காயிதெ மில்லத் (ரஹ்) – தியாகத்தின் திருவுருவம்.!

Vinkmag ad
Quaid-E-Milleth 4காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் 87-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிராஜுல் மில்லத் அவர்கள், தனது `மணிவிளக்கு’ மாத இதழில் 1982-93 வருடங் களில் எழுதிய கட்டுரையை அவர்களின் 118-வது பிறந்த நாளான இன்று இதன் அடியில் தந்திருக்கிறோம்.
காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் சமுதாயத்தின் நன்றியுள்ள வர்கள் நடமாடும் இடங்களி லெல்லாம் கொண்டாடப்படு கிறது. இப்படி சிலரின் பிறந்த நாட்கள் நினைவு கொள்ளப்படுவதன் காரணமாக வாழ்ந்து சிறந்த அவர்களு டைய வளமார் பண்புகளை எடுத்துரைப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.காயிதெ மில்லத் (ரஹ்) அவர்கள் கண்ணியத்தின் நடமாடும் உருவமாக அந்த நாளிலேயே அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டார்கள்.

தன்னுடைய சொல்லாலோ, செயலாலோ பிறர் மனதை நோவினை செய்யாதவரே நல்ல முஸ்லிம் என்று நாயகத் திருமேனி (ஸல்) அவர்கள் நவின்றிருக்கிறார்கள்.

 
பிறருடைய உணர்வுகளை புண்படுத்தாதவரே சிறந்த கண்ணியவான் என்று பின்னால் வந்த பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். காயிதெ மில்லத் (ரஹ்) அவர்கள் நல்ல முஸ்லிமாக இருந்த காரணத்தினாலேயே சிறந்த கண்ணியவானாகவும் பாராட்டப்பட்டார்கள். அரசியல் தலைவர்கள் என்றால் பிற அரசியல் கட்சியின் தலைவர்களையோ, அவர்களுடைய தத்துவங்களையோ விமர்சிக்காமல் இருக்க முடியாது என்று ஏறத்தாழ அனைவ ராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.காயிதெ மில்லத் (ரஹ்) அவர்கள் அரசியல் தலைவராகவும் அறிமுகமானவர்கள்தான். ஆனாலும், அவர்களுடைய கருத்துக்கு முற்ற முரண்பட்ட தலைவர்களைக்கூட – ஏன்? அவர்களை தரங்கெட்ட முறையில் விமர்சித்ததாக ஒரு சம்பவத்தை கூட கூற முடியாது. தாக்கப்பட்டவர்கள் திருப்பித் தாக்குவதற்கு உரிமை உண்டு என்றாலும், எதிரி தாழ்ந்த அளவிற்கு தன்னைத் தாழ்த்திக்கொள்ளாமல் கண்ணியத்தின் விளிம்பிலிருந்து கடுகளவும் சரிந்து விடாமல் – அதேநேரத்தில் தர வேண்டிய பதிலையும், விளக்கத்தையும் தந்து வந்தவர் தலைவர் காயிதெ மில்லத் (ரஹ்) அவர்கள்.

நம்முடைய நடவடிக்கைகளை பற்றி அந்த சகோதரர்கள் இவ்வளவு கோபப்படுகிறார்களே, அதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? நாம் அவர்களை பற்றி தவறாக சொல்வது உண்டா? நாம் என்னதான் கேட்கிறோம் – இந்த நாட்டில் நாங்களும் வாழ உரிமை உண்டு – அதிலும் கண்ணியத் தோடு வாழஉரிமை உண்டு – மானத்தோடு வாழ உரிமை உண்டு என்றுதான் சொல்கிறோம்.

கண்ணியமோ, மானமோ இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையல்ல. அப்படிப்பட்ட வாழ்க்கை யாருக்கும் இருக்கக் கூடாது. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை கேட்கிறோமே தவிர, யாருக்கும் இல்லாத சலுகைகளை நாம் கேட்கவில்லை. நாம் யாருடைய உரிமையிலாவது தலையிட்டதுண்டா? – அவர்களுக்கு உரிமைகள் கூடாது? என்று சொன்ன துண்டா?

நாம் நம்முடைய உரிமைகளைத் தான் கேட்கிறோம். இதற்காக நம்முடைய சகோதரர்கள் நம்மை குறை காணுவது நியாயமா? –

கோபப்படுவதில் அர்த்தம் உண்டா? அவர்கள் கோபப்படுகிறார்களே என்பதற்காக நாம் கோழைத்தனம் கொண்டு நம்முடைய கொள்கையை வற்புறுத்தாமல் இருக்க முடியுமா? அப்படி பயந்து வாழ்வது ஒரு வாழ்க்கை என்று சொல்ல முடியுமா? – என்று ஏசிப்பேசிய எதிரிகளின் மனம் கூட இளகி, நம்முடைய உண்மைகளை ஒப்புக் கொள்ளத் தக்க வகையில் அவர்களுடைய பேச்சு இருந்ததை இன்று எல்லோரும் நினைத்துப் பார்க்கிறார்கள்.

தம்பீ! ஒரு தோழனின் உண்மையான உருவத்தைக் கண்டு கொள்ள பிரயாணம் ஒரு உரைகல் என்று சொல்லப்படுவதுண்டு. பிரயாணத்தில் புறப்பட்ட இரு தோழர்கள் தம்முடைய நட்பில் எந்தவிதமான பழுதும் இல்லாமல் வீடு திரும்புவார் களேயானால் அவர்கள் மீது அல்லாஹுவின் அருள் சொரியும் என்ற கருத்துப்பட அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியிருக்கிறார்கள்.

காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களுடன் ஏறத்தாழ 20 ஆண்டுகள் பல பயணங்களை மேற்கொள்ளக் கூடிய பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன். உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாடுகளிலும் அவர்களோடு பிரயாணம் செய்யும் வாய்ப்பை பெற்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரயாணத்தில் சாதாரணமாக ஏற்படும் களைப்பையோ, வசதி குறைபாடுகளையோ கொஞ்சம்கூட கருத முடியாத அளவுக்கு அவர்களுடைய நெருக்கத்தால் – தோழமையால் ஏற்பட்ட மனமகிழ்ச்சி மிகைத்திருந்தது.

அவர்களை நினைக்கும்போது எழுச்சியின் தோற்றம் தென்படுகிறது – பணிவின் அசைவு புலப்படுகிறது – எளிமையின் நடமாட்டம் உணரப்படுகிறது – ஒழுக்கத்தின் மேம்பாடு நடைபோடுகிறது – தெளிவின் கம்பீரம் நிமிர்ந்து நிற்கிறது.

அரசியல்வாதியாக அறிமுகப்படுத்தப்பட்ட அவர்கள் ஆத்மீக ஞானியாக காலப்போக்கில் உணர்த்தப்பட்டார்கள்.

வணிகப் பிரமுகராக வாழ்க்கையை துவக்கிய அவர்கள் மனிதப்புனிதராக அதனை முடித்துக் கொண்டார்கள்.

எந்த சமுதாயத்தின் ஏற்றத்திற்கு குரல் கொடுக்க முன்வந்தார்களோ அந்த சமுதாயத்தாராலேயே விமர்சிக்கப் படும் நிலையில் துவங்கி மொத்த இந்திய பெருஞ்சமுதாயத் தால் ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு உயர்ந்தார்கள்.

துறை போந்த மேதையாக விளங்கினாலும் கறைபடாத கரத்துக்கு சொந்தக்காரராக நிலைத்தார்கள்.

இன்று நாம் அவர்களை நினைவுகொள்ள முற்படுகிறோம். ஆனால், அவர்களோ அல்லாஹுவையும், அவனுடைய திருத் தூதரையுமே நமக்கு நினைவூட்டி வந்தார்கள்.

“ஒற்றுமை என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடியுங்கள்- அதில் பிரிந்து விடாதீர்கள்’ – என்ற அல்லாஹ்வின் அழகு வசனத்தை அவர்கள் எடுத்துரைக் காமல் சொற்பொழிவே நிகழ்த்தியதில்லை.

“நீங்கள் துக்கப்படவும் வேண்டாம் – துயருறவும் வேண்டாம்’ நீங்களே மேன்மையுறுவீர்கள்; நீங்கள் உண்மை விசுவாசியாக நடந்து கொண்டால்’’ – என்று அவர்கள் எடுத்துக் காட்டிய இறைவசனம் இந்திய முஸ்லிம்களின் இதயச் சாந்திக்கு அருளப்பட்ட திருவசனமாக அல்லவா அப்போது பட்டது. “இன்னஸ் ஸலாதீ வ நுஸுகி, வ மஹ்யாய வம மா தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன்’’ (“நிச்சயமாக என்னுடைய தொழுகையும் – தியாகமும், என் வாழ்க்கையும் – மரணமும் கூட அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியன) – என்று ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆன் வசனத்திலிருந்து அவர்கள் எடுத்தாளும் போது தங்களுடைய சுயவாழ்க்கையை தொகுத்து சொல்வது போன்றுதான் அவர்களை அறிந்த அனைவரும் கருதினார் கள். அல்லாஹ்வின் மீது அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் அரசியலிலே யாராலும் அசைக்க முடியாத உறுதியை அவர்களுக்கு அளித்தது. அந்த உறுதியைத்தான் சிக்கித் சிதைந்து சின்னாபின்னப்பட்டி ருந்த இந்திய முஸ்லிம்களுக்கு தங்களுடைய பாரம்பரியமாக அவர்கள் விட்டு சென்றார்கள்.

நாம் அவர்கள் நினைவை பசுமைப்படுத்துகிறோம். ஏனென்றால் பசுமையாக இருக்க வேண்டிய நினைவுகள் பட்டுப் போகாமல் தழைப்பதற்காக.

அவர்களுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறோம் – சமுதாயம் சிறந்து வாழ வேண்டும் என்பதற்காக! அவர்களுடைய மறுவுலக நல்வாழ்விற்காகபிரார்த்திக்கிறோம். நம்முடைய ஈருலக வாழ்வும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக! “காயிதெ மில்லத் ஜிந்தாபாத்’’ என்று கூறுகிறோம். நாம் இன்னும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக. –

`மணிவிளக்கு – ஜுன் 1982 – ஜுன் 1983)

News

Read Previous

மலரும் நினைவுகள் : 1993 ஜுன் 18 :ஷுஐபு ஆலிம் எழுதிய நூல் வெளியீட்டு விழா

Read Next

திருக்குறள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *