கண்ணதாசன் பார்வையில் …மஹா பெரியவா

Vinkmag ad

mahaகண்ணதாசன் பார்வையில் …மஹா பெரியவா ….

அதோ, போய்க்கொண்டு இருக்கிறார். – அர்த்தமுள்ள இந்து மதம் நிறைவு பகுதியில், கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

….இப்படிப்பட்ட யோகம் கை வந்த ஒருவர், காஞ்சி பெரியவர்.
அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலில் காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனை போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார். தெய்வ நம்பிக்கை உச்சத்துக்கு போய் விட்டால் வயது தோன்றாது, பசி தோன்றாது.
உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது. அதோ, அந்த ஒளியோடு அந்த மகாயோகி போய்க்கொண்டு இருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரை அன்று. அது ஆன்ம யாத்திரை. லோகாதய சுகத்தை முற்றும் துறந்துவிட்டு தார்மீக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது தர்மம் நடைபாதை விரிக்கிறது. மகா யோகம் மலர்கள் தூவுகிறது. மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது.
ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப் படவில்லை. அங்கே போய் காஞ்சி பெரியவர் ஓரிரவு தங்கினாராம். சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.
அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்க கூடாது.
உலகெங்கிலும் உள்ள அக்ஞாநிகளுக்கு ஞான கண் வழங்கும் பேரொளி. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
அந்த ஞான பழத்தை தரிசித்தபோது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்கு ராஜா அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.
அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். இறைவன் கருணையினால் நமக்கு கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்கு தாலாட்டு பாடும் போது அவரை பற்றி பாட வேண்டும். பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும்.
ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?
அதோ அவர், நடந்து போய் கொண்டு இருக்கிறார். புத்தன் சொன்னதை விட, அவர் நமக்கு அதிகமாக சொல்லி இருக்கிறார். இயேசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்து இருக்கிறார். அவர் ஜாதி வெறியர் ஆகவோ, மத வெறியர் ஆகவோ, ஒரு நாளும் இருந்தது இல்லை. அரசியல் வில்லங்கங்களில் மாட்டி கொண்டது இல்லை.
பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவர் ஒருவரே.
அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்

News

Read Previous

முதுவை நகரின் வசந்த காலம்

Read Next

இது இனிக்கும் செய்தியல்ல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *