படிக்காத மேதைகளா நம் தலைவர்கள்?

Vinkmag ad

source – https://www.hindutamil.in/news/opinion/columns/565068-kamarajar-2.html

18 Jul 2020

படிக்காத மேதைகளா நம் தலைவர்கள்?

kamarajar

கல்வி வள்ளல், கர்மவீரர் என்பதன் தொடர்ச்சியாகப் படிக்காத மேதை என்றொரு அடைமொழியும் காமராஜருக்குச் சூட்டப்படுவது வழக்கமாக இருக்கிறது. பாரீஸ்டர்கள் இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திய நாட்களில், கல்லூரியில் காலடி எடுத்துவைக்காத காமராஜர் இந்த நாட்டின் அரசியல் தலைமையை ஏற்றிருந்தார் என்பது வரைக்குமே அது சரி. மற்றபடி, வாசிப்புப் பழக்கத்துக்கு அவர் அந்நியர் அல்லர்.

காமராஜருடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தும் பிணங்கியும் இயங்கியவர்களில் ம.பொ.சி. முக்கியமானவர். ‘எனது போராட்டம்’ என்ற தலைப்பில் ம.பொ.சி. எழுதிய சுயசரிதையில் நாற்பதுகளின் தொடக்கத்தில் அமராவதிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுபவங்களை எழுதியிருக்கிறார். அப்போது சிறைக்கு வந்த காமராஜர் கூடவே ‘என்சைக்ளோபீடியா’ வால்யூம்களையும், வெ.ப.சுப்ரமணிய முதலியார் உரையுடன் வெளியான ‘கம்பராமாயண சாரம்’ நூலின் தொகுதிகளையும் கொண்டுவந்திருந்ததாக எழுதியிருக்கிறார். மதுரை தமிழ்ச் சங்கத்தின் ‘செந்தமிழ்’ இதழில் கம்பரின் தேர்ந்தெடுத்த பாடல்களோடும் உரையோடும் எழுதிய வெ.ப.சுப்ரமணிய முதலியார் எழுதிய தொடரே பின்பு கம்பராமாயண சாரம் என்று புத்தக வடிவமானது. கம்பனைப் படிப்பதற்கு சிறந்ததொரு அறிமுகமாக விளங்கும் அந்நூலை காமராஜர் தனது சிறைவாசத்தில் வாசித்திருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல்.

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சாவி, ‘சிவகாமியின் செல்வன்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அந்த நூலிலும் காமராஜரின் பரந்த வாசிப்பு வெளிப்படுகிறது. எழுத்தாளர் கல்கியைப் பற்றிய அபிப்ராயம் என்னவென்ற சாவியின் கேள்விக்கு, திரு.வி.க. நடத்திய ‘நவசக்தி’ இதழில்தான் கல்கியின் எழுத்துகளை முதலில் தான் படித்ததாகப் பதில் கூறியிருக்கிறார் காமராஜர். ‘நவசக்தி’யில் அவர் எழுதிவந்த புனைபெயரையும் அவரது வேடிக்கைத்தனமான எழுத்தையும் நினைவுகூர்ந்திருக்கிறார். ‘ஆனந்தவிகட’னில் கல்கி எழுதிய தலையங்கங்கள் காங்கிரஸ் கட்சிக்குப் பலம் சேர்த்தன என்றும் கூறியிருக்கிறார் காமராஜர்.

பத்திரிகையாளர்களிடம் எப்போதுமே மிக நெருக்கமான உறவைப் பேணிவந்தவர் காமராஜர். அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அது அமையவில்லை. அப்போதைய பத்திரிகையாளர்கள் பலரும் எழுத்தாளர்களாக மட்டுமின்றி சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் இருந்தார்கள். காமராஜருடன் சிறைவாசம் அனுபவித்தவர்களில் ‘தினமணி’ ஏ.என்.சிவராமனும் ஒருவர். வாசன் அனுமதியளிக்காததால் கல்கிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சிவராமனின் எழுத்து படித்தவர்கள் வியக்கும்படியானது, டி.எஸ்.சொக்கலிங்கமும் கல்கியும் பாமரருக்கும் புரியும்படி எழுதுபவர்கள் என்று ஒப்பிடும் அளவுக்கு ஒவ்வொருவர் எழுத்தையும் நுட்பமாக வாசித்துவந்தவர் காமராஜர்.

காமராஜர் தனது காலைப் பொழுதை ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுடன் தொடங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர். சிறைவாச நாட்களிலும் அது தவறவில்லை. ஆங்கில ஆட்சியில் ஆங்கில நாளேடுகள் மட்டுமே சிறையில் அனுமதிக்கப்பட்டன. அதற்குக் காரணம், அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் படித்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட மாட்டார்கள் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை என்கிறார் ம.பொ.சி. எனவே, அரசியல் கைதிகளாக சிறைவாசம் அனுபவிப்பவர்கள் ஆங்கிலத்தில் வாசித்துப் பழக ஒரு வாய்ப்பும் உருவானது. பின்னாட்களில் தேசியத் தலைவர்களுடனான உரையாடலில் தமது கருத்துகளை மிகத் தெளிவாக காமராஜர் ஆங்கிலத்தில் பேசினார். ஆனால், பொதுமேடைகளில் அவர் ஒருபோதும் சரித்திரச் சான்றுகளையோ இலக்கிய மேற்கோள்களையோ எடுத்துக்காட்ட விரும்பவில்லை. மக்கள்மொழியில் பேச வேண்டும் என்ற காந்தியின் கொள்கையையே பின்பற்றினார்.

காமராஜர் ஆறாவது வகுப்பு வரைக்கும்தான் பள்ளியில் படித்தார். ஆனால், அவரது வாசிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடரவே செய்தது. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும்கூட மேடைக்கூச்சத்தின் காரணமாக அவர் கூட்டங்களைத் தவிர்த்திருக்கிறார். ஆனால், அமராவதி சிறைவாசமும் தொடர்ந்த வாசிப்புப் பழக்கமும் பின்பு அவர் மேடைகளில் எந்த ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசுவதற்குக் காரணமாகிவிட்டன.

சென்னையில் இருந்தாலும் வெளியூர்களுக்குச் சென்றிருந்தாலும் காமராஜர் தமது பணிகளை முடித்துப் படுக்கைக்குச் செல்வதற்குப் பன்னிரண்டு மணியாகிவிடும். அதற்குப் பிறகு அரை மணி நேரம், முக்கால் மணி நேரம் புத்தகங்களை வாசிப்பது அவரது வழக்கமாக இருந்திருக்கிறது. எவ்வளவு நேரமானாலும் அவர் படிக்காமல் உறங்கியதில்லை. டெல்லியில் காமராஜரின் துணிப் பெட்டியில் ஜான் குந்தரின் ‘இன்சைடு ஆப்பிரிக்கா’, ஆல்டஸ் ஹக்ஸ்லேயின் ‘எண்ட்ஸ் அண்டு மீன்ஸ்’, வி.ச.காண்டேகரின் ‘சிந்தனைச் செல்வம்’ புத்தகங்களையும் ‘டைம்ஸ் மேகஸின்’, ‘நியூஸ் வீக்’ இதழ்களையும் பார்த்ததாக எழுதியிருக்கிறார் சாவி.

காமராஜரை அடுத்து முதல்வராகப் பொறுப்புக்கு வந்த பக்தவத்சலம் வழக்கறிஞர், மொழிப் பிரச்சினைகள் குறித்தும் மேற்காசிய நாடுகளின் உறவுகள் குறித்தும் ஆங்கிலத்தில் புத்தகங்கள் எழுதியவர். அவருக்குப் பின் முதல்வரான அண்ணா எம்.ஏ. பட்டதாரி. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் வல்லவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மு.கருணாநிதி கல்லூரிப் படிப்பு இல்லையென்றாலும் தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளுமை.

கருணாநிதியைத் தொடர்ந்து வந்த எம்ஜிஆரும் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திக்கொண்டவர்தான். நடிகரான அவர் நவீன இலக்கியவாதிகளையும் அறிந்துவைத்திருந்தார் என்பதே வியப்பாக இருக்கிறது. எம்ஜிஆர் மரணமடைந்தபோது அவரைக் குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் க.நா.சுப்ரமணியம் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில் சென்னை கடற்கரையில் மணிக்கொடி படைப்பாளிகள் பல கருத்துகளை வெளிப்படுத்தி இலக்கிய விவாதங்களை நடத்துகையில், எம்ஜிஆர் சற்றே விலகி நின்று அவற்றைக் கவனிப்பார் என்று நினைவுகூர்ந்திருக்கிறார் (இரா.தங்கதுரை, ‘நான் கண்ட எம்.ஜி.ஆர்.’). எம்ஜிஆரின் நண்பரும் நடிகருமான எம்.வி.மணி அய்யர் தீவிர வாசிப்பாளரும்கூட. எழுத்தாளர் ‘சிட்டி’ பெ.கோ.சுந்தரராஜனின் நெருங்கிய நண்பர். மணி அய்யரின் வழியாக நவீன இலக்கிய முன்னோடிகளான வ.ரா., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், க.நா.சுப்ரமணியம், ந.பிச்சமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா ஆகியோரைத் தான் அறிந்துகொண்டதாகத் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார் எம்ஜிஆர்.

கல்லூரியில் சேர்ந்தாலும் படிப்பைத் தொடராது விட்டவர் ஜெயலலிதா. படப்பிடிப்புகளின் இடைவெளிகளில் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். ‘ஷிட்னி ஷெல்டன்’ வகையான உள்ளீடற்ற புத்தகங்கள்தான் பெரும்பாலும். ஆனாலும், சார்லஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டென், சாமர்ஸெட் மாம் ஆகியோரும் அவரது விருப்பத்துக்குரியவர்கள். பள்ளிக் காலத்தில் ராஜாஜியின் ‘சக்ரவர்த்தித் திருமகன்’தான் அவர் படித்த முதல் தமிழ் நூலாம். ‘தாய்’ இதழில் ஜெயலலிதா எழுதிய ‘எனக்குப் பிடித்தவை’ என்ற தொடர் அவரது எழுத்தார்வத்துக்கு ஓர் உதாரணம். போயஸ் தோட்டத்தில் அவர் நல்லதொரு நூலகத்தைப் பராமரித்தார் என்று சொல்லப்படுகிறது. நினைவில்லம் அமைக்கப்படும்போது அந்த நூலகத்தையும் காட்சிப்படுத்த வேண்டும்.

கல்லூரிப் படிப்பும் சான்றிதழ்களும் மட்டுமே கல்வியாகிவிடாது. தொடர்ந்த வாசிப்பு இல்லாமல் கல்வி முழுமைபெறாது. நம் தலைவர்களில் பலர் பல்கலைக்கழகச் சான்றிதழ்களைப் பெறாதவர்களாக இருக்கலாம். ஆனால், வாசிப்பின் வழி அந்த இடைவெளியைக் கடந்தவர்கள்.

– செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

News

Read Previous

காரைக்குடி கம்பன் கழகம் வழங்கும் இணைய வழியில் கம்பராமாயண படலக் காணொளிக் காட்சி உரை

Read Next

புதிய கரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *