தெண்டுல்கர் தேசத்திற்கு தந்தது என்ன ?

Vinkmag ad

tendul

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

thahiruae@gmail.com

சச்சின் தெண்டுல்கர் 200 வது டெஸ்ட் மேட்சை முடித்து விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதான் இந்தியப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாக இன்று வெளி வந்துக் கொண்டிருக்கிறது.

உலகம் கவலை ,ரசிகர்கள் சோகம்  ,கிரிக்கெட் உலகின் எதிர் காலம் என்று என்னமோ அஞ்சலி செலுத்துவது  போன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கிரிக்கெட் எனபது ஒரு கேளிக்கை (entertainment ) அதனை ரசிக்க வேண்டும்,அதில் பங்கேற்கும் திறமையான வீரர்கள் பாராட்டப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .

அதே நேரத்தில் இந்தியா போன்ற வறுமை,வேலையில்லா திண்டாட்டம், கல்வியறிவின்மை,வன்முறை,சாதி மத பிரச்சினைகள் ஆகியவற்றால் அன்றாடம் அல்லாடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஒரு விளையாட்டை பிரதானப்படுத்தி அதற்க்கு செலவழிப்பது, ஏழை மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு விருதை அள்ளிக் கொடுப்பது,அவர்கள் ஒரு நாட்டிற்கு எதிராக விளையாடும் விளையாட்டை நாட்டிற்காக போராடுவது போல சித்தரிப்பது,ஒரு படி மேலே போய் அவர்களை கடவுளாகவே உருவகப் படுத்துவது,அவர்கள் ஒய்வு பெறுவதால் என்னமோ இந்தியாவே எதையோ இழந்து விடுவதுப் போன்று ஒப்பாரி வைப்பதெல்லாம் நாகரீக சமூகத்திற்கு அழகல்ல.

இவர்கள் நாட்டிற்கு செய்த சேவை என்னவென்று நினைத்து பார்த்தால்,இவர்களால் நாடு உண்மையாகவே அடைந்தப் பயன் என்னவென்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பூஜ்ஜியம்தான் இருக்கும் .அதே நேரத்தில் அவர்கள் இந்த நாட்டால், ரசிகர்களால் அடைந்தப் பயன் கோடிகளாகும் .

இவர்கள் கிரிக்கெட்டால் இந்திய அணிக்கு தேடிக் கொடுத்த பெருமை ஒரு ஏழையின் வறுமையைக் கூட தீர்த்திட வில்லை .

இவர்கள் மூலம் மேட்சை நடத்தும் அமைப்புகள்,கார்ப்பரேட் முதலாளிகள் ,சூதாட்ட தரகர்கள்,அரசியல்வாதிகள் என இலாபம், இலஞ்சம், விளம்பரம், ஓட்டுக்கள் என ஆதாயங்களை அள்ளிக் கொண்டு போகிறார்கள்.

அதே நேரத்தில் இவர்களின் கிரிக்கெட் மேட்ச் பார்த்து படிப்பு பாழ்பட்டுப் போன மாணவர்கள்,இவர்கள் விளையாட்டில் தோற்றதை நாடே தோற்று விட்டதாக கற்பனை செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட அப்பாவி ரசிகர்கள்,இவர்கள்  பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க அந்த விளம்பரத்துக்காக இவர்கள் பெரும் சம்பளத்துக்கு அதிக விலை பொருள்  மீது சுமத்தப் பட்டு அந்தப் பொருளையும் வாங்கும் சாமான்ய ஏமாளி நுகர்வோர்கள் .மேலும் கிரிக்கெட்டுடன் சேர்ந்து மைதானத்தில் பெண்களை அரை நிர்வாண ஆடையுடன் ஆடவிட்டு பெண் சமூகத்தை ஆபாச காட்சிப் பொருளாக அவமானப்படுத்தியது என இவர்களால்  சமூகம் அடைந்த இழிவும் அழிவும் ஏராளம்..

ஒரு நாட்டின் வறுமையை,அறியாமையை தீர்க்கக்கூடியவர்கள் ,மக்களின் அன்றாட வாழ்வில் மிக இலகுவாக அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுபவர்கள்,நாட்டில் ஒதுக்கப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாடுபடுபவர்கள்தன அந்நாட்டின் வளர்ச்சியின் தூண்களாக பார்க்கப் பட வேண்டியவர்கள்,பாராட்டப் பட வேண்டியவர்கள்.இதே இலக்கணத்தை கொண்டு இந்தியாவில் பார்த்தால் எவ்வளவோ மகத்தான மனிதர்கள்  மக்களின் சேவையில் தங்கள் கல்வி,செல்வம்,உயிர் மற்றும் நேரம் ஆகியவற்றை அர்ப்பணித்திருகிறார்கள்.இன்றும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் ஊடகங்கள் மூலம் வெளிச்சப் படுத்தி காட்டப் படுவதில்லை.இன்னும் சொல்லப் போனால் அவர்களின் சேவைகள்  இருட்டடிப்பு செய்யப் படுகின்றன .

 

ஈ மெயில் கண்டுபிடித்த பிடித்த இந்தியரான தமிழகத்தைச் சேர்ந்த சிவா ஐயாத்துரையை நம்மில் எத்தனை பேர் கொண்டாடுகிறோம்.இதன் மூலம் நாம் இன்று செய்தியை எவ்வளவு விரைவாக அனுப்ப முடிகிறது..பறவைகள்,மூலம் தொடங்கிய செய்தித்தொடர்பு ஒரு வினாடிப் பொழுதில் செய்திப் பரிமாற்றம் நடக்கும் அளவுக்கு மாற்றிய ஈ மெயில் எவ்வளவுப் பெரிய அறிவியல் புரட்சி.சாமான்ய மக்களை விட வியாபார நிறுவனங்களும்,அச்சு மற்றும் ஒலி –ஒளி ஊடகங்கள் இதனால் அடையும்  பயன் எத்தனை அபரிதமானது.இதனை இன்னும் செய்தி உலகம் குறிப்பாக இந்திய செய்தி உலகம் பேசாமலிருப்பது எவ்வளவு அயோக்கியத்தனமானது?

 

விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி தனது ரூ 8846 கோடி மதிப்புள்ள பங்குகளை சமூக சேவைப் பணிகளுக்காக முக்கியமாக கல்விக்காக அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷனுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த சமூக சேவை நிறுவனம், இந்தியாவின் அடிப்படைக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக உள்ளது. “என் காலத்திலேயே எனது எனது சொத்துக்களின் பெரும் பகுதியை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக கொடுத்து விடப் போகிறேன் என்னுடைய சொத்துக்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் என் குழந்தைகளுக்கு கொடுத்தால் போதும் பல தலைமுறைகளுக்கு அதுவே அவர்களுக்கு திருப்தியாக இருக்கும் என்கிறார் அவர். கோடிக் கணக்கான மக்கள் கல்வி பெற தன் கோடிக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுக்கும் இவர் பற்றி எத்தனை பத்திரிக்கைகள் முதல் பக்க செய்தி வெளியிட்டு இருக்கின்றன? .இவரால் தேசம் அடையும் பயன் எப்படிப்பட்டது ? இப்படிப் பட்ட மனிதர் பத்திரிக்கைகள் மூலம் முன்னிலைப் படுத்தப் படும் போது மற்ற தொழிலதிபர்கள் கூட  தங்கள் செல்வங்களை கல்விக்கு அளிக்க முன்வருவர் .கல்விதானே நாட்டின் முன்னேற்றத்தின் முதலீடு ?

 

சாப்பிட வழியில்லாமல் மலத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த  ஒரு முதியவரைக் கண்டு மனம் கசிந்து தனக்கு சுவிஸ்ஸில் கிடைத்த வேலையை உதறி விட்டு அட்ஷயா என்னும் அறக்கட்டளை துவங்கி மதுரையில் பாதை ஓரங்களில் ஆதரவற்று இருக்கும்  தினசரி நானூறு பேருக்கு  உணவு சமைத்து அளிக்கும் நாரயணன் கிருஷ்ணன் பற்றி எத்தனை இளைஞர்கள் அறிவர் .சி .என். என் உலகில் பத்து தலை சிறந்த இந்தியர்களில் ஒருவர் என அவருக்கு விருது வழங்கியது .அன்னதானத்தை விட சிறந்த தானம் உலகில் எது ? வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் இந்தியரில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் என்கிறது ஒரு சர்வே முடிவு .இவர்போன்று  உணவளிக்கும் உணர்வுள்ள பல மனிதர்கள் முன்னிலைப்படுத்தப் படும் போது  முன்மாதிரியாக காட்டப் படும் போது ஏன் குறைந்தப் பட்சம் விளம்பரங்களில் இவர்கள் காட்டப் பட்டால் இவர்களுக்கும் பெருமையாக இருக்கும்  .பலர் இவர் போல முன் வரும் பொது நிச்சயம் இந்தியாவில் வறுமை அகல அது சிறந்த வழியாகவும் இருக்கும் .

 

எத்தனை இளம் தலைமுறையினர் அரிசி விஞ்ஞானி டாக்டர் E.A சித்தீக் அவர்களை அறிவர்.35 ஆண்டு கால மரபியல் (genetics )மற்றும் தாவர வளர்ப்பு (plant breeding) ஆராய்ச்சி மூலம் மிகச்சிறிய ரக  பாசுமதி அரிசி,மற்றும் பாசுமதி அல்லாத அரிசிகள் மற்றும் கலப்பின நெல்ஆகியவற்றை கண்டுப் பிடித்தார்.இதன் மூலம் இந்தியாவின் அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது நாட்டின் உணவு உற்பத்தியின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பெரும் பங்கினை போற்றும் விதமாக இந்திய அரசு அவருக்கு 2011 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை கவுரவித்தது.ஏன் எப்போது பார்த்தாலும் அமெரிக்க விஞ்ஞானி அதை கண்டுப் பிடித்தான்,இதன் கண்டுப் பிடித்தான் என இந்திய மக்களிடம் பத்திரிக்கை விற்றுக் கொண்டு அமெரிக்க பெருமை பேசும் பத்திரிக்கைகள் இந்தியன் செய்யும் சாதனைகளை விட்டு எவனோ ஒருவன் மட்டையும் பந்தையும் வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களின் நேரம் பொருள் உழைப்பை வீணாக்குவதை சாதனை போன்றுக் காட்ட வேண்டும் ?

 

சின்ன வயதிலேயே  விஞ்ஞானிகளாக பரிணமித்துக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தின்  எத்தனை இளம்பெண்களும் ஆண்களும் ஊடகங்களால் உலகுக்கு காட்டப் பட்டார்கள்?,சமூகத்தால் பாராட்டப் பட்டார்கள்.இவர்கள் மனித சமூகத்தின் வாழ்வில் இலகு, விரைவு சிக்கனம்’ நிம்மதி ஆகியவற்றுக்கு வழி வகுத்துக் கொண்டிருப்பவர்கள்.இவர்களால் தேசம் அடைவது உண்மையிலேயே பெருமை,தேசம் கடந்து உலக  மக்கள் அனைவரும்  அடைவது ஆயிரமாயிரம் நன்மைகள்.

உலகிலேயே மிக சிறந்த, குட்டி உளவு விமானத்தை கண்டுபிடித்த தமிழன், செந்தில் குமார்: இவர் சென்ன்னையில் உள்ள, எம்.ஐ.டி., பொறியியல் கல்லுாரியில், இணை பேராசிரியராக பணியாற்றுகிறார்.

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி மனையியல் துறை மாணவிகள், பதனீரிலிருந்து “பாம் சுகர்’ என்ற, புதிய வகை சர்க்கரையை, கண்டு பிடித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் கிராமத்தில் ஐம்பத்தி மூன்று வயது நாகராஜன். முப்பது வருடங்களாக வளர்த்தெடுத்திருக்கும் மரங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும்.

காது கேளாதவர்களும் செல்போனில் பேசம் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள்..

பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில்
பிளஸ் 1 படிக்கும் காஸ்ட்ரோ கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்துள்ளார்

யுனெஸ்கோ அமைப்பின் இளம் விஞ்ஞானிகளுக்கான 6 விருதுகளில்  ஒன்றை  பெற்றவர் இந்தியாவை சேர்ந்த பிலால் ஹபீப் என்ற உத்தரகாண்ட் இளைஞர்..சுற்றுச்சூழல் கண்காணிப்பு குறித்து அவரின் ஆராய்ச்சிக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் மற்றும் கடிதங்களுக்கு சீல் வைப்பதற்கு மெழுகை பயன்படுத்துவர்.அதற்க்கு மாற்றாக சீல் வைப்பதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மாசா நசீம் நெருப்பில்லா முத்திரை வைப்பான் கருவி ஒன்றை கண்டுப் பிடித்துள்ளார் .
தமிழகத்தைச் சேர்ந்த துபையில் பயிலும் மாணவர் அர்ஷத் அஹ்மத் கண்டுபிடித்த புதிய செயற்கை சுவாச கருவி நோயாளிகளின் நுரை ஈரலுக்கு காற்றை செலுத்தி அவர்களின் சுவாசத்தை சிரான நிலைக்கு வைக்க உதவும் கருவியாகும். துபாயில் நடந்த சர்வதேச அறிவியல் கண்காட்சியில்  மதி நுட்பம், நூகர்வோருக்கு பயன் அளிக்க கூடிய விதத்தில் உள்ள அடக்க விலை முதலியவை மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனகளின் கவனத்தை ஈர்த்து அவரது கண்டுப் பிடிப்பு முதல் பரிசை தட்டி கொண்டு போனது.

 

உலகிலேயே இந்திய சமூகத்தில்தான் பெண்கள் சமூக முன்னேற்றம்,சமூக விடுதலை,அடக்கு முறை மற்றும் கொடுங்கோன்மை எதிர்த்து குரல் என   மனித குல சேவைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.நடிகைகளை தெரிந்த,கிரிக்கெட்காரர்களை தெரிந்த  எத்தனை பேருக்கு இந்த வீரப் பெண்மணிகள் பற்றிய விபரங்கள் தெரியும்? விளையாடுபவனிடமும்,நடிப்பவனிடமும் பேட்டிக் காணும் டி விக்களும், டீக் கடையில் வடை மடிக்கும் பேப்பர்களும் இந்த சமூக சேவகிகள் பற்றி பெட்டிச் செய்திகள் மட்டும்  போட்டு விட்டு பேசாமல் இருந்து விடுகின்றன.

 

நர்மதா ஆற்றுக்கு குறுக்கே ஏழை மக்களின் நிலங்கள் அபகரித்து கட்டப் படும் சர்தார் சரோவர் அணை திட்டத்திற்கு எதிராக போராடும் மேதா பட்கர்

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது ராணுவம் நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக போராடும் இரோம் சர்மிளா

குஜராத்தில் இனப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு எதிராக  போராடி அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பாடு படும்  டீஸ்டா செடல்வாட் ஆகியோரை எத்தனைபேர் இன்றைய இளைய சமூகத்தில் அறிவர்.

அநீதிக்கு எதிராக அஞ்சாமல் அனைத்து சமூக மக்களின் மீதான அடக்கும் முறைகளையும் தன் ஆயுத எழுத்தால் கண்டிக்கும் அருந்ததிராய்

மைதானங்களில் நடக்கும் விளையாட்டுகளும், திரைகளில் நடக்கும் நடனங்களும் பாட்டுக்களும்தான் நிஜ உலகம் என்ற என்ற சிந்தனையை ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ளன,அதே நேரத்தில் மனித சமூகத்தின் முன்னேற்றம் நாகரீகம் ஆகியவற்றின் பிரதானமான விசயங்களான கல்வி, விஞ்ஞானம்,மருத்துவம்,சமூக சேவை ஆகியவை புறக்கணிக்கப் படுகின்றன.அவற்றில் சிறந்து விளங்கி முத்திரை பதிப்பவர்கள் முற்றும் முகம் தெரியாமல் செய்தி உலகத்தால் வாசிக்காமலே விடப் படுகின்றனர் .

தஞ்சாவூர் கல்வெட்டில் வேண்டுமானாலும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

முன்னேற்றத்திற்கு உதவும் இந்த மக்களை புறக்கணித்து விட்டு நீங்கள் விளையாட்டையும் ,சினிமாவையும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களை முக்கிய மனிதர்களாக சித்தரிப்பதை நிறுத்தும் வரை வளரும் நாடுகளின் வரிசையில்தான் இந்தியா இருக்கும் .இவர்கள் மட்டும்தான் இந்தியாவில் வளர்ந்திருப்பார்கள்.

News

Read Previous

அலோபதி சர்க்கரை வணிகம் ?

Read Next

அருள் புரிவாய் யா “அல்லாஹ்”!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *