ஒரு புத்தகக் கடையை நடத்துவதென்பது ………….!

Vinkmag ad
ஒரு புத்தகக் கடையை நடத்துவதென்பது ………….!
எஸ் வி வேணுகோபாலன் 
ரவு பதினொன்றரை மணிக்கு – கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் இருக்கும் – தமது புத்தகக் கடையை வெங்கடேசன்  மூடிக் கொண்டிருந்தார். வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் ஆகிவிட்டது அன்று. முன்பக்கம் ஷட்டரை இழுத்துப் பூட்டும்போது இலேசான ஓசை கடையின் எதிர் முனையிலிருந்து அந்த நள்ளிரவு நேரத்தில் துல்லியமாகக் கேட்டுவிடச்  சட்டென்று விரைந்து அந்தப் பக்கம் ஓடிச்சென்று பார்த்தால், உள்ளிருந்த கல்லாப்பெட்டியில் இருந்த சில ஆயிரம் ரூபாய்களை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருந்தான் ஓர் இளைஞன்.  அவனைத் துரத்திச் வெங்கடேசன் மிக இலகுவாக ஓடிப் பிடித்துவிட்டார்.  யாருமற்ற இரவின் இருளில் கடைக்கருகே பதுங்கி இருந்து தனது கைவரிசையைக் காட்டிய அவன் இப்போது ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் உட்கார வைக்கப்பட்டிருந்தான்.

அவன் சொன்ன எண்ணுக்கு டயல் செய்யவும், அவனது தந்தை அடுத்த அரை மணி நேரத்திற்குள் அடித்துப் பிடித்து  ஓடிவந்து, விஷயமறிந்து அவன் இப்படி சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதன் அவமானக் கதையைச் சொல்லி அழுது, அங்கிருப்போர் காலில் விழுந்து மன்றாடி, இந்த முறை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி விடுவித்து அழைத்துக் கொண்டு போனார். அந்த இரவின் நிம்மதியை முற்றிலும் தொலைத்த களைப்போடு வெங்கடேசன் புறப்பட்டு வீடு போய்ச் சேர்ந்தார் – மறுநாள் காலை அன்றைய நாளிதழ்களை வாங்கிவர நாலரை மணிக்கே எழுந்துகொள்ளும் பொருட்டு!

வெங்கடேசனின் அன்றாட வாழ்க்கையில் கடிகாரத்திற்கு வேலை இருப்பதில்லை. அவரே ஓர் உயிர்க்கடிகாரமாக ஓடிக் கொண்டிருப்பதாகத் தோன்றும். இப்படியாகக் காலையில் திறக்கும் கடையை, இடையே ஏதோ அவசர வேலைக்காக வெளியே செல்கையில் அருகே இருக்கும் கடைக்காரர் அல்லது நண்பர் யாரிடமாவது பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போய்விட்டு வர முடியுமே தவிர, ஒவ்வொரு முறை வெளியே போகும்போதும் கடையை சார்த்திவிட்டுப் பின்னர் திறந்து கொள்வதென்பது இலகுவான வேலையே கிடையாது. அப்படி நம்பிக்கையான ஆள் வரும்வரை, வெளியே போய் ஒரு தேநீர் அருந்திவிட்டு வரவோ, இயற்கை அழைப்புக்கு இணங்கவோ கூட இப்போது வேண்டாம் என்று ஒத்திப் போட்டுவிட்டுக் காத்திருக்க நேரும்.

புத்தகக் கடை வைத்திருக்கும் அவரைப் போன்ற பலரும் ஒரு தவ ஞானியைப் போல் இயங்குவதாகத் தென்படும். அறிந்தோரைப் பார்க்கும்போது ஒரு பரிச்சய சிரிப்பு, இன்னின்னார் வழக்கமாக இன்னின்ன பத்திரிகை வாங்குவாரே, அது வந்துவிட்டது அல்லது அன்றும் வரவில்லை என்ற குறிப்புப் பதில், அவர்களாக வினவும் வழக்கமான சுருக்கக் கேள்விக்கு அதையும்விட சுருக்கமான பதில்…..

மேலும், ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கடை போட்டிருப்பது அத்தனை இலேசான விஷயமும் கிடையாது. ரயிலில் வந்து இறங்கியதும், தாங்கள் சென்றடைய வேண்டிய இடம் வலப் பக்கமா, இடப் பக்கமா எப்படி போகவேண்டும் என்று ஓயாமல் வழி கேட்டு வருவோரும், ரயில் நேரம் கேட்டு நிற்போரும், டிக்கெட் எங்கே வாங்க வேண்டும் என்று தேடி வந்து கேட்போரும், இருக்கும் புத்தகங்களை எல்லாம் விட்டுவிட்டு இல்லாத ஒரு நூல் குறித்த விவரங்களைத் துருவித் துருவிக் கேட்டிருப்போரும், மறுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு சில்லறை கேட்டு வந்து நிற்போரும் கொஞ்சம் இடைவெளி விடும் நேரத்தில் ஏதேனும் ஒரு புத்தகமோ, நாளிதழோ விற்றுவிடும் நொடிக்காகக் காத்திருக்கும் பிழைப்பு.  

 
நாளேடுகள், வார – மாத இதழ்கள், ஏராளமான புத்தகங்கள், வேலை வாய்ப்புச் சிறப்பு ஏடுகள்…என கடை எப்போதும் நிரம்பி இருப்பதுபோலவே காலையும் மாலையும் வாடிக்கையாளர் கூட்டமும் நிறைந்திருக்கும். எப்போதும் வேக வேகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் பலகாரக் கடையில் இனிப்புகளும் எப்போதும் நிரம்பியே இருப்பதுபோல். ஆனால், இதெல்லாம் பழைய கதை.
 
150 முதல் 200 பிரதிகள் விற்ற நாளேடுகளின் விற்பனை தற்போது பத்து, இருபதைக் கூடக் கடந்து செல்வதில்லை. வார, மாத இதழ்கள் விற்பனை முந்தைய காலங்களைப்போல் இல்லை. ஆட்கள் வருவதும், நிற்பதும், புரட்டிப் பார்ப்பதும் குறைவில்லை, ஆனால் மிக மிக மோசமான அளவில் வர்த்தகம் சரிந்திருக்கிறது. வெங்கடேசனுக்கு மட்டுமல்ல, ஏறத்தாழ, அப்படியான கடைகள் அனைத்திலும் !
 
கட்டுக் கட்டாகப் புத்தகங்கள், நாளேடுகள், இதழ்களை எல்லாம் படிக்கட்டுகள்வழியாகத் தோளில் சுமந்து வந்து நிரப்புவது, அன்றாடம் இரவு மிகுந்த நேரமெடுத்து எல்லாவற்றையும் உள்ளே எடுத்து அடுக்கி வைத்துப் பூட்டவேண்டி இருப்பது, மறுநாள் காலையில் வந்திறங்கியதும் அனைத்து விஷயங்களையும் நேரெதிர் திசையில் மீண்டும் தொடங்கி விற்பனைக்குத் தயாராவது எல்லாமே உழைப்புக்கான குறைந்தபட்ச நியாயமானது கிடைக்கும் என்ற தெம்பில்தான். அந்தத் தெம்பு இப்போது ஆட்டம் காணத் தொடங்கி இருக்கிறது.
 
அலைபேசியிலோ, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மூலமாகவோ பத்திரிகைகளை வாசித்து விடுகின்றனர், அதனால்தான் விற்பனை ஒரேயடியாகக் குறைந்துவிட்டது என்ற புகாரில் பெரிய உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. வாசிப்பதன் முழுமை கையில் எடுத்துப் பிரித்துப் படிப்பதில்தானே அடங்கி இருக்கிறது என்று கேட்டால், ஏதேதோ பல காரணங்களினால் இதழ்கள் வாசிப்பு மிக வேகமான வீழ்ச்சியை அடைந்துவருகிறது என்கிறார் அவர். வெங்கடேசன் போன்ற ஒரு புத்தக விற்பனையாளர் குடும்பத்திற்கு யார் கஞ்சி ஊற்றுவார்? 
 
உதவி கேட்குமிடத்திலோ, உரிமம் செலுத்துவதிலோ கொஞ்சம் தவணை தவறினாலும் அபராதம், அவமானம், அலைக்கழிப்பு, அச்சுறுத்தல் எல்லாம் ஒருபுறம், ஏதோ தவிர்க்க இயலாத காரணத்திற்காகக் கடையை ஒரு வாரம் மூட நேர்ந்தாலும் செய்தித்தாள்கள், இதழ்கள் கொண்டுவந்து தரும் பிரதிநிதிகளுக்குச் சொல்ல வேண்டிய முன்தகவல் விடுபட்டுவிட்டால் ஏற்படும் குழப்பங்கள், நஷ்டங்கள் மறுபுறம். கடையைத் திறந்த நேரமுதல் வருவோர்க்கெல்லாம் விளக்கமும், வாடிக்கையாளருக்கு விடுபட்டுப் போன புத்தகங்கள் தருவதில் நேரிடும் சங்கடமும்  விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. 
 
ஆனாலும், புத்தகக் கடையை விட்டு இன்னொரு மாற்றுப் பிழைப்புக்கான வழி தென்படாத சோகமும், புத்தகங்கள் மீதுள்ள காதலும் அவரது முகமெங்கும் பரவியிருக்கிறது. பள்ளி விட்டதும் நேரே கடைக்கு வந்து இறங்கும் அவரது செல்ல மகள் கோகுலவாணி (உலக புத்தக தினமான ஏப்ரல் 23ல் பிறந்தவள் அவள் என்பது ஓர் அருமையான தற்செயல் ஒற்றுமை!) புத்தக உலகில் இருக்கவே விரும்புகிறாள். புத்தக விற்பனை மூலம் வாய்த்த எளிய நட்பு வட்டம்தான், வாட்டத்தைப் போக்கும் ஆறுதல் மொழியைப் பேசிக் கொண்டிருக்கிறது. வாசிப்பைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் போக்கு சமூகத்தில் சிலபோது நம்பிக்கை ஊட்டுகிறது. நாளிதழ்கள், பருவ இதழ்கள் விற்பனை சற்று கூடுதலாக நடந்தால் இத்தகைய புத்தக விற்பனையாளர்களது மன உளைச்சல் தணியக்கூடும்.

வார இதழொன்றில் எழுத்தாளர் சுஜாதா  எழுதிய நாடகம் ஒன்றில், இரவு சாப்பாட்டுக் கடையை அடைத்ததும் கதவைத் தட்டிச், “சாப்பிட ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்பான் ஒருவன். பசியோடு வந்தவனுக்கு ஒன்றுமில்லை என்று சொல்ல மனமில்லாமல் அவசர அவசரமாக உப்புமா செய்து பரிமாறும் அந்த ஏழை ஓட்டல்காரரிடம் கத்தியைக் காட்டி, “இருப்பதைக் கொடு” என்பான் வந்தவன். காசின்றிக் கடனால் மட்டுமே நிரம்பி காலியாகக் கிடக்கும் கல்லாப் பெட்டியைக் காட்டும் உரிமையாளரின்  கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு அவசரமாக வெளியேறும் அவனிடம், “அந்தக் கடிகாரம் அப்பப்ப ஆட்டினாத்தான் ஓடும்” என்று சொல்லி அவனை வழியனுப்பி வைப்பார் அவர்.

நள்ளிரவைத் தொடும் நேரத்தில் தனது அன்றாட வருமானத்தில் கையை வைத்தவனைக் கூட மன்னிக்கும் மனம்  கொண்டிருக்கும் ஓர் எளிய புத்தகக் கடைக்காரர் வெங்கடேசனை நினைக்கையில், சுஜாதாவின் அந்த நாடகம் நினைவுக்கு வந்தது. ஒருவேளை அந்த நள்ளிரவு நேரத்தில் அவரது கடைக்குப் பதுங்கிப் பதுங்கி வந்தவன் பணத்திற்குப் பதிலாகப் புத்தகங்களை எடுத்திருந்தால், அவனிடமே அவற்றைக் கொடுத்து அனுப்பும் பக்குவத்தில்தான் இருந்திருப்பார் அவர்.

****************
 
 
“பசிக்கோ, தாகத்திற்கோ கூட எதுவும் வேண்டாம், 
மொபைல் இருந்தால் போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர்…”
– புத்தகக் கடை வெங்கடேசன் 
நேர்காணல்: எஸ் வி வேணுகோபாலன் 
 
கோடம்பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் புத்தகக் கடை நடத்திவரும் வெங்கடேசன், மிக இயல்பாக  நண்பரானவர்.  கேட்கும் புத்தகங்களை மட்டுமின்றி எந்தவகைப்பட்ட இதழ்களில் நமக்கு ஆர்வம் உண்டு என்னும் குறிப்பறிந்து புதிய புத்தகங்களையும் அறிமுகப்படுத்துபவர். எழுத்தாளர்கள் குறித்தும், பத்திரிகைத் துறை பற்றியும், எங்கெங்கே என்னென்ன முறையில் விஷயங்களின் போக்கு உள்ளதென்றும் அறிந்துகொண்டு பகிர்ந்து கொள்ளத்தக்க விதத்தில் இருந்துவந்திருக்கிறது அவரது அன்றாட வாழ்க்கை.
அவரது மகள் கோகுலவாணி பிறந்த தேதி, உலக புத்தக தினமான ஏப்ரல் 23  என்ற செய்தி அலாதியான அன்பை அந்தக் குழந்தையின்பாலும், அவரது தோழமையின்பாலும் செலுத்த வைத்தது. அண்மைக்காலங்களில், உற்சாக முகத்தைத் தொலைத்துவிட்ட கேள்விகளோடும், நிம்மதியற்ற கண்களோடும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வெங்கடேசனோடு, புத்தக விற்பனை, வாசிப்பு பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கையில் அதிர்ச்சியும், சோர்வும் மேலிட்டது. ஆனாலும், புத்தகக் கடையை விடாப்பிடியாக நடத்திவரும் அவரது உள்ளம் நூல்கள்வசம் தான் உள்ளது என்பதும் புரிந்தது.  அவரோடு உரையாடியதிலிருந்து:
 
புத்தகக் கடை நடத்தும் எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?
1980களின் பிற்பகுதியில், கிண்டி தாம்பரம் பகுதியில் புத்தகக் கடைகளுக்கு செய்தித்தாள்கள் விநியோகிக்கும் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டேன். அதாவது வடசென்னை, தென் சென்னை, புறநகர் சென்னை என்ற மூன்று ஏஜெண்டுகளில் ஒருவன் நான். அதற்குமுன்  தாம்பரம் பகுதியில் வீடுகளுக்கு பேப்பர் போட்டுக் கொண்டிருந்தேன்.  பிறகு, தாம்பரம் ரயில் நிலைய புத்தகக் கடையைப் பொறுப்பெடுத்து நடத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோடம்பாக்கம் வந்தடைந்தேன். இளம் வயதிலிருந்து நாளேடுகள், வார, மாத இதழ்களோடு என் வாழ்க்கை கலந்துவிட்டது.

செய்தித்தாள்கள் கணக்கில்லாமல் விற்ற காலம் ஒன்று இருந்தது அல்லவா, எப்போது?

அதெல்லாம் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னாடி கதை…குறிப்பா சொல்லணும்னா 2005க்குப் பிறகே அன்றாட பேப்பர் விற்பனை குறைய ஆரம்பிச்சிருச்சுன்னு சொல்லலாம். அண்மைக் காலமா இன்னும் குறைத்துகொண்டு வருகிறது. இதேதான் வார, மாதமிருமுறை, மாத இதழ்களுக்கும் நேர்ந்த கதி. சில இதழ்கள் நூற்றுக்கணக்கில் விற்றதெல்லாம் சரிந்து வந்தாயிற்று.

வாசகர்கள் தேடி வரும் புத்தகங்கள், திரும்பத் திரும்ப நிறைய பேர் நாடிய புத்தகங்கள் இப்போதும் அப்படி தொடர்கிறதா…

 
முன்னாடி சொன்ன பதில்தான் இதற்கும். குறிப்பிட்ட புத்தகம், இன்ன பதிப்பகம் என்று நிறைய கேட்டு வருவார்கள். தருவித்துக் கொடுப்போம். இங்கும் எப்போதும் நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருப்போம். அதெல்லாம் இப்போது குறைந்துவிட்டது.
 
குழந்தைகளுக்கான புத்தகங்கள் – இதழ்கள் விற்பனையின் போக்கு எங்கிருந்து எங்கே சென்று கொண்டிருக்கிறது…
 
முன்பெல்லாம் குழந்தைகளுக்காக எத்தனை இதழ்கள் வந்துகொண்டிருந்தன…அம்புலிமாமா, சந்தமாமா எல்லாம் எப்போதும் விற்றபடி இருக்கும். எல்லா பத்திரிகைகளைப்போலவே இதிலும் வருத்தமான நிலை தான்… ஒரு சில நிறுவனங்கள் விட்டுவிடக் கூடாதே என்ற உணர்வில் கொண்டுவந்துகொண்டிருக்கின்றனர். மற்றபடி, குழந்தைகளுக்கான இதழ்கள் விற்பனை  அத்தனை சுவாரசியமாக இல்லை.

நாளேடுகள், புத்தகங்கள் அதிக விற்பனை செய்ததற்காகப் பாராட்டுதல்கள் கிடைத்தது பற்றிச் சொல்லுங்கள்..

பலமுறை அப்படி சிறப்புப் பரிசு கொடுத்திருக்கின்றனர். நாளேடுகள், வார, மாத இதழ்கள் மட்டுமின்றி பிரசுர நிறுவனங்களின் நூல்களும் நிறைய விற்பனை செய்திருக்கிறோம். அவர்களும் அங்கீகரித்து பெருமைப் படுத்துவார்கள். பெரிய ஊக்கம் அளிக்கும் விஷயம். எழுத்தாளர்கள் சிலரைக் கடைக்கு வரவழைத்து வாசகர் சந்திப்பும் நடத்தி இருக்கிறோம். 
புத்தகம் வாங்காவிட்டாலும் கடை நிறைய எப்போதும் யாரேனும் சூழ்ந்து நிற்பது, தங்களுக்குள் பேசிக்கொள்வது, ரயில் வந்துவிட்டால் போய்க்கொண்டே இருப்பது இதெல்லாம் எப்போதாவது உங்களை பாதித்ததுண்டா…
 
அதெல்லாம் பாதிக்காது. வாசகர் பார்வைக்குத்தானே காத்திருக்கிறோம்…புத்தகம் தொடர்பாக எதுவும் கேட்டாலும் பதில் சொல்லவும்தான்!   பொதுவாக, இரண்டு பக்கமும் ரயில் வர எதிர்பாராமல் தாமதம் ஆகும்போது, புத்தகக் கடையிலோ, பக்கத்தில் உணவுப்பொருள் கடையிலோ கூட்டம் மொய்க்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை.  கடந்த வாரம், அரை மணி நேரத்திற்குமேல் ரயில் போக்குவரத்து இல்லாதபோது, கடைப்பக்கம் ஆள் வரவில்லையே, காபி, டீ பக்கம் போயிருப்பார்களோ என்று எட்டிப்பார்த்தால் அந்த ஸ்டாலிலும் ஆள் நடமாட்டம் இல்லை. எங்கேதான் போனார்கள் மக்கள் என்று பார்த்தால், ரயில் வருகிறதா என்று எட்டி எட்டிப் பார்க்கிற நேரம் போக, மீதி கவனமெல்லாம் அலைபேசியில் தான் இருக்கிறது என்பதை அதிர்ச்சியோடு பார்த்தேன்…. பசிக்கோ, தாகத்திற்கோ கூட எதுவும் வேண்டாம், மொபைல் இருந்தால் போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர்…. புத்தகக் கடை பக்கம் பார்க்க ஆள் இல்லை. வருத்தமாகத்தான் இருக்கிறது…
 
விற்பனையில் சரிவு என்பதை  யாருமே கவனிக்கத்தானே செய்வார்கள்?
 
முன்பெல்லாம் விற்பனையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலே, பத்திரிகை தரப்பிலிருந்து யாராவது வருவார்கள். எவ்வளவு குறைஞ்சது, ஏன் குறைஞ்சுது என்று துருவித் துருவிக் கேட்டுக் கொள்வார்கள். அதுவும் நான் வீட்டுக்குப்  பேப்பர் போடும் காலத்தில், ஒரு பேப்பர் இரண்டு பேப்பர் குறைந்தாலும் எந்தத் தெரு, யார் வீடு என்று கேட்டு முகவரி வாங்கி நேரில் சென்று பார்த்துப்பேசி தொடர்ந்து வாங்க வைத்துவிடுவார்கள். இப்போது தன்மைகள் எல்லா இடத்திலும் மாறிவிட்டன.

நாளேடுகள், புத்தகங்கள் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

எங்கள் கடையில் முன்பு ஒருவர் மாதாமாதம் மூவாயிரம் ரூபாய்க்குமேல் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்தவர், சடாரென்று நிறுத்தியே விட்டார். கேட்டால், நான் எல்லாவற்றையும் எலெக்ட்ரானிக் முறையில்  வாசித்து விடுகிறேன் என்கிறார். பத்திரிகைகள், இதழ்கள், புத்தகங்கள் எல்லாமே இப்போது கைப்பேசியில், வேறு சாதனத்தில் வாசித்து விட முடிகிறது. அதற்கான காசும் குறைவாகவே ஆகிறது. மேலும், எல்லா முக்கிய செய்திகளும் இப்போது வேகமாக கைப்பேசியில் வந்து இறங்கி விடுகிறது. வாட்ஸப் இருக்கவே இருக்கிறது…

இதெல்லாம் வருவதற்குமுன், மாலை பத்திரிகைகள் வந்து இறங்கியவுடன் போஸ்டர்களைத் தொங்கவிடும்போதே அத்தனை கூட்டம் சேர்ந்துவிடும்…ஆர்வத்தோடு பார்த்து, எந்த பேப்பர் வாங்கலாம் என்று வாங்கிப்படிப்பார்கள், அதை இரண்டு பேர் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்போதெல்லாம், எந்தச் செய்தியும் யாருக்கும் புதிதில்லை. திடுக்கிடும் செய்தி, பரபரப்பு செய்தி எதுவுமில்லை. தொலைக்காட்சி சானல்கள் நிறைய வந்தபிறகே விற்பனையில் சரிவு தொடங்கிவிட்டது.

இத்தனைக்கும் பிறகும், புத்தகம் வாங்குவோரும், ஆன்லைன் மூலம் எளிதில் வாங்கிவிடுகின்றனர். அதிலும் சலுகை விலையில்! அப்புறம் இங்கே ஏன் வரப்போகின்றனர்?

 
உங்கள் அனுபவம் மட்டும்தானா இது?
 
இல்லை… பொதுவாகவே புத்தகக் கடை நடத்துவோர் எல்லோருமே பழைய உற்சாகத்தோடு வியாபாரம் நடக்கவில்லை என்று சொல்கின்றனர். எந்தக் காலத்திலும் சமாளித்தோர்கூடத் திணறுகிற காலம் இது.  மிகப் பெரிய புத்தகக் கடை வைத்திருந்த அன்பர் ஒருவர், கடையை மூடிவிட்டு அங்கே ஒரு சிறிய ஓட்டல் தொடங்கிவிட்டார். வேறு தொழில் தெரிந்திருப்போர் வேகமாக மாறிச் சென்றுவிட முடியும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், நஷ்டத்தை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதுவும் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி திண்டாடிக் கொண்டிருப்போர் நிலைமை மோசம். எனக்கோ, ஆரம்பத்திலிருந்து புத்தகம், செய்தித்தாள்களோடு தொடங்கிவிட்ட வாழ்க்கை, விட்டுவிட்டுப் போக இயலவில்லை. 
 
 
– நேர்காணல்: எஸ் வி வேணுகோபாலன்

News

Read Previous

சொர்க்கம் நோக்கிய பயணம்

Read Next

மூலிகை பேசுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *