பனை மரமே ! பனை மரமே !

Vinkmag ad
பனை மரமே ! பனை மரமே !
— இரா.நாறும்பூநாதன்
தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில், “பனையும்,முருங்கையும் ” பற்றி பேசும் இந்தக் கருத்தரங்கில், பண்பாட்டு ஆய்வாளர் ஐயா ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ” பனை மரமே, பனை மரமே ” என்ற நூல் தரும் அரிய செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பனை மரம் என்றவுடன், நமக்கு உடனே நினைவுக்கு வருவது, பள்ளிக்காலத்தில் படித்த பாடல் தான் :

” பனை மரமே பனை மரமே !
  ஏன் வளர்ந்தாய் பனை மரமே !
  நான் வளர்ந்த காரணத்தை
  நானுனக்குச் சொல்லுகிறேன் “
இனிமையான நாட்டுப்புறப்பாடல் அது. இப்போது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை.
அது தவிர, தென் தமிழகத்தில் பயணம் வந்தால், கோடைக் காலங்களில், சாலையோரங்களில் மரத்தடியில், பதநீர், நுங்கு வாங்கி, பனை மட்டையில் ஊற்றிக்குடித்த இன்பமான நினைவுகள் உதட்டோரம் நிற்கும். சிலர் பனம்பழங்களைச் சுவைத்திருக்கக்கூடும். பனை மரம் குறித்து வேறு என்ன செய்திகள் நாம் அறிந்திருப்போம் ?
உலகின் தொன்மையான மரபுகளைக்கொண்ட தமிழ்ச்சமூகத்தில் பனை வகிக்கும் வகிபாகம் முழுவதையும் அறியத்தக்க வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
  • 12  இயல்களில் பனையின் பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
  • 5000  ஆண்டுகளுக்கும் மேலாகப் பனை மரம் என்பது, தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது.
  • தமிழக வரலாற்றின் தொன்மை தொடங்கி, கல்வெட்டு,சங்க இலக்கியங்கள், சைவம், கிறிஸ்தவம் காலனியம் ஊடாக, இன்றைய உலகமயம் வரை பனை பற்றிய செய்திகளை முழுமையாய் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
  • 800க்கும் மேற்பட்ட பயன்பாடுகளைக்கொண்ட பனைக்கு, நூற்றிற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.
  • தமிழகத்தில் 5.19  கோடி பனைமரங்கள் உள்ளன.
  • இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் இது 50  விழுக்காடு.
  • தமிழ்நாட்டிலும், தென்மாவட்டங்களில் தான் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முதலிடம்.
ஒரு மரம் என்றால், அது தரும் கனி, மருத்துவ குணங்கள் போன்றவை நம் நினைவுக்கு வரும்.  இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி, தமிழர்களின் பெருமைக்குரிய இலக்கிய நூல்கள் அனைத்தும் பனை ஓலைகளில் தான் எழுதப்பட்டுள்ளன என்பது மிக முக்கியமான செய்தி. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டோடு பனை கொண்டிருந்த தொடர்பை இதைவிட வேறு எப்படிச் சொல்லிவிட இயலும் ?
பனை மரத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் குறிப்பிடத்தக்கதாக தமிழகத்திலிருந்துள்ளதை பல்வேறு கல்வெட்டு ஆதாரங்களைக்கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். சோழர் காலத்தில், ஊரின் எல்லையில் பனை, தென்னை வளர்ப்பதற்கான உரிமையைச் சோழ மன்னர்கள் வழங்கி உள்ள செய்தியும்,  புதிய ஊர்களை உருவாக்கும்போது பனை தொழில் புரிவோரை அப்பகுதியில் குடியேறச் செய்துள்ள செய்திகளும் குறிப்பிடத்தக்கன.
தமிழ்நாட்டின் முக்கிய சாதிகளில் ஒன்றான நாடார் சாதியில், ஒரு பிரிவினர் பனைத்தொழிலை மேற்கொண்டிருந்தார்கள்.
பனை பற்றிய சில செய்திகள் :
வெப்ப மண்டலத்தில் வளரும் மர வகைகளுள் பனையும் ஒன்று. இதன் விதை, பனங்கொட்டை. செம்மண் நிலத்தில் இருக்கும் பனையின் பதநீர், நுங்கு,பனங்கிழங்கு மிகவும் சுவையாய் இருக்கும். தனி மரமாக இன்றி, கூட்டமாகவே பனை மரங்களைக் காண முடியும்.
பனை மரத்திற்குக் கிளைகள் ஏதும் இல்லை. 50  அடி முதல் 100  அடி வரை பனை மரங்கள் வளரும். பனையின் வயது 100  முதல் 120  வருடங்கள் வரை. மரத்தின் வேர், தூர்ப்பகுதி, மரத்தின் நடுப்பகுதி, காம்பு (மட்டை ), இலை(ஓலை ), சுரக்கும் இனிப்பான சாறு என மரம் முழுமைக்கும் மனிதருக்குப் பயன்படுகிறது.
பனை மரத்தில் நுங்கு கிடைக்கும். நுங்கை வெட்டாமல் விட்டு விட்டால்,அது பழுத்து பனம்பழம் ஆகி விடும். பழம் நன்றாகப் பழுத்து விட்டால், கீழே உதிர்ந்து விடும். பறித்த பனம்பழங்களைச் சாக்கினால் ஒரு வாரம் மூடி வைக்க வேண்டும். பின்பு பழத்தின் சதைப்பகுதியை நீக்க வேண்டும். உள்ளே ஒன்று முதல் மூன்று கொட்டைகள் வரை இருக்கும். இந்த கொட்டைகளை வெயிலில் உலர வைக்க வேண்டும். தேர்வு செய்த கொட்டைகளை, பத்தடி இடைவெளியில் குழி வெட்டி, கொட்டையின் கண்பாகம் கீழ்நோக்கி இருக்கும்படி நட வேண்டும். குழியின் ஆழம் ஒன்று முதல் ஒன்றரை அடி வரை இருக்கலாம். முதல் நான்கு மாதங்களில், பனங்கொட்டையில் உள்ள தவண் என்ற பகுதியை உணவாகக் கொண்டு பனை வளரும்.(இந்த தவண் சாப்பிட ருசியானது). நான்கு மாதம் கழித்து குருத்து போன்ற பனை ஓலை பூமி மீது வெளிப்படும்.இதை ” பீலி ” என்பார்கள்.  ஓராண்டு கழித்து இரண்டு பீலிகளின் மத்தியில் இன்னொரு பீலி வெளிப்படும். இந்த பருவத்தை, “வடலிக்கன்று ” என்பர். தொடர்ந்து 25  ஆண்டுகள் வேகமாய் வளரும். வடலிப்பருவ பனையில், பக்கவாட்டில் தோன்றும் கருக்கு மட்டைகளை வெட்டி அகற்றுவார்கள். வடலிப்பருவம் கடந்து 30  ஆண்டுகள் கழித்து, மரத்தின் உட்பகுதி வலுவடையத் தொடங்கும். இதை வைரம் பாய்தல் என்பர். 90  ஆண்டுகளுக்குப் பிறகு பனையின் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாய் குறையும்.
பனையில், ஆண்பனை, பெண்பனை உண்டு. ஆண் பனையில் குரும்பைகள் இருக்காது. எனவே, இதில் நுங்கும், பனம்பழமும் கிடைக்காது.  ஆனால், இதில் உருவாகும் பாளையைச் சீவி, கள், பதநீர் இறக்கலாம். இன விருத்தி செய்ய ஆண் பனை அவசியம். பெண்பனை நுங்கும், பனம்பழமும் தரும். தொடர்ந்து பெற, இம்மரத்தின் பாளையைச் சீவி, கள் அல்லது பதநீர் இறக்காமல் இருக்க வேண்டும்.
பனை மரத்தில் ஏறுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. நெஞ்சணைத்து ஏறுதல், கைக்குத்தி ஏறுதல், இடை கயிற்றால் ஏறுதல், குதித்துக் குதித்து ஏறுதல் எனப் பல வகைகள் உண்டு. இத்தொழிலுக்குத் தேவையான தொழிற்கருவிகள் உண்டு. நெஞ்சுத்தோல், தளைநார்,கால்தோல், முருக்குத்தடி, பாளை அரிவாள், அரிவாள் பெட்டி, கலக்கு மட்டை ஆகியன.
பாதுகாப்பு பெட்டகமாய் திகழ்ந்த பனை :  
ஒரு சுவையான தகவல் ஒன்றை ஆசிரியர் சொல்கிறார். நாயக்கர் ஆட்சிக்குப்பிறகு, தென் மாவட்டங்களில் பல கொள்ளை சம்பவங்கள் நடந்தன. பனை மரங்களின் ஊடாக அமைந்திருந்த குடியிருப்புகள் பாதுகாப்பின்றி இருந்தன. எனவே இப்பகுதி மக்கள், தங்களின் நகை,பணம் போன்றவற்றைப் பனை மரங்களின் உச்சியில் மட்டைகளுக்கிடையில் பாதுகாத்து வந்தனர். குருத்தோலைகளுக்கு இடையில் ஒளித்து வைத்திருந்ததாகச் சொல்லும் தகவல் வியப்பை அளிக்கக்கூடியது. பனை நார்க்கட்டில், பனை ஓலைப்பெட்டிகள்,கடவாய்ப்பெட்டிகள், பனை விசிறி போன்ற பயன்பாடுகள் நாம் அறிந்த ஒன்று. சிறுவர்கள் விளையாட்டுகளில் காற்றாடி விடுதல் அனைவருமே விளையாடிய ஒன்று.
ஓலை :
தமிழர்கள் எளிய எழுதுபொருளாகப் பனையோலையைப் பயன்படுத்தியது வெளிநாட்டினரை வியப்பூட்டியது. பறித்த பனை ஓலையை உடனடியாக பயன்படுத்த இயலும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டு எழுத்தாணி கொண்டு எழுதுவர். இப்போதும் கூட, குமரி மாவட்டத்தில் நாடார் சமூக மக்கள் குழந்தை பிறந்தவுடன் சாதகத்தைப் பனை ஓலையில் தான் எழுதி வருகிறார்கள். ஒரு ஓலையில் எழுதி பலகாலம் ஆகிவிட்டால், அது சிதிலமாகிவிட வாய்ப்புண்டு. எனவே, அதை மீண்டும் நகல் எடுத்து எழுதுவார்கள். நமது தமிழ் இலக்கிய நூல்கள் இப்படிப் பல காலம் நகல் எடுக்கப்பட்டு வந்தாலே பாதுகாக்க முடிந்திருக்கிறது. கம்பராமாயணத்தைப்  படியெடுத்துக்கொடுப்போர் தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, நாங்குநேரி, திருக்குறுங்குடி போன்ற வைணவ தலங்களில் 1925  வரை இருந்திருக்கிறார்கள்.
கள், பதநீர் :
கள்ளில் இடம்பெற்றுள்ள போதைத்தன்மையானது, பீரில் உள்ள போதையை விடக் குறைவு தான். கள்ளின் போதைத்தன்மை 7 % வரைதான். ஆனால், அந்நிய நாட்டு மதுவகைகளில் போதைத்தன்மை 43 % வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாளையிலிருந்து வடியும் இனிப்பான சாறு, கள் என்ற பெயரில் மதுவாக மாறுவதைத் தடுத்து உருவாவதே பதநீர் ஆகும். சாறு வடியும் கலயத்தில் சுண்ணாம்பைத் தடவி விட்டால் பதநீராக மாறும். சேகரிக்கப்பட்ட பதநீரை அடுப்பில் காய்ச்சி உருவாக்குவதே கருப்பட்டி. கற்கண்டு தயாரிப்புக்கும் மூலப்பொருளாக விளங்குவது பதநீர் தான் .
தல விருட்சம் : 
தமிழ்நாட்டில் உள்ள திருப்பனங்காடு,திருப்பனந்தாள், திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர், புரவார் பனங்காட்டூர் போன்ற ஊர்களில் பனை மரமே ஸ்தல விருட்சமாக உள்ளது. இவ்வளவு பெருமைகள் இருந்தபோதிலும், சைவக்கோவில்களில் ஒரு உணவுப்பொருளாகக் கருப்புக்கட்டி நுழைய அனுமதியில்லை. மடப்பள்ளிகளில் கருப்பட்டியைப் பயன்படுத்த மாட்டார்கள். புளியோதரையில் பயன்படுத்தப்படும் மிளகாய் வற்றலும், தயிர்ச் சாதத்தில் உள்ள மிளகாயும் போர்ச்சுகீசியர்களால் கொண்டுவரப்பட்டவை. பஞ்சாமிர்தத்தில் உள்ள பேரீச்சம்பழமும், ஆப்பிளும் கூட வெளி நாட்டிலிருந்தே வந்தவை. பாரசீகத்திலிருந்து வந்த ரோஜாவிலிருந்தே பன்னீர் எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மண்ணின் பாரம்பரிய இனிப்பான கருப்பட்டியோ விலக்கப்பட்ட பொருளாக முத்திரை இடப்படுகிறது. இதில் உள்ள அரசியல் நோக்கத்தக்கது. கருப்பட்டியின் மூலப்பொருள் கள்ளாகக் கருதியதின் வெளிப்பாடே கோவில்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.
பனை ஓலையும், கிறிஸ்தவ மதமும் :
வீரமாமுனிவர், சீகன்பால்கு போன்ற வெளிநாட்டு மிஷனரிகள் ஓலைச்சுவடிகளில் தான் தங்கள் சமய நூல்களை எழுதினர். குருத்தோலை திருநாளில் பனை ஓலைக்குருத்தைப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் உண்டு.
அழிவை நோக்கி பனை மரங்கள் :
பனை மரத்தில் ஏறுவது குறித்த பனையேறி என்ற சொல் கூட இழிவான சொல்லாக மாற்றப்பட்டு விட்டது. கருப்பட்டி, கற்கண்டு தவிர, பதநீரை நீண்டநாட்கள் இருப்பில் வைக்க இயலவில்லை. அதற்கு விரிவான சந்தை இல்லை. செங்கல் சூளைக்காகவும் கட்டிடம் காட்டும் பணிக்காகவும் பனைகள் வெட்டப்படுகின்றன.
செய்ய வேண்டியவை :
நீர் நிலைகளில் கரை அரிப்பைத் தடுக்க நமது முன்னோர்கள் பனை மரங்களை வளர்த்தார்கள். எனவே, மீண்டும் நாம் பனங்கொட்டைகளை ஊன்றி வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
முதிர்ச்சி அடையாத பனை மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது.
பனங்கிழங்கு மாவு தயாரித்தல், காற்றுப்புகா பெட்டிகளில் நுங்கு, பனம்பழ சாறு போன்றவை அடைத்து விற்பனை செய்யும் வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
குப்பிகளில் அடைத்து பதநீர் விற்பனை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
கலப்படமில்லாத கள்ளை விற்பனை செய்ய அனுமதிக்கலாம்.
கருப்பட்டியிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளைப் பரவலாக அறிமுகம் செய்தல் வேண்டும்.
இன்னும் பல செய்திகளை இந்த நூலில் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தொகுத்துள்ளார். இன்றைய சூழலில், மிகவும் முக்கிய பனை மரமே பனை மரமே என்ற நூலைக் காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்துள்ளது.

News

Read Previous

இதுதான் என் ராமராஜ்ஜியம்

Read Next

பனையும் முருங்கையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *