டைட்டன் உபகிரகத்தில் ஆரம்பகால உயிரின அடையாளம்…?

Vinkmag ad
அறிவியல் கதிர்

டைட்டன் உபகிரகத்தில் ஆரம்பகால உயிரின அடையாளம்…? 
பேராசிரியர் கே. ராஜு

வேற்று கிரகங்களில் பூமியைப் போல உயிரினங்கள் வாழ சாத்தியம் உள்ளதா என்ற தேடல் வெகுகாலமாகவே நடந்து வருகிறது. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, சனி கிரகத்தின் ஆகப்பெரிய உபகிரகமான டைட்டனின் வளிமண்டலத்தில் உயிரின மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமே. சனி கிரகத்தையும் அதன் உபகிரகங்களையும் காசினி என்ற விண்கலம் 2004-ம் ஆண்டிலிருந்து கண்காணித்து சேகரித்த தகவல்களை ஆய்வு செய்த பிறகு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த அறிவியலாளர்கள் குழுவின் தலைவர் ரவி தேசாய் அண்மையில் இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார். டைட்டனின் வளிமண்டலத்தில் எதிர்மின்னூட்டமுற்ற கார்பன் சங்கிலி நேர்மின்துகள்களை (carbon chain anions) அறிவியலாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இந்தத் துகள்கள் மேலும் சிக்கலான மூலக்கூறுகளின் கட்டுமானத் தொகுதிகளாக இருக்கலாம் என்றும் அவை பூமியின் ஆரம்பகால உயிரினங்கள் தோன்றுவதற்கு அடிப்படையானவையாக இருந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காசினியின் குருதிநீர் நிறமாலைமானி (plasma spectrometer) டைட்டனின் மேல்வளிமண்டலத்தில் தரைப்பரப்பிற்கு 950-1300 கிலோமீட்டருக்கு மேல் சுற்றிவந்து மேற்கண்ட தகவல்களைச் சேகரித்துத் தந்தது.

“ஒரு கிரகத்தின் மேல் உள்ளதைப் போன்ற வளிமண்டலத்தில் முதன்முறையாக கார்பன் சங்கிலி மின்துகள்களை சந்தேகத்திற்கிடமின்றி அடையாளம் கண்டிருக்கிறோம். அவற்றைவிட பெரிய மேலும் சிக்கலான உயிரி மூலக்கூறுகளை வளர்த்தெடுப்பதில் இது முதல் படி என நாங்கள் கருதுகிறோம்” என்கிறார் ரவி தேசாய்.

இன்னொரு முக்கியமான கண்டுபிடிப்பில் சிலியில் உள்ள அல்மா நிறுவனத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்திய ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு டைட்டனில் வினைல் சயனைட் எனும் பொருளின் மூலக்கூறுகளின் இருப்பை உறுதி செய்துள்ளது. பூமியில் உள்ள உயிரினங்களுடைய சவ்வினைப் போன்றதொரு பொருளை உருவாக்க வினைல் சயனைட் பயன்படக்கூடும். பூமியின் ஆரம்பகால வளிமண்டலத்தில் இருந்த வேதியியல் கட்டமைப்பைப் போன்றது இது என்கின்றனர் அக்குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள். டைட்டனில் உள்ள திரவ மீத்தேனும் அளவுக்கதிமான குளிர்ச்சியும் வினைல் சயனைட் மூலக்கூறுகளின் மீது வினைபுரிந்து பூமியில் உள்ள உயிரணுக்களில் காணப்படும் கொழுப்பு ஈரடுக்குகளைப் போன்ற தாள் கட்டமைப்புகளை உருவாக்க முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.

டைட்டனின் வளிமண்டலத்தில் சிக்கலான அமைப்பு கொண்ட மூலக்கூறுகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. நைட்ரஜனும் மீத்தேனும் அடர்த்தியாக உள்ள டைட்டனின் வளிமண்டலம் சூரியக் குடும்ப அமைப்பின் மிக சிக்கலான வேதியியல் அமைப்பினை ஒத்திருக்கிறது. சூரிய ஒளியின் ஆற்றலும் சனி கிரகத்திலிருந்து ஆற்றல்மிகு துகள்களும் டைட்டன் உபகிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன், மீத்தேனில் பட்டு நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன் ஆகியவற்றின் மீது வினைபுரிந்து மேலும் சிக்கலான கூட்டுப் பொருட்களை உருவாக்குகின்றன. இந்தப் பெரிய மூலக்கூறுகள் படிப்படியாக வளிமண்டலத்தின் கீழான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து உயிரி ஏரோசால்களின் அடர்த்தியான மூட்டத்தை உருவாக்குகின்றன. இறுதியில் அவை டைட்டனின் தரைப்பகுதியை அடைகின்றன. டைட்டனின் வளிமண்டலத்தில்  நடைபெறும் செயல்கள் ஆரம்பகால பூமியில் ஆக்சிஜன் உருவாவதற்கு முன் நடைபெற்ற செயல்களை ஒத்திருப்பதாக  விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமியில் உயிரினம் உருவானதற்கு முன் நடைபெற்ற வேதியியல் மாற்றங்களைப் புரிந்துகொள்ளக் கிடைத்த பெரிய சோதனைச் சாலையாக டைட்டன் உபகிரகத்தை எடுத்துக் கொள்ள முடியும். மற்ற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் பிற கிரகங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும் இந்த ஆய்வுகள் உதவக் கூடும்.
                (உதவிய கட்டுரை ; 2017 அக்டோபர் ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை) 

News

Read Previous

தமிழில் பேசி ஆங்கிலேய நீதிபதியைத் திணறடித்த ஆறுமுக நாவலர்! பிறந்ததினச் சிறப்புப் பகிர்வு!

Read Next

பூண்டை வறுத்து சாப்பிட்டால்……???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *