பசுமைப் போர்வையை மீட்க விதைப் பந்துகள்

Vinkmag ad
பசுமைப் போர்வையை மீட்க விதைப் பந்துகள்
பேராசிரியர் கே. ராஜு

சென்னைவாசிகள் சென்ற வருடம் டிசம்பர் 12 அன்று வீசிய வார்தா புயல் விளைவித்த சர்வநாசத்தை என்றுமே மறக்க முடியாது. அன்று வீசிய சூறாவளிக் காற்று ஏறக்குறைய ஒரு லட்சம் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. புயலுக்கு முன்னதாகவே கூட சென்னையின் பசுமைப் போர்வை மிகப் பலவீனமானதுதான். இருந்த கொஞ்சநஞ்ச மரங்களையும் வார்தா காலி செய்துவிட்டது. புயல் அடித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மீண்டும் மரங்களை நட்டு ஏற்கனவே இருந்த பசுமைப் போர்வையை மீட்க பல அரசுசாரா அமைப்புகள் தங்களாலியன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதில் `துவக்கம்’ என்ற அமைப்பு எடுத்துவரும் முயற்சி தனித்துவம் மிக்கது. விதைப் பந்துகளை (seed balls) செய்து அவற்றை நகரிலும் நகரைச் சுற்றிலும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பரவலாக எறிந்துவிடுகின்றனர். “இயற்கை நம்முடைய பெரிய சொத்து. அதைப் பாதுகாப்பது நம்முடைய கடமை. எங்களுடைய செயல்முறை எளிமையானது. விதைகளை எடுத்து அவற்றை சேற்றுடனும் மாட்டுச் சாணத்துடனும் கலந்து உருண்டைகளாக்கிக் கொள்கிறோம். சேறும் சாணமும் விதை காற்றில் பறந்து போய்விடாமல் அதைப் பாதுகாப்பதோடு உறுதியாகவும் ஆக்குகிறது. தரிசு நிலத்தில் விதைகளைத் தெளித்தால் அவை வேர்விடுவதற்கு முன் பறந்துபோய்விடும் வாய்ப்பு இருக்கிறது. விலங்குகள் அவற்றைத் தின்றுவிடவும் கூடும். விதைப் பந்தாக்கிவிட்டால், விதை பாதுகாப்பாக இருப்பதோடு அது மரமாக வளர்வதை நாம் உத்தரவாதப்படுத்திக் கொள்ளவும் முடியும்” என்கிறார் துவக்கம் அமைப்பை உருவாக்கி நடத்திவரும் ஜோசப் அலெக்ஸ். அண்மையில் அவர் வில்லிவாக்கத்தில்  நடத்திய பட்டறையில் 30 பேர் கலந்துகொண்டு விதைப் பந்துகளைத் தயாரித்தனர்.
மேலும் கூறுகையில் “இதில் முக்கியமானது என்னவெனில், ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இயற்கையின் முக்கியத்துவத்தைக் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அவர்களுக்கு இலக்குகளைக் கொடுக்கிறோம். சுமார் 10,000 விதைப் பந்துகளைச் செய்ய எங்களுக்கு ஒரு மணி நேரம் ஆயிற்று. பின்னர், 20 தன்னார்வலர்கள் அவற்றை திரிசூலம் மலைக்கு எடுத்துச் சென்று பந்துகளை விசிறிவிட்டனர். விதைகள் தரையில் உள்ள மண்ணுடன் கலந்து சிறிய செடிகளாக வளர சுமார் 45 நாட்கள் ஆகும். சுமார் 100 மரங்களை பாரம்பரிய முறையில் நட நீண்ட நேரம் பிடிக்கும். ஆனால் விதைப் பந்துகளைச் செய்ய அதிக நேரம் ஆகாது. மலையேறுபவர்கள், காரில் நீண்ட பயணம் செல்பவர்கள் ஆகியோரிடம் விதைப் பந்துகளைக் கொடுத்து அவற்றை பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் போட்டுவிடுமாறு கேட்டுக் கொள்வோம். குறுகிய கால அவகாசத்தில் பல மரங்களை இந்த முறையில் வளர்க்க முடியும்” என்கிறார் ஜோசப்.
இந்த அமைப்பினர் புளி, வேம்பு, கொன்றை போன்ற உள்நாட்டு மரங்களின் விதைகளை பல இடங்களில் வாங்குகிறார்கள். புளிய விதையைப் பெறுவது எளிதாக உள்ளதாம். சமையலுக்கு புளியைப் பயன்படுத்துவது நம் வழக்கம் என்பதால் புளிய விதையை எடுத்து வைக்குமாறு இவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். பின்னர் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு லட்சம் விதைகளைப் பந்துகளாக்கிப் பயன்படுத்தினால் அவற்றில் 95 சதமானவை மரங்களாக வளர்ந்துவிடும் என்பது இவர்களது அனுபவம்.
விதைப் பந்துகளைச் செய்வதோடு துவக்கம் அமைப்பினர் நின்றுவிடுவதில்லை. இயற்கை மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தை விளக்கி வீதி நாடகங்கள் நடத்துகின்றனர். அண்மையில் சோளிங்கநல்லூரிலும் நாகேஸ்வரராவ் பூங்காவிலும் இவர்கள் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். விதைப்பந்துகளை வீசி எறியும் சில இடங்களில் அவற்றைக் கண்காணித்து செடிகளுக்கு உரம் இடுவது, செடிகளைத் தாங்கிக் கொள்ள கம்புகளை நடுவது போன்ற நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர். பசுமையான இடங்களில் குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் நடைப்பயிற்சி செய்ய ஊக்குவிக்கின்றனர். அடிக்கடி மெரினா கடற்கரையில் மரங்களை வளர்ப்பதின் அவசியம் பற்றி சைகை மற்றும் அபிநய நாடகங்கள் (அஅந யீடயலள) நடத்துகின்றனர். சுற்றுச்சூழல் போக, சாலைப்போக்குவரத்தில் விழிப்புணர்வு, கிராமத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற அம்சங்களிலும் துவக்கம் அமைப்பு கவனம் செலுத்துகிறது.
(நன்றி : ஜூன் 8, 2017 டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சென்னை டைம்ஸ் இணைப்பில் மிருணாளினி சுந்தர் எழுதிய கட்டுரை)

News

Read Previous

பால்நினைந்து கொடுத்திடுவீர் !

Read Next

சங்கரய்யா: உழைக்கும் மக்களின் ஓய்வறியா தலைவர்

Leave a Reply

Your email address will not be published.