தண்ணீர் பிடிக்க ஏடிஎம் மெஷின்

Vinkmag ad
தண்ணீர் பிடிக்க ஏடிஎம் மெஷின்
பேராசிரியர் கே. ராஜு

வறட்சி தாண்டவமாடும் மரத்வாடா பகுதியில் பல மைல்கள் தூரம் நடந்துசென்று ஒரு பானை தண்ணீர் பிடித்துவர வேண்டிய நிலையில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் ஒவ்வொரு கிராமத்திலும் பார்க்க முடியும்.
“நீருக்காய் அவள் நடந்த தூரத்தை / ஒரு நேர்கோட்டில் இழுத்தால் / பூமத்திய ரேகையாகிப் போகும்”
என்கிறது ஒரு கவிதை. ஆனால் அவரங்காபாத் நகரத்தின் அருகில் உள்ள படோடா என்ற சிறிய கிராமத்தின் கதை வேறு. சுற்றிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் இருந்தாலும் இந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள தண்ணீர் ஏடிஎம்-மிற்குச் சென்று தங்களுடைய பங்கு குடிநீரை எடுத்து வருகின்றனர். பணத்தைவிட தண்ணீர் மதிப்புமிக்கது என்ற  அருமையான பாடத்தை படோடா கிராம மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர். நீரைப் பயன்படுத்துவது குறித்த விதிகளை அவர்கள் சரியாகப் பின்பற்றுகின்றனர். அங்கு தண்ணீருக்கான தணிக்கை முறைகள் கறாரானவை. அனைத்து வீடுகளிலும் மின்சாரத்திற்கு மீட்டர் இருப்பது மாதிரி தண்ணீருக்கும் மீட்டர்கள் உண்டு. கிராமத்தில் உற்பத்தியாகும் ஒவ்வொரு சொட்டு கழிவு நீரும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. நீரைப் பாதுகாப்பதில் ஒரு முன்னுதாரணத்தை படோடா உருவாக்கிவிட்டதால் மரத்வாடா பகுதியில் உள்ள மற்ற கிராமங்கள் அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன.
“இதெல்லாம் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்கவும் கழிவுநீர் உட்பட ஒரு துளி நீரும் கிராமத்தைவிட்டு வெளியேறாமல் தடுக்கவும் நாங்கள் கடந்த 10-12 ஆண்டுகளாக முயன்று வந்தோம். கடுமையான கட்டுப்பாடுகளின் விளைவாகவே இங்கே தண்ணீர் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மரத்வாடாவில் உள்ள வறட்சி மனிதனால் உருவாக்கப்பட்டது. கிடைக்கும் தண்ணீரை திறம்படப் பயன்படுத்தவோ மறுசுழற்சி செய்யவோ மக்கள் தவறிவிட்டனர். வறண்ட நிலத்தில் அதிசயங்களை நிகழ்த்த இஸ்ரேலினால் முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது?” எனக் கேட்கிறார் பாஸ்கர் பெரே-பட்டீல். இவர்தான் 22 மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ள படோடா மாடலை உருவாக்கியவர். பட்டீல் 7-வது வரை மட்டுமே படித்தவர். உள்ளூர் தாதாவாக இருந்து மக்களை மிரட்டி வாக்குகள் வாங்கி பஞ்சாயத்துத் தலைவர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கு முன் பணபலமும் அடியாள் பலமும் இருந்ததால்தான் மக்கள் தன்னிடம் பயப்பட்டனர் என்பதை அறிந்து மனம் மாறியவர். திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முதலில் மாற்ற முயற்சி எடுத்தார். பின்னர் கிராமத்தின் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்க முன்வந்தார். முதலில் மக்கள் அவருக்குப் பயந்துகெண்டு அவர் பின் சென்றனர். ஆனால் விரைவிலேயே அவரது நல்ல நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கினர்.
கிராமத்தின் வழியாக முன்னர் ஓடிக்கொண்டிருந்த காம் ஆறு சாக்கடை நீர், ஆலைக்கழிவுகள் கலந்ததன் காரணமாக சுருங்கி சிற்றோடையாக மாறியிருந்தது.  கிணறுகளில் தண்ணீர் இல்லை. அரசின் திட்டங்கள் போதுமான நீரைத் தருபவையாக இல்லை. “எனவே வேறு தீர்வுகளைத் தேட முடிவு செய்தோம். நீரோடையின் குறுக்கே பல தடுப்பணைகளைக் கட்டி மழைநீரைச் சேகரிக்கத் தொடங்கினோம். கிராமத்தை விட்டு ஒரு சொட்டு மழைநீரும் வெளியே செல்லாமல் தடுத்தோம்.  ஊற்றுக் கசிவு நீர்நிலைகளை புதுப்பித்ததால் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்தது” என்கிறார் பெரே பட்டீல். கிராமத்தில் கிணறுகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்ததும் நீர் வடிகட்டும் ஆலையை பஞ்சாயத்து நிறுவியது. தண்ணீர் மீட்டரும் ஏடிஎம் மெஷினும் வந்தன. இந்தத் திட்டங்களுக்கு அரசின் உதவி இருந்தாலும் முக்கியமான நிதியுதவி கிராம மக்களிடமிருந்தே வந்தது. இன்று ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தும் 581 குடும்பங்களுக்கும் 20 லிட்டர் சுத்தமாக வடிகட்டிய தாதுநீரை பஞ்சாயத்து இலவசமாக வழங்குகிறது. மேற்கொண்டு நீர் வேண்டும் என்றால் 5 ரூபாய் செலுத்தி 1000 லிட்டர் நீரைப் பெறலாம். வருடம் முழுதும் ஒரு நாளில் 24 மணி நேரமும் ஏடிஎம் மெஷின் இயங்குகிறது. அது எப்போதும் காலியாக இருக்காது. எங்களுடைய மொத்த உழைப்பையும் அதில் செலுத்தியிருக்கிறோம் என்கிறார் ஏடிஎம் கார்டை  அதற்குரிய துளையில் செலுத்தி 20 லிட்டர் நீரை எடுக்கும் ரவீந்திர ஜாதவ் என்ற இளைஞர்.  அரசு கொடுக்கும் நீரை துணி துவைக்கவும் வீட்டைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழக கிராமங்களும் நகரங்களும் இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Attachments area

News

Read Previous

முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்

Read Next

அனுபவமே குரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *