நவம்பர் 18, 2014 – அய்யா வ.உ.சி.யின் 78வது நினைவு தின சிறப்புக் கட்டுரை

Vinkmag ad

 

Subashini_Tremmel_voc_memorial_otapidaram_2014

நவம்பர் 18, 2014 – அய்யா வ.உ.சி.யின் 78வது நினைவு தின சிறப்புக் கட்டுரை:

 

இன்று நாம் நமது அருங்காட்சியகப் பயணத்தில் மேலும் ஒரு புதிய இடத்திற்குச் செல்கின்றோம். நான் வசிக்கும் ஜெர்மனியின் லியோன்பெர்க் நகரிலிருந்து தமிழகத்திற்கு 7545 கிமீ தூரம் விமானம் மூலம் செல்கின்றோம். எதற்கு விமானத்தில் பறக்க வேண்டும்? தமிழகத்தில் தானே இருக்கின்றேன் என்று குறிப்பிடுவோருக்கு…, ஏதாவது ஒரு வகையில் பேருந்தோ, ரயிலோ எடுத்து தென் தமிழகம் வந்து விடுங்கள். அடுத்து உங்களை நான் அழைத்துச் செல்லவிருப்பது தென் தமிழகத்தில் திருநெல்வேலி நகருக்கு அருகே இருக்கும் நகரங்களில் ஒன்றான ஒட்டப்பிடாரம்!

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம் என ஒரு நகரின் பெயரை 2009ம் ஆண்டு வரை நான் கேள்விப்பட்டதில்லை. வ.உ.சி எனும் பெயரும் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோரில் குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர் என்பதும் மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த நான் அதுவரை அறிந்த செய்திகள். அதற்கு மேல் இவரைப் பற்றி அவ்வப்போது வரும் சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்ததில் செக்கெழுத்த செம்மல் என்பதும் ஆங்கிலேய காலணித்துவ ஆதிக்கத்தில் கல்வி கற்ற சுதந்திர தாகம் மிக்க இளைஞராக இருந்ததோடு பலரையும் தனது ஆளுமையால் வசீகரித்து சுதந்திர சிந்தனை ஆழமாக தமிழர் மனதில் பதிய தொண்டாற்றியர் என்பதும் இவரைப் பற்றி நான் அறிந்திருந்த கூடுதல் செய்திகள்.

2009ம் ஆண்டின் இறுதியில் நான் தமிழகத்தில் தன்னார்வ தொண்டூழிய நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணி செய்வதற்காக 2 வார பயணம் ஒன்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரம் சென்று அங்கிருக்கும் எட்டயபுர ஜமீன் மாளிகையைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவினைத் தயாரிக்க வேண்டும் என்பது அப்பயணத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அப்பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது எனது நண்பர் திரு.மாலன் அவர்களை அணுகி  திட்டமிட ஆரம்பித்த வேளையில் எட்டயபுரம் செல்லும் முன் வழியில் ஒட்டப்பிடாரத்தைக் கடந்து சென்றால் அங்கிருக்கும் வ.உ.சி. நினைவு இல்ல அருங்காட்சியகமும் சென்று வரலாம். அது பயணத்திற்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டார். இது நல்ல யோசனையாக இருக்க நான் ஒட்டப்பிடாரத்திற்குச் செல்ல வேண்டும் என்று என் பயணக்குறிப்பில் இணைத்துக் கொண்டு தயாரிப்பு காரியங்களில் ஈடுபட்டேன். திருநெல்வேலியில் திரு.மாலனின் இளைய சகோதரர் திரு.ஜெயேந்திரனின் இல்லத்தில் தங்கி அங்கிருந்து அவர் என்னுடன் துணைக்கு அனுப்பிய மூன்று ஆசிரியர்களையும் அழைத்துக் கொண்டு ஒட்டப்பிடாரம் பயணித்தேன்.

ஒட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள இந்த நினைவு இல்லம் ஓர் அருங்காட்சியகம் மட்டுமன்று;  ஒரு நூலகமாகவும் இது இயங்குகின்றது என்பது தனிச்சிறப்பு. உள்ளூர் மக்கள் வந்து  பயன்படுத்தும் நிலையில் இந்த நூலகம் சிறப்புடன் இயங்கி வருவது பாராட்டுதலுக்குறிய விஷயம்.

வ.உ.சி. நினைவு இல்லம் (2009)
 

ஒரு வீடாக இருந்த இந்தக் கட்டிடத்தை  அருங்காட்சியகமாகப் புதிதாக நிர்மாணிக்க திட்டம் எழ,  7.8.1957 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு.கு.காமராஜ் அவர்களால் இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கட்டிடம் முழுமையடைந்த பின்னர்  12.12.1961ல்  அன்றைய முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டது.  வ.உ.சி அவர்கள் பெயரிலேயே ரூ 80 லட்சம் செல்வில் 2005ம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு மணிமண்டபம் ஒன்றும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா  அவர்களால்  திறந்து வைக்கப்பட்டது என்பதும் இவ்வேளையில் குறிப்பிடப்பட  வேண்டிய ஒரு செய்தி.

இந்த நினைவு இல்லத்தில் உள்ளே நுழைந்ததுமே நம்மை வரவேற்பது ஒரு இரும்புத் தகட்டில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் வ.உ.சி அவர்களின்  சிறு வாழ்க்கை குறிப்பு செய்திகள். அதில் உள்ள குறிப்பினைத் தருகின்றேன்.

  • 1872 செப்டம்பர் 5  வியாழன்.  பிறப்பிடம்: ஒட்டப்பிடாரம்
  • 1895 திருமணம்
  • 1900 தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணி ஏற்பு
  • 1908 ‘சுதேசிக் கம்பெனி’  எனும் பெயரில் கப்பல் கம்பெனி நிறுவுதல்
  • 1907 சூரத் காங்கிரசில் புரட்சி
  • 1908 மார்ச் 12 வ. உ.சி. கைது
  • 1908 மார்ச் 13, நெல்லை தூத்துக்குடியில் கலகம்
  • 1908 ஜூலை 7. வ. உ. சிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை

இவை வாசலில் இருந்த சிறு குறிப்பு மட்டுமே. உள்ளே நுழைந்ததும் நமக்கு வ.உ.சி .அவர்களின் வாழ்க்கை குறிப்புக்களை அறிமுகம் செய்யும் தகவல்கள் பல படங்களுடன் விளக்கப்பட்டிருப்பதையும் காண முடியும்.

சமூக பணிகளுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் வ.உ.சி எனச் சொன்னால் அது சிறிதும் மிகையில்லை. உணர்ச்சிப்பூர்வமான நிலையைக் கடந்து அறிவுப்பூர்வமான வகையில் செயல்பட்டு தமிழ் மக்களிடையே சுதந்திர சிந்தனையை வளர்த்தவர் இவர்.

காலணித்துவ ஆட்சியில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேய  ஆட்சியை எதிர்த்தவர்கள் கையாண்ட யுக்திகள் பலவிதம். இதில் வ. உ.சிதம்பரனாரின் உத்திகள் தனித்துவம் வாய்ந்தவை.  பொருளாதார அடிப்படையில் மக்கள் சுயமாக முன்னேறவும் ஆங்கிலேயர்களை அண்டி இல்லாமல் சுயமரியாதையுடன் பொருளாதாரத் தேடலில் இயங்கவும் புரட்சிகரமாகத் திட்டமிட்டு செயல்பட்டவர் இவர். வணிக குடும்பத்தில் பிறந்து வக்கீலாக கல்வித் தகுதி பெற்றதோடு நின்று விடாமல் வணிகத்திலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தமிழர்களின் சரித்திரத்தில் கடந்த நூற்றாண்டில் வணிகத்திற்காகக் கப்பல் விட்டு சரித்திரம் படைத்தவர் இவர். இந்தச் செயல் இவருக்கு கப்பலோட்டிய தமிழன் என்னும் மங்காப் புகழை இன்றும் நினைவு கூறும் வகையில் அமைத்துத் தந்தது. பெறும் செல்வந்தராக இருந்த போதிலும் மக்கள் நலனுக்காவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் மக்களோடு இணைந்து போராடி அவர்களுக்குச் சிந்தனை எழுச்சி ஊட்டியவர் இவர்.

அப்போதிருந்த ஆங்கிலேய அரசு இவர் மேல் குற்றம் சுமத்தி இவரைச் சிறைக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாது அவரது குடும்பச் சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. செல்வந்தரான வ.உ.சி அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. நாட்டுக்காக தன் வாழ் நாளையே உழைத்து அர்ப்பணித்த இந்த மகான்  தன் இறுதி நாட்களில் மிகுந்த பொருளாதார நிலையில் நலிவுற்று சிரமத்தில் இருந்தார் என்பதை எழுதும் போதே என் மனம் கலங்குகின்றது.

உலகின் வெவ்வேறு சில நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களைப் பார்த்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்பொருட்களின் தரங்களையும் பார்த்த அனுபவம் உள்ள எனக்கு இந்த அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருட்கள் ஒரு ஆரம்பப்பள்ளியில் இருக்கக்கூடிய தகவல் சுவரொட்டி போல இவை காட்சியளிப்பதைப் பார்த்த போது உண்மையில் மன வருத்தமே தோன்றியது. கண்காட்சி மேளாண்மை-பராமரிப்பு என்பது ஒரு தனிக் கலையாக உருவாகிவிட்ட காலம் இது.  புதிய தொழிற்நுட்பங்களின் துணை கொண்டு தரம் வாய்ந்த காசிப்பொருட்களை அமைக்கக்கூடிய வாய்ப்பு தற்கால நிலையில் ஒரு எட்டாக் கனியல்ல.  ஆனால் அதற்கான சிந்தனையும் முயற்சியும் இருக்கின்றதா என்பதே கேள்வி.  இங்கு பார்த்தபோது காட்சிப்பொருட்களின் தரம் என் எதிர்ப்பார்ப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஒரு வகையில் இந்தச் சுதந்திரப் போராட்ட தியாகியின் பிறந்த இல்லத்தை நிர்வகித்து அவரது ஞாபகம் மக்கள் மத்தியில் மறையாமல் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி கூற நினைக்கும் என் மனம் அதே வேளையில் இன்னமும் தகுந்த தரத்துடன் இக்காட்சிப் பொருட்களைத் தயார்படுத்தி வைத்தால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

வ.உ.சி அவர்கள் தமிழக சரித்திரத்திலும் தமிழர் தம் வாழ்விலும் மறக்க முடியா அங்கம் வகிப்போரில் ஒருவர்.  அம்மனிதரின் நினைவாக இன்று காட்சியளிக்கும் இந்த நினைவு இல்லத்தில் உள்ள அறிக்கைகளைத் தரமான காகிதங்கள் கொண்டு தயாரித்து அதற்கு ப்ரேம் போட்டு பாதுகாத்து வைக்கலாம்.  அவரது நூல்களின் படிவங்களை ஒரு கண்ணாடி அலமாரியில் காட்சிக்கு வைக்கலாம். அவரது கையெழுத்தில் அமைந்த ஆவணங்களைப் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கலாம்.  அவரது உருவப்படங்களைக் கொண்டு உருவாக்கிய ஒரு டாக்குமெண்டரி திரைப்படத்தை வருவோர் காணும் வகையில் ஒரு தொலைக்காட்சியைப் பொருத்தி அதில் ஒலிபரப்பலாம். அவரது சேவையைப் பாராட்டிப் பேசியோரின் பேச்சுக்களின் ஒலிப்பதிவுகளை அங்கே வருவோர் கேட்டு பயன்பெற ஏற்பாடு செய்யலாம்.  இவற்றை செய்வதற்கு மிக அதிகமான பொருளாதாரம் தேவை என்பதில்லை. மனித முயற்சி இருந்தால் தற்கால கணினி, அச்சு தொழிற்நுட்பம் வழங்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இவற்றை எல்லாம் சாதிக்கலாம்.  வருங்காலத்தில் இவ்வகையில் இந்த அருங்காட்சியகம் புதுப் பொலிவு பெற்றால் நான் மிக அகம் மகிழ்வேன்.

உலகில் நிகழ்ந்த,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவதே தனி மனித முயற்சிகள் தாம்.  தனி மனிதரின் ஆன்ம பலமும்,  ஆய்வுத் திறமும் சிந்தனையும் முயற்சியுமே உலகில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.  அத்தகைய்ச் பண்புடன் கூடியவர்களில் ஒருவராகத்தான் நான் வ.உ.சி அவர்களை நான் காண்கின்றேன்.

அருங்காட்சியகத்தில் நான் பார்த்து எடுத்துக் கொண்ட குறிப்புக்கள் வழி அவரது குடும்பத்தினர் பற்றிய சில தகவல்களை நான் அறிந்து கொண்டேன்.  வ.உ.சி அவர்களின் முதல் மனைவியார் வள்ளியம்மை.  வள்ளியம்மை பிறகு இறந்து விட இவருக்கு இரண்டாம் திருமணமும் நிகழ்ந்தது.

வள்ளியம்மையுடனும் பிறகு அவரது மறைவுக்குப் பிறகு திருமணம் முடித்த இரண்டாம் மனைவியுடன்  இருப்பது போன்ற மூன்று படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.  இவை அக்கால சூழலில் செல்வந்தர்கள் வீட்டு ஆண் பெண்களின் ஆடை அலங்காரத் தன்மையை வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்கள்.  வணிக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வக்கீலாகத் தொழில் புரிந்த சிதம்பரனாரின் மேன்மை பண்புகளை வெளிக்காட்டும் மிடுக்கான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதை இப்படங்களில் காண முடிகின்றது.

சிதம்பரனார் நினைவு மண்டப அருங்காட்சியகத்தில் அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது.  அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்கமுடியவில்லை.  இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன்  ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.

வ.உ.சி.  ஆங்கில ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் சிந்தனையில் புத்துணர்ச்சியை ஊட்டியவர் என்பது மட்டும் அவரது பண்பு நலனுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாக அமைந்து விடவில்லை. அவரது தத்துவ ஞான விசாரணை,  தமிழ்க்கல்வி,  ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கத்திற்கு தமிழ் நூற்களைப் புதிய வடிவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆகியவை அவரைப் பற்றிய நம் சிந்தனையை மென்மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதாக அமைகின்றது.  வ.உ.சி அவர்கள் தமிழுக்கு நல்கிய தம் இலக்கியப் பங்களிப்பையும் இனி காண்போம்.

அவர் எழுதி வெளி வந்த நூல்கள்:

  • மெய்யறிவு
  • மெய்யறம்
  • எனது பாடல் திரட்டு
  • வ. உ.வி.கண்ட பாரதி
  • சுயசரிதை

இவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் பட்டியல்:

  • மனம் போல வாழ்வு
  • அகமே புறம்
  • வலிமைக்கு மார்க்கம்
  • சாந்திக்கு மார்க்கம்

இவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்களின் பட்டியல்:

  • சிவ ஞான போதம்
  • இன்னிலை
  • திருக்குறள்

வ.உ.சி எழுதிய நூல்களில் இதுவரை வெளிவராத நூல்கள் பற்றியும் சில தகவல்கள் இதோ.

1. சிவ மதம்

2. விஷ்ணு மதம்

3. புத்த மதம்

4. ஊழை வெல்ல உபாயம்

5. இஸ்லாம் மதம்

6. கிருஸ்து மதம்

7. மனித மதம்

8. முத்தி நெறி

9. The Universal Scripture

10. திருக்குறள்

11. திலக் மகரிஷி

உயர் குலச்சமூகத்தினருக்கும் வசதி வாய்ப்புக்கள் நிறைந்தோருக்கும் மட்டுமே  கிடைத்த கல்வி ஞானத்தை அச்சுப்பதிப்பாக்க முயற்சிகள் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தி கல்வியும் ஞான நூல்களும் இலக்கியங்களும் எல்லோருக்கும் கிடைக்கும் வகை செய்தன.  அந்த வகையில் 18, 19, 20ம் நூற்றாண்டுகளில் பல சேவையாளர்களின் முயற்சியில் அறிய பல தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்தன.  வ.உ.சி அவர்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டவர் என்பது பலரும் அறியாத ஒன்று. அவரது முயற்சியில் பனை ஓலை சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியல்:

  • தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை)
  • தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை)
  • சிவஞான போதம்

சைவ சித்தாந்த சாஸ்திரங்களின் தலையாயதும் குருபரம்பரையினர் போற்றிப் புகழ்ந்த மெய்கண்டாரின் சிவஞான போத நூலை முதன் முதலில் பனை ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவத்திற்குக் கொண்டு வந்தவர் நம் சிதம்பரனார் என்பதை அறியும் போது அவரைப் போற்றாமல் இருக்க முடியுமா?   இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். அவற்றின் பட்டியல்:

  • விவேக பாநு
  • தமிழ் நேஷனல்
  • பத்திரிகை
  • இந்து நேசன்

சைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார் வ.உ.சி அவர்கள்.  தான் அச்சு வடிவத்தில் வெளியிட்ட சிவஞானபோத நூலுக்கு உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ  சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார்.   1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார்.  பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.  இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு ‘எனது அரசியல் பெருஞ்செயல்’  என்ற தலைப்பில்  அச்சு வடிவம் கண்டுள்ளது.  இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகின்றது.

இந்த விவரங்கள் எல்லாம் இக்கால இளம் தலைமுறையினர் அறிந்து உணர்ந்து போற்ற வேண்டிய விஷயங்கள் அல்லவா? இவையெல்லாம் தமிழ் நாட்டு கல்விப்பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றனவா?  வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் செக்கெழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்ற மேல் நோக்கானப் புகழ்ச்சியோடு மட்டுமே என நின்று விடாமல் இம்மாமனிதரின் பரந்த சிந்தனை,  உயர்வான வாழ்வியல் நெறி முறைகள்,  தன்னலமற்ற சேவை, ஞானப் பரப்பு,  அறிவின் ஆழம் ஆகியவை பாடத்திட்டத்தில் கூறப்படுகின்றனவா என்று கேட்டு அவை இல்லையென்று அறிந்து சோர்ந்து ஏமாற்றம் அடைகின்றேன்.   இவர் எழுதி அவர் காலத்திலேயே வெளியிடப்படாத நூல்கள் எப்போது அச்சு வடிவம் பெறும்? என நினைக்கும் போதே அதனைத் தேடி அவற்றை பதிப்பிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  தமிழகத்தில் உள்ளோர் இப்பதிவினை வாசிக்க நேர்ந்தால் நான் குறிப்பிட்டுள்ள நூல்கள் கிடைக்கும் இடத்தை எனக்கு அறியத்தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

News

Read Previous

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.

Read Next

கல்லில் ஓர் கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *