நவம்பர் புரட்சியும் அறிவியல் உலகமும்

Vinkmag ad

அறிவியல் கதிர்

நவம்பர் புரட்சியும் அறிவியல் உலகமும்
பேராசிரியர் கே. ராஜு

அறிவியல் உலகத்தை நவம்பர் புரட்சி இரண்டு முக்கியமான விஷயங்களில் மாற்றியமைத்தது. முதலாவதாக, அறிவியல், தொழில்நுட்பம் இரண்டையும் திட்டமிட முடியும் என்பது. இரண்டாவதாக, அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் ஆகியவற்றை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி அம்மூன்றையும் பற்றி ஆய்வு நடத்த புதிய எஸ்டிஎஸ் (ளுகூளு) என்ற துறையையே உருவாக்கியது.
சோவியத் யூனியன் அறிவியல் வளர்ச்சியில் மேலை நாடுகளுடன் போட்டியிட முடியவில்லை என்பவர்கள் உலகின் முதல் சோசலிச நாடு பிறகும்போது எவ்வளவு பின்தங்கிய நிலையில் இருந்தது என்பதையோ நாட்டின் பெரும்பகுதி கிராமப்புறப் பகுதியாகத்தான் இருந்தது என்பதையோ மறந்துவிடுகின்றனர். புரட்சி வெற்றியடைந்ததுமே சோசலிசத்தின் வெற்றியை சகிக்க முடியாத மேற்கத்திய காலனியாதிக்க நாடுகளின் கடுமையான தாக்குதல்களை அந்த இளம் குடியரசு சந்திக்க வேண்டியிருந்தது. முதல் உலகப் போர் ஏற்படுத்தியிருந்த நாசத்திலிருந்து மீள வேண்டியிருந்தது. மேலை நாடுகளின் பொருளாதாரத் தடையினால் ஏற்பட்ட பாதிப்புகள் வேறு. இத்தனை தடைகளையும் தாண்டிய பிறகே சோவியத் அரசு நாட்டின் தொழில்வளர்ச்சியில் தன் கவனத்தைத் திருப்ப முடிந்தது. தன்னுடைய தொழில்துறையையும் ராணுவ பலத்தையும் வளர்த்துக் கொள்ளாவிடில் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்துப் போரிடவும் பொருளாதாரரீதியாகத் தாக்குப் பிடிக்கவும் முடியாது என்ற நிலைமையை சோவியத் அரசு நன்கு புரிந்து கொண்டது.
1917ஆம் ஆண்டில் சோவியத் நாடு எவ்வளவு பின்தங்கியிருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 80 சத ரஷியர்கள் படிப்பறிவு இல்லாமலிருந்தனர். 1,12,000 மாணவர்களைக் கொண்ட 90 உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 1941-க்குள் மாணவர் எண்ணிக்கை 6,67,000 ஆக உயர்ந்தது. உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்தது. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்தது மட்டுமல்ல, கனரகத் தொழில்களையும் பொருள் உற்பத்தியையும் மேம்படுத்த வேண்டும் என்ற சோவியத் யூனியனின் இலக்கிற்கு அவை வலு சேர்க்கவும் செய்தன. அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்கு சோவியத் அரசு தன் சக்திக்கு மீறிய அளவில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்தது. நாட்டின் திட்டமிட்ட வளர்ச்சி வளையத்திற்குள் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் திட்டமிடல் இருக்குமாறு பார்த்துக் கொண்டது. தொழில்துறைக்கும் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஒரு உயிரோட்டமான பிணைப்பை ஏற்படுத்தியதன் காரணமாக இரண்டுமே வேகமாக வளர்ந்தன. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல முடிந்ததற்கும் விமானப் போக்குவரத்துத் தொழிலை கட்டமைக்க முடிந்ததற்கும் மேற்கூறிய பிணைப்பே காரணம்.
சோவியத் யூனியனின் வேகமான தொழில்துறை வளர்ச்சியின் காரணமாகவே இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியின் தலைமையில் தாக்குதல் நடத்திய அச்சு நாடுகளை போரில் தோற்கடிக்க முடிந்தது. இரண்டு கோடி பேர்களுக்கு மேல் தங்கள் உயிரைக் கொடுத்து சோவியத் மக்கள் பாசிசத்தின் பிடியிலிருந்து உலகைக் காப்பாற்றினர். மேற்கத்திய எழுத்தாளர்களும் ஊடகங்களும் இந்த மகத்தான வரலாற்றை திரைபோட்டு மறைத்துவிட்டனர் என்பது வரலாற்றின் மற்றொரு பக்கம். போர்த் தொழிலில் மிகவும் முன்னேறியிருந்த ஜெர்மனியை தங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டே சோவியத் யூனியனால் தோற்கடிக்க முடிந்ததற்குக் காரணம் சோவியத் மக்கள் காட்டிய மன உறுதிதான். நவம்பர் புரட்சிக்கு முன்பு மின்சார பல்புகளைக் கூட தயாரிக்க முடியாதிருந்த ஒரு நாட்டினால் இவை எல்லாவற்றையும் எப்படி சாதிக்க முடிந்தது? தொழில்களை வளர்க்க சோவியத் யூனியன் கணிசமாக நிதி ஒதுக்கீடு செய்ததனால் மட்டும் இது சாத்தியமாகிவிடவில்லை. தங்கள் குடிமக்கள் மீதும் நம்பிக்கை வைத்து இளம் தலைமுறையை தயார் செய்ததால்தான் இது சாத்தியமானது. இளைய தலைமுறையினரை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவாக்க சோவியத் யூனியன் முன்னுரிமை கொடுத்தது. இந்த இளைஞர்களுக்கு நாட்டின் தொழில்மயமாக்கலில் ஆழமான பிணைப்பு இருந்தது. தொழில்மயமாக்கல் என்பது எந்த அளவுக்கு ஆலைகளையும் கருவிகளையும் பொருத்ததோ, அதே அளவுக்கு மக்களையும் அவர்களது அறிவாற்றலையும் பொருத்தது என்பதை சோவியத் யூனியன் உணர்ந்திருந்தது.                                            

News

Read Previous

பூமியே மனிதனின் வாழ்விடம்

Read Next

சென்னையில் நூலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *