உலகை ஆளப்போகும் ஏஐ

Vinkmag ad
உலகை ஆளப்போகும் ஏஐ
இணையம் – கணினி இணைவு உருவாக்கிய யுகத்துக்குள்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கணினித் தொழில்நுட்பமும் தகவல்களை அலசி, பதில்களைத் தரக் கூடியதுதான் எனில், கணினியில் இருந்து செயற்கை நுண்ணறிவு (artificial intelligence)  எவ்வாறு வேறுபடுகிறது?  வழமையான கணினி செயலிக்கும் செயற்கை நுண்ணறிவுக்கு மான வேறுபாட்டை இந்த உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

ஆல்ஃபாஜீரோ, ஸ்டாக்ஃபிஷ் என்ற இரு கணினிகளுக்கும் இடையே 2017-ஆம் ஆண்டு செஸ்போட்டி நடத்தப்பட்டது. வழமையான செயல்திறன் கொண்ட கணினியான ஸ்டாக்ஃபிஷ்ஷில், உலகின் முன்னணி செஸ்வீரர்களின் நகர்வுகள் உள்ளீடு செய்யப்பட்டிருந்தன. உலக செஸ் சேம்பியன்கள் ஸ்டாக்ஃபிஷ்ஷுடன் மோதினர். ஸ்டாக்ஃபிஷ் அவர்களை எளிதில் வீழ்த்தியது. இத்தகைய திறன் கொண்ட கணினியுடன் போட்டியிட, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆல்ஃபாஜீரோ உருவாக்கப்பட்டது.

ஸ்டாக்ஃபிஷ் போலல்லாமல் ஆல்ஃபாஜீரோவுக்கு செஸ் விளையாட்டின் விதிகள் மட்டும் உள்ளீடு செய்யப்பட்டன. நான்கு மணி நேரத்தில் அந்த விதிகளை சோதித்து அறிந்தது. அவ்வளவுதான். ஆட்டத்துக்குத் தயார். ஸ்டாக்ஃபிஷ்ஷுக்கும் ஆல்ஃபாஜீரோவுக்கும் இடையே 100 ஆட்டங்கள் நடந்தன. வெறும் நான்கு மணி நேரமே பயிற்றுவிக்கப்பட்ட ஆல்ஃபாஜீரோ, 28 போட்டிகளில் வென்றது.

72 போட்டிகள் டிராவில் முடிந்தன. ஒரு போட்டியில்கூட ஆல்ஃபாஜீரோ தோற்கவில்லை. ஸ்டாக்ஃபிஷின் நகர்வு எல்லைக்கு உட்பட்டது. அதற்கு உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமே தன் நகர்வுகளை மேற்கொள்ளும். ஆனால், ஆல்ஃபாஜீரோ அவ்வாறானது அல்ல. வெறும் விளையாட்டு விதிகளை உள்ளீடு செய்ததும் அது அனைத்து சாத்தியங்களையும் கண விநாடியில் அலசி முடிவெடுக்கும் திறன் பெற்றது. நவீன தொழில்நுட்பம் வந்து நிற்கும் புள்ளியும் அதுதான்.

தொழிற்புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில், விவசாயக் கூலிகளின் வேலை பறிபோகும் என்ற அச்சம் நிலவியது. ஆனால், நிலத்தை நேரடியாக உழுது கொண்டிருந்தவர்கள் இயந்திரங்களை இயக்கக்கூடியவர்களாக மாறினார்கள். அதன் பிறகு கணினி வந்தபோது, தொழிற்சாலையில் வேலை இழப்பு ஏற்படும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், தொழில்-நிர்வாக அமைப்பு கணினியை மையப்படுத்தி தன்னைத் தகவமைத்துக் கொண்டது. அது வேறு பரிமாணங்களில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.

மொத்தத்தில் புதிய தொழில்நுட்பங்களின் வருகை என்பது வேலைகளை அழித்தது என்பதைவிட வேலைகளின் தன்மைகளை மாற்றி அமைத்தது எனலாம். ஒவ்வொரு புரட்சியின் வழியாக சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறது. இனி, செயற்கை நுண்ணறிவு அவ்வாறான ஒரு புதிய உலகைக் கட்டமைக்க உள்ளது; நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்!

(மார்ச் 2 இந்து தமிழ் திசை நாளிதழ் வணிக வீதி இணைப்பில் முகம்மது ரியாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து)

News

Read Previous

இராமநாதபுரம் மாவட்டத்தில் 31.3.2020 வரை மருந்தகம் மற்றும் உணவு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே திறக்க அனுமதி

Read Next

கொரோனா -2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *