தொழிலதிபராக என்ன தேவை?

Vinkmag ad

புத்திசாலித்தனம், கடின உழைப்பு, நல்ல படிப்பு, தொழில் அனுபவம் இருந்தால் மட்டுமே ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக ஆகி விட முடியுமா? இல்லை, அது மட்டும் போதாது. கடந்த பல ஆண்டுகளாக எனக்கு தெரிந்த பலர் மிக பெரிய கனவுகளோடு தங்கள் சுய தொழிலை ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு குறுகிய காலத்திற்கு உள்ளாகவே தாக்கு பிடிக்க முடியாமல் கடையை மூடிவிட்டனர். இவர்களிடம் புத்திசாலித்தனத்திற்கோ, கடின உழைப்பிற்கோ பஞ்சமே இல்லை சொல்ல போனால் ஒரு சிலர் MBA கூட படித்திருந்தார்கள்.

அப்படியென்றால் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது ஒரு வெற்றி யாளராகவும், தங்கள் கார்ப்பரேட் பயணத்தில் ஒரு அதி வேக வளர்ச்சியை அடைந்தபோதிலும் தங்களுடைய சொந்த தொழில் என்ற போது அதே மாதிரியான வெற்றியை அடைய முடியவில்லை என்றால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? சற்று சிந்திக்க வேண்டும்!

இதை நான் ஆராய்ந்த போது மிகத் தெளிவாக தெரிந்து கொண்டது ஒன்றுதான். ஒரு தொழிலாளியாகச் செயல்படும் போது இருக்க வேண்டிய சிந்தனையும், மனப்பாங்கும் வேறு, ஒரு முதலாளியாக, தொழில் அதிபராக செயல்படும் போது இருக்க வேண்டிய சிந்தனையும், மனப்பாங்கும் வேறு. நான் ஒரு தொழில் நிறுவனராக கற்று கொண்ட மிக பெரிய பாடம் என்னவென்றால் “எது நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு – நான் மட்டுமே தான் பொறுப்பு” என்பதுதான்.

என்னுடைய வெற்றி-தோல்வி, இரண்டிற்குமே காரணம் நானாகதான் இருக்க முடியும் என்ற மனப்பக்குவம் அவசியம். நாம் பள்ளியிலோ (அ) கல்லூரியிலோ படிக்கும் போதும் சரி (அ) எங்கேயோ வேலைக்கு செல்லும் போதும் சரி நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு பணி சரிவர முடியவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறுவதோடு, இவர் அதனைச் சரியாக செய்யவில்லை, அவர் அதனை சரியான நேரத்தில் எனக்கு கொடுக்கவில்லை அதனால்தான் என்னால் கொடுத்த பணியை சரியாக செய்ய முடியவில்லை என்று அடுத்தவர் மீது பழியை போடுவதையே ஒரு வழக்கமாக பெரும்பாலானோர் கொண்டுள்ளனர்.

இத்தகைய ஒரு சிந்தனையோடு செயல்படும் ஒருவரால் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக உருவெடுக்கவே முடியாது என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. இப்படி நம் சிந்தனைதான் நம் வாழ்க்கையையே வழி நடத்திச் செல்கிறது. டாக்டர் பட்டம் பெற்றவர் கூட சொந்த தொழிலில் தோல்வியை மிக விரைவாக தழுவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

இதனால் நான் படிப்பு தேவையில்லை என்றோ, அது உபயோகப்படாது என்றோ எண்ணிவிட வேண்டாம். இன்றைய போட்டி நிறைந்த ஒரு உலகத்தில் படிப்பும், திறமையும் மிகவும் முக்கியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை விட மைன்ட்செட் என்பது தான் ஒரு தொழில் அதிபரின் வெற்றியையும், தோல்வியும் தீர்மானிப்பது என்பது நிச்சயம்.

– கே.சுவாமிநாதன் 
aspireswaminathan@gmail.com

News

Read Previous

நட்பு

Read Next

எங்கு செல்கிறது நமது சமுதாயம் ?. : திருமண செலவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *