சிரிப்புக்கு முடிவுரை கிடையாது

Vinkmag ad
அஞ்சலி: எழுத்தாளர் ஜ.ரா சுந்தரேசன் 
 
சிரிப்புக்கு முடிவுரை கிடையாது 
எஸ் வி வேணுகோபாலன் 

ழுபது – எண்பதுகளில் தமிழ் வார இதழ்களைப் படித்துக் கொண்டிருந்தவர்களில்  அப்புசாமி, சீதாப்பாட்டி பாத்திரங்களைக் கேள்விப்படாத வாசகர் -யாரும் இருந்திருக்க முடியாது. பாக்கியம் ராமசாமி, ஜெயராஜ் இருவரும் சேர்ந்து பட்டையைக் கிளப்பிய சாம்ராஜ்யம் அது. பெருக்கெடுத்தோடும் அந்த நகைச்சுவை ஆற்றில் ஒரு கையள்ளிப் பருகி அலுப்பு தீராமல் மீண்டும் மீண்டும் படிக்கத் துடிக்கும் தலைமுறை ஒன்றென்ன இரண்டு, மூன்று இருந்திருக்கக் கூடும்.

ஜலகண்டாபுரம் ரா சுந்தரேசன் என்னும் ஜ ரா சுந்தரேசன் பல படைப்பாக்கங்களை வழங்கியும், பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் அவர் அள்ளிவழங்கிய ஹாஸ்ய கதைகளில் வரும் அப்புசாமி தாத்தா, சீதா பாட்டி பாத்திரங்கள் இறவா வரம் பெற்றவை. வயசுக்குப் பொருந்தாத நடுத்தர வயது ஆட்கள் மற்றும் பொடிப்பையன்களோடு தெருவில் லூட்டி அடிக்கும் வயதான பாத்திரம்தான் அப்புசாமி. பிறக்கும்போதே தாத்தாவாகப் பிறந்த மாதிரி ஒரு கேரக்டர். தும்பைப் பூ தோற்கும் வெள்ளை முடி, அழுக்கு ஜிப்பா, அதைவிட அழுக்கு வேஷ்டி, ஒரு தேசத்தின் பிரதமரை விட அதிக அன்றாடக் கடமைகள், அலுக்கவே அலுக்காத உடான்ஸ் வேலைகள், சபாலங்கிரி கிரி கிரி சைதாப்பேட்டை வடகறி ரேஞ்சுக்கு தடாலடி திட்டங்கள், தவறாமல் ஒவ்வொருமுறையும் அதில் போடும் குட்டிக்கரணங்கள், பிசகாமல் அந்தத் திட்டங்களைத் தவிடு பொடியாகும் பாட்டியின் அசாத்திய உயர்மட்ட தந்திர உத்திகள், இல்லாத மீசையில் மண் ஒட்டாத மண்ணை உதறிவிட்டு மீண்டும் அடுத்த திட்டத்தை நோக்கி அப்புசாமி முன்னெடுக்கும் ஜாலங்கள், ஓயாமல் அவரை உசுப்பி விட்டுக்கொண்டே இருக்கும் ரசகுண்டு, பீமாராவ் அடிக்கும் கும்மிகள்……
ஆக்ஸ்ஃபோர்டு அளவுக்கு ஆங்கிலத்தை நுனிநாக்கில் லாவகமாகப் பேசும் சீதாப் பாட்டி ஒரு பக்கம், பம்மல் கே  சம்பந்தம் லெவலில் தமிழை நடுங்க வைக்கும் அப்புசாமி தாத்தா மறுபக்கம். டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரசனை. அந்தந்த காலகட்டத்தில் பெரிதாகப் பேசப்படும் எந்த விஷயத்தையும் எடுத்துக் கொண்டு அதன் மீது பின்னப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் பலவும். மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது மாதிரி, ஜெயராஜ் கதைக்கு வரைந்தாரா, ஜெயராஜ் ஓவியத்திற்கு எழுதப்பட்ட கதையா என்பது மாதிரி அப்புசாமி, சீதாபாட்டி சித்திரங்களும், கதைகளும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்துவிட்டவை….
பொய் சொல்வது, திருடுவது, ஏய்ப்பது போன்ற உபதொழில்களை மிகுந்த சிரத்தையோடு செய்துவருவதே, அப்புசாமி பாத்திரத்தின் உன்னதமான நற்பண்பு. அதை உட்கார்ந்த இடத்திலிருந்து ஊகித்து மடக்கி குறுக்கே காலை நீட்டி தடால் என்று  விழவைத்து கைதட்டி ரசித்துக் கொண்டாடி ஒயிலாக அங்கிருந்து வெளியே நடைபோடும் பாணி, சீதா பாட்டியுடையது. பிரபல
கிரிக்கெட் சீசன் நேரத்தில் ஒரு முறை, பாக்கியம் ராமசாமி அட்டகாசமான கதைக்கருவை எடுத்துக் கொண்டார். பிரபல ஆட்டக்காரர்கள் கையெழுத்து போட்ட மட்டைகளை சிறப்பு விற்பனை என்று அடித்துவிட்டுக் கொண்டிருப்பார். “ரொம்ப நேரமாச்சு.., இன்னும் நான் கேட்ட பேட் வரல தாத்தா” என்று ஒரு பையன் செட்டு சேர்த்துக்கொண்டு வந்து காத்திக் கொண்டிருப்பான். அவர் உடனே, என்ன கையெழுத்து என்று கேட்பார். பையன் கவாஸ்கர் என்பான். அது இருக்கிறதிலேயே  கஷ்டமான கையெழுத்து, கொஞ்சம் லேட் ஆவத்தான் செய்யும் என்று சொல்லி மாட்டிக் கொள்வார் தாத்தா.
ஒரு கதையில் திருட்டுச் சங்கிலி ஒன்று எங்கோ கிடந்ததை, தமது காதலி கீதாப்பாட்டிக்குக் கொடுப்பார், அம்சமாக அவள் கழுத்தில் போட்டுப் பார்ப்பாள். அடுத்த சில நிமிடங்களுக்குள் போலீஸ் வந்து நிற்கும், “இந்த பிராம்மணன் கொண்டு வந்து கொடுக்கறச்சே அப்பவே தீச வாசனை அடிச்சதேன்னு நெனச்சேன்..”என்று கீதாப்பாட்டி சொல்லும் டயலாக் அமர்க்களம்.
சீதா அவுர் கீதா திரைப்படம் (தமிழில் பின்னர் வாணி ராணி என்று வந்தது) பெரிதாக ஓடிக்கொண்டிருக்கும்போது, அப்புசாமிக்கு ஒரு டபுள் கண்டுபிடித்தார் பாக்கியம் ராமசாமி. அவரைப்போலவே ஆனால், மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் இருப்பதை ஒருமுறை அப்புசாமி பார்த்துவிடுவார், எப்படியாவது அங்கே கொஞ்சம் புகுந்து ஆளலாம், ஆட்டைய போடலாம் என்று நுழைகையில் பெரியவரது அறைக்குள் நுழையும்போது பின்னாலேயே அவரது நாயும் நுழைந்துவிடும்….உர்ர் ர் ர் ர் ர் ர் ர்…என்ற உறுமலோடு, நீ எங்க முதலாளி அல்ல டூப் என்று கண்டுபிடித்துவிடும். நாயைக் கடக்காமல் அறையிலிருந்து வெளியேறமுடியாது, அப்புசாமி சட்டென்று ஜன்னலில் கால் வைத்து எகிறி ஹேமமாலினி மாதிரி சீலிங் ஃ பேன் மீது ஏறி உட்கார்ந்து கொள்வார். அந்த இடத்தில் பாக்கியம் ராமசாமி எழுதுவார், “அந்த நாய் அவரை ஒரு கிராஸ்வேர்ட் புதிரைப் பார்ப்பதுபோல் குறுக்கும் நெடுக்குமாகப் பார்த்தது, பின் அசராமல் ஸ்டூல் மீதேறி சுவிட்சை ஆன் செய்தது!”
வ்வொரு முறை மாட்டிக்கொள்ளும் போதும், அவர் சீதேக் கெயவி என்று சவுண்ட் கொடுத்து சவால் விடுவார். ஆனாலும், பாரதி நூற்றாண்டு ஒட்டி, 1982ல் விகடன் இதழில் வந்த கதையில் அவர் மாட்டிக் கொள்ளும் விதமும், இடமும் அராஜகச் சுவை நிரம்பியது. பாரதியார் வீட்டை சுத்தம் செய்து, அதில் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து டிக்கெட் போட்டு செம காசு அடிக்கலாம் என்று தமது சிஷ்ய கேடிகளான ரசம், பீமாவை நம்பி தடல்புடலாக வேளையில் இறங்குவார் அப்புசாமி. விடிந்தால் அமைச்சர் வந்து திறப்புவிழா நடத்த இருக்கிறார், முந்தைய இரவு நேரத்தில் சீதா பாட்டி வந்து முழு கண்காட்சியையும் ஒரு லுக் விடுவார், ஹே ஓல்ட் மேன், ரியலி மார்வலஸ் என்று எதையோ சொல்லி அநியாயத்திற்கு எப்போதும் இல்லாத அளவுக்குத் தாத்தாவைப் பாராட்டிவிட்டுப் போவாள்.
காலையில் அமைச்சர் வந்து திறந்து வைப்பார்.. ஒவ்வொரு பகுதியாக மெதுவாகப் பார்த்து வியந்தபடி நடப்பார். பாரதி அமர்ந்த நாற்காலி, மேசை, எழுதிய அந்தக் காலப் பேனா, வாசித்த பழைய பேப்பர் (எல்லாம் மூர் மார்க்கெட் உபயம் !), அவர் முகம் பார்த்த கண்ணாடி…ஆஹா…ஒண்டர்ஃபுல் ! என்று சொல்ல நினைக்கையில் மகா கோபம் வெடிக்க, வாட் இஸ் திஸ் நான்சென்ஸ் என்று பெருங்குரலெடுத்துக் கத்துவார், தாத்தா ஓடோடிப் போய்ப் பார்த்தால், அங்கே அழகாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வைத்து, பாரதி பார்த்த டிவி என்று எழுதப்பட்டிருக்கும்….அவ்வளவுதான் ஆட்டம் முடிவுக்கு வர, காவல் துறை தனது கடமையைச் செய்து அப்புசாமி அண்ட் கோவை இழுத்துச் செல்லும்போது வெளியே திரண்டு வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் சீதா பாட்டி கண்ணைச் சிமிட்டிக் கொண்டு நிற்பாள்…அடியே சீதேக் கெயவி நேத்து வரப்பவே சந்தேகப்பட்டேனே உன்ன வந்து பாத்துக்கிறேன் என்று மீண்டும் சவாலோடு கதை முடியும்.
ரா சுந்தரேசன், குமுதம் ஆசிரியர் குழுவில் மிக முக்கிய பொறுப்பு வகித்தவர். ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலை, ரா கி ரங்கராஜன், ஜரா சுந்தரேசன் மூவரது முதல் எழுத்துக்களின் தொகுப்பே அரசு பதில்கள் என்று வாராவாரம் வந்து கொண்டிருந்தது. அதில் யார் யார் என்னென்ன பதில் எழுதினார்கள் என்று தெரியாது. ஆனால் குமுதம் பதில்கள் படிக்க அத்தனை ஆர்வம் கொண்டிருந்த காலமது. ஒரு கேள்வி, சோ.கா. பி. ஆ? அதற்குப் பதில் எ.தெ. அப்புறம் அந்தப் பக்கத்தை முழுவதும் உற்றுப்பார்த்தால் கேள்விகளுக்கான புகைப்படங்கள் வரிசையில் சின்னதாக சோனியா காந்தி படம் தெரியும், அதாவது, சோனியா காந்தி பிரதமர் ஆவாரா, கேள்வி, எனக்குத் தெரியாது என்பது பதில்!
யோவ் அரசு, இட்லி வடை சாம்பார் பிடிக்குமா என்ற கேள்விக்கு பதில் எழுதியது ஒருவேளை ஜரா சுந்தரேசனாக இருக்கக் கூடும், பதில் இப்படி இருந்தது; இட்லி வடை வந்து டேபிளில் இறங்கியதும் ஸ்பூன்களைக் கொண்டு அவற்றை ஈவிரக்கமின்றிக் கண்டதுண்டமாக வெட்டவும்….பின்னர் சாம்பாரில் திணறத் திணற மூழ்கடிக்கவும். அப்புறம் பின்வரும் வரிசை கிரமத்தில் சாப்பிடவும்: இட்லி, இட்லி, வடை. இட்லி, வடை, இட்லி. வடை, இட்லி, வடை, இட்லி இட்லி இட்லி, வடை வடை வடை…ஆஹா…ஓஹோ…. இதைப் படித்த காலம்தொட்டு எப்போது ஓட்டலில் இட்லிவடை சாம்பார் ஆர்டர் செய்தாலும் இந்த வரிசையில் சாப்பிடும் உந்துதல் தோன்றிவிடும்.
‘ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய்  மானிடனே’ என்று பாடினார் நம் சந்திரபாபு. நகைச்சுவை உணர்ச்சி வாழ்க்கையில் நழுவ விட்டுவிடக் கூடாதது. எனக்கு மட்டும் ஹாஸ்ய உணர்ச்சி இல்லாமல் போயிருக்குமானால் நான் எப்போதோ தற்கொலை செய்திருப்பேன் என்று மகாத்மா சொன்னதாக வாசித்த நினைவு. சில பத்தாண்டுகளுக்குமுன் கல்கி, தேவன், எஸ்விவி, என நகைச்சுவை எழுத்தாளர்கள் நிறைய இருந்தனர். இப்போது அரிதாகி விட்ட சரக்கு நகைச்சுவை. நகைச்சுவை வாசிப்பு, ரசிப்பு உள்ளத்தின் கவலைகளைத் தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தமாக்கி அதன் வெளிச்சத்தை புன்னகையில், வெடிச்சிரிப்பில் வெளிப்பட வைக்கிறது. அடுத்தவருக்கும் பரவ அனுமதிக்கும் கிருமித் தொற்று சிரிப்பு!
சுந்தரேசன் அவர்களது மறைவு துயருற வைத்தாலும், ஓவியர் ஜெயராஜ் தமது லெட்டர்பேடில் பொறித்து வைத்திருக்கும் அப்புசாமி, சீதா பாட்டி பாத்திரங்களின் உரையாடலில், அவர்கள் அடிக்கும் கூத்துக்களில் வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார் என்ற உணர்வை ஏற்படுத்தவே செய்கிறது. சிரிப்புக்கு முடிவுரை கிடையாது. தொடரும்…..தான்!

News

Read Previous

வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..

Read Next

உன்னால் முடியுமா தம்பி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *