பரமக்குடி அல்ல; பரம்பைக்குடி

Vinkmag ad
பரமக்குடி அல்ல; பரம்பைக்குடி! : சேதுபதி ராணி கல்வெட்டில் ஆதாரம்

நன்றி தினமலர்: http://www.dinamalar.com/news_detail.asp?id=1670927
 
 

சென்னை: பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, சேதுபதி ராணி பர்வதவர்த்தினி நாச்சியார் காலத்து கல்வெட்டில், பரமக்குடி, பரம்பைக்குடி என, பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
பரமக்குடி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்த, திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர், வே.ராஜகுரு, சேதுபதி ராணி பர்வதவர்த்தினி நாச்சியார் கட்டிய பள்ளியின் கல்வெட்டை கண்டுபிடித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:



கடந்த, 1826ல், சென்னை மாகாண கவர்னராக இருந்த, சர் தாமஸ் மன்றோவின் கல்வி சீர்திருத்த பரிந்துரைப்படி, மாவட்ட தலைநகரங்களில், இரு உயர்நிலைப் பள்ளிகளும், ஒன்றிய தலைநகரங்களில், ஒரு தொடக்க பள்ளியும் நிறுவப்பட்டன. அதன்படி, தமிழ், ஆங்கிலம் கற்பிக்க, மதுரையில் இரு உயர்நிலைப் பள்ளிகளும், தமிழ் கற்பிக்க, பரமக்குடி, சிவகங்கையில், தலா, ஒரு தொடக்கப் பள்ளியும் துவங்கப்பட்டன.

தமிழ் வழிப் பள்ளிகளில், திண்ணைப் பள்ளி பாடங்கள் கற்பிக்கப்பட்டதால், மாணவர்களிடம் செல்வாக்கு குறைந்து, காலப்போக்கில் மூடப்பட்டன. பின், மெக்காலேயின், ஆங்கில வழிக் கல்வியை ஏற்று, அவை மீண்டும் துவக்கப்பட்டன. கடந்த, 1846ல், ராமநாதபுரம் சேதுநாட்டில், ஜமீன்தாரினியாக இருந்த, பர்வதவர்த்தினி நாச்சியார், பரமக்குடி பள்ளிக்கு கட்டடம் கட்டித் தந்துள்ளார்.

ஆங்கிலம், தமிழ் மொழியில் எழுதப்பட்ட, அப்பள்ளி கல்வெட்டில், கொடையாளரின் பெயருக்கு முன், ‘ஹிரண்ய கர்ப்ப யாஜி’ என, குறிப்பிட்டு உள்ளது. இதனால், அவர், பொன் பசுவிற்குள் இருந்து யாகம் செய்து, அப்பசுவை, அந்தணர்களுக்கு தானமாக வழங்கிய மன்னர் பரம்பரையை சார்ந்தவர் என்பது விளங்குகிறது. ஊர் பெயர், பரம்பைக்குடி என, உள்ளது.

இது, பரம்பை மரம் அடர்ந்த ஊர் என்ற பொருள்படுகிறது. இப்போதும், அவ்வூரில் பரம்பை மரங்கள் அதிகம் உள்ளன. நாளடைவில், பரம்பைக்குடி, பரமக்குடியா க மாறியதை, இது உணர்த்துகிறது. ஆங்கிலேயர், தமிழ் வழி பள்ளிகளை திறந்ததற்கும், அதற்கு, சேதுபதிகள் தானம் வழங்கியதற்கும், இக்கல்வெட்டு சான்றாக உள்ளது.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம், சில ஆண்டுகளுக்கு முன், பழுதடைந்த நிலையில் இடிக்கப்பட்டு விட்டது. எனவே, அப்பள்ளி நிர்வாகத்தினர், வரலாறு சிறப்புமிக்க இக்கல்வெட்டை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

News

Read Previous

ஜெயலலிதா என்றொரு அம்மா!

Read Next

நாமக்கல் புலவர் பொ.வேல்சாமியின் சிறப்புரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *