நவீன அறிவியலின் தந்தை

Vinkmag ad

நவீன அறிவியலின் தந்தை

—– கோ. ஒளிவண்ணன்


இன்று (பிப்ரவரி 15-ந் தேதி) விஞ்ஞானி கலிலியோ பிறந்ததினம்.

வளர்ந்து வரும் நவீன உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மகத்தான புரட்சிகளை உருவாக்கியுள்ளன. இன்றைய சூழ்நிலையில் புதிதாக ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அது உலகெங்கும் கொண்டாடப்படுவது நாம் சாதாரணமாக காணும் ஒன்று. ஆனால், பதினாறாம் நூற்றாண்டில் உலகத்தில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அறிவியல் புரட்சி ஏற்பட்டபோது, எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் கண்டறிந்த அறிவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர், துன்பத்திற்கு உள்ளாயினர், கைது செய்யப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். அந்த வகையில், மனித குலத்தின் அறிவுசார்ந்த முன்னேற்றத்திற்கு மாபெரும் வழிவகுத்து அதற்காக சாகும் வரை சிறையில் இருந்தவர், இத்தாலி நாட்டை சார்ந்த இயற்பியல் விஞ்ஞானி கலிலியோ ஆவார்.
1564-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி இத்தாலி நாட்டில் பைசா நகரத்தில் கலிலியோ பிறந்தார். அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்கி 1580-ல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். சிறிய வயதிலிருந்து எதனையும் நுணுக்கத்தோடும், அறிவியல் கோணத்துடனும் பார்ப்பதையே கலிலியோ வழக்கமாகக் கொண்டிருந்தார். 1581-ல் ஒருநாள் கல்லூரியில் மேலே தொங்கிக்கொண்டிருந்த சரவிளக்கு வேகமான காற்றினால் வலதும், இடதுமாக வில் போல வளைந்து ஆடுவதைப் பார்த்தார். வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு பெண்டுலங்களை எடுத்து, அவைகளை ஒன்றை வேகமாகவும் இன்னொன்றை மெதுவாகவும் ஆட்டிவிட்டார். அவர் கண்டறிந்தது, இரண்டு பெண்டுலங்களும், ஒரு பக்கத்திலிருந்து இன்னொருபக்கம் போய்விட்டு புறப்பட்ட இடத்திற்கு வருவதற்கு ஒரே நேரம் தான் எடுத்துக்கொள்கிறது. இது பின்னர் பல அறிவியல் கோட்பாடுகளுக்கு வழிவகுத்தது. பெண்டுலம் கெடிகாரங்கள் உருவாக்கப்பட்டன. நியூட்டன் என்ற மற்றொரு அறிவியியல் அறிஞர் 1686-ல் கண்டறிந்த உலக அறிவியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த மூன்று விதிகளில் முதல்விதிக்கு ஆதாரம் பெண்டுலம் ஊசலாடுவது உதாரணம் காட்டப்படுகிறது. ஒருகட்டத்தில் கணிதத்தின் மீது இருந்த தீராத காதலில் மருத்துவ படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கணிதத்தில் கல்வியை தொடர்ந்தார் கலிலியோ.
1591-ல் அவரது தந்தை வின்சென்சோ இறந்தபிறகு தங்கைகள் இருவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கலிலியோவின் தோள்களில் விழுகிறது. பைசா நகரத்திலிருந்து பாடுவா நகரத்திலுள்ள பல்கலைக்கழகத்திற்கு கணித பேராசிரியராக செல்கிறார். அங்கு பணியாற்றிய பதினெட்டு ஆண்டுகள் தனது வாழ்வில் மகிழ்ச்சியான நாட்களென குறிப்பிடுகிறார். இங்கு பணிபுரியும்போது பல அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார். அறிவியல் என்கிற போர்வையில் அதுவரை கட்டமைக்கப்பட்டிருந்த மூட கருத்துக்களை அவிழ்த்து உண்மைகளை உலகுக்குக் காட்டும் வகையில் அவரது ஆராய்ச்சிகள் தொடர்ந்தது.
உதாரணமாக, அரிஸ்டாட்டில் கூறிய, ‘மேலிருந்து, கனமான பொருளையும், கனமற்ற பொருளையும் ஒன்றாக விழச்செய்யும்போது கனமுள்ளது முதலில் கீழே விழும்’ என்கிற கோட்பாட்டை கலிலியோ பொய்யென நிரூபித்தார். தனது நகரத்தில் இருக்கும் பைசா சாய்ந்த கோபுரத்தின் மீது நின்று வெவ்வேறு கனமுடைய பொருட்களை விழச் செய்து பொருள்கள் விழும் நேரத்திற்கும் அதன் கணத்திற்கும் சம்பந்தமில்லை என்று நிறுவினார்
கலிலியோவின் மற்றொரு புரட்சிக்கரமான கண்டுபிடிப்பு வானியல் தொலைநோக்கி. உருவாக்கியது. இதன் உதவியுடன் விண்ணிலிருந்து நிலவையும், பிறக்கோள்களையும் அவைகளை சுற்றி வரும் நிலவுகளையும் கண்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் கண்டறிந்த அறிவியல் உண்மை அவரை சிறைக்குள் தள்ளியது. மதங்களும், புனித நூல்களும், ‘பூமி நிலையானது, மையமானது. சூரியனும் கோள்களும் அதனை சுற்றி வருகின்றன’ என்று தொன்றுதொட்டு கூறிவந்தன. 1530-ல் கோபெர்னிக்கஸ் என்கிற அறிஞர் ஆதாரங்களோடு கூறியபோதும், மத அமைப்புகள் அதனை ஏற்றுக்கொள்ளாமல், அவரது வெளியீடுகளை தடை செய்தன. ஆனால் கலிலியோவின் தொலைநோக்கி, விண்வெளியில், அனைத்து கோள்களும் தங்களை தாங்களே ஒரு அச்சில் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிவருகிறது என்கிற உண்மையை அப்பட்டமாக உரைத்தபோது, மதத்தினர் எதிர்த்தனர். அரசாங்கம், மதத்திற்கு கட்டுப்பட்டிருந்தமையால், கலிலியோ கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் முதுமை காரணமாக, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். தான் கண்டுபிடித்தவைகள் உண்மையானவை அல்ல என்று கூற வைக்கப்பட்டதாகவும், அப்படி இல்லையென்றால் மரணதண்டனை விதிக்கப்பட்டிற்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவரது புத்தகமும் தடை செய்யப்பட்டது.
நவீனஅறிவியலின் தந்தை என்றும் வானியல் அறிவுக்கு வித்திட்டவருமான கலிலியோ தனது 78-வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இறந்தபிறகு தனது உடலை அப்பாவின் கல்லறைக்கு அருகில் அவரது குடும்பத்தினர் புதைக்கப்படும் இடத்தில் புதைக்கப்படவேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்திருந்தார். ஆனால், அவரது உடல் வேறு ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டது. மனிதகுல வரலாற்றில் மாபெரும் அறிவியல் உண்மைகளை கண்டறிந்த மகத்தான ஒருவர் அரசு குற்றவாளி என்கிற நிலையில் மிகவும் சாதாரணமாக மறைந்தது பெரும் இழப்புதான். அடுத்தமுறை நாம் எங்கேயாவது பெண்டுலம், இடப்பக்கம், வலப்பக்கம் என்று ஊசலாடினால், கலிலியோவை மட்டுமல்ல, அறிவியல் என்கிற ஒளி அறியாமை என்கிற இருளை தொடர்ந்து விரட்டியடித்துக் கொண்டே இருக்கும் என்கிற உண்மையையும் நினைவில் கொள்ளவேண்டும்.

நன்றி: தினத்தந்தி நாளிதிழ்-15 பிப்ரவரி 2019 வெளியான கட்டுரை.

News

Read Previous

காய்கறி வைத்தியமுறை

Read Next

மதுரையில் கே. சந்திரமோகன் பிடிஓ இல்லத் திருமண விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *