தமிழின் இன்றைய நிலை

Vinkmag ad

தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்

 

தமிழின் இன்றைய நிலை

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தனித்துவமான சொல்வளத்தையும், அறிவியற்கோட்பாட்டின்படி அமைந்த இலக்கணத்தையும் பெற்று, இந்நாள் வரையில், அதன் இளமை மாறாது, வளர்ந்துவரும் தமிழ்மொழி, உலகின் உன்னத மொழிகளாய் அமைந்த ஒருசில மொழிகளுள் ஒன்று. வெறும் இலக்கியமொழியாக மட்டுமே அமைந்துவிடாது, இன்றுமட்டும், வாழும் மொழியாகிய அமைந்த தமிழ்மொழி, உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்பட்டு, அதன் மூலம், பல்வேறு வகையான பேச்சுவழக்குகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகு தமிழின் இன்றையநிலையை ஆறு கூறுகளாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

வளர்ந்தோங்கும் இம்மொழியின் சிறப்புகளை மட்டுமே பறைசாற்றிக் கொண்டிருக்காமல், மொழியின் வீச்சையும், அதன் வளர்வேகத்தையும் பெருக்க உதவும் சில காரணிகளை ஆய்வோம்.

  1. தமிழ், தமிழறிஞர்களிடம் வளரவேண்டும்:

ஒருமொழி சிறக்க, அரசியல்சூழல் தேவைதான் என்றாலும் அஃது ஒரு வெளிப்புறக்காரணியே ஆகும். மொழி வளர, ஒரு சூழலை உருவாக்கும் எண்ணற்ற காரணிகளுள் அரசியலும் ஒன்று. இன்று தமிழ்மொழி, அரசியலாளர்களிடம் மாட்டிக்கொண்டு அவதியுறுகிறது. தமிழ், தமிழறிஞர்களிடம் விடப்படல் வேண்டும் என்பது இன்றைய தலையாய விழைவாகும். காரணம், மொழி என்பது, அரசியல், சாதி, சமயம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்படல் ஆகாது. அது மொழியின் வீச்சையும், அதன் பரந்துபட்ட திறனையும், வெகுவாகக் குறைத்துவிடும். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பொறுப்பு, பொதுநிலை வகிக்கும் தமிழறிஞர்களிடம் விடப்படல் வேண்டும். இத்தகைய முயற்சி ஒன்றே, தமிழை, தமிழாக வளர்க்க உதவும். மற்ற எந்தவகையான, இயக்கங்கள் சார்ந்த பொறுப்புநிலையும், அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட விழைவுகளுக்கும், அவற்றின் தேவைகளுக்கும் ஏற்ப வளைந்துகொடுத்து, மொழி தன் தனித்துவத்தை இழக்கச் செய்யும் நிலையையே ஏற்படுத்தும் என்பதே உண்மை. நடுநிலைப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் ஒருங்கே கொண்ட, ஒரு பொதுவான, அமைப்புசாராத, அரசியல் கலவாத, மரபையும், புதுமையையும் ஒருசேர அரவணைக்கும் அறிஞர் குழுவே, தமிழ் வளர்க்கும் பொறுப்பை ஏற்றல் வேண்டும். இத்தகைய குழு, வாழ்நாள், நீண்டநாள், குறுகியநாள் உறுப்பினர்களைக் கொண்டு, தமிழ் வளர்ச்சி ஒன்றையே முதன்மையாகக் கொண்டு, அதை வழிநடத்த, அமைந்த ஒரு அமைப்பாக, தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பது விழைவு.

  1. தொடர்ந்த கலைச்சொல்லாக்கமும், பொதுவான பயன்பாடும்:

இன்றைய நிலையில் அரசின் சார்பில் கலைச்சொல்லாக்கம் செய்யும் துறை இருக்கும்போதும், தன்னார்வலர்கள் பலர், தங்கள் முயற்சியால், கலைச்சொல்லாக்கத்திற்கு உழைத்துவருகின்றனர். தமிழ்க்கலைச்சொல்லாக்கம் என்பது ஒருமுக முனைப்பாக உள்ளது; அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில், கலைச்சொற்களின் இறுதிவடிவங்களைத் தீர்மானம் செய்வதிலும் குழப்பம் நிலவியே வருகிறது. இந்நிலை அகல, இருமுறைமைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஒன்று, எந்தவிதக் கலைச்சொல்லும், ஒரு மையத்தால் மட்டுமே ஏற்கப்படவேண்டும்; இரண்டு, அவ்வாறு ஏற்கப்பட்ட சொற்களே மொழியாக்கநூல்களில் பயன்படுத்தப்படல் வேண்டும். இவ்வமைப்பு, #1-இல் குறிப்பிட்ட தமிழ்வளர்ச்சி மையத்தின் கீழ்ச் செயல்படல் வேண்டும்.

  1. மொழியாக்க வரவும், கொடையும்:

மொழியாக்கத்திற்காக இரு கரங்களைக் கொண்ட ஒரு மையம் உருவாக்கப்படல் வேண்டும். இவற்றுள் ஒன்று; பிறமொழிகளிலிருந்து ‘வரவா’க, தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவேண்டிய படைப்புகளைத் தேர்ந்தெடுத்தல், அவற்றை மொழிமாற்றம் செய்ய உரிய அறிஞர்களைத் தேர்ந்தெடுத்தல், அவற்றை அச்சாக்கம் செய்ய வேண்டிய செயல்களைக் கண்காணித்தல், பதிப்பான அத்தகைய நூல்களை, நூலகங்கள், கல்லூரிகள், ஆய்வு மையங்கள் என அனுப்பும் இலக்குகளைத் தீர்மானித்தல் போன்ற செயல்களை இயக்கும் அமைப்பாதல் வேண்டும்; இரண்டாவது கரமாக, தமிழ்மொழியிலிருந்து ‘கொடை’யாகப், பிறமொழிகளுக்கு மொழியாக்கும் செயலை மேற்கூறியவாறு இயக்கும் அமைப்பு. இவ்விரு அமைப்புகளும், #2-இல் குறிப்பிட்ட கலைச்சொல் மையத்துடன் மிக நெருங்கிச் செயலாற்றும் வண்ணம், #1 -இல் குறிப்பிட்ட தமிழ்வளர்ச்சி மையத்தின் கீழ்ச் செயல்படல் வேண்டும். பொறியியல், மருத்துவப் பாடங்களைத் தமிழ்மொழியில் நடத்துவதற்கு உதவியாக, சரியான கலைச்சொற்களைக் கொண்டு மொழியாக்கம் செய்யப்பட்ட, உலகத்தர நூல்களை, நம் மரபினருக்குக் கொடுக்கும் வாய்ப்பினை, இத்தகைய மையங்கள், நமக்கு நல்கும்.

  1. ஒப்பாய்வு வளர்ச்சி:

தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒவ்வொருவரும், தமிழ் தவிர பிற மொழிகளின் (குறைந்தது ஒரு வேற்றுமொழியின்) இலக்கியங்களைத் தொடர்ந்து சுவைக்கும் பழக்கத்தை மேற்கொள்ளல் வேண்டும். தேவையற்ற மொழிவெறுப்பைக் கைவிட்டு, இந்திய மொழிகளின் அனைத்துப் படைப்புகளையும் அறியும் வாய்ப்பை, நம் வருங்காலமரபினருக்குக் கொடுத்தல் வேண்டும். தமிழ்ப்படைப்பாளர்கள், தங்களுடைய படைப்புகளில் குறைந்தது, 20 விழுக்காடு, பிறமொழிப்படைப்புகளையோ மொழியாக்கப் படைப்புகளையோ படைத்தல் வேண்டும். இத்தகைய நோக்கு, ‘கிணற்றுத்தவளை’ப் போக்கினைத் தடுத்து, உலகளாவிய நிலையில், தமிழ்மொழியை உயர்த்தும் வாய்ப்புகளை வளர்க்கும்.

  1. மொழி கடவுளன்று; அது ஒரு தொன்மமே:

மொழியைக் கடவுள்போல் பாவிக்கும் நிலையை விடுத்து, அதன் தொன்மையைப் போற்றும் வகையில் அடுத்த மரபினரை வளர்த்தல் நமது கடமையாகும். மாற்றங்கள் கொண்டதே மொழியும்; அவ்வகையில், மொழி, ஒருபோதும் கடவுள் ஆகாது. ஆயினும், தொன்மமாகித் தொடரும் மரபைக் காத்தலும் ஒவ்வொரு மொழியினரின் கடமையாகும். மொழியை ஓர் ‘எண்ணப் பரிமாற்றக் கருவி’ என்னும் நிலையில், அறிவியல் நோக்கில் அணுகி, அதற்குள் புதுமைகளைப் புகுத்தியும், பழைமையின் வளத்தைக் காத்தும் வருதல் வேண்டும். ‘மொழிக்காகத் தீக்குளித்தல்’ போன்ற அறிவற்ற மடைமைச் செயல்களுக்கு ஆதரவு தராது, மொழியின் வளர்ச்சிக்கு வேண்டிய வகையில், நாம் வாழ்ந்து, மொழியையும் வளர்க்கும் வழிகளைச் சொல்லி, வருங்கால மரபினரை வளர்க்கும் பொறுப்பை, இன்றைய மொழியியலாளர்களும், தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

  1. மொழியில் முதலீடு:

நூல்களை வாங்கிப் படிக்கும் மரபு வளர்தல் வேண்டும். மொழியாற்றலின் மேல் இட்ட ‘முதல்’ என்றும் இழப்பாவதில்லை.. மண்ணின் மீதும், பிறபொருள்களின் மீதும் முதலீடு செய்யும் பெற்றோர்கள், தமது மொழியின் மீதும் முதலீடு செய்ய, தத்தம் மக்களைப் பழக்குதல் வேண்டும். இத்தகைய முதலீடு, நூலாசிரியர், பதிப்பாளர், படிப்போர் ஆகிய மூவரையும் மேம்படுத்தும் என்பது உண்மை. இத்தகைய ஒரு வளர்ச்சியை வேறெந்த முதலீட்டிலும் காண்பது அரிது. கல்வி, தீ போன்றது; கொடை தந்தும் வளர்வதே தீயின் சிறப்பு; கல்வியின் சிறப்பும் அத்தகையதே. மொழியின் மேல் முதலீடு செய்வோம்.

இன்றைய வணிகமயமான உலகில், இத்தகைய நோக்கங்கள் நிறைவேறி தமிழ்மொழி வளருமா என்றவோர் ஐயம் எழலாம். ஐயங்கள் எப்போதும் நூறுவிழுக்காடு ஆவதில்லை. இத்தகைய நோக்கங்கள் 100விழுக்காடு எட்டாது போயினும், அந்த இலக்கை நோக்கிச் செல்லும் பாதையை, அடுத்த மரபினருக்கு வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தமிழை வளர்ப்போம்; தமிழால் வளர்வோம்!

 

சந்தர் சுப்பிரமணியன்

News

Read Previous

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!

Read Next

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *