தமிழால் நான் உயர்ந்தேன்!! :மா.ஆண்டோ பீட்டர்

Vinkmag ad

அன்புச் சகோதரர் ஆண்ட்டோ!

மரக்கட்டைகளினூடே சிறுகன்றாய்
முட்டிமோதி முளைவிடும் தருணமதில்
புயலாய் சுழட்டியடித்த வீச்சில்
பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
கேளிவிக்குறியாகிப்போக
சிறுகன்றும் சீர்தூக்கி வாழும்
வகையறிந்து வல்லமையாய்
வடிவாய் வளர்ச்சியும் கொண்டு
வண்ணமிகு மலர்களும் கனிவாய்
கனிகளும் ஈன்று கற்பகவிருட்சமாய்
தமிழ்கூறும் நல்லுலகோருக்கு
கருணை மழையாய் கணிப்பொறி
கருத்தாய் கற்கும் வகையும் காட்டி
ஆக்கமும் ஊக்கமும் அலுக்காத
நீண்டதொரு இலட்சியப் பயணமும்
கணிப்பொறி ஆங்கில மாயையை
தெள்ளுதமிழ் விருந்தாய் தெளியச்செய்து
தெகிட்டாத தேனாய் அள்ளித்தந்து
திகைப்பாய் திரும்பிப் பார்க்கும் நேரம்
திகிலாய் மறைந்து நின்று
திக்கற்றவருக்கு தெய்வம் துணையென்று
நம்பச்செய்து நலிவடைந்தோருக்கு
நற்கருணை மழையாய் பொழிந்துநின்று
தாயிலியாய் தவித்து தத்தளித்த
சிறார்களுக்கு தாயுமாய் தந்தையுமாய்
தத்தெடுத்து தவம் மேற்கொண்டு
வாழ்ந்த வள்ளல் ஆண்ட்டோ பீட்டர்
ஆண்டுகள் சிலவே வாழ்ந்து போயினும்
கணினித்தமிழ் உள்ளமட்டும்
அழியாமல் நிலைத்து நிற்கும்
நித்தியமான பண்பாளர்!
வீடுவெல்ல சோதரன் நீ விரைந்தாலும்
தமிழ்நாடு கூறும் நன்றியுனக்கு!
அன்புச் சகோதரி
பவள சங்கரி

Tiru. Anto Peter, Tamil IT expert and president of KaniTamil Sangam
is no longer with us. Just last week, he called me & sent some
reporters from the Coimbatore press to cover my lectures at Bharathiyar,
Avinashilingam and Karpagam universities.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3632424.ece

http://ibnlive.in.com/news/chennai-designer-of-tamil-font-passes-away…

He was the designer of one of the first Tamil fonts in India, and as we
will have
more an more archaic style Tamil fonts in unicode from the late Gift
Siromoney’s book,
Tamils will remember contributions of people like Anto Peter. Here is the
video when Anto got Periyar award and the sad part is Anto Peter starts his
talk with few words about heart attack.

http://www.youtube.com/watch?v=oZjkKzYXnfs

நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

I lost a dear friend & May Christ give strength to his family in these hard
times.

N. Ganesan

தமிழால் நான் உயர்ந்தேன்!! :   (தினமணி, 11 நவம்பர் 2011)  – மா.ஆண்டோ பீட்டர்.

கணிப்பொறியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பயிற்சி அளிப்பது,தமிழ்மென்பொருள்களை வடிவமைப்பது, கணிப்பொறி சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிப்பது எனப் பல்வேறு பணிகளைச் சத்தமில்லாமல் தன்னுடைய சாஃப்ட்வியூ நிறுவனத்தின் மூலம் செய்து வருபவர் மா.ஆண்டோ பீட்டர். கணிப்பொறியியல், இணையத்தில் தமிழ் மொழியை முன்னிறுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரிடம் பேசியதிலிருந்து…
“எனக்குச் சொந்த ஊர், திருச்செந்தூர் மாவட்டம் என்னுடைய தந்தை மார்சிலின் விறகு வியாபாரம் செய்துவந்தார். ஒருகட்டத்தில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் கடனாளியாகி அதை ஈடுகட்ட முடியாமல் மரணமடைந்தார். அப்போது நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். அதன்பின் என்னுடைய சிற்றப்பா தான் என்னை படிக்க வைத்தார்.ஆறுமுகனேரி. என்னுடைய தந்தை மார்சிலின் விறகு வியாபாரம் செய்துவந்தார்.
என்னுடைய அப்பாவின் மரணத்திற்குப் பின் “சொந்தமா தொழில் நடத்த எல்லாராலயும் முடியுமா?” “ஆழம் தெரியாம காலை விட்டா இப்படித்தான்”… என்பது போன்ற ஊராரின் விமர்சனங்கள் என் காதுபடவே விழுந்தன. இதன் பாதிப்பால் நன்றாகப் படித்து நான் அரசு வேலையில் பணிபுரியவேண்டும் என்பதுதான் என்னுடைய குடும்பத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. எனக்கும் மேலோட்டமாக இப்படியொரு சிந்தனை இருந்தாலும், என் உள்மனதில் ‘சொந்தமாகத்தான் நாம் தொழில் செய்து வற்றிபெற வேண்டும்’ என்னும் வெறி, நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. ஆனால் இதை நான் யாரிடமும் வெளிப்படுத்தவே இல்லை.
சென்னைக்கு வந்து ‘தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக்கில்’, கணிப்பொறி அறிவியல் படித்தேன். அதற்கு முன்பே நான் பட்டப் படிப்பு முடித்திருந்ததால், மத்திய அரசு சார்ந்த ஓர் அரசுப் பணிக்கு விண்ணப்பித்தேன்.
1989-ல் குஜராத்தில் எந்திரவியல் துறையில் வேலைக்கான உத்தரவும் வந்துவிட்டது. இது நடக்கும் காலத்தில் தான் வி.பி.சிங் புதிய கட்சி தொடங்கினார். அரசுப் பணியில் சேர்வதற்கான பயணப்படியும் அளிக்கிறார்கள் என்பதால் மகிழ்ச்சியுடன் குடும்பத்தினர் என்னை வழியனுப்பி வைத்தனர். நான் பேருக்கு அங்கு போய் பணியில் சேர்ந்துவிட்டு, புதிய கட்சியின் தொடக்க விழாவுக்குச் சென்று பார்த்துவிட்டு ஊர் திரும்பி விட்டேன்.
நான் பிறந்த தமிழ்நாட்டில்தான் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக இருந்தது. மொழி தெரியாத அந்த ஊரில் அரசுப் பணியாகவே இருந்தாலும் அதைத் தொடர்வதற்கு நான் விரும்பவில்லை. ‘தவிர்க்க இயலாத காரணத்தினால் பணியில் தொடர முடியாததற்கு வருந்துகிறேன்…’ என்று டெலிகிராம் கொடுத்து விட்டேன். என் குடும்பத்தினருக்குப் பெரிய அதிர்ச்சி. யாரும் என்னிடம் சரியாகப் பேசவில்லை. நானும் சென்னை வந்துவிட்டேன்.
சென்னையில் ஒரு சிறிய கணிப்பொறி சார்ந்த பொருள்களின் விற்பனை நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் பணிக்குச் சேர்ந்தேன். தங்குவதற்கு இடம், என்னுடைய உணவுக்கு என்று அந்தச் சம்பளத்தில் வாழ்க்கை பெரிதும் கடினமாக இருந்தது. மதிய உணவு சாப்பிடுவதே பெரும் சாதனையாக இருந்த காலங்கள் அவை. இரண்டு வேளை மட்டுமே உணவு, ‘நடராஜா’ பயணம் என… ஏறக்குறைய இரண்டு வருடங்கள் அந்தப் பணியிலிருந்ததின் மூலம், ‘கணிப்பொறி சார்ந்த எந்த விஷயத்தை நாம் வியாபாரமாகச் செய்யமுடியும்?’ என்னும் தெளிவு கிடைத்தது.
89-90களில் கணிப்பொறி என்பது மிகவும் அரிதான, அதே சமயத்தில் விலை அதிகமுள்ள ஒரு சாதனமாக இருந்தது. வெகு சிலரே தமிழ் மென்பொருள்களை விற்பனை செய்துவந்தனர். அதன் விலை அன்றைக்கு 32 ஆயிரம் அளவுக்கு இருந்தது. ஆனால் தமிழ் மென்பொருளின் தேவை அதிகம் இருந்தது. எனவே தமிழ் மென்பொருளைத் தயாரித்து அதை மிகவும் குறைந்த விலையில் கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
என்னுடைய இந்த யோசனையை, நான் கணிப்பொறி அறிவியல் படித்த இன்ஸ்டிடியூட்டின் ஆசிரியர் அலெக்ஸாண்டரிடம் சொன்னேன். அவரும் அதற்கு சந்தோஷமாகச் சம்மதித்தார். இருவரும் இணைந்தே ‘சாஃப்ட்வியூ’ என்னும் பெயரில் கணிப்பொறி நிறுவனத்தை சென்னை, நெல்சன்மாணிக்கம் சாலையில் 1990-ஆம் ஆண்டு ஒரேயொரு கணிப்பொறியுடன் தொடங்கினோம். அந்தச் சாலையில் தான் ‘நெல்சன் டைப் ஃபவுண்டரி’ இருந்தது எங்களுக்குப் பெரிய அடையாளமாக இருந்தது. நாங்கள் உருவாக்கிய தமிழ் மென்பொருளுக்கு ‘இன்ஸ்கிரிப்ட்’ என்று பெயர் வைத்தோம். அதை 950 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.
தமிழ் மென்பொருளைத் தயாரிப்பது என்று முடிவானவுடன் அதை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கேற்ற விளம்பரங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம். அன்றைக்கு தினசரிகளில் விளம்பரக் கட்டணம் மிக அதிகம். அப்போதுதான் எங்களின் முயற்சியைக் கேள்விப்பட்டு கடனில் ‘தினமணி’, ‘ஹிந்து’ போன்ற நாளிதழ்களில் விளம்பரம் செய்வதற்கு ‘லியோ அட்வர்டைஸிங்’ முதலாளி முன் வந்தார்.
அவ்வளவுதான் 950-க்கு தமிழ் மென்பொருள் கிடைக்கிறது என்றவுடன் தமிழ்நாடு முழுவதுமிருந்து எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்தன. அறிமுகப்படுத்தும் போதே நாங்கள் 20 வகையான தமிழ் எழுத்துருக்களுடன் மென்பொருளைத் தயாரித்து பதிப்பகத் துறையில் இருப்பவர்களையும் பத்திரிகை நிறுவனங்களையும் கவர்ந்தது. எங்களின் தொழில் படிப்படியாக வளர்ந்தது.
இந்தச் சமயத்தில்தான், என்னுடன் இணைந்த என் ஆசிரியர் அவருடைய சொந்த விருப்பத்தின் காரணமாக வெளிநாட்டுக்குச் சென்று குடியேறும் நிலை ஏற்பட்டது. தனியாளாக என்னுடைய ஊழியர்களுடன் இணைந்து போராட்டம் தொடர்ந்தது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் எங்களின் தமிழ் மென்பொருளுக்குப் பெரும் அங்கீகாரம் பரவலாகக் கிடைத்தது.
1995-ஆம் ஆண்டுதான் வாக்காளர் பட்டியல் முதன்முதலாக கணிப்பொறி மூலம் தயாரிக்கப்பட்டது. அதற்கான தனி மென்பொருளை நாங்கள் தயாரித்தோம். மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் அந்தந்த மாவட்டத்திலுள்ள அச்சகங்களுக்கு ஆர்டர்கள் தருவார்கள். வழக்கமாக மூன்று மாதகாலம் ஆகும் வேலையைப் பத்து நாள்களுக்குள் எங்களை அணுகிய அச்சகத்தாரர்களுக்கு முடித்துத் தரவே, ‘வேலை சீக்கிரம் முடிய சென்னைக்குப் போய் சாஃப்ட்வியூவை அணுகினால் போதும்’ என்னும் நிலைமை உருவானது.
இந்த வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியின் இடையில்தான் என்னுடைய திருமணமும் நடந்தது. மணப்பெண்ணை நான் பார்க்கக் கூட இல்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மிகப் பெரிய வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனக்கு முதன்மையாகத் தெரிந்தது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் அச்சக உரிமையாளர்களும் கணிப்பொறியை வாங்கிவிட்டு அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் இருப்பதைப் பார்த்தேன். கணிப்பொறி என்பது ஓர் ஆங்கிலச் சாதனம் என்னும் மாயை அவர்களிடையே இருந்தது தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கணிப்பொறியை கையாளலாம் என்னும் நிலைமையைக் கொண்டு வர, கணிப்பொறி பயிற்சியை அளிக்கத் தொடங்கினேன்.
‘சாஃப்ட்வியூ கணிப்பொறி பயிலகம்’ என்று பெயர்ப்பலகையைப் பார்த்து, ‘கம்ப்யூட்டரை தமிழில் சொல்லிக் கொடுக்கப் போறாராம்… சரியான லூஸு!’ என்று என் காதுபடவே பேசினார்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்த வில்லை. வாரத்தின் இறுதி நாள்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் அச்சக உரிமையாளர்கள் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். இந்தப் பயிற்சி மாவட்டந்தோறும் கணிப்பொறியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. ‘தினமணி’ வணிக மணி பகுதியிலும் என்னைப் பற்றி வெளிவந்த முகப்புக் கட்டுரையும் என்னை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. தமிழால் நான் உயர்ந்தேன்.
இந்தச் சமயத்தில்தான் தனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை பெருகியது. அவர்களுக்குக் கணிப்பொறி சார்ந்த கிராஃபிக் டிசைனர்களின் தேவை அதிகம் இருந்தது. அதனால் ‘கிராஃபிக் டிசைனர்’ பயிற்சியைத் தொடங்கினேன். இதன் மூலம் எங்கள் நிறுவனத்தின் புகழ் தொலைக்காட்சிகளின் வழியாகவும் உலகம் முழுவதும் பரவியது. இன்றுக்கு சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 64 தனியுரிமை கிளைகளில் ஆண்டிக்கு 10 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். அதில் 25 சதவிகிதம் பேர் வேலை வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
தகவல் தொழில்நுட்பம், கணிப்பொறி சார்ந்த நூல்களைத் தமிழிலேயே பதிப்பித்தும் வருகிறோம். இது தமிழ் வழியில் படிக்கு மாணவர்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றது.
உலகம் முழுவதும் கணிப்பொறியில் அதிகம் பயன்படும் 17ஆவது மொழியாகத் தமிழ் இருக்கிறது! தமிழைப் பொருளாதார மொழியாக மாற்றுவதற்கான என்னுடைய முயற்சியில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். இரண்டு பேரோடு தொடங்கிய சாஃப்ட்வியூவில் இன்றைக்கு 300 பேர் ஊழியர்களாக இருக்கின்றனர். ஆனாலும் இலக்கை எட்டிவிட்டதாக நான் நினைக்கவில்லை. அதற்கான பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!’’ என்றார்.

“Tamil in Digital Media” group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email tominTamil@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

News

Read Previous

அறிவியல் அதிசயங்கள் : செயற்கை மேகம்

Read Next

துபாயில் ர‌ம‌ளானை வ‌ர‌வேற்கும்‌ முப்பெரும் விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *