பரிணாமக் கோட்பாட்டைக் கண்டு ஆர்.எஸ்.எஸ். ஏன் பயப்பட வேண்டும்?

Vinkmag ad
2018-ம் ஆண்டு  எழுதப்பட்ட கட்டுரை..இன்றும் பொருத்தமானதே
பரிணாமக் கோட்பாட்டைக் கண்டு ஆர்.எஸ்.எஸ். ஏன் பயப்பட வேண்டும்?

டார்வினின் பரிணாமக் கோட்பாடு தவறானது என்பது சென்ற ஆண்டில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த சத்யபால் சிங்கின் கருத்து மட்டுமல்ல. அவரது கருத்தை உடனே ஆதரித்து அறிக்கை வெளியிட்ட பாஜகவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் தங்களது கருத்துக்கு ஆதரவாக படைப்புக் கொள்கைதான் சரி என்று வாதிடும் வலதுசாரி கிறித்தவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளார். தமக்கு வேண்டும் எனும்போது இந்துத்துவ மேலாண்மையை சற்றே தள்ளிவைத்து விட்டு பிற மதத்தவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ள இந்துத்வவாதிகள் தயங்குவதில்லை. பரிணாமக் கொள்கைக்குப் பதிலாக அவர்கள் அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design) என்ற பெயரில் ஒரு மாற்றுக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். பாஜக தலைவர்களும் தத்துவவியலாளர்களும் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்குப் பதில் புராணக் கதைகளையும் இதர கட்டுக்கதைகளையும் நமது வரலாறாக முன்வைக்கின்றனர். ஐசிஎச்ஆர் தலைவர் எஸ்.ஆர். ராவ் புராணக் கதைகளை “வாய்மொழி வரலாறு” என்று குறிப்பிட்டு நியாயப்படுத்தினார்.   வழக்கமாக மேடைகளில் சண்டமாருதம் செய்யும் நமது பிரதமர் மோடி இதையெல்லாம் பற்றிப் பேசாமல் மௌனமாக இருக்கிறாரே என்று கேட்பதில் பொருள் இல்லை. மௌனம் அவரது சம்மதத்திற்கு அறிகுறி என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளின் அடிப்படையில் நவீன இந்தியாவை நிர்மாணிப்பதே பாஜகவின் நோக்கமாக இருக்கிறது.

பரிணாமக் கொள்கைக்கு எதிரான அமைச்சரின் கருத்தை வெளிப்படையாக மறுத்து அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டிருப்பது நல்லதொரு திருப்புமுனை. கடந்த காலத்தில் அவர்கள் இப்படி கிளர்ந்தெழாததைக் கண்டித்த மறைந்த விஞ்ஞானி புஷ்பா பார்கவா அறிவியல் நிறுவனங்களுடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டார். அவர் இன்று இருந்திருந்தால் அறிவியல் மீதான தாக்குதலுக்கு எதிராக விஞ்ஞானிகள் குரல் எழுப்பியது கண்டு அகமகிழ்ந்திருப்பார்.

“சத்யபால் சிங் மற்றும் பாஜக/ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம் அறிவியல் சார்ந்ததல்ல.. அது அவர்களின் அரசியல். அறிவியலையும் விஞ்ஞானிகளையும் அவர்கள் அரசியல்ரீதியாக இரு முகாம்களாகப் பிரிக்க முயல்கின்றனர். நாட்டை எதிர்நோக்கியுள்ள இந்த உண்மையான ஆபத்திற்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிறார் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் முன்னாள் தலைவரும் சர்வதேச அங்கீகாரம் உள்ள உயிரியல் விஞ்ஞானியுமான ராகவேந்திர கடக்கர்.

“பல நேரங்களில் இந்த யுகம் அறிவியல் யுகம் என்று மக்கள் கூறுகிறார்கள். எனவே, அறிவியல் யுகத்திற்கு ஏற்றபடி மதக் கருத்துகளில் சில மாற்றங்களைக் கொணர வேண்டும் என்கிறார்கள். நான் கூறுவது இதற்கு எதிரானது. அறிவியலின் ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவின் அடிப்படையில் நாம் மதக் கருத்துகளை மாற்றிக் கொண்டே போக முடியாது” என்றார் ஆர்.எஸ்.எஸ்ஸின் குரு கோல்வாக்கர். இந்த விஷயத்தில் கோல்வாக்கர் பயன்படுத்தும் மொழி இஸ்லாமியப் பழமைவாதிகள் பயன்படுத்தும் மொழியைப் போன்றதே. அவர்கள் நவீன யுகத்தை இஸ்மிலாமியப்படுத்த விரும்புகின்றனர். ஆர்எஸ்எஸ் நவீன யுகத்தை காவிமயப்படுத்த முயல்கிறது. பேரண்டத்தையும் மனிதர்கள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களையும் படைக்க கடவுள் ஆறு நாட்களை எடுத்துக் கொண்டார் என்கிறது கிறித்தவ மதம். பைபிளில் உள்ள படைப்புக் கொள்கையை அடிப்படையாக வைத்தே அமெரிக்காவில் சிலர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பரிணாமக் கொள்கையோடு படைப்புக் கொள்கையையும் சொல்லித் தர வேண்டும் என்கின்றனர்.

இந்துத்வவாதிகள் மதச்சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். ஒரு புறம் மதச்சார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம் போன்ற மேற்குலக சிந்தனைகளை ஏற்போரை அவர்கள் கண்டிக்கின்றனர். மறுபுறம் அவர்களே மத அடிப்படைவாதம் என்று வரும்போது அங்குள்ள பழமைவாதிகளைப் பின்பற்றவே முனைகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை?  கோல்வாக்கர் பழைய இந்தியாவை அல்ல, நவீன இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்கிறார். அவரைப் பொறுத்தவரை நமது பண்பாடு இந்து பண்பாடு.. நமது மொழி சம்ஸ்கிருதம்.. நமது இனம் ஆரிய இனம். நவீன இந்தியாவின் அடையாளங்களாக இம்மூன்றுமே இருக்க வேண்டும் என்கிறார். மத அடிப்படைவாதத்தை மட்டுமல்ல, பாசிசத்தையும் இந்துத்வவாதிகள் மேற்குலகிலிருந்தே பெறுகிறார்கள். கூடுதலாக அவர்கள் இந்து தர்மம் என்று சொல்வது சாதியப் படிநிலையை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தருமத்தைத்தான்,,   அறிவியலுக்கும் மேலானதாக அவர்கள் மதத்தையும்  சாதிய  மேலாதிக்கத்தையும் வைக்கக் காரணம், கேள்வி கேட்கும் பகுத்தறிவு சிந்தனைகளைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். வெறுப்பு, பயம் அடிப்படையில் அமைந்த இந்தியாவையே அவர்கள் கட்டமைக்க விரும்புகின்றனர்.

இந்த அம்சத்தை மக்கள் – குறிப்பாக சாதியப் படிநிலையில் கீழாக வைக்கப்பட்டுள்ள மக்கள் –  புரிந்துகொண்டு விழிப்புணர்வு பெறும்போதுதான் உண்மையிலேயே சாதிமத பேதமற்ற, மனித நேயம் மற்றும் அறிவியல் அடிப்படையிலான நவீன இந்தியா கம்பீரமாக முன்னேற முடியும்.

News

Read Previous

அரசியல் ஒரு சாக்கடை.

Read Next

பொழிப்புரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *