத்தார். இதில் மாணவர்கள் மட்டுமல்லாது, பல கல்லூரி ஆசிரியர்களும் கலந்துகொள்வர்.

1968-ல் திருச்சி மாநகரில் பாவாணர், ‘உலகத் தமிழ்க் கழகம்’ என்ற கழகத்தை ஆரம்பித்தார். இவற்றின் மூலமாக 4 மாநில மாநாடுகளையும் நடத்தினார். ‘முதல் தாய்மொழி’, ‘திராவிடத்தாய்’, ‘தமிழ் வரலாறு’, ‘தமிழர் வரலாறு’, ‘பண்டைய தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, ‘இந்தியாவில் தமிழ் எவ்வாறு கெடும்’, ‘தமிழ்நாட்டு விளையாட்டு’, ‘பழந்தமிழாட்சி’ போன்ற நூல்களையும், ‘திருக்குறள் தமிழ் மரபுரை’ என்ற ஆராய்ச்சி நூலையும் எழுதி உள்ளார். இதுவரைக்கும் 43-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இதில் 4 ஆங்கில நூல்களும் அடங்கும்.

1955-ல் சேலம் தமிழ்ப் பேரவை ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ என்ற பட்டமும், 1964-ல் மதுரை தமிழ்க் காப்புக் கழகம் ‘பெருங்காவலர்’ பட்டமும் வழங்கின. ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்ற பட்டத்தையும் பெற்றார்.

1981-ல் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதில் ‘மாந்தன் தோற்றமும்… தமிழர் மரபும்’ என்ற தலைப்பில், சுமார் ஒருமணி நேரத்துக்கு மேலாகச் சொற்பொழிவாற்றினார். அன்று அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு 15 ஜனவரி 1981 அன்று காலமானார். 16.01.1981 அன்று சென்னை கீழப்பாக்கத்தில் கல்லறையில் பாவாணரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பாவாணர் பணியிலிருந்த காலத்திலும் ஓய்வுபெற்ற நிலையிலும் பொதுவாக இரவு 12.00 மணிவரை தமது ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பார். காலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். பிறர் தமது காலில் விழுவதை, பாவாணர் ஒருபோதும் விரும்ப மாட்டார். ”மாந்தன், இன்னொரு மாந்தன் காலில் விழுவதைத் தன்மானக் கேடு” என்றே சொல்வார்.

பாவாணர் ஆங்கில மொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்தபோதிலும், எப்போதும் தமிழ் மொழியிலேயே பேச விரும்புவார். குறிப்பாகத் தனித்தமிழில்தான் பேசுவார். தமிழ் அறவே தெரியாதவரிடம்தான் ஆங்கிலத்தில் பேசுவார். “உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு” என்பது முதுமொழி. ஆனால், பாவாணரோ அதற்கு, ‘விலக்கு’ என்றுதான் சொல்லவேண்டும் என்பார். பாவாணர்க்குப் பகலில் உறங்கும் வழக்கம் கிடையாது. அவர் ஓய்வெடுக்க விரும்பினால், அகராதிகளையும் கலைக்களஞ்சியத்தையும் புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பார். அதுதான் அவருக்கு ஓய்வு. பெரும்பாலான அகராதிகளைப் பாவாணர் தம் சொந்த செலவிலேயே வாங்கி வைத்திருந்தார். ”வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கையின் குறிக்கோள்” என்ற கொள்கையைத் தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த பாவாணர், காலையில் ஒரு கொள்கை, மாலையில் ஒரு கொள்கை என்று திரிபவர்களுக்கு மத்தியில் தமிழ் மொழியைத் தம் உயிர்போல நேசித்தவர்.

தொகுப்புக்கலைத்தோன்றலாகிய பாவாணர், அகரமுதலிகளைத் தொகுப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அப்பணி வளர்ந்துகொண்டே இருந்தது. அவரது மூச்சின் ஓய்வில்தான் அத்தொகுப்பு முடிவுற்றது. வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்த பாவாணரின் தமிழ்ப்பணியைத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் நினைந்து, அவர்தம் வழியில் சென்று தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்ப்பதுடன், அதனைக் காப்பதும் அனைவரின் கடமையாகும்.

நன்றி
VIKATAN.COM

ஆசிரியர் நகுல்சாமி

News

Read Previous

எழுத்தாளர்களின் கவனத்திற்கு….

Read Next

பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *