சின்ன சின்ன ஆசை

Vinkmag ad

ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

 

சின்ன சின்ன ஆசை

சிறு வயதில் உங்களிடம் யாராவது, உங்களுக்கு பிடித்த விஷயங்களை, உங்களை மகிழ்ச்சிப் படுத்தும் விஷயங்களை சொல்லச் சொன்னால் என்ன சொல்லி இருப்பீர்கள்.. ஒரு கார்காலத்து மண்வாசணை, ஒரு மெல்லிய தூறல், எங்கோ தென்றலில் இசைந்து வரும் பாடல், வண்ணத்து பூச்சி, அன்றலர்ந்த மலர், பௌர்ணமி நிலவு, குழந்தையின் சிரிப்பு, அலைகளின் ஆரவாரம் … இப்படி நீண்டிருக்கும் உங்கள் பட்டியல். 

எத்தனை வயதானாலும், வாழ்க்கை எத்தனை அனுபவங்களை தந்திருந்தாலும், மனதின் ஏதோ ஒரு மூலையில் உயிர்ப்போடு வீற்றிருக்கும் உங்கள் இள வயது நினைவுகளை சற்றே மீட்டெடுத்து மீட்டிப் பாருங்கள், உங்கள் சின்ன சின்ன ஆசைகள் அது தந்த  நிறைவு உங்களுக்குள் இப்போதும் ஒரு மகிழ்ச்சியாய் ஒரு அழகிய சித்திரம் வரையும். 

நீங்கள் ரசித்து, இலயித்து, அன்று உங்களுக்குப் பிடித்த விஷயங்களை சொல்லும்போதே உங்கள் மனம் எத்தனை சந்தோஷித்தது, உங்கள் முகம் எப்படி மலர்ந்தது என்று நினைத்துப் பாருங்கள். இயற்கை இப்படி எப்போதும் உங்களுக்கான மகிழ்ச்சியை இலவசமாக தான் உங்களுக்கு அள்ளித் தருகிறது. ஆனால் இன்றைய அவசர உலகில் இதையெல்லாம் சந்தோஷம் என்று நினைப்பதே குழந்தைத் தனம், அறியாமை என்று நினைக்கிறீர்கள். அதனால் உங்கள் மெல்லிய உணர்வுகளை கடினமாக உங்களுக்குள் இருத்தி அழுந்திப் போகிறீர்கள். அதையே உங்கள் வளர்ச்சியாக நினைத்துக் கொண்டு உங்களுக்குள் நீங்களே சுருங்கிப் போகிறீர்கள்.

இங்கு மகிழ்ச்சி என்பது விரும்பிய கோர்ஸில் சேர்வதும், விரும்பிய பட்டம் வாங்குவதிலும், விரும்பிய நாட்டில் வசிப்பதிலும் விரும்பிய  நிறுவனத்தில், விரும்பிய வேலை கிடைப்பதிலும் விரும்பிய பொருளை அடைவதில் மட்டுமாக ஒரு மாய மான் வேட்டையில் உங்கள் கை நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது.

மகிழ்ச்சி என்பது செல்வ செழிப்பில் தான் இருக்கிறது, என்று ‘80’ சதவீத மக்களும், ‘பேரும் புகழிலும்’ தான் இருக்கிறது என 50 சதவீதம் மக்களும் அதன் பின்னே ஓடுகிறார்கள் என்கிறது சமீபத்தில் உலகளாவி நடந்த ஆய்வு ஒன்று.

இந்த கல்லூரியில் இந்த கோர்ஸில் சேர்ந்து விட்டால், இந்த நிறுவனத்தில் இந்த வேலையில் சேர்ந்துவிட்டால், இந்த இடத்தில் இந்த வகையில் வீடு வாங்கிவிட்டால், அதுவே மகிழ்ச்சி என்பதாக ஏதோ ஒன்றை மகிழ்ச்சியின் இலக்காக வைத்து, அதை நோக்கிய பயணத்தில் இலக்கற்று அலைகிறது மனம். 

அந்த என்றோ ஒரு நாளுக்காக மூச்சைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியை தள்ளிப் போடும் மனம் அது கிடைக்காமல் போகும் போது, நினைத்தது நினைத்த நேரத்தில்  நினைத்த மாதிரி நடக்காமல் போகும் போது, உடைந்து போவது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். 

ஏதாவது ஒரு பிரச்னை என்றாலும், அது தீரும் வரை, உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் மற்றும், பொழுது போக்கு, சந்தோஷம் என்பவையே taboo வாக ஒரு தவிர்க்கப் பட வேண்டிய விஷயமாக நினைக்கிறீர்கள், அவமானமோ, தோல்வியோ, பிஸினெஸில் நஷ்டமோ அவ்வளவு தான் காற்று கூட புக முடியாதபடி சந்தோஷக் கதவுகளை சாத்தி வைத்து மிரள்கிறீர்கள். 

அந்த பிரச்னை நீங்கும் வரை, அது சரியாகும் வரை, அந்த பிரச்னையை விட்டும் உங்கள் கவனம் சிதறி விடுமோ எனப் பதறுகிறீர்கள். அந்த இடைப்பட்ட கால நேரத்தில் இயல்பாக சிரிப்பதையோ, சந்தோஷிப்பதையோ, குற்றமாக நினைக்கிறீர்கள். இவ்வளவு பிரச்னைக்கிடையே, சந்தோஷமா, மகிழ்ச்சியா, இரசனையா என்று உங்கள் மனதே உங்களை கேட்க அனுமதிக்கிறீர்கள். பிரச்னையை விட்டும் உங்கள் கவனம் சிதறி விடாமல் அதன் தீவீரத்தை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொண்டிருந்தால் தான் உங்களால் உஷாராக இருக்க முடியும் என்று நம்புகிறீர்கள்.

பிரச்னைகளையே மீண்டும் மீண்டும் அசைபோட்டு கொண்டு மனம் ஆறவில்லையே என உங்கள் மனமே உங்களிடம் அங்கலாய்க்கிறது. பிரச்னைகள் சூடான பானம் இல்லை அதை உற்று உற்று பார்த்து ஊதி ஊதி ஆற்றுவதற்கு. அது ஊத ஊத பெரிதாகும் நெருப்புப் பொறி. எந்த பிரச்சினையாக இருந்தாலும் நீங்கள் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்வதை விட்டும் நிறுத்தாமல் செய்து கொன்டிருக்கும்போது உங்களுக்குள் எழும் நிதானமும், தன்னம்பிக்கையுமே அந்த பொறியை அனைத்து உங்கள் கவலைக்கு ஒரு மருந்தாகி உங்கள் மகிழ்ச்சியை தக்க வைக்கும்.

பிரச்னைகளையே நினைத்துக் கொண்டிருக்கும்போது, இனி என்ன செய்ய வேண்டும் என உங்கள் லாஜிக்கல் பிரைன் வேலை செய்யாமல் ஸ்ட்ரைக் பண்ண, உங்கள் எமொசனல் பிரைன், இப்படி செய்திருக்க வேண்டுமோ, அப்படி செய்திருக்க வேண்டுமோ என உங்கள் எண்ணங்களை அலை பாயச் செய்து பிரச்னைகளையே மனம் மீண்டும் மீண்டும் அசை போடும். 

பொதுவாக1+1=2 என்பது மாதிரி ஒரு பிரச்னை நடந்தால் நான் இப்படித்தானே இருக்க வேண்டும் என ஏதோ ஒரு பழக்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாக உங்கள் இயல்பை விட்டும் மாறி, மனம் கனத்து தடுமாறிப் போகிறீர்கள். உண்மையிலேயே எவ்வளவு பெரிய ஆழமான அகலமான கடலாக இருந்தாலும் ஒரு படகில் அலைகளின் மேலே பயணம் செய்து கரை கடந்து விடலாம். ஆனால் அந்த படகுக்குள் சிறு தண்ணீர் புக விட்டாலும் அவ்வளவுதான் படகே தன்னிலை இழந்து மூழ்கி விடக் கூடும்.

அது போல பிரச்னையின் மேலே உங்கள் கவனம் இருக்காலாமே தவிர பிரச்னையை உங்களுக்குள் எடுத்துக் கொண்டால் அது உங்களையே மூழ்கடித்து விடும். அதனால் எந்த பிரச்னையிருந்தாலும் உங்களை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களில் கவனத்தை செலுத்தினால் அதுவே எந்த கவலைக்கும் ஒரு ஆன்டிபயாட்டிக்காக பிரச்னையின் தீவீரத்திலிருந்து உங்களை தற்காக்கும். 

ஒன்றோடொன்றாக கோர்க்கப் படும் சிறு சிறு பூக்களே அழகிய பூமாலையாகிறது. சின்ன சின்ன சந்தோஷங்களை நீங்கள் உணர்ந்து அனுபவிக்கும் போது அது உங்களுக்குள்ளே தருகிற புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் ஒரு பெரிய சந்தோஷமாக உங்கள் மனது நிறைந்து போகும்.

சிலருக்கு அவர்கள் பிரச்னையை மறக்கடிக்கிற அளவு வேறு ஏதாவது மிகப் பெரும் சந்தோஷமான சம்பவம் நடக்க வேண்டுமென்று எதிர் பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் அப்படி ஒன்று நடக்கின்ற வரை நீங்கள் உங்கள் மகிழ்ச்சியை தள்ளிப் போட வேண்டியதில்லை. சின்ன சந்தோஷங்களும் நல்ல மகிழ்ச்சியாக உருவாகி எதையும் சமாளிக்கும் சக்தியைத் தரும் .

நீங்கள் நினைத்தது போல் நடந்தால் அது இயற்கையான மகிழ்ச்சியாக உங்களுக்குத் தெரிகிறது. நீங்கள் நினைத்தது போல் நடக்காமல் இருந்து  நீங்கள் சந்தோஷிக்க முயலும்போது, அது போலியான மகிழ்ச்சியாக synthetic happiness ஆக உங்களுக்குப் படுகிறது. ஆனால் நம் மூளையின் frontal lobe இல் இருக்கும் pre frontal cortex பகுதி நீங்கள் செயற்கையாக செய்து பழகுவதை உங்களுக்கு இயற்கையாக இயல்பாக செய்ய வைக்கும் அபார ஆற்றல் வாய்ந்தது. விமானம் ஓட்ட பழகுபவர்கள் முதலில் சிமுலேட்டரில் ஓட்டி பார்த்து பழகி பின் நேரடியாக ஓட்ட ஆற்றல் தரும் இந்த கார்டெக்ஸ் பகுதி, பிரச்னைகளுக்கிடையே, போலியாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயலுவதை, ஒரு பழக்கமாக எடுத்து எந்த சூழலிலும் இயல்பாக உங்களை மகிழ்ச்சியாக இருக்க செய்யும். அந்த சிந்தெட்டிக் மகிழ்ச்சியும் நீங்கள் நினைத்தது கிடைக்கும் போது அடையும் இயற்கையான மகிழ்ச்சியைப் போலவே தரமானது, நீடிக்கக் கூடியது என்கிறது அறிவியல்.

உண்மையில் பிரச்னையின் ஆழத்தை விட அது தரும் வலியை விட அதை சற்றேனும் இறக்கி வைக்க முயலாமல் உங்கள் மனதில் தூக்கி சுமப்பதே உங்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியற்று தவிக்க செய்கிறது. உங்கள் சின்னஞ்சிறு குழந்தை அருந்தக் கூடிய சிறு டம்ளரில் கொஞ்சம் தண்ணீரை எடுத்துக் கொண்டு அப்படியே சற்று நேரம் சுமந்து பாருங்கள். காற்று போல இலகுவாக இருந்த அந்த டம்ளர், நேரம் ஆக ஆக உங்கள் கைகளுக்குள் சுளீர் என வலியை ஏற்படுத்தி, கைகள் கனத்து அசைவற்று போகுமளவு பாரமாகத் தெரியும். இதுவே உங்களுக்குப் பிடித்த பாடலை பாடிக்கொண்டே பிடித்த விஷயங்களை செய்து கொண்டே சுமந்து பாருங்கள். உங்களுக்கு அது இலகுவாகத் தெரியும். உண்மையில் சுமையில் இல்லை மனபாரம். மனபாரத்தில் இருக்கிறது சுமை. 

 

News

Read Previous

தமிழ்ப் புத்தாண்டு

Read Next

முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக டாக்டர் அம்பேத்கர்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *