தாய்மொழி கல்விதான் சிறந்தது!”

Vinkmag ad

தாய்மொழி கல்விதான் சிறந்தது!”

2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பின்லாந்தின் கல்வி
அமைச்சராக இருந்த ஹென்னா மரியா விர்க்குனன் (Henna maria virkkunen), பின்லாந்தின் கல்விமுறை குறித்து www.hechingerreport.org என்ற கல்வி இணைய
இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்…

”பின்லாந்து ஆசிரியர்கள் ~சிறப்பாகச் செயல்படுவது எப்படி?”

”பின்லாந்தில் ஆசிரியர் பணி மிகவும் மதிப்புமிக்க இடத்தில் இருக்கிறது.

இளைஞர்கள் ஆசிரியர் ஆவதை தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆசிரியர் பயிற்சி படிப்பு, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் அது ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்துள்ளது.
ஆசிரியர்கள் கற்பித்தலில் புதிய உத்திகளைக் கையாளலாம். அதற்கான
உரிமை அவர்களுக்கு உண்டு. அதேபோல, எங்கள் கல்விமுறை நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்டது. பள்ளிகளில் ஆய்வு நடைபெறும் என்றாலும் அதன் நோக்கம், ஆசிரியர்களைக் கண்காணிப்பது அல்ல; கல்விநிலையை மேம்படுத்துவதாகவே இருக்கும்.

நாம் எல்லோரும் மனிதர்கள். நம்பிக்கைதான் அடிப்படையாக இருக்க
வேண்டும்”

”பின்லாந்தில் புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் குழந்தைகளுக்கு எவ்வாறு
போதிக்கப்படுகிறது?”
”எங்கள் நாட்டில் அகதிகள் குறைவு.

ஹெல்சின்கி (Helsinki) என்ற பகுதியில்
அதிகபட்சமாக 30 சதவிகிதமாணவர்கள் புலம்பெயர்ந்தோர். பலவீனமான கல்வி மற்றும் சமூகப் பின்னணியில் இருந்துவரும் இவர்களை, வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்பும் முன்பாக, ஒரு வருட காலம் சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பி தயார்படுத்துகிறோம்.

அதைப்போலவே புலம்பெயர் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதில் முனைப்புடன்
இருக்கிறோம்.

தாய்மொழியைப் பயில்வதன்மூலம்தான் ஒரு குழந்தை
உண்மையான கல்வியைப் பெற முடியும்.

ஹெல்சின்கி பகுதியில் 44 வேறுபட்ட தாய்மொழிகளைக்கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள்.

அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது.
எங்களுக்கு இது சவாலான வேலைதான். என்றாலும் தாய்மொழியைக் கற்பது
மிகவும் அவசியம்.

தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக்
கற்றுக்கொள்ளும்போதுதான் பின்னிஷ் (Finnish- பின்லாந்து மொழி), ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்!”
”பின்லாந்து கல்விமுறையில் இருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?”

‘இது கடினமான கேள்வி. கல்வி என்பது ஒரு நாட்டின் உள்ளூர் மக்களுடனும்
வரலாற்றுடனும் இணைந்திருக்கிறது. அதனால் ஒரு நாட்டின் கல்விமுறையை இன்னோரு நாட்டுக்குப் பொருத்துவது சரியாக இருக்காது.

ஆனால், மிகச் சிறந்த ஆசிரியர்கள்தான் சிறந்த கல்விக்கான அடிப்படை. ஆசிரியர் பயிற்சியில் முழுக் கவனம் செலுத்தி வடிவமைப்பதும், அவர்களின் பணிபுரியும் சூழலை ஆரோக்கியமானதாக மாற்றி அமைப்பதும் முக்கியம்.

நல்ல ஊதியம் அளிப்பதும் அவசியமானது என்றபோதிலும் அது ஒரு நிபந்தனை அல்ல.
பின்லாந்தில் மற்ற தொழில் துறை பணிகளில் இருப்போர் பெறும் சராசரி
ஊதியத்தையே ஆசிரியர்களும் பெறுகின்றனர்!”

‘பின்லாந்து கல்விமுறை குறித்து அதிகம் அறியப்படாத செய்திகள் எவை?”
”எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வகுப்பறையில் தான்
கற்பிக்கிறோம். நல்ல பள்ளி புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி… என்ற
பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. கற்றல் குறைபாட்டுடன் இருக்கும்
குழந்தைகளிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

முக்கியமாக, வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம்
21 பேர்தான். அதைத் தாண்டினால் ஆசிரியரால் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது. அதேபோல எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும்
நேரம் மிகவும் குறைவு.

ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில்
இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதை நாங்கள்
நம்பவில்லை. விளையாடவும், பொழுதுபோக்கவும், வீட்டுப்பாடம் செய்யவும்
அவர்களுக்கு நேரம் தர வேண்டும்!”

News

Read Previous

ஓட்டு அரசியல்

Read Next

கற்றலின் இனிமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *