நல்லது

Vinkmag ad

“நல்லது”

என் நண்பர் ஒருவர் பேசும்போது , அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை இது..!
ஆனாலும் வெகுநாள் இதன் மதிப்பை நான் உணர்ந்ததில்லை …
தற்செயலாகத்தான் …. அதுவும் ஒரு தொலைபேசி உரையாடலின்போது , இதை நான் கவனித்தேன்…!

நண்பர்களாக இருந்தாலும் இருவருமே “ஸார்” போட்டுத்தான் பேசிக் கொள்வோம்…
நண்பர் திருநெல்வேலியில் இருந்தார்…
இருவருக்கும் இடையிலான தொழில் விஷயமாக , நான் மட்டும் சென்னைக்கு வந்திருந்தேன்…

வந்த அடுத்த நாளில்….நண்பருக்கும் , எனக்கும் சாதாரணமாக ஆரம்பித்த தொலைபேசி உரையாடல்…என்னை அறியாமலே சூடு பிடித்தது…

மொபைலுக்கும் சூடு ஏறி இருந்தது, வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததால்…!
மொபைலை காது மாற்றி வைத்துக் கொண்டு நான் கேட்டேன்… “அப்துல் ஸார்…ஊரிலிருந்து புறப்படும்போதே நான் உங்களிடம் என்ன சொன்னேன்.?..”
“நல்லது ஜான் ஸார்..சொல்லுங்க..”
“ குறிப்பிட்ட தொகையை உடனே அக்கவுண்ட்டில் போடச் சொன்னேன்…ஆனா சொன்னதை விட குறைவாகத்தான் நீங்க பணம் போட்டிருக்கீங்க..”
“நல்லது…! இன்ஷாஅல்லாஹ் , நாளை போட்டுடறேன்..”
“ நாளையா..? இங்கே பேமெண்ட் வாங்க அந்த நண்பர் என்னைத் தேடி நேரிலேயே வந்திருக்கார்…”
“நல்லது ..அவரிடம் சொல்லிடுங்க..”
“ஸ்பீக்கர் போனில் போடறேன்..நீங்களே சொல்லுங்க..”
“நல்லது …சொல்றேன்..”

ஸ்பீக்கர் ஆன் செய்யப்பட்டது…
பணம் வாங்க வந்திருந்த அந்த நண்பரிடமும் இதே “நல்லது” தொடர்ந்தது…

பேசி முடித்து விட்டு அந்த நண்பர் மொபைலை என்னிடம் தந்து விட்டு விடை பெற்றார் ..
“சரி சார்…நாளைக்கே நான் வந்து பணம் வாங்கிக்கறேன்…ஒரு விஷயம் கேக்கலாமா..?”
“தாராளமா கேளுங்க..”
“இப்ப என்னிடம் பேசிய உங்க பிரண்ட்…அந்த அப்துல் பாய் பெரிய பணக்காரர்னு தெரியும்…”
நான் ஆமோதித்தேன்.. “மிகப் பெரிய கோடீஸ்வரர் .. எதுக்காக கேக்கறீங்க..?”
“ இல்லீங்க….அவர் பேச்சில் எவ்வளவு பணிவு இருக்கு , பாத்தீங்களா..?
வார்த்தைக்கு வார்த்தை ..நல்லது நல்லது நல்லது னு சொல்லி பேசறாரே …அந்தப் பணிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..”

அட….உண்மைதான்…!
நான்தான் இதுவரை அந்த “நல்லதை” கவனிக்காமலே இருந்திருக்கிறேன்…

வந்த அந்த நபர் புறப்பட்டார்…”சரி சார் ..நாளைக்கே நான் வந்து பணம் வாங்கிக்கறேன் ..”

என் வாயிலிருந்து என்னை அறியாமலே அந்த வார்த்தை வந்தது… “நல்லது..!”

# அன்றிலிருந்து என்னுடைய உரையாடல்களில் இந்த “நல்லது” நிரந்தர இடம் பிடித்து விட்டது….
என் மூலமாக , என் நண்பர்கள் பலருக்கும் இந்த “நல்லது” போட்டுப் பேசும் நல்ல பழக்கம் தொற்றிக் கொண்டது…!

# இந்த “நல்லது” போடும் பழக்கம் விக்ரமுக்கும் கூட உண்டு என்பதை , பாலகுமாரன் எழுத்தைப் படித்துத்தான் அறிந்து கொண்டேன்…
இதோ… “பாலகுமாரன் பேசுகிறார்”

“நான் அறிய விக்ரம் அறிவுரை சொல்வதேயில்லை. அதே சமயம் பிறருக்கு நல்ல வாழ்க்கை அமைவதிலும் அக்கறை இருக்கிறது.
டைரக்டர் ஷங்கருக்கு திருமணம் என்று நான் சொன்னதும் அப்படியா என்று மிகவும் சந்தோஷப்பட்டார்… “யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். சினிமாவிலிருக்கும் பெண்ணா..?”
“ இல்லை மணமகள் சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவர். டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்..”
“நல்லது.” – சட்டென்று கைகூப்பினார் விக்ரம் …!”

# விக்ரம் எதற்காக இந்த “நல்லதை” சொன்னாரோ…எனக்குத் தெரியாது…!
ஆனால் இதைப் படித்தபோது , வள்ளுவனின் வாக்கு ஒன்று தன்னாலே நினைவுக்கு வந்தது…

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று”

# நல்லது !

News

Read Previous

உலக பாரம்பரிய தின கவிதை

Read Next

நீ நீயாகவே இரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *