எப்போது முடிவுக்கு வரும் இந்த பாரபட்சம் ?

Vinkmag ad

 

எப்போது முடிவுக்கு வரும் இந்த பாரபட்சம் ?

-திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தார்

thahiruae@gmail.com

Mob  .974 + 66928662

மும்பையில் மதத்தை காரணம் காட்டி ஹரே கிருஷ்ணா என்னும் தனியார்  ஏற்றுமதி நிறுவனம் ஜீஷான் கான் என்னும் எம்.பி.ஏ முஸ்லிம் முஸ்லிம் பட்டதாரிக்கு வேலை தர மறுத்துள்ளது. அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அதை வெளிப்படையாகவே அந்நிறுவனம் பின்வருமாறு தெரிவித்துள்ளது . Thanks for your application. We regret to inform you that we hire only non-Muslim candidates,” உங்கள் விண்ணப்பத்துக்கு நன்றி. மன்னிக்கவும் நாங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மற்றுமே பணியில் அமர்த்துகிறோம் “ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போலாகும். இன்று முஸ்லிம்கள் இந்தியாவில் பல்வேறு துறைகளில் புறக்கணிக்கப் படுகிறார்கள்.ஒதுக்கப் படுகிறார்கள்.இதை இந்திய மொழியில் தீண்டாமை) untouchbality ) என்றும் மேற்கத்திய மொழியில் இன ஒதுக்கல் (racial discrimination ) என்றும் சொல்லலாம்.ஒரு காலத்தில் சமூகத்தால் நிகழ்த்தப் பட்ட கொடுமைகள் இப்போது கார்ப்பரேட்  நிறுவனங்கள் மூலம் மறைமுகமாக சொல்லாமலே நிகழ்த்தப் படுகிறது.இப்போது இந்த ஒரு நிறுவனம் வெளிப்படையாகவே பகிரங்கமாக அறிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன் திருச்சியில் ஒரு  தனியார் கல்லூரி கணித  விரிவுரையாளர் நேர்காணலுக்கு விளம்பரம் செய்திருந்தது.அதில் ஒரு நிபந்தனையாக முஸ்லிம்களை தவிர அனைவருக்கும் அனுமதி என்று விளம்பரம் செய்திருந்தது.

நீயா நானா நிகழ்ச்சியில் கோபி நாத்” ஏன் கோவையில் சில குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு கடன் கொடுக்க வங்கிகள் மறுக்கின்றன? “ என  ஒரு வங்கி அலுவலரிடம் கேட்க அவர் பதில் சொல்லாமல் மழுப்ப , அப்பகுதி மக்கள் முஸ்லிம்கள் அதனால்தானே அவர்களுக்கு கடன் நீங்கள் கொடுப்பதில்லை என்று உண்மையைப் போட்டு உடைத்து விட்டார். கடைசியில் அந்த வங்கி அலுவலரும் அதனை ஒப்புக் கொண்டார்.

அண்மையில் மும்பையில் மிஸ்பாஹ் காதிரி என்ற  முஸ்லிம் இளம்பெண்ணுக்கு ஒரு குடியிருப்பில் பிளாட் மறுக்கப் பட்டது காரணம் கேட்ட போது முஸ்லிம்களுக்கு அந்த குடியிருப்பில் இடம் இல்லை என்று தெரிவிக்கப் பட்டது.

கொல்கத்தாவின் அடுனிக் குரூப் கம்பெனியில்  தாடி வைத்திருந்ததால் ஜெனரல் மேனேஜர் பதவியில் இருந்தமுஹம்மது அலி  இஸ்மாயில் என்ற  ஆறு ஆண்டுகள் பணியில் இருந்த முஸ்லிம் ஒருவர்  சம்பளம் குறைக்கப் பட்டு கடைசியில் அவர் பணியை விட்டே நீக்கப் பட்டார்.

வட இந்திய மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு அலுவலக பணிகள் மட்டுமல்ல சாதாரண உடல் உழைப்பு பணிகள் கூட மறுக்கப் படுகிறது. அதனால் ஏழை முஸ்லிம்கள் சிலர்  தங்கள் பணியின் நிமித்தம் தங்களை இந்துக்களாக அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.அதாவது இந்துப் பெயரையும் அடையாளங்களையும் வைத்துக் கொண்டு பணிக்கு செல்கின்றனர்.  நூர்ஜஹான் என்ற ஒரு முஸ்லிம் பெண் தன்னை இலட்சுமி என்ற அடையாளப்படுத்திக் கொண்டு ஒரு மருத்துவமனையில் பணி புரிகிறார்.அவரிடம் அந்த மருத்துவமனையின் அதிகாரிகள் மருத்துவமனையின் சுத்தப் படுத்துதல் பணிக்கு சில பெண்கள் தேவைப் படுவதாகவும்,அவருக்கு தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுமாறு சொல்கிறார்கள்.அதே நேரத்தில் அவர் பரிந்துரை செய்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க கூடாது என்ற நிபந்தனையையும் விதிக்கிறார்கள்.

மும்பையில் பிரபல்யமான ஒரு தனியார் பள்ளியில் முஸ்லிம் குழந்தைகளுக்கு  அனுமதி இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.அதே நேரத்தில் இவ்வாண்டு அப்பள்ளியில் தேர்வு முடிவுகளில் முதன்மையான  இடத்தைப் பிடித்தவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அந்தஸ்து மற்றும் வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சமத்துவம் கிடைக்கவும் மற்றும் அனைவரையும் முன்னேற்ற உறுதி உறுதி பூண்டிருப்பதாக நமது அரசியல் சாசனத்தின் முகப்புரையில் சொல்லப் பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தின் மூன்றாம் பகுதியின் சட்ட உட்பிரிவு “அரசு எந்தக் குடிமகனுக்கும் மதம்,சாதி,இனம்,பாலினம் மற்றும் பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப் படக் கூடாது “என்கிறது.

 

 

எந்தக் குடிமகனுக்கும்  மதம்,இனம்,சாதி, பாலினம் வம்சாவளி,பிறந்த இடம், ஆகியவற்றின் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் மற்றும் அரசின் அலுவலகங்களில் தகுதி இழப்பு ஏற்ப்படுத்துதல், அல்லது பாகுபடுத்துதல் கூடாது என்று இந்திய அரசியல் சாசனத்தின் மூன்றாம் பிரிவான அடிப்படை உரிமைகள், உட்பிரிவு 16  கூறுகிறது

 

அண்மையில் மகாராஷ்டிரா அரசு மராத்தியர்களுக்காக இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது.அதே நேரத்தில் முஸ்லிம்களுக்காக முந்திய அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டு முடிவை அமல் படுத்த மறுத்து விட்டது. அரசே செய்த இந்த புறக்கணிப்பும் தனியார் துறை நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது

 

முஸ்லிம்கள் சுத்தமற்றவர்கள், அவர்கள் பாகிஸ்தானை நேசிப்பவர்கள், அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள், பயங்கரவாதிகள் என  முஸ்லிம் விரோத விரோத அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் தொடர்ச்சியான பொய்யான பிரச்சாரங்கள் வேத வாக்குகள் போல முஸ்லிம்களை  புறக்கணிப்பவர்கள்  மனதில் பதிந்து கிடக்கிறது.

 

இந்த நாட்டின் முஸ்லிம்கள் அனைவரும் இங்கே பிறந்தவர்கள், இவர்களின் முன்னோர்களான விடுதலைக்காகப் போராடிய இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் இரத்தமும் இந்த மண்ணில் கலந்துள்ளது. மறைந்த பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் சொல்வதைப் போல தங்களின் விகிதத்தை விட அதிகமாக நாட்டின் சுதந்திரத்திற்கு தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள். தற்போது வாழும் இந்திய முஸ்லிம்களின் நாட்டுப் பற்றிக்  குறித்து ஒரு தடவை கூறிய  இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக தங்கள் உயிரையே கொடுப்பார்கள் என்கிறார்.

 

இந்திய முஸ்லிம்கள் தேசியவாதிகள், அவர்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் என்கிறார் உள்துறை அமைச்சர் திரு .ராஜ் நாத் சிங்.

 

என்னைப் பொருத்தவரை, ‘இந்தியா முதல்’ என்பது தான் என் அரசின் மதம். என் அரசின் புனித நூல், அரசியல் அமைப்புச் சட்டம் தான். என்று சொல்லியுள்ள பிரதமர்  .அரசியல் சாசனம் அளித்துள்ள அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சமூக நீதி கிடைக்க வழி வகை செய்யப் படும் என்ற என்ற உத்தரவாதத்தை நிறைவேற்றி அரசிலும் தனியார் துறையிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அது இல்லாவிட்டாலும் இப்போதைக்கு இந்த நாட்டின் குடிமக்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்விக் கூடங்கள்,அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் என அனைத்திலும் பாரபட்சமற்ற முறையில் வாய்ப்புகள் மற்றும் வசிப்பிடங்கள்  கிடைக்கப் பெறவும் ,தீண்டாமை மற்றும் இன ஒதுக்கலுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் சமூக நீதி கிடைக்க அவர்  வழி வகை செய்ய வேண்டும்.

முஸ்லிம்கள் தங்களது பிரச்சனைக்காக நள்ளிரவு 12 மணிக்கு கூட தன் வீட்டு கதவை தட்டினாலும்
தாம் பதிளிப்பேன் என்று கூறியுள்ள அவரிடம் , அவரின் வீட்டின்   கதவைத் தட்டாமலே அவர் காதிற்கு எட்டி இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சங்களை  நீக்கி சப்கா சாத் சப்கா விகாஸ் ) அனைவருடன் இணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக!) என்கிற  தமது அரசின் இலட்சியத்தில் முஸ்லிம்களையும் சேர்த்து வலிமையான இந்தியாவை அவர் உருவாக்குவார் என்று நாம் நம்புகிறோம்.

*************************************************************************************************************************

News

Read Previous

காற்றுவெளி

Read Next

திருக்குறள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *