பாவேந்தர் நினைவுகள்

Vinkmag ad

பாவேந்தர் நினைவுகள்

—  முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி

1964, ஏப்ரல் 21, பாவேந்தர் இறந்த நாள். அன்று மாலை பத்திரிகையில் செய்தியறிந்து நிறையப் பேர் என் தந்தையாரைத் (கவிஞர் புதுவைச் சிவம்) தேடி வந்து விட்டனர். அனைவரும் பாரதிதாசனை அறிந்தவர்கள். என் தந்தையார், பாவேந்தரின் தோழர், தலை மாணாக்கர். எல்லோரும் பாரதிதாசனைப் பற்றி நீண்ட நேரம் பேசிவிட்டுக் கலைந்து சென்றனர். மறுநாள் காலை முரசொலி பத்திரிகையை எடுத்து வந்த என் தந்தையார், முதல் நாள் பாரதிதாசன், சென்னைப் பொது மருத்துவமனையில் இறந்ததாக வந்திருந்த செய்தியைப் படித்துக் காட்டினார். பின்பு 22.4.1964 இல், புதுச்சேரியில், இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும், திமுக முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று வந்திருக்கும் செய்தியையும் படித்துக் காட்டினார்.

அன்று மாலை ஐந்து மணி வாக்கில் பாவேந்தரின் இறுதி ஊர்வலம், அவரது இல்லம் இருந்த பெருமாள் கோயில் வீதியில் தொடங்கிப், பழைய அஜந்தா தியேட்டர் (இன்றைய அதிதி ஓட்டல்) திரும்பி, வடவண்டை புல்வார் (இன்றைய பட்டேல் சாலை) வழி வருகிறது. அத்தெருவில் தான் எங்கள் இல்லமும் இருந்தது. எங்கள் குடும்பம், அக்கம், பக்கத்துக் குடும்பம் என எல்லோரும் அங்கிருந்த திண்ணைகளிலும், குறடுகளிலும் ஏறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஊர்வலத்தின் முன்னால் கலைஞர், நாவலர், என். வி. நடராசன் போன்ற முன்னணித் தலைவர்கள் பெருந்திரளான கூட்டத்தோடு அமைதியாகவும், சோகமாகவும் நடந்து வந்தனர். அவர்களோடு ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த என் தந்தையார், எங்கள் வீடு அருகே வந்ததும் எங்களிடையே வந்து, என்னை அவரது தோளுக்கு மேல் தூக்கி (அப்போது எனக்கு எட்டு வயது) “அதோ போறாரு பாருடா எங்கள் வாத்தியார்” என்று நாத் தழுதழுக்கக் கூறினார். பின்னர் என்னை இறக்கி விட்டுவிட்டு, ஊர்வலத்தோடு சென்று விட்டார். பிறகு அடுத்த நாள் காலையில், முதல் நாள் செய்திகளையெல்லாம் சொன்னார். யார், யார் இரங்கல் உரை ஆற்றினார்கள், அழுதார்கள் என்று துயரத்துடன் கூறினார். “நீங்க என்ன பேசினீங்க?” என்று என் தாயார் கேட்க,  “இரங்கல் கவிதை படித்தேன்” என்றார்.

நீண்ட நாட்கள் சென்றன. என் தந்தையார் மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றிய தேடல்களுக்காகப் பழைய பத்திரிகைக் குவியலில் மூழ்கி இருந்தபோது, திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான நம்நாடு பத்திரிகைகள் கிடைத்தன. அதில், 29.4.1964 நாளிட்ட நம்நாடு இதழ் ஒன்றில், புதுச்சேரி பாப்பம்மாள் இடுகாட்டில், பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்ட அன்று என் தந்தையார் பாடிய இரங்கல் கவிதை பின்வரும் குறிப்புடன் வெளிவந்திருந்தது.

“இது, 22. 4. 64, இடுகாட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பாரதிதாசன் மாணவர் ச. சிவப்பிரகாசம் (புதுவைச் சிவம்) அவர்கள் கூறியது” என்ற குறிப்புடன்  “தமிழ்த் தாயின் அரிய மைந்த” என்ற தலைப்பிட்டு முதல் பக்கத்தில் அக்கவிதை வெளியாகி இருந்தது. அதைக் கண்ணுற்ற போது, அன்று என் தந்தையார் அடைந்த துயரமும் நினைவுக்கு வந்தது. ஒரு கருவூலம் கைக்குக் கிடைத்த மகிழ்வும் நிறைந்தது.

(இந்த ஆண்டு  பாவேந்தரின் 60-ஆவது நினைவு நாள்)

News

Read Previous

தமிழ்த் தாயின் அரிய மைந்த!

Read Next

மயிலு

Leave a Reply

Your email address will not be published.