தமிழரின் நனிநாகரிகம்

Vinkmag ad

தமிழரின் நனிநாகரிகம்

-முனைவர் இராம. இராமமூர்த்தி

முகப்புரை: உலகில் தோன்றிய பல்வேறு இனக்குழுக்களுள் முதன்முதலாக நாகரிகம் பெற்ற இனக் குழுக்கள் மிகச் சிலவே. அவ்வினக் குழுவினரை வரலாற்றாய்வாளர்கள் அவர்தம் மொழிப்பெயரான் சுட்டுவர். ஓரினத்தைக் குறிக்க மற்றெல்லாவற்றினும் மேம்பாடுடைய மொழியே முதன்மையானது. அத்தகைய மூத்த மொழிகளாக மட்டுமல்லாமல் செம்மொழிகளாகவும் விளங்கிய, சிறப்புடைய மொழிகளாகக் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், பாரசீகம், சமற்கிருதம், தமிழ், சீனம் என்பவனவற்றை மொழியியற் பேரறிஞர் ச. அகத்தியலிங்கம் சுட்டுவார். இதனை எண்ணுங்கால் தமிழர்கள் உலகின் மூத்த குடிகள் மட்டுமல்லர்; நாகரிகத்தால் மேம்பட்டவருமாவர். இதனைக்,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி.
 (புறப். வெண்பா மாலை. கரந்: 14) எனக் கூறுகின்றது புறப்பொருள் வெண்பா மாலை.

அவ்வடையாளக் கூறுகளை அகம், புறமென இருபாற்படுத்தி இக்கட்டுரைக்கண் காணலாம். இக்கட்டுரை சுருங்கியதாகலின் ஒரு சில சான்றுகளே காட்டப்படுகின்றன. உலக மொழிகள் எல்லாம் எழுத்திற்கும், சொல்லிற்கும் மட்டுமே இலக்கணங்களைக் கண்டன. எம் தமிழ்மொழியோ இவற்றொடு வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமையுடையது. அதுவே பொருளிலக்கணமாம். எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிக்கும் முழுமையாக இலக்கணம் உரைத்த நூல் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமாகும்.

அகத்திணை காட்டும் வாழ்வியற் கூறுகள்: தொல்காப்பியர் வாழ்வை அகம், புறமென இருபாற்படுத்துவர். அகமாவது, கைக்கிளை முதலாப் பெருந்திணை ஈறா எழுவகைப்படும். கைக்கிளை என்பது முதிராக் காதலெனவும், ஒருபாற் காதலெனவும், சிறுமை பற்றிய உறவெனவும் விளக்குவர்; பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். ஏனைய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகும். இத்திணைப் பாகுபாடு நிலத்தின் அடிப்படையில் அமைந்தது; ஒழுக்க இயல்பினையும் விளக்குவது.

இத்திணைகள் முதல், கரு, உரி என மூவகைப்படுத்தப்படுகின்றன. நிலமும் காலமும் முதற்பொருள்; தெய்வம், உணவு, மக்கள் முதலியன கருப்பொருள்; ஒழுக்கமே உரிப் பொருளாம். இவ்வொழுக்கத்தினைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என வகைப்படுத்துவர் இலக்கணிகள். ஒத்த தலைவனும், தலைவியும் ஒருங்கிணைந்து இன்புற வாழ்வது அகமாம். இவையெல்லாம் ஆரியர் முதலாய பிற தேயத்தார் அறியாதன.

இக்காதல் வாழ்வைக் களவெனவும், கற்பெனவும் இருவகைக் கைகோளாகக் காட்டுவர். திருமணம் செய்துகொண்டு இணையராக வாழ்வதற்கு முன்னர்த் தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு, காதலித்து வாழ்வது களவொழுக்கமெனப்படும் (களவு = மறைவான ஒழுக்கம்). ஊரும், தமருமறிய மணம் செய்துகொண்டு வாழ்வது கற்பொழுக்கம். களவின்றியும் மணம் கூடுதல் உண்டு. மணவிழாக்கள் (வதுவைச் சடங்குகள்) பின்னர்த் தோன்றியன.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரண மென்ப”
 என்பது தொல்காப்பியம்.

திருமணச் சடங்குகள்: வதுவைச் சடங்குகள் பற்றிய விரிவான செய்திகள் தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் இடம்பெறவில்லை. எனினும், அகம் 86-ஆம் பாடலில் நல்லாவூர் கிழார், தமிழர் திருமணமுறையைச் சுட்டியுள்ளார். அது வருமாறு:

…புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர….(அகம்: 86)

இவ்வகப்பாடல் பண்டை நாளைத் தமிழர் திருமணமுறையை நன்கு விளக்கும்.

இத்திருமணத்தில் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டுதலும், தீவலம் வருதலும், மங்கலநாண் அணிவித்தலுமாகிய வடவர் மணமுறை இடம்பெறவில்லை என்பது காண்க. இந்நிகழ்வுகள் முதன்முதலாகச் சிலம்பில்தான் முகங்காட்டுகின்றன. இனி, வேறுசில செய்திகளோடு அகப்பகுதியை நிறைவு செய்வோம்.

சில வழக்கவொழுக்கங்கள்: இல்லுறை மகளிர் மாலைக் காலத்தில் தம் இல்லங்களில் நறுநெய்பெய்து அகல்விளக்கேற்றினர். இல்லுறை தெய்வங்களை நெல்லும் மலரும் தூவி வழிபட்டனர். போர் காரணமாகவோ, பிறவாற்றானோ தலைவனைப் பிரிந்த தலைவி பிரிவாற்றாமையான் வருந்தும்போது முதுபெண்டிர் அவளுக்கு இன்சொல்கூறி ஆற்றுவிப்பர். பண்டை நாளில் நெல், கழங்கு முதலியவற்றான் கட்டுவிச்சி குறி கூறுதலும், நற்சொல் (விரிச்சி) கேட்டலும் (இன்னே வருகுவர் தாயர்: முல்லைப் பாட்டு) இவைபோல்வன பிறவும் தமிழர் வாழ்வில் இடம்பெற்றுள்ளன.

புறம் காட்டும் வாழ்வியற் கூறுகள்: காதலும் போருமே தமிழர்தம் அடையாளங்கள் என்பர். ஆயினும், புறமென்பது போரை மட்டும் குறிப்பதில்லை. அரசு, வாணிகம், கல்வி, கொடை, அறமென வேறுபல் செய்திகளையும் உள்ளடக்கியதே புறமெனப்படும். முதலில் தமிழர்தம் போர்ப் பண்பினைக் காண்போம்.

puram.4போர் முறைகள்: போர் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் புறத்திணையியலில் ஏழு திணைகளாக வகுத்துக் கூறியுள்ளார். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என்பன. தமிழர்களின் போர் முறை அறநெறிப்பாற்பட்டது. போரால் தீங்குகள் நேராமல் காக்கப்படவேண்டியவர்களது பட்டியலைப் புறம் விரிவாகக் கூறுகின்றது.

”ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென…”
 (புறம்: 9)

அத்தொடு போர் முறையில் வடவாரியர்க்கும் எம் தமிழர்க்கும் மிகப் பெரிய வேறுபாடுள்ளது. வடவர்கள் போர் தொடங்கும் முன்னும், போரில் வெற்றிபெற வேண்டியும் பல்வேறு வேள்விகளைச் செய்து பலிதருவர். மேலும், இந்திரன், அக்னி, வருணன், பிரமன், விஷ்ணு போன்ற தேவர்களிடம் பகையை வெல்லப் பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போன்ற போர்ப்படைகளை வேண்டிப் பெறுவர். (காண்க: இராமாயணம், மாபாரதம் போன்ற நூல்கள்). இம்முறை தமிழ் மறவர் அறியா ஒன்றாகும். நம் புறநூல்களில் தமிழர் போர் முறையை நன்கறியலாம். தமிழர்கள் தம் தோள்வலியையும், வாள்வலியையும் நம்பியே போர்மேற்சென்றனர்; வெற்றியும் பெற்றனர்.

நடுகல் வழிபாடு: போரில் இறந்துபட்ட வீரர்கள் நினைவாகக் கல்நட்டு, Nadukalஅக்கல்லில் இறந்தாரின் பீடும் பெயரும் பொறிப்பர். அதற்குக் கள் முதலியவற்றை வைத்துப் படைத்து வழிபாடு செய்வர். இதனடிப்படையிலேயே சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல்லெடுத்து நீர்ப்படுத்தி வழிபாடாற்றப் பத்தினிக்கோட்டம் அமைத்தான். இதனையே ஆசிரியர் தொல்காப்பியரும், “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல், சீர்த்த மரபில் பெரும்படை வாழ்த்தலென்று”(தொல்:பொருள்: புறத்: 5) விளங்கக் கூறுவார். இதுவே இற்றை நாளில் ’கல் நிறுத்துதல்’ எனும் ஈமச்சடங்காக மாறியுள்ளது.

கல்விச் சிந்தனை: தமிழர், கற்றோரையும் புலவர் பெருமக்களையும் பெரிதும் போற்றியுள்ளனர் என்பதனைப் புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களான் அறியலாம். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” எனத் தொடங்கும் புறப்பாடலில் (எண்:183) கல்வியின் சிறப்பைப் பரக்கக் கூறியுள்ளான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வஞ்சினங்கூறும் காலை, “புலவர் பாடாது வரைகவென் னிலவரை” (புறம்: 72) எனக் கூறியுள்ளதை எண்ணுக. புலவரைப் போற்றும் பண்பு நலனை இப்பாடல் நன்கு புலப்படுத்தும். மேலும், “சான்றோர் சான்றோர் பால ராப” என்ற அடியும், “செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” என்ற அடிகளும் அந்நாளைய தமிழ் மாந்தர் கல்வியின்மாட்டு எத்துணை மதிப்புக் கொண்டிருந்தனர் என்பதைத் தெள்ளிதிற் புலனாக்கும்.

கொடைப் பண்பு: பொதுவாகத் தமிழரும், குறிப்பாகத் தமிழ் மன்னர்களும் கொடைநலம் வாய்க்கப் பெற்றவர் என்பதனைச் சங்க நூல்கள் அனைத்தும் கூறுகின்றன. தமிழர்கள், கொடையை வாணிக நோக்கிலோ, பயன்கருதியோ செய்தாரிலர்.

”இம்மைச் செய்தன மறுமைக் காமெனும்
அறவிலை வாணிகன் ஆஅய் அலன்…”   
(புறம்: 134)

”எத்துணை யாயினும் ஈதல் நன்றென             avvai
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர், வறுமை நோக்கின் றவன்கை வண்மையே.” 
(புறம்: 141)

”செல்வத்துப் பயனே ஈதல்” (புறம்: 186)

”ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் தனெதிர்
கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று” (புறம்: 204)

மேலே காட்டிய புறப்பாட்டடிகள் தமிழர்தம் கொடைச் சிறப்பினை நன்கு புலப்படுத்தும்.

பிற செய்திகள்: தமிழர்கள் புகழெனின் உயிரும் கொடுப்பர்; பழியெனின் உலகே பரிசிலாகக் கிட்டினும் அச்செயலைச் செய்யார். வலியரென வழிமொழியார்; மெலியரென மீக்கூறா இயல்பினர். மக்கட்பேற்றினைப் பெரிதும் மதிப்பவர். மன்னரேயாயினும் அவர் செய்யும் தவற்றினைக் கண்டிக்கும் திறமுடையார் தமிழர். நட்புச் செய்தாரைப் போற்றும் திறனர் நம்மனோர். இன்னோரன்ன இனியநற் பண்புகளான் தமிழர் வாழ்வு பொலிவு பெற்றது.

முடிப்புரை: ஈண்டுக் காட்டப்பட்டவை தமிழர்தம் நற்பண்புகளில் மிகச் சிலவே. கூறாது விடப்பட்டனவே மிகுதியானவை. தமிழர்தம் நனிநாகரிகத்தைக் கண்டறிய நம் பண்டைத் தமிழ் நூல்கள் பெரிதும் துணை நிற்பன. அவற்றைக் கற்போம்; அவனியில் நீடுபுகழ் சேர்ப்போம்.

வெல்க தமிழர் நாகரிகம்!

About the Author

முனைவர் இராம. இராமமூர்த்திமுனைவர் இராம. இராமமூர்த்தி

முனைவர்.இராம. இராமமூர்த்தி அவர்கள் தமிழில் முனைவர் பட்டமும் (Ph.D.), கல்வியியலில் முதுகலைப் பட்டமும் (M.Ed.) பெற்றவர். முதன்மைக் கல்வி அலுவலராகப் (Chief Educational officer) பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவருபவர். தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில் ஆழங்காற்பட்ட புலமையுடைய இவர், 4 நூல்களும், 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதி வெளியிட்டுள்ளார். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறமை கொண்ட இவர், சைவ சித்தாந்த நெறிகளில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் உடையவர். வேளாக்குறிச்சி ஆதினப் புலவர் என்ற பட்டமும், சமய போதனா ரத்தினம் என்ற பட்டமும் அண்மையில் பெற்றவர்.

News

Read Previous

எல்லாம் தமிழிலே!

Read Next

பழகு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *