நம்பிக்கைதான் நமக்கான வாழ்க்கை!

Vinkmag ad

மண வாழ்க்கை என்பது புயல் காற்று வீசும் கடலில் பயணம் செய்வது போன்றது. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப சமாளித்து கடலில் கப்பலை செலுத்தும் சிறந்த மாலுமி போல வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை சமாளித்து வெற்றி பெற வேண்டும்.
‘அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது’ என்பார்கள். கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி – மழை மிரட்டிப் பார்க்கும். இது போன்ற கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்… அவர் அனுபவம் மிக்க திறமையான மாலுமியாக உருவாகிவிடுவார். அதுபோலத்தான் திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

தொடக்க நிலையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை வெற்றிகரமாக தாண்டிவிட்டால் போதும் வசந்தம் வீசும் வாழ்க்கை உங்களை நோக்கி ஓடி வரும். அதற்கு சில புரிதல்கள் தேவை.

மன்னிக்கும் மனப்பக்குவம்

குடும்பம் என்பது கணவன் மனைவி இருவர் தொடர்புடையது மட்டுமல்ல இருவருடைய புகுந்த வீட்டு, பிறந்த வீட்டு சொந்தங்களும் அந்த குடும்பத்திற்குள் அடக்கம். எங்காவது ஒரு இடத்தில் சிறு நெருடல் ஏற்பட்டாலும் உட்கட்சி பூசல் போல கணவன் மனைவிக்கு இடையே விரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே தவறு யார் மீது என்று அலசி ஆராய்ந்து சண்டை போடுவதை விட்டு விட்டு மன்னிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கனியிருக்க காய் வேண்டாமே

ஒருவரை ஒரு புரிந்து கொள்வதற்கு ஓரளவிற்காவது பேசி புரிந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது. சண்டையே ஏற்பட்டாலும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.உடனே சமாதானக் கொடி உயர்த்த வேண்டும்

சமத்துவம் வேண்டும்

வீட்டு வேலைகளைச் செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மை கூடாது. எந்த நோக்கத்திற்காக வேலை செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் நீயா? நானா? போட்டி ஏற்பட வாய்ப்பே இல்லை.

கட்டுப்பாடான சுதந்திரம்

எதற்கும் ஓர் எல்லை உண்டு. யாரும் யார் மீதும் ஆதிக்க செலுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அங்குதான் விரிசலுக்கான விதை தோன்றுகிறது. அது வளர்ந்து விருட்சமாகி வளராமல் தடுப்பது அவரவர் கையில்தான் உள்ளது. அதே சமயம் கட்டுப்பாடான சுதந்திரமே குடும்பத்தை கட்டுகோப்பாக கொண்டு செல்ல உதவும்.

நகைக் சுவை உணர்வு

வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை

‘எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே உறவில் விரிசல் விழ வாய்ப்பே இல்லை

News

Read Previous

பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும்

Read Next

தாருல் இஸ்லாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *