சுயமரியாதையே வாழ்வே சுகவாழ்வு..

Vinkmag ad

சுயமரியாதையே வாழ்வே சுகவாழ்வு..”
……………………………………………………………

‘மரியாதையாகப் பேசு’ ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ இவை போன்ற சொற்றொடர்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டு இருக்கிறோம்.

சரி, மரியாதை என்றால் என்ன?

நம்முடைய நற்குணங்கள் நற்செயல்கள் நன்னடத்தை நமக்குச் சமுதாயத்தில் தேடித்தரும் நன்மதிப்புதான் மரியாதை ஆகும்.

பணம், பதவியினால் வரும் மதிப்பு நிலையானதன்று; பணமும், பதவியும் நம்மை விட்டுச் செல்லும்போது, மதிப்பும்,மரியாதையும் நம்மை விட்டுச் சென்று விடும்.

ஒருவர் உடல்நலம் குன்றி ஓய்வு எடுக்கும் போது, நாம் அவரை மரியாதை நிமித்தமாக நலம் விசாரிப்பது மனித நேயம் மிக்க செயல்.மனிதப் பண்பாடும் அதுதான்.

ஆனால் செல்வமும், செல்வாக்கும் உடையவரை சிலர் அடிக்கடி சந்திப்பதை நாம் பார்க்கிறோம்.

ஒரு சாதாரண மனிதரை அப்படி யாரும் சந்திப்பது இல்லையே ஏன் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பணம் , பதவி படைத்தோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் ஒரு சுயநலம் இருக்கிறது.

இன்று ஒரு வணக்கம் போட்டு வைத்தால், நாளை ஒன்றுக்குப் பயன்படும் என்னும் நினைப்பில் தன்னலம் இருக்கிறது அல்லவா.?

காலில் நெடுஞ்சான் கிடையாக விழுவதை ஒரு கலையாகக் கற்று ஒரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு ஒரு நண்பர் வந்து விட்டார்.

உனது உயர்நிலையை எண்ணியாவது இனிமேல் காலில் விழுவதைக் கைவிடுக என்று அவருடைய நண்பர்அறிவுரை அவருக்கு கூறினார்.

நான் இப்படி விழுந்து,விழுந்துதான் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதை மட்டும் என்னால் கைவிட முடியாது’ என்று மறுமொழி சொன்னார்.

காலமாறுதலில்,எதிர்பாராதவை சில நடக்கக்கூடும். இப்படிக் காலில் விழுந்து கிடப்பவர்களை சிலர் விரும்பி ,வரவேற்று மகிழலாம்.

ஆனால் காலப்போக்கில் காலைத்தொட்டுத் தொழுது கிடப்பவன், காலை வாரி விடவும் தயங்க மாட்டான்.

காலில் விழுந்து கிடப்பவனை அவனது உண்மையான பண்பு அறிந்துவர்கள் ஒதுக்கி விடுவதும் ஒரு கட்டத்தில் நடக்கக் கூடும்.

நடிப்பும் நய வஞ்சகமும் நீண்ட நாள் வெற்றி பெற முடியாது அல்லவா?

சுய மரியாதை இழந்து, குனிந்து-கும்பிட்டுக் கிடப்பவர்கள் வாழ்வில் ஒருநாள் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்படும்,

நாம் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்து நமது சுய மரியாதையைக் காயப்படுத்தி விடக் கூடாது.

ஆம்.,நண்பர்களே..,

நம்முடைய நற்செயல்கள், நன்னடத்தை குறித்து நாம் பெருமையும், பெருமிதமும் கொள்வது நமக்குச் சுய மரியாதை உணர்வை உருவாக்கும்; அடிமை மனத்தை அகற்றும்.

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு,எழிலார்ந்த ஏற்றம் மிகு வாழ்வு,

உயிரனைய உரிமை வாழ்வு என்பதை மனதில் நிறுத்தி மாண்புற வாழ்வோம்.

தன்மானத்தோடு தலைநிமிர்ந்து தொண்டறம் செய்து மனிதநேயத்தோடு வாழ்வோம்!(உடுமலை சு.தண்டபாணி)

News

Read Previous

உடலின் ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் பச்சை சுண்டைக்காய்…

Read Next

உணர்வுகளால் உயிர்த்தெழுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *