உண்மைக்கு ஒரே வடிவம்

Vinkmag ad

சிறுகதை: உண்மைக்கு ஒரே வடிவம்
ஆக்கம்: சுப்பையா கோயம்புத்தூர்
அலைபேசி எண்: 94430 56624

“இன்றைய தேதியில் என்னோட சொத்தின் மதிப்பு என்ன தெரியுமா?”
என்று ஏகப்பசெட்டியார் கேட்கவும், அவரது மனைவி மீனாட்சி ஆச்சி
சுவாரசியமேயில்லாமல் “ம்ம்…” என்று பதில் சொன்னார்கள்.

காலையில் வந்த நாளிதழை வைத்துக் குறிப்பெடுத்துக் கொண்டி
ருந்தவர், நிமிர்ந்து உட்கார்ந்து சொன்னார்.

“அண்ணா நகரில் வாங்கிப்போட்ட நாற்பது சென்ட்டும் எட்டு
வருடத்தில் நான்கு மடங்கு உயர்ந்து விட்டது. திருநகரில் உள்ள
கிரவுண்டு வீட்டுமனை முப்பது வருடங்களில் இருபது மடங்கு
ஏறிவிட்டது. பத்து சென்ட் இடத்துடன் டி.வி.எஸ் நகரில் வாங்கிய
வீடு பத்து மடங்கு ஏறிவிட்டது.கையில் இருக்கும் ·புளூ சிப்
ஷேர்களின் −ன்றைய பங்குச் சந்தை நிலவரப்படி நான்கு கோடி
ரூபாய். ஆக மொத்தம் எட்டு கோடி ரூபாய். உனக்கு வாங்கிக்
கொடுத்த நூற்றைம்பது பவுன் நகைகளும், சொக்கிகுளம் பொது
வீடும் நீங்கலாக இந்தப் பணம் அதைத் தெரிந்து கொள்!”

“அதைத் தெரிந்துகொண்டு எனக்கு என்ன ஆகப்போகிறது?
நாளைக்கே நான் என்ன பன்னீரிலா குளிக்கப்போகிறேன்?
அதே அடுப்படியில், அதே பழைய கேஸ் அடுப்போடும், தேய்ந்து
போன குக்கரோடும், ஓடாய் நானும் கிடக்க வேண்டியதுதான்.
ஒன்று கேட்கட்டுமா? கோபித்துக் கொள்ள மாட்டேன் என்றால் கேட்கிறேன்”

“ஆகா, தாராளமாகக் கேள்!”

“நீங்கள் செத்துப்போனால் அழுக ஆள் இருக்கிறதா?”

செட்டியாருக்குச் சுரீர் என்றது. கடப்பாரையால் மண்டையில்
அடித்தது போன்று இருந்தது. வந்த கோபத்தை அடக்கிக்
கொண்டு மெதுவாகக் கேட்டார்.

“ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

“உங்களோடு பிறந்தவர்கள் மூன்று பேர்கள். என்னோடு
பிறந்தவர்கள் நான்கு பேர்கள். நமக்குப் பிறந்தவள் ஒருத்தி.
அவளுக்குக் கல்யாணமாகி வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை,
ஆக, யாருடனாவது உங்களுக்கு சுமூகமான உறவு இருக்கிறதா?
இந்தப் பாழாகப் போகிற பணத்தை வைத்து அத்தனை பேர்
களுடனும் சண்டை. யாருடனாவது பேச்சு வார்த்தை இருக்கிறதா?
யார் வீட்டிற்காவது போய் வர முடிகிறதா?”

ஆச்சி சொல்வதில் உள்ள உண்மையை மறுத்துச் சொல்லத்
திரானி இல்லாமல், வழக்கம் போல நக்கலடித்துப் பதில் சொன்னார்.

“அதான், நான் செத்துப்போனா அழுவதற்கு உன்னைக் கட்டி
வைத்திருக்கிற தல்லவா?”

“சிகப்பட்டி ஜோசியர் சொல்லியிருக்கார். உங்களுக்கு முன்னாடி
நான் போயிரு வேனாம். அதனால்தான் கேட்டேன், அழுக ஆள்
இருக்கான்னு!”

“செத்துப்போன பிறகு அழுதா என்ன அழுகாட்டீன்னா என்ன?
நான் என்ன உக்கார்ந்தா பார்க்கப் போகிறேன்? நல்லா அன்போடு
இருந்தவனையே எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறார்கள்
சொல். ஊர் கூடி உரக்க அழுதிட்டு, பேரினை நீக்கிப் பிணமென்று
கூப்பிட்டு, சூரியன் காட்டிடையே கொண்டு போய்ச் சுட்டு
விட்டு, நீரில் மூழ்கி நினைப்பு ஒழிவார்கள்ன்னு திருமூலரே
சொல்லியிருக்காரு”

“மனித வாழ்க்கையைக் கொண்டாடி கோலம் போடுறவனுக்
காகத் திருமூலர் சொன்னது அது. ரெம்ப ஆடாதே உன் நினைப்புக்கூட ஒருவருக்கும் காலப்போக்கில் இருக்கப்போவதில்லை, அதுதான் மனித வாழ்க்கை என்பதற்காக திருமூலர் சொன்னது அது! எப்படி வாழணும் –
செத்தா என்ன கூட வரும்னு பட்டினத்தார் சொல்லியிருக்காரே – அது உங்கள்
கண்ணில் படலியா?”

“என்ன சொல்லியிருக்காரு பட்டினத்தார்?”

“அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, கைப்பற்றிய மாந்தரும்
வீதி மட்டே, மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு மட்டே,
பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமுமே’ ன்னாரு.
அதைத்தான் எல்லாருக்கும் புரியும்படியா கண்ணதாசன் எளிமைப்
படுத்தி எழுதினாரு. வீடுவரை உறவு, வீதிவரை மனைவி,
காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ’ன்னு எழுதினார்.
பாவ, புண்ணியத்தை உங்களை மாதிரிப் பாதிப்பேர் ஒத்துக்க
மாட்டாங்கன்னுதான் யாரோன்னு போட்டாரு. அதோடு இல்லாமல்
ஏன் அப்படிப்போட்டீர்கள்ன்னு கேட்டபோது சொன்னாராம்
– புரிஞ்சுக்கிறவன் புரிஞ்சிக்கட்டும், புரியாதவனுக்குப்
புரியாமலேயே போகட்டும்னாராம்!”

“அதே கண்ணதாசன்தான் சொன்னாரு ‘கையிலே காசிருந்தா
கழுதைகூட அரசனடின்னாரு’ கையில காசில்லைன்னா
ஒருத்தன்கூட மதிக்க மாட்டான் தெரிஞ்சுக்க!”

“சட்டில வேணும்னா சின்னது பெரிசு இருக்கலாம், செட்டியில
சின்னது பெரிசெல்லாம் கிடையாது செட்டியார்கள்ல யாருமே
ஒருத்தரை ஒருத்தர் பணத்தை வச்செல்லாம் மதிப்புக்கொடுக்
கிறதில்லே அவுகவுக பழகுகிற தன்மையை வச்சும், செய்யிற
சேவையை வச்சும், பண்ணுகிற தர்மத்தை வச்சும்தான் மதிப்பே
தவிர நீங்க சொல்ற பணத்தை வைத்தல்ல. இன்னைக்கும்
வைநாகரம் செட்டியாரையும், அண்ணாமலை செட்டியாரையும்,
அழகப்ப செட்டியாரையும், பாடுவார் முத்தப்ப செட்டியாரையும்,
பண்டிதமணி கதிரேசன் செட்டியாரையும், எல்லாரும் மனசார
நினைக்கிறாங்கன்னா, அதுக்கு அவர்கள் செய்த இறைப்பணி,
கல்விப்பணி, தமிழ்ப்பணி இதுபோல ஏதாவது ஒரு பணிதான்
காரணமே தவிர, நீங்க சொல்ற பணம் காரணமல்ல – அதைத்
தெரிஞ்சுகிட்டுப் பேசுங்க!”

“இப்ப என்ன பண்ணனும்கிற?”

“ஊறவுகளை யாரும் உண்டாக்க முடியாது. அத்தனை உறவுகளுமே
இறைவனால் கொடுக்கப் பட்டது. ஆகவே அந்த உறவுகளை
மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளா விட்டாலும், நோகவைத்து
நொங்கெடுக்காமல் இருக்கலாமில்லையா? கட்டித்தழுவும்
படியாக இல்லாவிட்டாலும், உட்கார வைத்துப் பேசும்படியாவது
இருக்க வேண்டாமா? ஆகவே உற்றார் உறவினர்களுக்கு உங்கள்
மேல் இருக்கும் கடுப்பைப் போக்குங்கள் – கசப்பைப் போக்குங்கள்
– அது போதும்!”

ஆச்சியின் ஒவ்வொரு வார்த்தையும் ஒங்கிச் செவிட்டில் அறைவைதைப்
போன்றிருந்தது. அதற்குப் பிறகு அவர் மெளனமாகி விட்டார்.

ஆனால் அதே நேரம் வேறு ஒரு இடத்தில் அவருடைய தம்பிகள் மூவரும்
அவரைப் பற்றி சிலாக்கியமில்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதுவும் யாரிடம்? சொக்கிகுளம் ராமசாமி அண்ணனிடம்.

ராமசாமி அண்ணன் எவ்வளவு பெரிய மனிதர்? செல்வாக்கு, சொல்
வாக்கு மிக்கவர் என்பதோடு பல பொதுசேவைகளை முன்னின்று
செய்பவர். செல்வந்தர். பிறந்த ஊரிலும், வசிக்கும் மதுரையிலும்
பிரபலமானவர். அரசியல் மற்றும் சமூக செல்வாக்கு உள்ளவர்.
அதோடு மிக்க தர்ம சிந்தனை உள்ளவர். உதவி என்று வருபவர்
களுக்கும், பாகப்பிரிவினை, பஞ்சாயத்து என்று வருபவர்களுக்கும்
வேண்டியதைச் செய்து கொடுப்பார் அவர். அதனால் சென்றிருக்கலாம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காலை ஏழு மணிக்கே, தன் ஊரைச் சேர்ந்த தேனா ஆனா
குடும்பச் சகோதரர்கள் நால்வரில், பெரியவர் – அதாவது நம் கதா
நாயகர் ஏகப்ப செட்டியாரை விடுத்து, மற்ற மூன்று சகோதரர்களும்
வந்து தங்களுடைய குறையைச் சொன்னபோது, ராமசாமி அண்ணன் பொறுமையாகக் கேட்க ஆரம்பித்தார்.

வந்தவர்களுடைய தந்தையார், தான் இருந்த காலத்திலேயே
தன்னுடைய சொத்துக்களையெல்லாம் ஊரில் இருந்த பொது வீடு
உட்பட அனைத்தையும் பங்கு வைத்துக் கொடுத்து விட்டார்.
மதுரை சொக்கி குளத்தில் தான் வசித்துவந்த பெரிய வீட்டை
மட்டும் தனக்குப் பிறகு எடுத்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தார்.

அதில்தான் சிக்கல் இப்போது. நான்கு கிரவுண்ட் இடத்தில்
அம்சமான வீடு. இன்றைய மதிப்பில் இரண்டு கோடி ரூபாய்க்குப்
போகும். அவர் இறந்து பத்து வருடமாகிவிட்டது.அதை விற்றுக்
காசாக்குவதில் சகோதரர்களிடையெ ஒற்றுமையில்லை.
வீடு பூட்டிக் கிடக்கிறது.

“நீங்கள்தான் அவரோடு பேசி, அந்த வீட்டை விற்பதற்கு எங்களோடு
அவரை ஒத்துழைக்கச் சொல்ல வேண்டும். இல்லை விற்கக்கூடாது
என்று அவர் நினைத்தால் அவரையே அதைக் கிரயம் செய்து கொண்டு
எங்களுக்குப் பணத்தைக் கொடுத்து விடச் சொல்லுங்கள். அது
உங்களால்தான் முடியும்” என்று வந்தவர்களில் மூத்தவரான உலகப்பன்
சொல்ல, மற்ற இருவரும் ஒத்தூதுவதைப்போல ஆமாம் என்றார்கள்.

ராமசாமி அண்ணன் புன்னகைத்துவிட்டுப் பதில் சொன்னார்,”நீங்கள்
உங்கள் பங்காளிகளில் ஒருவரைவைத்துப் பேசுங்கள். உடன்படா
விட்டால் நான் பேசுகிறேன். அதுதான் முறையும்கூட!”

உலகப்பன் விடுகிற மாதிரித் தெரியவில்லை, தொடர்ந்து சொன்னார்,
”அவரோடு வேறு யாரும் பேச முடியாது.கோண வழக்குப் பேசுவார்.
எங்கள் ஆத்தாவிடம் அவர் பால் குடித்த காலத்துக் கதையில் இருந்து
ஆரம்பித்துப் பேசுவார். யாரும் உட்கார்ந்து கேட்க முடியாது.”

“பால் குடித்த கதையா? அது என்ன கதை?”

“அவர் கைப்பிள்ளையாக இருந்த காலத்தில் எங்கள் தாயாருக்கு
பால் ஊறல் இல்லாததால் – எங்கள் வீட்டுத் தோட்டத்தில் குடியிருந்த
பெண்மணி அவருக்கு ஆறுமாதம் தாய்ப்பால் கொடுத்தாளாம்!”

“அது எப்படி அவருக்குத் தெரியும்?”

“அதை மட்டுமல்ல, அதைப் போன்ற வேறு சில சம்பவங்களையும்
வாய்மொழியாகக் கேட்டுத் தன் மனதில் பதிய வைத்திருக்கிறார்.
அவற்றையெல்லாம் சொல்லி எப்போது பார்த்தாலும் இடக்காகப்
பேசுவார். எங்கள் அப்பச்சி அவரை அண்ணாமலை அரசர்
கல்லூரிக்கு அனுப்பிப் பொறியியல் படிக்க வைத்ததை
யெல்லாம் மறந்துவிட்டுப் பேசுவார். தான் என்னமோ சுயம்பாகப்
பிறந்து வளர்ந்ததைப் போல அடாவடியாகப் பேசுவார். இப்போது
அது அதிகமாகி விட்டது. அவர் ஒர வஞ்சனையாக வளர்க்கப்
பெற்றாராம். அவருக்குக் குடும்பத்தில் பெரியவன் என்ற மரியாதை
இல்லையாம். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
மதிப்பும், மரியாதையும் என்ன கேட்டு வாங்குகிற அல்லது காசு
கொடுத்து வாங்குகிற கடைச் சரக்கா? தானாக அல்லவா அது வர
வேண்டும்! அதனால்தான் நாங்கள் உங்கள் உதவியை நாடி வந்தோம்.”

ராமசாமி அண்ணன் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார், ”சரி பேசிப் பார்க்கிறேன்”

“இல்லை பேசி, முடித்துக் கொடுங்கள். நல்ல தகவலாகச் சொல்லுங்கள்.
நாங்கள் மீண்டும் வந்து பார்க்கிறோம்” என்று சொல்லி எழுந்தவர்கள்,
விடை பெற்றுக் கொண்டு திரும்பிச்சென்று விட்டார்கள்,

அதிசயத்தக்க சம்பவம் ஒன்று மூன்று நாட்களில் நிகழவிருப்பதை
எதிர்பார்க்காதவர்களாய்!

+++++++++++++++++++++++++++++++++++++++++

மதுரை வெய்யிலோடு போராடியதில் மூன்று நாட்கள் போனதே
தெரியவில்லை. மூன்றம் நாள் மாலை ஆறு மணி அளவில் ராமசாமி
அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தவுடன் உலகப்பனும் அவருடைய
தம்பிகள் முருவரும் பரபரப்பாகி விட்டதோடு, உடனே அவருடைய
அலுவலகத்திற்குச் சென்று அவரைப் பார்த்தார்கள்.

அங்கே, அவர் பேசப் பேச அவர்கள் மூவரும் வியப்பின் எல்லைக்கே
போய்விட்டார்கள்.

களிமண்ணில் பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்கானதைக்
கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது குரங்கு பிடிக்கபோய்
அது பிள்ளையாராகி விட்டதே என்றும் அதிசயத்தார்கள்.

ராமசாமி அண்ணன் சொன்ன செய்தி அப்படி!

இவர்கள் வந்துவிட்டுப் போனதும், அவர் ஏகப்ப செட்டியாரை
தொலைபேசியில் அழைத்து, உங்களைப் பார்க்க வேண்டும்,
எப்போது வரலாம் என்று கேட்க, பதிலுக்கு அவர், உங்களைப்
பார்க்க எத்தனைபேர் காத்துக் கிடக்கிறார்கள் – அப்படியிருக்கும்
போது நீங்கள் வரலாமா? நானே வருகிறேன் என்று சொல்லி அடுத்த
ஒரு மணி நேரத்திலேயே அவரை வந்து பார்த்ததாகவும், வந்தவரிடம்
இவர் வீட்டுப் பிரச்சினையைச் சுருக்கமாகச் சொல்லி சுமூகமாக
முடித்துக் கொள்ளுங்கள் என்று கூற, உடனே அவர் பதிலுக்கு
எந்தவித சர்ச்சையும் செய்யாமல் நீங்கள் சொல்கிறபடி செய்ய நான்
தயாராயிருக்கிறேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், கடவுள்
புண்ணியத்தில் நான் நன்றாக இருக்கிறேன். என் தம்பிகள் மூவருக்கும்
வியாபாரத்தில் நஷ்டம்,கடன்கள், திருமணம் செய்துவைக்க வேண்டிய
மகள்கள் என்று பணப்பிரச்சினையிருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.
அதனால் அந்த வீட்டை விற்று வரும் ஒரு பைசாக் கூட எனக்கு
வேண்டாம். அவர்களையே எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று
கூறியதோடு மட்டுமல்லாமல், அதை உறுதிசெய்யும் விதமாக
அடுத்த நாளே தன் தம்பிகள், பொது வீட்டை விற்று முழுப் பணத்தை
எடுத்துக் கொள்ளும்படியாக அவர்களின் பெயருக்குப் பவர் ஆ·ப்
அட்டார்னி எழுதிக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப்போய் விட்ட
தாகவும் சொல்லி அந்தப் பத்திரத்தை எடுத்து அவர்கள் கையில்
கொடுக்கவும் செய்தார்.

சகோதரர்கள் மூவருக்கும் மயக்கம் வராத குறை. இதை அவர்கள்
முற்றிலும் எதிர்பார்க்க வில்லை. உலகப்பன்தான் சுதாகரித்துக்
கொண்டு முதலில் பேசினார். “எங்களால் நம்ப முடியவில்லை.
ஆச்சரியமாக இருக்கண்ணே!”

ராமசாமி அண்ணன் மெல்லிய குரலில் சொன்னார்,”எனக்கும்தான்.
அவரைப் பற்றிய பலரது எண்ணங்களையும் அவர் தகர்த்துவிட்டார்.
அதைவிட ஆச்சரியம் ஒன்று இருக்கிறது. கேட்டால் அசந்து
போவீர்கள். நேற்று இந்தப் பத்திரத்தைக் கொடுக்க வந்தவர்,
நீங்கள் ஊருக்குப் பல உபகாரம் செய்கிறீர்கள் அண்ணே.
நானும் ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். நம்ஊர்ப் பொதுநல
நிதியில் இந்தத் தொகையைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று
சொல்லி ஒரு செக்கைக் கொடுத்து விட்டுப்போனார்…தொகை
எவ்வளவு தெரியுமா?”

ஊகம் செய்ய முடியாத சகோதரர்கள் மூவரும் மெளனமாக இருந்தார்கள்.

அவரே தொடர்ந்து சொன்னார்.”ஐம்பது லட்ச ரூபாய்!”

அதோடு விடாமல் தன் மேஜை அரையில் இருந்து அந்தச் செக்கை
எடுத்து அவர்களிடம் காட்டவும் செய்தார். சகோதரர்கள் மூவரும்
ஆடிப்போய்விட்டார்கள். தங்கள் மூத்த சகோதரனின் மன மாற்றத்
திற்கான என்னவாக இருக்கும் என்று மின்னலாக யோசித்துப் பார்த்த
போது ஒன்றும் பிடி படவில்லை!

எப்படிப் பிடிபடும்? எல்லாம் ஆச்சி போட்ட போடுதான் என்பது
யாருக்குத் தெரியும்? அல்லது யாரால் ஊகம் செய்ய முடியும்?

சுயநலமில்லாமல் ஒரு பெண் பேசும் சத்தியமான வார்த்தைகளுக்கு
எத்தனை சக்தி உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. உணர்ந்த
வர்களுக்கு மட்டுமே அது தெரியும்! கல்லையும் கரைக்கக் கூடியது
அது!

”* அழுக ஆள் இருக்கிறதா! *மதிப்பெல்லாம் பணத்தைவைத்தல்ல!*
கடைசியில் வருவது செய்த பாவமும் புண்ணியமுமே” என்று ஆச்சி
அவர்கள் போட்ட போட்டில் தான் ஏகப்ப செட்டியாரின் * கல்மனமும்
கரைந்தது என்றால் அது மிகையல்ல! அதுதான் உண்மை!

உண்மைக்கு ஏது மிகை?

உண்மைக்கு ஒரே வடிவம்தான் – சேவற்கொடியோன் கையில்
இருக்கும் வேலைப் போல* *அருள் நிதி அழகு திருநா வேட்டவலம்*

News

Read Previous

தமிழ் இலக்கணம்

Read Next

AKS இன்ஜினியரிங்

Leave a Reply

Your email address will not be published.