நயம்படு சொல்லறிவார் !

Vinkmag ad
நயம்படு சொல்லறிவார் !
— முனைவர்.ந.அருள்
பேராசிரியர் இரா.பி.சேதுபிள்ளையும், இரசிகமாமணி டி.கே.சி.யும் தோற்றுவித்த வரிசையில் இடம்பெற்றவர் தான் கம்பர் கவிநயச்செல்வர் நல்லபெருமாள்.   நூற்றாண்டைத் தாண்டி நம் நினைவில் வாழும் பொறியாளர். நயம்படு சொல்லறிந்து தம் இல்லத்திலேயே கம்பர் இலக்கிய முற்றம் நடத்திய ரசிப்புத் திலகமாகத் திகழ்ந்தார்.
தென்குமரி மாவட்டம், தோவாளை வட்டம், தலைநகர் பூதபாண்டிக்கு அருகிலுள்ள சிறமடம் என்ற சிற்றூரில் நல்லபெருமாள் 1919-ஆம் ஆண்டு திசம்பர் 11-ஆம் நாளில் பிறந்தார்.
சிறமடம் ஊருக்கு ஒரு புராணக் கதையொன்றுண்டு.  திருமுருகன் ஓம் என்ற பிரணவ நாதத்தின் பொருளைத் தேவர்கள் அனைவரிடமும் கேட்டார்.  குறிப்பாகப்  பிரம தேவனிடம் கேட்க அவர் பொருள் தெரியாது விழிக்க, அவர் தலையிலேயே குட்டி அவரைச்  சிறைப் பிடித்தார்.  அவர் சிறை வைக்கப்பட்ட இடம்தான் சிறைமடம் என்ற ஊராம். தற்போது சிறமடம் என்றாயிற்று .
நல்லபெருமாள்  தன் தொடக்கப் பள்ளிப் படிப்பை பூதப்பாண்டியிலேயே முடித்தார்.  தந்தையார் திரு.சோமசுந்தரம்  அன்றைய திருவிதாங்கூர் ஆட்சியில் – இன்றைய கேரளத்தின் ஒரு பகுதி திருவனந்தபுரத்திலேயே அவர் பணியாற்றினார்.   உயர்பள்ளிப் படிப்பைத் திருவனந்தபுரத்தில் நல்லபெருமாள் தொடர்ந்தார்.  பின்னர் கல்லூரிப் படிப்பை அங்கேயே தொடர்ந்தார்.
அவர் காலத்தில் பொறியியல் கல்லூரி சென்னையிலிருந்ததால், தனது இளங்கலை பட்டப் படிப்பைத் திருவனந்தபுரத்தில் நிறைவு செய்தார்.  அடுத்த ஆண்டிலேயே பொறியியல் கல்லூரி  திருவனந்தபுரத்தில் அமைந்ததும் வேதியியல் படிப்பில் சேர்ந்து படித்தார். நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேறினார்.  தங்கப்பதக்கத்தை விருதாகப் பெற்றார்.
கேரள மாநிலத்தில் மிகப்பெரிய ஆறான பெரியாற்றின் கரையில் உத்தியோக மண்டல் எனும் இடத்திலுள்ள அலுமினியத் தொழில் நிறுவனத்தில் ஏறத்தாழ பதினேழு ஆண்டுகள் அத்தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.
தொழில் வளர்ச்சி தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் பலமுறை சென்று திரும்பியவர். இவரது ஆசியுடன் பலர் மிகப்பெரிய தொழிற்சாலைகளைத் தொடங்கித் தமிழகத்திலும் முன்னேற்றம் அடைந்தனர்.
கேரளத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்து தமக்கு நிறைவாகத் துணைவியார் லீலாவதி ஒரே திருமகளான சுந்தரி, மருகர் பெருமாளுடன் தமிழகத்தில் நிலையாக வந்து தாங்கினார்.  அந்த முப்பதாண்டுகளில் தமிழகத்துக்குத் தொழில் வள ஆலோசகராகவும் தாமே தொடங்கிய தனித் தொழிலதிபராகவும் அரும்பணியாற்றினார். பொறியியல் – வேதியியல் புதுமையாளராக அவர் மேன்மை அடைந்தார்.  இளமையிலேயே தேங்கியிருந்த கவிதை உணர்வால் எவரிடமும் எளிதாகப் பழகினார்.  தமிழும் மலையாளமும் அவர் பேச்சில் திராட்சையும் முந்திரியுமாக மிதந்தன .
விருந்தோம்புவதில் புகழ்படைத்த அவர் தம் இல்லத்தில் ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்குச்  சமைத்திருந்த அவியலைப் பலமுறை நான் சுவைத்து உண்டபோது “இனியொரு ஜென்மம் கூடிவேணம் கேரளத்து அவியலை உண்ணான்”  என்று சொன்னார் .
தமிழ்நாட்டிற்குக் குடும்பத்தோடு வந்து  தங்க ஆரம்பித்ததும் தமிழ் உணர்வில் திளைத்தார். கம்பர் காவியத்தில் தம்மை இரண்டறக் கலந்தார். வாயைத் திறந்தால் கம்பர் என வாயூறி மகிழ்ந்தார். தமிழ் இலக்கியத்தில், கம்ப ராமாயணத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு.  கம்பராமாயணத்தின் எல்லாக் காண்டங்களையும் நன்கு ஆய்வு செய்து, பல நூல்களை ஒப்பீட்டு முறையில் எழுதியுள்ளார்.   குறிப்பாக, அயோத்தியா காண்டம், பால காண்டம், கிட்கிந்தா காண்டாம், சுந்தர காண்டம் ஆகிய காண்டங்களின் பல பாடல்களையும், ஆங்கில இலக்கியங்களோடு ஒப்பிட்ட கலை – கவினார்ந்த நூல்களாக அவை அமைந்தன .
சென்னையில் கம்பர் ஆர்வலர்களை ஒன்று சேர்த்துத் திங்களுக்கு இருமுறை தம் இல்லத்து முற்றத்தில் அறுசுவை விருந்தளித்து மகிழ்வார்.  அவருக்குப் பெரிய நண்பராக விளங்கிய வில்லிசை வேந்தர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் தம் குழுவினருடன் இராம காதையைப் பத்து நாள்கள் வில்லிசையில் விரிவுரையாக நிகழ்த்தினார். நாங்கள் எங்கள் குடும்பத்தோடு சென்று கேட்டிருக்கிறோம் .
இளங்கவிஞர்களையெல்லாம் ஆர்வத்தோடு அழைத்து கவிதைகளை படித்துக் காட்டச் சொல்வார்.  ஒவ்வொரு தொடருக்கும் நயங்கண்டு விளக்குவார். பாரதி திலகம் சுராஜ், பீஷ்மர் என்ற புனைபெயர் கொண்ட கவிஞர் நா.சீ.வரதராசன் அவ்வப்போது சொல்லும் இலக்கியத் திறனாய்வுக் காட்சிகளைக் கேட்டுக்கேட்டு களிப்படைவார்.
நேற்றைய நிகழ்வுகளை இன்றும் நினைவுகூர்ந்து நாளைக்கு வழிகாட்டுவது எதுவோ அது தான் இலக்கியம்.  உணர்ச்சிகளின் உண்மைத் தன்மையை அப்படியே உள்வாங்கித் திளைப்பவர்கள் மட்டுமே தான் இலக்கியத்தில்  மூழ்க முடியும்.  மொழியறிவு போதுமான அளவு இருந்தாலும் கூடப் போதும். ஆனால் ரசனை உணர்வு நிரம்பி வழியுமானால் இலக்கியப் படைப்பாளியின் ஆழத்திலுள்ள அற்புதங்களையெல்லாம் நாம் அகழ்ந்தெடுத்து ரசிக்க முடியும் .
இரசிகமணி என்றே நாடு புகழ்ந்த டி.கே.சி.யின் “வட்டத் தொட்டியின்” பெருமை பொறியாளர் நல்லபெருமாள் அவர்களின் இலக்கிய சுவையுணர்வுக்கு முன்னோடியாய் நின்றது. தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் உணர்வதற்கும் மொழி முதன்மை பெறுகிறது என்றாலும் வாழ்க்கையைச் சீராகக் கொண்டு செல்லப் பல துறைகளில் பலர் சேர்ந்து பங்குகொள்ள வேண்டியுள்ளது.
வாழ்வின் அடி நாதமாய் விளங்கும் இரசனை உணர்வு நம்முள் ஓங்கி நிற்குமேயென்றால் பணிபுரியும் துறை எதுவாயிருப்பினும் சரி, அமிழத் தெரிந்த மனத்தோடு படைப்பின் அடித்தளத்திற்குச் சென்று உருகி மெய்ம்மறந்து தனக்குக் கிடைத்த அனுபவத்தை மற்றவர்களோடு தனக்கே உரிய தனித்தன்மையோடு பகிர்வது தான் சுவைத்தேர்ச்சியின் உச்சமாகும். இலக்கியம் படைத்தவனோடு ஒன்றாய் நம்மையும்
அழைத்துச்செல்லும் இந்தப் பயணம் இலக்கிய வெற்றிக்கும் எடுத்துரைப்போர் திறமைக்கும் உள்ள சிறப்பாகும்.
ஷேக்ஸ்பியருடைய மூளை எனும் வேதியியல் கிண்ணத்திலிருந்த ரசவாதச் செயல் முறையால், அவர் தன்னைச் சுற்றிலுமிருந்த மக்களிடையே கண்ட வாழ்க்கை இலக்குகளை எட்டும் கண்ணீர்க் கையறுநிலை, பொறாமை, பேராசை, வீரம் செறிந்த காதல், மகிழ்ச்சி, துயரம் ஆகிய உணர்வெழுச்சிகளை சாகாவரம் பெற்ற நாடகங்களாக வளம் கொழிக்கும் இலக்கியப் பொன்னேடுகளாக மாற்றமுறச் செய்தார்.   ஆகவே, மனித வாழ்நிலையில் அவருடைய நாடகங்களில் காண முடியாத உணர்வெழுச்சி, செயல்பாடு, சூழமைவு என்று எதுவுமே இல்லை.
கம்பர் காட்டும் காட்சிகளைத் தம் உள்ளுணர்வால் தெரிந்திருக்க வேண்டும் என்று ஒருமுறை பேசி அதிர்வைத் தந்தார்.  கவிதையால் பேரொளி பிறக்கும்.  இத்தாலியத் தலைநகரான பிளாரன்சு மாநகரில் இருள் சூழ்ந்து கிடக்கும் வேளையில் கவியரசர் தாந்தே தம் நூலை விரித்துக் காட்டுவதாகவும் . அவ்வேளையில் அந்நூலிலிருந்து செல்லும் ஒளி வெள்ளத்தால் நகர் புத்துயிர் பெறுகின்றது. இப்படி ஓர் ஓவியக் காட்சியைத் தாம் கண்டதாக அறிஞர் தனிநாயக அடிகள் எழுதியது நினைக்கத்தக்கது.
கவிதையின் மீது கம்பர் கொண்ட காதலுக்கு எல்லையில்லை. எந்த உயர்ந்த பொருளையும் கவிதை அமைப்பும் அழகும் கொண்டவையாகவே அவர் கண்டார்.  சீதையின் இயற்கையழகைப் பாராட்டிக் கூறும் அனுமன் சீதையின் நடையழகை அன்னநடையாகக் கூறவில்லை.  அது உண்மைக் கவிஞரின் கவிதை நடையழகாகும். இப்படிக் கற்பனை செய்ய முடியுமா என்று கண்ணை மூழ்கித் திளைக்கிறார் .
அறிஞர் நல்ல பெருமாள் நல்ல நகைச்சுவையாளர்.  ஒருவர் தன் தாயுடன் பல்லாண்டுகள் சென்னையில் வாழ்ந்து வந்தார் .அவருக்குத் திருமணமாகி ஒரு மகள் இருந்தாள். பிறகு தாயின் மறைவுக்குப் பிறகு தன் மனைவி வீட்டுக்குச் சென்றார். பாவம், வாழ்க்கையில் வெறுப்பு வந்து மனைவியிடம் சேர்ந்து விட்டார். இன்னும் ஆங்கிலச் சொற்களை மாற்றி மாற்றிச் சொல்லி நகைக்க வைப்பார். இவர் என்னுடைய அண்ணன் மகன் பிரதரின் சின் என்றார். இவ்வாறு நகைச்சுவையாகப் பேசுவதில் சமர்த்தர்.
சுந்தர காண்டத்தை நினைத்து என் மகளுக்கு சுந்தரி என்று பெயர் வைத்தேன் என்று கூறுவார்.  பேத்தி தேவி, பேரன் விநோதன். பேத்தியை அழைத்து கம்பராமாயணப் பாடலைக் கேட்பதில் பெருமகிழ்ச்சியடைவார்.  அனைவரிடமும் என் பேத்தியின் பாடலைக் கேளுங்கள் என்பார்.
உயிர்வளி உருளைத் தொழிற்கூடம் நடத்தி வந்தார்.  ஒருமுறை என்னைக் கேட்டார். இலக்கியத்தில் திளைப்பது, மூழ்குவது, அமிழ்வது, தோய்வது இந்த நிலையில் ஆங்கிலத்தில் கூறு என்றார்; diving, immersing, indepth enjoying, submerging என்று சொன்னேன்.
ஆழ்வார்கள் பாடல்களை மொழிபெயர்த்த அமெரிக்க அறிஞர் பெரும் பேராசிரியர் ஏ.கே.இராமானுஜன், The Drowning  என்று மொழிபெயர்த்திருந்ததால் அதைச் சொல்ல முடியாது போயிற்று. இப்படி இலக்கியத் திளைப்பில் வாழ்ந்து 5.2.2006 அன்று 87-ஆம் வயதில் மறைந்தார்.   நல்லபெருமாளின் குடும்பத்தினர் அமெரிக்காவில் அவர் நினைவைப் போற்றியபடி வாழ்கின்றனர்.
கம்பர் கவிநயச் செல்வரின் நூற்றாண்டு நிறைவில் அவர் வளர்த்த இலக்கியச்சுவைத் தேர்ச்சி செழிக்குமாக !
கட்டுரையாளர்:
முனைவர்.ந.அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை
நன்றி:
தினமணி – நடுப்பக்கக் கட்டுரை – பக்கம் எண் 6; 22.2.2021

News

Read Previous

போலி மனிதர்

Read Next

பிப்.27, முதுகுளத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *