கிரகணத்தின் காரணத்தை அன்றே சொன்ன விஞ்ஞானி

Vinkmag ad

07A-Theles2006-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன்

—————————————————————————————————————–

 கிரகணத்தின் காரணத்தை அன்றே சொன்ன விஞ்ஞானி

பேரா. கே. ராஜு

இந்த உலகம், பூமி, உயிரினங்கள், மனித இனம், மொழிகள்.. என எல்லாவற்றிற்கும் அவை தோன்றிய வரலாறும் உண்டு ; வளர்ந்த வரலாறும் உண்டு. வரலாற்றைப் பார்ப்பதில் அறிவியல் பார்வையும் உண்டு ; அறிவியலுக்குப் புறம்பான பார்வையும் உண்டு. வரலாற்றை மன்னர்களின்-சாம்ராஜ்யங்களின் வரலாறாக மட்டும் பார்ப்பது சரியல்ல. அந்தந்தக் கால மக்களின் வாழ்க்கையோடு சேர்த்துப் பார்ப்பதுதான் அறிவியல் பூர்வமானது.

பூமி, உயிரினத்தின் தோற்றம்

அன்றாடம் அறிவியல் சாதனங்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பவர்களும் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களும் உயிரினங்களின் தோற்றம் என்று வரும்போது அவரவர் மதங்கள் செய்து வைத்திருக்கிற குடுவைக்குள் போய் அமர்ந்து கொண்டு விடுவார்கள். அறிவியல் உலகம் கூறும் உண்மைகளைப் பார்க்க மறுப்பார்கள்.

பூமி சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் அமைத்திருக்கிறது. பூவுலகில் வாய்த்த விசேஷமான தட்பவெப்ப சூழ்நிலைகளின் காரணமாக உயிரினங்கள் தோன்றின. பூமி பிறந்த பிறகு ஆரம்பகால உயிரினம் தோன்றுவதற்கு ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல, 200 கோடி வருடங்கள் ஆகியிருக்கிறது! ஆனால் மனிதன் 10 லட்சம் ஆண்டுகளுக்குள்தான் தோன்றியிருக்கிறான். நியாண்டர்தால் மனிதன் உருவாகி 2 லட்சம் ஆண்டுகளும் தற்கால மனிதன் தோன்றி 40 ஆயிரம் ஆண்டுகளும் ஆகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது பற்றி மேலும் துல்லியமாக அறிந்துகொள்ள இன்னமும் கூட ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மனிதன் நாடோடியாகத் திரிந்து வாழ்ந்த வழக்கத்தை நிறுத்தி இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை. பயிரிடும் ரகசியத்தை மனிதன் தெரிந்து கொண்ட பிறகு நதிக்கரை நாகரிகங்கள் பிறந்தன. இவற்றில் எகிப்திய நகரிகம், பாபிலோனிய நாகரிகம், சிந்துசமவெளி நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.

கிரேக்க விஞ்ஞானி தேலீஸ்

தேலீஸ் என்ற வானியல் நிபுணர் கி.மு. 585-இல்  “இந்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதியன்று இரவானது பகலில் படையெடுத்து வரும். சூரிய ஒளி முழுவதுமே சந்திரனால் சிறிது நேரம் மறைக்கப்பட்டுவிடும்” என்று கிரகணம் வரப்போவதை முன்கூட்டியே கூறினார்.

அப்போது மீடியா, லிடியா என்ற இரு நாடுகளுக்கிடையே போர் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று சூரியன் மறைந்து இருட்டானதும் போர் வீரர்கள் ஆண்டவனின் கோபத்திற்கு ஆளாகி விட்டோம் என்று பயந்து கையில் இருந்த கல், கம்புகளையெல்லாம் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தேலீஸ் அவர்களிடம்  “இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் இருக்கிறது. திடீரென பூமி இருட்டானது ஆண்டவனின் கோபத்தினால் அல்ல ; சந்திரனின் நிழல் பூமியில் விழுந்ததால் கிரகணம் ஏற்பட்டது. பூமியில் நடைபெறும் எந்தச் செயலுக்கும் கிரகணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பிரபஞ்சம் எப்போதுமே இயற்கை விதிகளுக்குட்பட்டு நடந்து வருகிறது” என்று விளக்கிக் கூறினார்.

நினைத்துப் பாருங்கள். 2500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொலைநோக்கி போன்ற கருவிகள் இல்லாமலேயே கிரகணம் ஏற்படுவதின் காரணத்தை தேலீஸால் எப்படிக் கூற முடிந்திருக்கிறது!

ஒரு மாளிகையின் உயரத்தை எப்படி அளப்பது?

அந்தக் காலத்தில் அது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் தேலீஸ் மாளிகையின் உயரத்தை அதன் நிழலின் அளவை வைத்துக் கணக்கிட்டுக் கூறியிருக்கிறார்!

வானவியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் நடந்து போகும்போது வானத்தைப் பார்த்தபடியே நடந்து போவாராம். இதனால் ஒரு முறை ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.  “வானத்து நட்சத்திரங்களை நீங்கள் ஆராய்வது ஒரு புறம் இருக்கட்டும் ; பூமியையும் பார்த்து நடங்கள்” என்று அவரது பணிப்பெண் அவரை எச்சரித்தாராம் !

2500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதால்தான் கிரகணங்கள் ஏற்படுவதாக சமீபகாலம் வரை நாம் கூறிக் கொண்டிருந்தோம். இன்றும் கூட கிரகணத்தின்போது “தோஷம்” விலக புண்ணிய நதிகளில் நீராடும் வழக்கம் இருக்கிறது. ராகு காலம் பார்க்கும் வழக்கம் இன்னமும் பரவலாக இருக்கிறது. அறிவியல் உண்மைகள் தெரிந்த பிறகு அறியாமையில் விளைந்த பழைய நம்பிக்கைகளைக் கடாசி விட்டுத் தெளிவு பெற நாம் தயாராக இருக்க வேண்டாமா?

News

Read Previous

நமது ISRO வின் ஒரு புதிய சாதனை

Read Next

தில்லி மாநகரின் மரங்களைப் காப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *