தழைக்கட்டும் தமிழகம் – செழிக்கட்டும் தமிழர்கள் !

Vinkmag ad

தழைக்கட்டும் தமிழகம் – செழிக்கட்டும் தமிழர்கள் !
ந்த வருட வடகிழக்குப் பருவமழை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணனை ஒரு ஹீரோவாக்கிவிட்டது. அன்றாடம் அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று கடலோர மாவட்ட மக்கள் திகிலுடன் காத்திருந்தனர். பள்ளிக் குழந்தைகளுக்கோ அவர் பிரியமான ரமணன் அங்கிள் ஆகிவிட்டார். இன்னும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அவர் அறிவித்ததும் குழந்தைகள் பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடி  தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “இன்னும் 5 நாட்களுக்கா? இப்பவே தாங்கலியேப்பா.. “என வீட்டையும் பண்ட பாத்திரங்களையும் இழந்த மக்கள் புலம்பித் தீர்த்தனர்.
மக்கள் வேறு யாரிடம் கோரிக்கை வைக்க முடியும்?சர்வவல்லமையுள்ள நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவிடம்தானே மன்றாட முடியும்? அம்மாவின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே அறியும். திடீரென்று வேனில் புறப்பட்டு வந்தவர் மக்களிடம் நான் இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம் என்று வேனுக்குள்ளிருந்தபடியே கூறிவிட்டு போயஸ் தோட்டத்திற்குத் திரும்பிவிட்டார். ஒரு படத்தில் நடிகர் விவேக்கிடம் ஒரு டாக்டர் இதே ஆறுதல் வார்த்தைகளைக் கூறியபோது நீங்க இருப்பீங்க டாக்டர்.. நான் இருப்பேனா? என்று கேட்டது நினைவுக்கு வருகிறது. தற்போது சேதாரங்கள் அளவுக்கு அதிகமாகி, மக்கள் தொடர்ந்து தத்தளிக்கும்போது இனியும் கார்டனுக்குள் இருந்தால் பேர் படுரிப்பேராகிப் போகும் என்று உணர்ந்தபிறகு, ஹெலிகாப்டரில் அமர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டிருக்கிறார் முதல்வர். பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டிருக்கிறார். மந்திரிதந்திரிகளும் தீயணிப்புத்துறை போன்ற பல துறை ஊழியர்களும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருவது உண்மை. மக்களிலேயே பலர் நிவாரணப் பணியில் இறங்கிவிட்டனர். ஆனாலும் மக்களுக்குக் கிடைத்த உதவி அசுரப் பசியுடன் அமர்ந்திருக்கும் கடோத்கஜன் எதிரில் இரண்டு இட்டிலிகளை வைத்துவிட்டு நல்லா திருப்தியாச் சாப்பிடுன்னு சொல்லிவிட்டுப் போவது மாதிரிதான் இருந்தது. இந்த நேரத்தில் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் மாநகர பஸ்ஸைப் படம் பிடித்து அம்மா நீர்மூழ்கிக் கப்பலை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார் என்று வரும் வாட்ஸ்அப் கிண்டல்கள் குறைவின்றி வெளிவந்தன.
அம்மாவிடமிருந்து வந்த ஆறுதல் வார்த்தைகளின் கொடுமையைத்தான் தாங்கமுடியவில்லை. மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்தால் என்ன செய்ய முடியும்? என்ற அங்கலாய்ப்புதான் அவரிடமிருந்து முதலில் வெளிப்பட்டது. அரசு எடுத்திருக்க வேண்டிய நீர்நிலைகள் ஆக்கிரமிப்பைத் தடுத்தல், மழைநீர் வடிகால்கள் பராமரிப்பு, மக்களை அபாயப்பகுதியிலிருந்து வெளியேற்றுதல் போன்ற வேறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்தால் தமிழகத்திற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற விமர்சனம் பற்றி அவர் இப்போதுகூட அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் “ஒளிரும் நிகழ்காலம் – மிளிரும் வருங்காலம்”என்று வரும் தேர்தலில் ஆளும் கட்சியினர் பிரச்சாரம் செய்யப் போகிறார்களாம். நகைச்சுவைத் துணுக்காக இதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
அம்மாவும் என்னதான் செய்வார், பாவம்? அவருக்கு இது ஒன்றுதான் பிரச்சனையா? மூடு டாஸ்டாக்கை மூடு  என்று பாடி நடனம் ஆடும் கோவன் மீதும் அம்மாவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியை நார்நாராகக் கிழித்துத் தொங்கப் போட்ட ஆனந்த விகடனையும் தண்டிப்பதுதானே முக்கியம்? இந்த வழக்குகள் எல்லாம் இன்னும் உச்சநீதிமன்றக் கதவுகளைச் சிலமுறையாவது தட்டாமல் ஓய்ந்துவிட அவர் அனுமதிக்கப்போவதில்லை.
மற்ற பிரச்சனைகளுக்கும் அம்மா என்ன பதில் சொல்வார் என்று சிறிதளவு கற்பனை செய்து பார்க்கலாமே? இதுவே சரியான தருணம்.
பிஹாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று நிதிஷ்குமார் அறிவித்திருக்கிறாரே? தமிழகத்தில் நீங்களும் அதுபோல அறிவித்தால் என்ன?
கருணாநிதி ஆட்சியில்தான் மதுவிலக்கு கைவிடப்பட்டது. அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் எப்படி?
தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. அவற்றைத் தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா?
ஆங்காங்கு சில கொலைகள் நடைபெறுவது எந்த ஆட்சியிலும் நடப்பவைதான். எனது அரசு மீது காழ்ப்புணர்ச்சி உள்ளவர்கள்தாம் அவற்றை சாதி ஆணவக் கொலைகளாகப் பெரிதுபடுத்துகிறார்கள். அண்ணாவும் புரட்சித் தலைவரும் கனவு கண்ட சாதிபேதமற்ற சமதர்மப் பூங்காவாக தமிழகம் விளங்குகிறது என்பதுதான் உண்மை.
தனியார் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நடக்கும் கொள்ளையைத் தடுத்து நிறுத்த உங்கள் அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
இந்தக் கொள்ளையைப் பெருமளவு வளரவிட்டவரே கருணாநிதிதான். எனது அரசு பொறுப்பேற்ற பிறகு அந்தக் கொள்ளை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கல்வித்துறைச் செயலர் என்னிடம் ரகசியமாக ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் வேலை கிடைக்காமல் வாடும் இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பதாக இருக்கிறீர்கள்?
அந்த வேலையில்லாப் பட்டாளத்தை என் தலையில் கட்டிவிட்டு தற்போது குளிர்காய்ந்து கொண்டிருப்பதே கருணாநிதிதான். இருப்பினும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை எனது அரசு நடத்தியுள்ளது. அந்நிய முதலீடு வந்து குவிய உள்ளது.“தொடரட்டும் மேம்பாடு – ஜொலிக்கட்டும் தமிழ்நாடு” என்ற எனது அரசின் ஆன்லைன் பிரச்சாரத்தைப் பார்க்காமலேயே உங்கள் இஷ்டத்திற்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
சட்டமன்றத்தில் நீங்கள் இதுவரை 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால் அவற்றில் பல ஏட்டோடு நின்றுவிட்டது ஏன்?
110 அறிக்கைகள் பற்றி சட்டமன்றத்திலேயே கேள்வி கேட்க முடியாது. சட்டமன்றத்துக்கு வெளியில் அவற்றைப் பற்றிக் கேள்வி கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
டெங்கு காய்ச்சலுக்கு…
(இடைமறித்து) டெங்கு என்ற பெயரையே என் எதிரில் உச்சரிக்காதீர்கள். அந்தக் காய்ச்சலுக்கு எனது அரசு இன்னமும் பெயர் வைக்கவில்லை. வேண்டுமானால் அதை மர்மக்காய்ச்சல் என்று அழைக்கலாம்.
சரி, மர்மக் காய்ச்சல் என்றே வைத்துக் கொள்வோம்.  அந்தக் காய்ச்சலுக்கு பலர் பலியாகிக் கொண்டிருக்கிறார்களே?
அதான் மர்மக்காய்ச்சல் என்று பெயர் வைத்துவிட்டோமே? பலியாவதும் மர்மமாகத்தானே இருக்கும்? இயற்கை செய்யும் சதிகளுக்கெல்லாம் நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?
மின்சாரம் தயாரிக்க உருப்படியான ஒரு திட்டத்தைக்கூட நீங்கள் முதலமைச்சராக வந்தபிறகு தொடங்கவில்லையே?
இதற்கு ஆதாரம் எதையாவது காட்ட முடியுமா? தற்போது தமிழகத்தில் மின்சார வெட்டே கிடையாது. ஆங்காங்கு மின்தடை வேண்டுமானால் இருக்கலாம். திமுக ஆட்சியில் இருண்டுகிடந்த தமிழகம் தற்போது ஒளிவீசித் திகழ்வதை உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எதிர்க்கட்சிகள் அனுப்பிவைத்த ஆளா?
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய திப்பு சுல்தான் மீது பாஜகவினர்தாம் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். தமிழகத்திலும் திப்பு சுல்தான் விழா நடத்தத் தடை ஏன் விதிக்கப்படுகிறது?
விழாவை நடத்துவதால் சிலர் மனம் புண்படும் எனத் தெரிந்தால் அங்குள்ள காவல்துறையினர் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி?
“தழைக்கட்டும் தமிழகம் – செழிக்கட்டும் தமிழர்கள்” என்பதைத் தவிர நான் வேறு எதைக் கூறப் போகிறேன்?
(நரேந்திர மோடி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பல மனதைக் கவரும் முழக்கங்களை முன்வைத்து ஆட்சியைப் பிடித்தது இங்கே சிலருக்கு தவறான ஒரு வழியைக் காட்டிவிட்டது. அதே மாதிரி சில கோஷங்களை முன்வைத்தால் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என தமிழகத்தில் பல கட்சிகள் நினைக்கத் தொடங்கிவிட்டன எனப் புரிந்து கொண்டு நாம் இடத்தைக் காலி செய்ய வேண்யதுதான்).
ராஜகுரு

News

Read Previous

குளம்

Read Next

இறுதிப் பயணம்

Leave a Reply

Your email address will not be published.