கொசு

Vinkmag ad

கொசு

மெளலவி அல்ஹாஜ். B.M. ஜியாவுத்தீன் பாகவி

 

கொசு

 

மனிதன் அல்லாத ஏனைய உயிரினங்களின் வரிசையில் “பசு” வுக்கு அடுத்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரண்டாவது உயிரினம் கொசுவாகும். மிகமிக சின்னஞ்சிறிய பொருளுக்கு இதனை உதாரணம் காட்டுவதுண்டு. ‘கொசுவுக்கு பயந்து கொண்டு ஊரை விட்டு ஓடுவதா?’ என்று வசனம் பேசுபவர்களைப் பார்த்திருக்கலாம். இவை எல்லாம் கொசுவை அற்பமானதாகக் கருதுவதால் வரும் வார்த்தைகளாகும்.

ஒரு பொருள் பார்வைக்கு சிறியதாக இருக்கின்ற காரணத்தால் அதை தாழ்ந்ததாக – மட்டமானதாக எடைபோடுவது தவறு. ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பார். அச்சாணி சிறியதாயினும் உருள் பெரும் தேருக்கு அதுவே இன்றியமையாதது.

முகலாய மன்னர் அக்பர் பாதுஷா, தன் அவையோரிடம் ஒரு குச்சியை (கம்பை)க் கொடுத்து, “இதனை உடைக்காமல், வளைக்காமல் சின்னதாக ஆக்குங்கள். என்ற போது மந்திரி பிரதானிகள் யாராலும் அவ்வாறு செய்ய முடியவில்லை. இறுதியாக அவரது அரசவையிலிருந்து சாணக்கியர் பீர்பால், ஒரு பெரிய குச்சியை எடுத்து வந்து அதற்குப் பக்கத்தில் வைத்துவிட்டு “மன்னா ! இப்பொழுது சொல்லுங்கள். உங்கள் கம்பு சிறியதா? பெரியதா?” எனக் கேட்டார். மன்னர் கொடுத்த கம்பு உடைக்காமலேயே சின்னதாகிவிட்டது.

ஒரு பொருளைப் பற்றி, ஓர் உயிரினத்தைப் பற்றி குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் அதன் முக்கியத்துவத்தை அலசிப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

கொசு நம் பார்வையில் சிறியதாக இருப்பினும், அது செய்யக்கூடிய வேலை மிகப் பெரியது. மனித ரத்தமே அதற்கு பிரதான உணவாகும். மனிதவாடையை மோப்பம் பிடிக்கும் அதீத ஆற்றல் அதற்குண்டு. எந்த மூலை முடுக்குகளில் மனிதர்கள் இருந்தாலும் தேடிவந்து விடும். ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் தன் உயிரையே பணயம் வைத்து விட்டு வந்து உறிஞ்சுகிறது. எவ்வளவோ நசுக்கப்படுகிறது. இருப்பினும், அது கொஞ்சமும் அலட்டிக் கொள்வதில்லை. மீண்டும் மீண்டும் வந்து கடிக்கிறது. சாரி குத்துகிறது. ஏனென்றால் கடிப்பதற்கு அதற்கு பற்களில்லை. அதன் உணவு நீராகார மேயாகும்.

நமது ரோமத்தைப் போன்றிருக்கும் தும்பிக்கைக்கு உள்ளேயும் ஒரு குழாயை அமைத்திருப்பது இறைவனின் அற்புதம்தான். மூட்டைப் பூச்சிகளைப் போல் கடித்துவிட்டு விளக்குப் போட்டவுடன் ஓடி ஒளிந்து கொள்ளும் கோழையல்ல கொசு.. மாறாக “நான் வருகிறேன். உன்னால் முடிந்ததைச் செய்து கொள் !” என்று நமது காதருகில் வந்து ரீங்காரம் செய்து விட்டு முன்னறிவிப்புடன்தான் வருகிறது.

கொசுவை விட்டும் நம்மை தற்காத்துக்கொள்வதற்கு எத்தனை விதமான நடவடிக்கைகள்? கொசு வலையைத் தயார் செய்தோம். பொழுது விடிந்து பார்த்தால் அனைத்துக் கொசுவும் அதன் உள்ளே இருக்கும் நிலை. கிளிக் கூண்டு, புலிக்கூண்டு என்பதைப் போல மனிதன் அடைப்பட்டுக் கிடக்கும் அந்த வலையை மனித வலை எனக் கூறாமல், கவுரவமாக ‘கொசு வலை’ என்கிறோம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுபவர்களல்லவா நாம்?

அடுத்ததாக, உடம்பில் தடவும் ஆயின்மெண்ட் (பூச்சி மருந்து) தயார் செய்தார்கள். அதுவும் கொசுவுக்குப் பழகி விட்டது. பின்பு மின் விசிறியின் மூலம் விரட்டலாமென்றால் புத்திசாலித்தனமாக காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் வந்தமர்ந்து அது தன் கடமையை சிறப்பாக செய்கிறது.

தற்போது உபயோகத்தில் உள்ள கொசுத்தடுப்பு மருந்தும் முழுப் பயனைத் தருவதாகச் சொல்லமுடியாது. கடைசியாக கொசு மூலம் பரவக்கூடிய மலேரியா, யானைக்கால் போன்ற வியாதிகளை ஒழிக்க ஒரு இயக்கமே செயல்பட்டு வருகிறது.

கொசுவின் உமிழ்நீரில் ரத்தம் உறைந்து போகமலிருக்க ஒரு ரசாயன திரவம் கலந்திருக்கிறது. நம் ரத்தத்தை உறிஞ்சும் போது அந்த கெமிக்கலை நமது உடலில் பாய்ச்சுவதால் தான் அரிப்பு ஏற்பட்டு தடித்துப் போய் சொறிய ஆரம்பிக்கிறோம். கொசுவின் இறகுகள் அது தலைகீழாக பறப்பதற்கு கூட உதவுகிறது. மழைத் தூறலுக்கிடையில் மாட்டிக் கொள்ளாமல் (ஒரு துளியில் மாட்டினாலும் மடிந்து விடும்) அதன் இடுக்குகள் வழியாகப் பறந்து போக முடியும். பெண் கொசுக்கள் தான் ஆபத்தானவை. தலைவி. ஆண் கொசுக்கள் (நம்மைப் போன்று) அதற்கு கட்டுப்பட்டுப் போகும். கொசு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வகையைச் சார்ந்ததாகும்.

கொசுவை உயிரோடு பிடித்து குசும்பு பண்ண நினைப்பவர்கள், அது வந்து உட்கார்ந்து தனது இஞ்செக்சனை உள்ளே செலுத்தும் வரை (வலித்தாலும் பொறுத்துக்கொண்டு) காத்திருக்க வேண்டும். அதற்குப்பிறகு நமது உடல் தோலை அப்படியே ஒரு பக்கம் லேசாக இழுத்தால் அதனுடைய உறிஞ்சுக்குழல் உள்ளே வளைந்து விடுவதால் ஆடாது அப்படியே உட்கார்ந்து விடும். சாவகாசமாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இப்போது சொல்லுங்கள். கொசு ஒரு சாமானிய உயிரினமா? முக்கியத்துவமற்ற படைப்பினமா? பசு மாட்டினுடைய இரைப்பையின் கொள்ளளவு 30 லிட்டர் உணவு என்றால், கொசுவின் கொள்ளளவு ஒரே ஒரு டிராப் (சொட்டு) ஒரு மில்லிக்கும் குறைவான ரத்தம்தான். எனவே ஓடக்கூடிய அளவுக்கு ரத்தம் இல்லையென்பதால் அது நம் உடலில் உடையில் பட்டால் நஜீஸ் அல்ல.

பற்பல வரலாற்றுகளில் கொசுவை நினைத்துப் பார்த்திருக்கிறார்கள். இமாம் இப்னு நபாத்தா (ரஹ்) அவர்கள், ஹஜ்ரத் அலீ (ரலி) கூறியதாக அறிவிக்கிறார்கள். “மனிதனைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். சின்னஞ்சிறிய கொசுகூட அவனுக்குத் தொல்லை கொடுக்கிறது. அவனது வேர்வை கூட அவனை நாற்றமடையச் செய்கிறது.”

தத்துவக் கவிஞர் அல்லாமா இக்பால் அவர்கள் வட்டி வாங்குபவனைப் பற்றி பாடிய ஒரு கவிதையில், ‘கொசு தனது இரையைத் தேடி அலைந்து மிகுந்த உழைப்பு – சிரமத்துக்கிடையில் நம்மிடம் வந்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. ஆனால் நம்மில் சிலர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே மனித ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்’ எனச் சாடிப்பாடியுள்ளார்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்த நம்ரூத் மன்னன் எல்லா வகையிலும் அவர்களுக்குத் தொல்லை கொடுத்ததோடு மட்டுமில்லாமல், தனக்கு மேலே யாருமில்லை என்ற தலைக் கனத்தோடு நடந்தவன். அவனது கடைசி காலத்தில் கொசு ஒன்று மூக்கில் நுழைந்து அவனை அலைக்கழித்தது. யாராவது அவனது தலையில் ஏதேனும் ஒரு பொருளால் தட்டிக்கொண்டே இருந்தால் தொந்தரவு குறையும். நிறுத்தியபின் மீண்டும் துன்புறுத்தும். இவ்வாறு அவன் கேவலப்படுத்தப்பட்டான். (உள்ளே நுழைந்த கொசு உயிருடன் இருந்து இடையூறு செய்தது இறைவனின் சித்தமாகவும் இருக்கலாம்) ஏனென்றால், கொசுவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இது ஒரு வகையான பூச்சி வகையைச் சேர்ந்ததாகும் என்று கஸஸீல் அன்பியா என்ற வரலாற்று நூல் குறிப்பிடுகிறது.

எந்தவொரு விஷயத்தையும் மக்களுக்கு எளிதில் புரியவைக்கவும், சிந்திக்கச் செய்வதற்காகவும் உதாரணங்களை இலக்கியங்களில் கையாளுவது மரபு. நடைபெற முடியாத காரியத்தைக் குறிப்பிடும் வகையில் ‘ஊசி முனையில் ஒட்டகமே புகுந்தாலும்’ என்ற கருத்துச் செறிவுள்ள உதாரணத்தை குர்ஆன்தான் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

அதுபோன்று குர்ஆனில் சிலந்தி, கொசு, தேனீ போன்ற சின்னஞ்சிறிய ஜீவராசிகளை உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது. ‘மகாப்பெரிய இறைவன் இந்த அற்பமான பொருட்களையெல்லாம் எப்படி உதாரணமாகக் கூறலாம்? இது அவனது தகுதிக்கு லாயக்கல்லவே? எனவே இது முஹம்மது நபியின் கற்பனையில் உருவான வேதம்தான்’ என்று யூதர்கள் குற்றம் சாட்டினர். தங்களின் வேத மறுப்புக் கொள்கைக்கு இதை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். அப்போதுதான் பின்வரும் வசனம் அருளப்பட்டது.

“நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ (அற்பமான விஷயத்தில்) அதைவிட மேலானதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். இறை நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்.”

(அல்குர்ஆன் 2:26)

“கனவில் கொசுக்களை எந்த நிலையில் பார்த்தாலும் முதுகில் குத்தும் எதிரிகளைக் குறிக்கும்” கொசு நம் குருதியைக் குடிப்பதிலும் கூட ஒரு நன்மை இருக்கலாம். அதனால்தான் நம் உதிரத்தை அதற்கான உணவாக்கினான் அல்லாஹ். பின்னொரு காலத்தில் அந்த நன்மை கண்டுபிடிக்கப்படலாம்.

இறுதியாக ஒரு நியூஸ் நம்மை வாழ வைப்பதற்கு மருத்துவர்கள் ஊசி போடுகிறார்கள். நமது மரணத்திற்கு இறைவன் போடும் ஊசி தான் கொசு. இதுவே கொசு நமக்கு செய்யும் ‘லாஸ்ட் வார்னிங்’.

 

 

நன்றி : நர்கிஸ் மார்ச் 2013

News

Read Previous

வெற்றிநடை மாத இதழ் – Vetrinadai Monthly

Read Next

ஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *