பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில்….

Vinkmag ad

https://www.seithi.com/news/protecting-the-greenery-is-essential-for-the-next-generation/4973

பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில்….

எல்லா மனிதர்களுமே சாவு என்ற ஒன்றை நிச்சயித்துக் கொண்டே இந்த பிரபஞ்சத்தில் பிறக்கிறார்கள்… வாழ்கிறார்கள்… பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் நாட்களின் நகர்வை எப்படி கழிக்கிறார்கள் என்பதே வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அவரவர் எண்ண ஓட்டங்களுக்கு தகுந்தாற்போல் வாழ்க்கையும் நகர்கிறது.
ஒரு புள்ளியில் ஆரம்பித்து ஒரு புள்ளியில் முடியும் என்பதுதான் பிரபஞ்சத்தின் காஸ்மாலஜி தியரி. ஒரு கரும்புள்ளி பெருவெடிப்பாக சிதறுண்டு அண்ட சராசரங்களும் தோன்றி சிதறிய நோக்கத்தை நிறைவு செய்துவிட்டு வாழ்நாளை முடித்துக் கொள்ளும் வேளையில் மீண்டும் ஒரு புள்ளியில் முடிவடைந்து விடும்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல் என்ற வார்த்தை பரிமாணம் பெறும் முன்னரே நம் முன்னோர்கள் காஸ்மாலஜி தியரியை கரைத்துக் குடித்து ஏட்டிலும் பாட்டிலும் எழுதி வைத்துச் சென்று விட்டார்கள். இந்த பிரபஞ்சத்தின் ஒரு அணுத்துகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு நாமே மனிதன் என்ற பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பெருவெடிப்பின் நிகழ்விலே வான்வெளியில் சுற்றித்திரியும் அத்தனை கோள்களுமே தத்தம் கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்க, நாம் நமக்காக படைக்கப்பட்ட இந்த பூமிக்கு செய்து கொண்டிருக்கும் கடமைதான் என்ன? இந்த பூமியை பாதுகாக்க நாம் எடுத்துக் கொண்ட முயற்சிதான் என்ன? உலகம் வெப்பமயமாதல் என்ற அபாயகரமான சூழலுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு இடையூறுகள், மாசுக்களை ஏற்படுத்தி அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்கிறோம்… அவ்வளவேதான்!

நீயின்றி நான் வாழ்வேன்… நான் இன்றி நீ வாழ முடியாது… மரங்கள் பேசுவது போல் எங்காவது பார்க்க நேரிடும் வாசகத்தை இங்கே நினைவூட்டுகிறேன்… அது நிதர்சனம்தானே? மரங்களும் செடிகளும் கொடிகளும் பூமியை நிறைத்திருந்த போது மாதம் மும்மாரி பொழியத்தானே செய்தது… காடுகள் காடுகளாகவே இருக்கத்தானே செய்தது… எல்லா உயிரினமும் போலத்தானே நாமும் தோன்றினோம்…

ஆனால் எந்த உயிரினமும் செய்யத்துணியாத விஷயத்தை மனம் என்ற ஒற்றைத் தனிப்பண்போடு மனிதன் என்ற பெயரோடு உலவும் உயிரினம்தானே செய்யத் தொடங்கியது… வீடு செய்ய மரம் அழித்தான்… பயிர் செய்ய காடழித்தான்… பணம் செய்ய உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறான்… மிருக ஜீவன்களோ பரப்பளவில் சுருங்கிக் கொண்டிருக்கும் பசுமைக்குள்தான் உலவுகின்றன… பழைய இருப்பிடங்களை நோக்கி வந்திடின் ஊருக்குள் விலங்குகள் புகுந்து விட்டதாக பொறிவைத்து பிடித்து புகழ் தேடிக் கொள்கிறார்கள்…

ஆட்சியாளர்களோ காடுகளை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் கோடிகளை நிதியாக ஒதுக்கி தங்களது வீடுகளை நிரப்பிக் கொள்கிறார்கள்… கானகங்களோ வான் நோக்கி தவமிருந்து மனிதஇனத்தை காப்பதற்காக வரமாய் மழையைப் பெற்று கொஞ்சநஞ்ச மழையை யாசகமாய் பெற்று ஈகின்றன.

அந்த பிச்சைப் பொருளில் வயிற்றை நிரப்பிக் கொண்டு மீண்டும் பச்சையை மிச்சமில்லாமல் வாரிச் சுருட்டி வாயில் போட்டுக் கொண்டிருக்கிறோம். உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வுக்காக பள்ளிக்குழந்தைகளை வெயிலில் வாட்டி வதைத்து பேரணிகள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

பசுமையின் அருமையை, தேவையை உணர்ந்த உயர்ந்த உள்ளம் கொண்டவர்களும், அமைப்புகளும் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டுவைத்து ஆறுதலையும் தேறுதலையும் கொடுக்கிறார்களே தவிர மரம் வளர்ப்பு, பசுமை பாதுகாப்பு என்பது இன்னமும் மக்கள் இயக்கமாக மாறவில்லை என்பதே வேதனையின் உச்சக்கட்டம்…

உஷ்… உஷ்… என்று வெயிலின் தாக்கத்தை தாளாமல் குளிர்பான கடைகளிலும், இளநீர் விற்பவர்களிடமும் தஞ்சமடையும் இவர்கள் என்றாவது மரம் வளர்ப்பையோ, பசுமையின் தேவையையோ உணர்ந்தார்களா? என்பது கேள்விக்குறிதான். வெயிலுக்கு நிழல் தேவை என்பது மட்டுமே இவர்களது சந்தர்ப்பவாதமும், சுயநலமும்…

உலக வெப்பமயமாதல் என்பது விழிப்புணர்வுக்காக பேசப்பட வேண்டிய விவாதப் பொருள் அல்ல… அதன்விளைவுகள் மிகக் கொடூரமானவை… குரங்கணி காட்டுத்தீயில் உயிர்கள் பலியானது நம்மைப் பொறுத்தவரை அது வெறும் செய்தி… இந்த வெயிலின் வெப்பத்திற்கே வனம் தீப்பிடிக்கிறது என்றால் உலக வெப்பமயமாதல் முற்றும் போது உலகமே பற்றி எரியும்… இதுதான் நிதர்சனம்…

பிறந்தோம் இறந்தோம் என வாழ்வதில் பயனில்லை… பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் பிறப்பின் இறக்குமதி தளமான இந்த பூமிக்கு ஏதாவது பிறவிப்பயனாக நீங்கள் செய்ய விரும்பினால் ஒன்றே ஒன்றை மட்டும் செய்யுங்கள்… குறைந்தபட்சம் பூமியை குளிர்விக்க உங்கள் கைகளால் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்த்திடுங்கள்… அதற்கு மேலான எண்ணிக்கையில் நட்டு வளர்ப்பது உங்களது மனித மாண்பை போற்றட்டும்…

தலவிருட்சம் என்ற மரம் நட்டபிறகே கடவுளே குடியிருப்பதற்கான கோவில் கட்டப்படும்… மண்ணின் வளத்திற்கு ஏற்றாற்போல்தான் அந்த தல விருட்சம் அமையும்… காரண காரியமின்றி நம் முன்னோர்கள் எதையும் செய்யவில்லை… எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் பொதிந்துள்ளது. அதுவே பிரபஞ்ச ரகசியம்… பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் மரம் வளர்ப்போம்… மனிதம் வளர்ப்போம்… மழையும், வளமும் தானாக வரமாய் கிடைத்திடும்…

பா.ஜான்பீட்டர்
எழுத்தாளர், சமூக ஆர்வலர்

News

Read Previous

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..

Read Next

கயல்முள் அன்ன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *