ஏன் இந்த தடுமாற்றம்?

Vinkmag ad
சமுதாய தலைவர்களுக்கு ஏன் இந்த தடுமாற்றம்?
தமிழகத்தில் மட்டும் அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள்,ஜமா அத்துகள் என 67க்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகள் பல்வேறு கொள்கை கோட்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன.
ரத்ததான முகாம்,மருத்துவ முகாம்,ஆம்புலன்ஸ் சேவை போன்ற மனித நேய சேவைகளையும் மேற்கண்ட பெரும்பாலான அமைப்புகள் செய்து வருவதையும்,பின்னர் அந்த மனிதநேய சேவைகளை தேர்தல் காலங்களில் அரசியல் ஆதாயங்களுக்காக விளம்பர படுத்துவதையும் காணமுடிகிறது.
தேர்தல் வந்து விட்டால் ஆங்காங்கே சிதறி கிடந்த மாற்று சமுதாய உதிரி கட்சிகள் கூட அவரவர்களின் சமுதாய நலனையும்,முன்னேற்றத்தினையும் கவனத்தில் கொண்டு ஓரணியில் ஒருங்கிணைந்து விடுகிறார்கள்.
ஆனால் சாபத்திற்குரிய சமுதாயமோ? என்னவோ?நமது சமுதாய தலைவர்களிடம் மட்டும் அந்த ஒருங்கிணைப்பை காண முடியவில்லையே?
கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் என்பது மனிதனாய் பிறந்துள்ள ஒவ்வொருவருக்கும் பொதுவானது.என்றாலும் சமுதாயத்திற்கு நலன் பயக்கும் அல்லது நமது பொது எதிரியை வீழ்த்துவது போன்ற முக்கிய விசயங்களில் மன வேற்றுமையை ஒதுக்கி விட்டு தேர்தல் காலத்திலாவது ஓரணியில் ஐக்கியமாகலாமே?
ஒரு தலைவன் ஒரு கட்சியை ஆதரித்தால் இன்னொரு தலைவன் மாற்று கட்சியை ஆதரிப்பது என்பதே நமக்குள் ஒற்றுமை இல்லை என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தாதா?
தான் சார்ந்துள்ள கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்பதற்காக நமது சமுதாய தலைவர்கள் சில நேரத்தில் கண்ணியம் இழக்கும் வகையில் கருத்து சொல்லி மொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைக்கும் தடுமாற்றங்களும் அவ்வப்போது நிகழ்வது வேதனையல்லவா?
நாம் யாரை ஆதரித்தாலும் நமது மார்க்க ஒழுக்க விழுமியங்களுக்கு உட்பட்ட வகையில் மட்டுமே நமது பிரச்சார அணுகுமுறை இருக்க வேண்டுமென்பதை கூட சில நேரத்தில் நமது சமுதாய தலைவர்கள் மறந்துபோய் வரம்பை மீறிய வார்த்தைகளை கொட்டுவது எந்த வகையில் நியாயமாகும்?.
நாம் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் குறிப்பிட்ட அந்த தேர்தல் வரைக்கும் மட்டுமே என்ற நிலைப்பாடு தான் ஆரோக்கியமானதாகும்.
ஒருதேர்தலில் திமுகவை ஆதரிப்பதும் அடுத்த தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதும் தான் நமது சமுதாயத்தின் கடந்த கால கூட்டணி வரலாறு.
யாரை எப்போது ஆதரித்தாலும் அந்த ஆதரவு நமது ஒட்டு மொத்த சமுதாயத்தின் நன்மை கருதியே இருக்க வேண்டுமென்பதை கவனத்தில் கொண்டால் மிதமிஞ்சிய வகையில் எந்த கட்சியையும் நாம் வானளாவ புகழ வேண்டிய அவசியம் இருக்காது.
திமுகவுடன் கூட்டணி என்றால் அதிமுகவை அளவுக்கு மீறி புகழ்வதும்,அதிமுகவுடன் கூட்டணி என்றால் திமுகவை அளவுக்கு மீறி புகழ்வதும் நமது சமுதாயத்தின் கண்ணியத்திற்கு தானே இழுக்கு?.
மொத்தத்தில் வருங்காலத்திலாவது ஒரே அணியில் இருந்து ஒரே கூட்டணியில் பங்கு வகிக்கும் நிலைபாட்டையும்,சுய விருப்பு,வெறுப்புகளுக்கு இடமளிக்காத தலைவர்களை அடையாளம் காணும் சூழலையும் உருவாக்க இப்போதைய தலைவர்கள் முயற்சிக்கிறார்களோ?தொண்டர்களாகிய நாமாவது முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்….
அன்புடன்
கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

5 எஸ் என்னும் அருமையான திட்டம்

Read Next

முழுமையானதொரு பெண்மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *