பவள விழாவை நெருங்கும் சிஎஸ்ஐஆர்

Vinkmag ad

அறிவியல் கதிர்

பவள விழாவை நெருங்கும் சிஎஸ்ஐஆர்
பேராசிரியர் கே. ராஜு

ஒவ்வொரு முறையும் தேர்தலில் நாம் வாக்களிக்கும் முன் நமது ஆள்காட்டி விரல் நுனியில் இடப்படும்  மை நாம் வெற்றிகரமாக வாக்களித்து விட்டு வந்ததின் அடையாளத்தைப் பறைசாற்றுகிறது. அந்த அழியாத மையைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் 1952ஆம் ஆண்டு நபெற்ற நமது முதல் பொதுத் தேர்தலுக்கு முன் சிஎஸ்ஐஆர் (Council of Scientific and Industrial Research ) உருவாக்கியது. கடந்த 64 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் தொழில்நுட்பம் நம் நாட்டில் பயன்பட்டு வருகிறது என்பது மட்டுமல்ல, வேறு பல நாடுகளிலும் பயன்பாட்டுக்கு வந்து சிறப்பான முறையில் அந்நியச் செலாவணியை நமக்கு ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது.
உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் அறிவியல் சோதனைச்சாலைகளை இணைக்கும்  வலைப் பின்னலைக் கொண்டது சிஎஸ்ஐஆர். சயன்ஸ் ரிப்போர்ட்டர் என்ற மாத இதழை நடத்தி வருவதன் மூலம் மக்களிடையே அறிவியலைப் பரப்பும் பணியைச் செய்துவருகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் இந்த நிறுவனம் தனது பவள விழாவை நடத்தி முடித்திருக்கிறது. தனது 75 ஆண்டு காலப் பயணத்தில் சிஎஸ்ஐஆர் இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயன்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியிருக்கிறது.
சுதந்திரம் அடைந்த புதிதில் தனது 45 கோடி மக்களுக்கு உணவு அளிக்க வேண்டிய சவாலை இந்தியா சந்திக்க வேண்டியிருந்தது.  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் டிராக்டர் போன்ற வேளாண் கருவிகள் மற்றும்  பூச்சி மருந்துகள், உரங்கள் ஆகிய  இடுபொருட்கள் உதவியுடன் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு வேளாண் பற்றாக்குறை யிலிருந்து நாட்டை மீட்டு வேளாண் உபரியை எட்டும் நிலைக்கு உயர்த்தியதில் சிஎஸ்ஐஆரின் பங்கு மகத்தானது. பசுமைப் புரட்சியின் காரணமாக மண் வளம் பாதிக்கப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டுகள் இன்று எழுந்திருக்கின்றன. ஆனால் அன்று மக்களைப் பட்டினியிலிருந்தும் பஞ்சத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கு இருந்ததால் அந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இன்றையப் பிரச்சனைக்குத் தீர்வாக இயற்கை வேளாண்மைப் பரிசோதனைகள் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. அறிவியல் வரலாற்றில் காலத்துக்கேற்றபடி புதிய புதிய பரிசோதனைகள் செய்யப்பட்டே வந்திருக்கின்றன என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது அவசியம்.
மலேரியா, ஆஸ்துமா, டிபி போன்ற போன்ற நோய்களுக்கு புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டிய சவாலையும் சிஎஸ்ஐஆர் ஏற்றுக் கொண்டது. இந்த மருந்து உற்பத்தித் தொழில் வளர சிஎஸ்ஐஆரின் ஆராய்ச்சிகள் கைகொடுத்தன. உலகின் பன்னாட்டுக் கம்பெனிகள் பசும்பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ள மறுத்தபோது, சிஎஸ்ஐஆர் அத்தொழில்நுட்பத்தை தானே உருவாக்கி பால் உற்பத்தியில் இந்தியா உலகில் முதல் இடத்தைப் பிடிக்கத் துணை நின்றது. வானிலை அறிவிப்புகளை வெளியிடத் தேவையான உயர்தர கணினிகள் தேவைப்பட்டபோது சிஎஸ்ஐஆர் அந்தப் பணியை ஏற்று வெற்றி கண்டது. நுண்ணிய துகள்களுடன் கூடிய அலுமினியம்-சிலிகா தாதுப்பொருட்கள் ஜியோலைட்டுகள் (zeolites) என அழைக்கப்படுகின்றன. வர்த்தக உலகில் அவை வினைஊக்கிகளாக (catalysts) பயன்படுத்தப்படுகின்றன. வேதிப்பொருட்களையும் பெட்ரோலிய வேதிப் பொருட்களையும் தயாரிக்க உதவும் இந்த ஜியோலைட் வினைஊக்கிகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பன்னாட்டுக் கம்பெனிகளின் கூட்டணி பரமரகசியமாகப் பாதுகாத்து வந்தது. அந்த ரகசியத்தை சிஎஸ்ஐஆர் உடைத்தெறிந்து அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியதோடு நமது வினைஊக்கிகளை அதே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஏற்றுமதி செய்து சர்வதேசச் சந்தையில் அவற்றோடு போட்டியிடும் அளவுக்கு தன் வல்லமையை உயர்த்திக் கொண்டது.
நாட்டின் கிராமங்களுக்கும் தொலைதூரத்தில் விலகியிருக்கும் பகுதிகளுக்கும் கூட சிஎஸ்ஐஆரின் தொழில் நுட்பங்கள்  எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. குறைந்த செலவில் நீரை வடிகட்டும் ஆலைகள், சுத்திகரிக்கும் ஆலைகளை உருவாக்கியதின் காரணமாக அப்பகுதிகளில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக விளைச்சலைத் தரும் புதினாவை அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வருமானம் உயர சிஎஸ்ஐஆர் வழி செய்துள்ளது. இன்று உலகிலேயே கற்பூரிய புதினா எண்ணெய் (menthol mint oil) உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது.
இந்தியர்களின் மரபணுவை முழுமையாக வரிசைப்படுத்தியது, இருவர் அமரும் பயிற்சி விமானத்தைத் தயாரித்தது, உலகிலேயே முதல் பாரம்பரிய அறிவு எண்ணியல் நூலகத்தை (Traditional Knowledge Digital Library) அமைத்தது போன்ற சாதனைகளின் காரணமாக சிஎஸ்ஐஆர் இந்திய அறிவியலில் முன்னணிப் பாத்திரத்தை வகித்து வருகிறது. மேலும் பல சாதனைகளை சிஎஸ்ஐஆர் நிகழ்த்த வேண்டும் என இந்தப் பெருமைமிக நிறுவனத்தை வாழ்த்துவோம்.

( நன்றி : 2016 அக்டோபர் சயன்ஸ் ரிப்போர்ட்டரில் ஹசன் ஜவைத் கான் எழுதியுள்ள தலையங்கம் )

News

Read Previous

உயர் இரத்த அழுத்தம்

Read Next

எளிய இயற்கை மருத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *